வருது வருது என்று மிரட்டிக் கொண்டிருந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் வரைபை, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் ஒருவழியாக கடந்த புதன்கிழமை அமெரிக்கா சமர்ப்பித்து விட்டது. இந்தத் தீர்மான வரைபு தமிழர் தரப்பில் சிலருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பதை, வெளியாகும் கருத்துகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. சர்வதேச போர்க்குற்ற விசாரணையை அமெரிக்கா கைவிட்டு விட்டதே என்ற ஆதங்கம் பலரிடம் இருந்து வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் நகர்வுகளையும் அறிக்கைகள் மற்றும், கூற்றுகளையும் உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியமான விடயமாக இருக்காது.
சர்வதேச போர்க்குற்ற விசாரணையை அமெரிக்கா முன்னர் அடிக்கடி நினைவுபடுத்தி வந்த போதும் - அதன் தெளிவான நிலைப்பாடு நம்பகமான விசாரணைப் பொறிமுறை ஒன்று பற்றியதாகவே இருந்தது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான பின்னர், போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறும் வகையில் அமையவில்லை என்று குற்றம்சாட்டிய அமெரிக்கா, சர்வதேச விசாரணைப் பொறிமுறை பற்றி வாய் திறக்கவில்லை. நம்பகமான- புதிய விசாரணையை நடத்த வேண்டும் என்றே அது கூறியது. அதைவிட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அது கூறியது. இந்தக்கட்டத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான எந்தவொரு உருப்படியான செயற்திட்டத்தையும் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்று குற்றம்சாட்டும் அமெரிக்காவுக்கு, இலங்கை மீது ஆழமான சந்தேகம் உள்ளது என்பது அப்பட்டமாகவே தெரிகிறது. அதனால் தான், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கிறது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துமா என்ற சந்தேகம் கொண்டுள்ள அமெரிக்காவுக்கு, நம்பகமான விசாரணையை இலங்கை நடத்தாது என்பது தெரியாமல் இருக்கப் போவதில்லை. ஆனாலும் அதைப் பற்றி அமெரிக்கா இப்போது எதுவும் சொல்லவில்லை. போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்கான எந்த விவகாரங்களுக்குள்ளேயும் நுழைய, அமெரிக்கா இப்போது தயாரில்லை. ஏனென்றால் முதற்கட்டமாக இலங்கைக்கு இத்தகைய தீர்மானம் ஒன்றின் மூலம் கடிவாளம் போட்டு விடப் போகிறது. அதன் பின்னரும், இலங்கையை தனது வழிக்கு கொண்டு வர முடியாது போனால் அடுத்த தீர்மானத்தை சுலபமாகவே அமெரிக்கா தயார் செய்யும். இதற்காகவே, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையுடன் இணைந்து பணியாற்றும் பொறிமுறை ஒன்றுக்குள் இலங்கையை சிக்க வைக்க அமெரிக்கா முனைந்துள்ளது. அமெரிக்காவின் தீர்மான வரைபில் கூறப்பட்டுள்ளதும், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பேரவையில் நிகழ்த்திய தொடக்கவுரையில் கூறியுள்ளதும் ஒரே விடயத்தைத் தான். நவநீதம்பிள்ளை தனது தொடக்க உரையில், இலங்கை அரசாங்கம், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளில் தமது அலுவலகத்துடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். அதையேதான அமெரிக்காவின் தீர்மானமும் கூறுகின்றது.
பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டத்தை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்துமாறும், அதற்காக வழங்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை உதவிகள் குறித்த அறிக்கையை பேரவையின் 22 வது கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இந்தத் தீர்மானம் கோருகிறது.
22வது கூட்டத்தொடர் என்பது இலங்கைக்கு மறைமுகமாக வழங்கப்பட்டுள்ள ஒருவருட கால அவகாசமாகும்.
நேரடியாக இந்தக் காலக்கெடுவை இலங்கைக்கு அமெரிக்கா வழங்கவில்லை.
இலங்கையே ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தீர்மானம் கோரவும் இல்லை.
எல்லாவற்றையும் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் அலுவலகமே மேற்கொள்ளப் போகிறது.
ஒருவகையில் இதனை இலங்கை விவகாரத்தைக் கையாள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு- நவநீதம்பிள்ளைக்கு- கொடுக்கப்படும் மறைமுகமான அதிகாரம் என்று கூடச் சொல்லலாம்.
மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஜெனிவாவில் வருடத்தில் மூன்று தடவைகள் நடைபெறும்.
மார்ச், ஜுன், செப்ரெம்பர் மாதங்களில் நடைபெறும் வழக்கமான கூட்டத்தொடர் நடக்கும்.
இப்போது நடந்து கொண்டிருப்பது 19வது கூட்டத்தொடர்.
22வது கூட்டத்தொடர் என்பது, 2013ம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கப் போகும், அடுத்த ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர்.
இந்தவகையில், இந்தக் கூட்டத்தொடரில் தீர்மானத்தை நிறைவேற்றி இலங்கைக்கு ஒருவருட காலஅவகாசம் அளிக்கப்படுகிறது.
இந்த ஒருவருட காலஅவகாசத்துக்குள் இலங்கை என்ன செய்தது என்றெல்லாம், அமெரிக்காவோ அல்லது சர்வதேச சமூகமோ கேள்வி எழுப்பப் போவதில்லை.
அதற்குப் பதிலளிக்கப் போவது நவநீதம்பிள்ளையின் அலுவலகம் தான்.
அந்த அறிக்கையில் இலங்கை எதைச் செய்துள்ளது, அதற்காக என்ன உதவிகளைப் பெற்றுள்ளது என்பதை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் அலுவலகம் குறிப்பிட வேண்டும். அந்த அறிக்கை இலங்கைக்கு சாதகமாக அமையாது போனால், அடுத்த கட்டமாக அமெரிக்காவும், ஏனைய மேற்கு நாடுகளும் இன்னொரு தீர்மானத்துக்குத் தயாராகி விடும். இந்தத் தீர்மானம் இலங்கைக்கு ஒரு வருட காலஅவகாசத்தை வழங்கப் போகிறது. அதற்குள் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்ய வேண்டியிருக்கும். இது இலங்கை அரசுக்கு ஒரு இக்கட்டான நிலை. மனிதஉரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்துடன் இணைந்து செயற்படுவது இலங்கை அரசுக்கு கடுமையானதொன்றாகவே இருக்கும். இதற்கு அரசாங்கம் இலகுவில் ஒப்புக்கொள்ள வாய்ப்பில்லை. அப்படி ஒப்புக்கொண்டாலும் சிக்கல் தான் அதிகமாக ஏற்படும். ஏனென்றால், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரின் மீதும் அவரது அலுவலகம் மீதும் அரசாங்கம் கடும் சீற்றத்தை வெளிப்படுத்தி வருகிறது. அங்கு பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகள் மேற்குலகை சார்ந்தவர்கள். இது இலங்கைக்கு சாதகமாக இருக்காது.
ரஸ்யா, சீனா சார்ந்த அதிகாரிகளானால் சமாளித்து விடலாம்.
மேற்குலகைச் சார்ந்த அதிகாரிகளை அவ்வளவு இலகுவில் சமாளிப்பது சிரமம். இதனால் தான், மனிதஉரிமை ஆணையாளர் அலுவலகத்தின் நிதி மற்றும் ஆளணி நிர்வாகம் தொடர்பான தீர்மானம் ஒன்றை பாகிஸ்தான், கியூபா ஆகிய நாடுகளுடன் இணைந்து கொண்டு வரும் முயற்சிகளை இலங்கை மேற்கொண்டுள்ளது. எவ்வாறாயினும், இப்போது அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம், போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த சர்வதேச விசாரணையை உருவாக்கப் போவதில்லை என்பது உறுதி. இதற்காக மேற்குலகின் மீது குற்றம் சுமத்தவும் முடியாது. அமெரிக்கா ஏமாற்றி விட்டது என்று புலம்பவும் கூடாது. மிகையான எதிர்பார்ப்பு எப்போதும், எங்கேயும் தவறான விளைவுகளையே தரும்.மேற்குலகம் சார்ந்த விடயத்திலும் அப்படித் தான். ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானம், தமிழர்களுக்காக, அவர்களின் நலனுக்காக மட்டும் மேற்கொள்ளும் நடவடிக்கை அல்ல.முற்றிலும் தமிழரின் நலன்களையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவது அமெரிக்காவின் நோக்கம் அல்ல.அப்படி அமெரிக்கா செயற்படும் என்று நம்பியவர்களுக்குத் தான் இது ஏமாற்றத்தை அளிக்கும். அதற்காக போர்க்குற்றங்கள் எல்லாம் மறைக்கப்பட்டு விடும் என்றோ மறக்கப்பட்டு விடும் என்றோ அர்த்தமல்ல. அதற்கான காலம் இன்னமும் கனியவில்லை.
போர் முடிந்து மூன்றாண்டுகள் கழித்துத் தான் இத்தகைய தீர்மானம் ஒன்றை மேற்குலகம் கொண்டு வந்துள்ளது.
மூன்று ஆண்டுகள் பொறுத்திருந்து பார்த்து விட்டது சர்வதேச சமூகம் என்று மனிதஉரிமைகள் பேரவையில் உரையாற்றிய, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனிதஉரிமைகளுக்கான கீழ்நிலைச் செயலர் மரியா ஒரேரோ கூறியிருந்தார். இலங்கைக்காக காலம் நழுவிக் கொண்டிருக்கிறது என்ற அவரது கருத்தும் ஒரு எச்சரிக்கை தான். அமெரிக்காவின் தீர்மான வரைபில், போர்க்குற்றச்சாட்டுகளுக்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பதிலளிக்கப்படவில்லை என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேவேளை, அடுத்த ஒரு ஆண்டுகால அவகாசம் இலங்கைக்குக் கிடைக்கப் போகிறது. அந்தக் காலஅவகாசத்தையும் அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளாமல் நழுவ விடுமானால், இனிமேல் பொறுப்பதற்கு நேரம் இல்லை என்ற நிலை அமெரிக்காவுக்கும், அதைச் சார்ந்த நாடுகளுக்கும் ஏற்படும். அதன் பின்னர் தான் சர்வதேச விசாரணைப் பொறிமுறை பற்றிய விவாதங்கள் தொடங்கும்.
இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்களுக்கு நியாயமான முறையில் பொறுப்புக்கூறப் போவதில்லை. அவ்வாறு செய்வதாயின் மூன்றாண்டுகளை அது வீணே கழித்திருக்காது. எனவே, போர்க்குற்றச்சாட்டுகளும், அது குறித்த சர்வதேச விசாரணை பற்றிய அழுத்தங்களும் இத்தோடு ஓய்ந்து விடப் போவதில்லை. இதை ஒரு தொடக்கமாகவே கருத வேண்டும்.
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி நிற்பது கொக்குக்கே உரிய தந்திரம் மட்டுமல்ல தமிழருக்கானதும் தான்.
கட்டுரையாளர் சுபத்ரா
www.nisaptham.com/2012/03/blog-post_13.html ..just read this today
ReplyDelete