இந்தியாவைப் பொறுத்தவரையில் அமெரிக்காவுடன் இணைந்து வாக்களித்தமையால் கொழும்புக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய சீற்றத்தைத் தணிப்பதில் தான் அதன் முழுக் கவனமும் இப்போது இருக்கின்றது. பிரேரணை நிறைவேற்றப்பட்டவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையிலும் இதனையே காணக் கூடியதாக இருந்தது. அதாவது, தமிழக நிர்ப்பந்தம் அமெரிக்கா பக்கம் சாய வேண்டிய நிலையை இந்தியாவுக்கு ஏற்படுத்தியிருந்தாலும், கொழும்புக்கு அஞ்சும் நிலையில்தான் டில்லி இன்னமும் உள்ளது என்பதுதான் உண்மை! இலங்கை விவகாரத்தில் கூட இந்தியாவின் ஆதரவுடன் செயற்படுவதைத்தான் அமெரிக்கா விரும்பியது. அதனால்தான் இந்தப் பிரச்சினைக்குள் இந்தியாவையும் இழுக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா அக்கறை காட்டியது. மறுபுறத்தில்இலங்கைக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற தேவை ஒன்றும் இந்தியாவுக்கு இருந்தது. போர் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த மூன்று வருட காலத்தில் இந்தியாவுக்கு வழங்கிய எந்த ஒரு வாக்குறுதியையும் இலங்கை நிறைவேற்றவில்லை.
இந்தியாவை ஒரு பொருட்டாகவே தான் கருதவில்லை என்பதை கொழும்பு பல தடவைகளில் வெளிப்படுத்தியிருந்தது. இறுதியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் 13 பிளஸ் என உறுதியளித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பின்னர் அவ்விடயத்தில் வெளிப்படுத்திய கருத்துக்கள் இந்தியாவுக்குப் பெரும் சீற்றத்தைக் கொடுத்திருந்தது. இருந்தபோதிலும், இதனைக் காட்டிக்கொள்ளக் கூடிய நிலையில் இந்தியா இருக்கவில்லை. இலங்கை தொடர்பில் கருத்துக்கூறுவதில் ஒரு அச்சம் கலந்த தயக்கத்தையே டில்லியிடம் காணமுடிந்தது. இந்தியாவின் இந்த அச்சத்தை கொழும்பு நன்கு பயன்படுத்திக்கொண்டது. சீனாவைப் பயன்படுத்துவது உட்பட பல்வேறு விடயங்களில் இலங்கை தமக்கு விரோதமாகச் செயற்படுவதை தெரிந்துகொண்டிருந்த போதிலும் கூட டில்லி மௌனமாக இருப்பதையே விரும்பியது. இவ்வாறான ஒரு பின்னணியில் இலங்கை தொடர்பான பிரேரணையை அமெரிக்கா கொண்டுவருவது இந்தியாவுக்குப் பெரிதும் சங்கடமான ஒரு நிலையைக் கொடுப்பதாகவே அமைந்திருந்தது.
ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் தீமானத்தை இந்தியா ஆதரிக்குமா என்ற கேள்வி மூன்று வாரங்களுக்கு முன்னர் எழுப்பப்பட்டபோது, சட்டத்தரணியான தமிழ்ப் பிரமுகர் ஒருவர் சொன்ன பதில் ஆச்சரியமாக இருந்தது. அவர் சொன்னார்:
"இந்தியா ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை. அப்படியே விட்டுவிடவேண்டும். இந்தியா மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கக்கூடாது.'
அவரது இந்தப் பதில் ஆச்சரியமானதாக இருந்ததால், ஏன் என்ற கேள்வியை எழுப்பினோம்.
அவர் தெளிவாகச் சொன்னார்.
"பிரேரணை இப்போதே நீர்த்துப் போன நிலையில்தான் இருக்கின்றது. இந்தியாவை ஆதரிக்குமாறு அதிகளவு அழுத்தம் கொடுத்தால் அதற்கான நிபந்தனையாக பிரேரணையை இன்னும் நீர்த்துப்போகச் செய்வதற்கு இந்தியா முயற்சிக்கும். இறுதியில் பெயரளவுக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு பிரேரணையாகவே இது அமையும்.'
சர்வதேச அரசியல் நகர்வுகளை குறிப்பாக இந்தியாவின் அணுகுமுறையை அவர் எந்தளவுக்குத் துல்லியமாக அறிந்துவைத்திருந்தார் என்பதை அமெரிக்க பிரேரணையின் இறுதி நகல் வெளிப்படுத்தியது.
அமெரிக்காவின் பிரேரணையின் மூலப் பிரதி மூன்றாவது தடவையாகத் திருத்தப்பட்டிருக்கின்றது. இந்தத் திருத்தங்கள் அனைத்தும் இலங்கைக்குச் சாதகமானவையாகவே இருந்துள்ளன. இந்தத் திருத்தங்கள் அனைத்துக்கும் பின்னணியிலிருந்து செயற்பட்டது இந்தியாதான் என்பது இந்தியாவின் இரட்டை வேடத்துக்குச் சாட்சி!
இந்த இடத்தில் ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இந்தியா எவ்வாறான ஒரு பாத்திரத்தை வகித்தது என்பதை அறிந்துகொள்வது அவசியம். இதன் மூலமாகவே எதிர்காலத்தில் இந்தியா வகிக்கப்போகும் பாத்திரம் என்ன என்பதைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்!
இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்றை மனித உரிமைகள் பேரவையில் முன்வைப்பதற்கு தீர்மானித்த உடனடியாகவே இந்தியா இவ்விடயத்தை எவ்வாறு அணுகும் என்பதை அறிந்துகொள்வதிலேயே அமெரிக்கா அக்கறை காட்டியது. அத்துடன் இதனை இந்தியாவின் ஆதரவுடன் நிறைவேற்ற வேண்டும் என்ற அவசியமும் அமெரிக்காவுக்கு இருந்தது.
இதற்கு இரு காரணங்கள் இருந்தன.
ஓன்று தெற்காசியப் பிராந்தியத்தில் குறிப்பாக இந்தியாவின் கொல்லைப் புறத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கை ஒன்றுக்கு இந்தியாவின் ஆதரவைப் பெற வேண்டும் என்ற தேவை அமெரிக்காவுக்கு இருந்தது.
இரண்டு இலங்கையைச் சுற்றியுள்ள ஏனைய தெற்காசிய நாடுகள் தமக்கு ஆதரவளிக்காது என்பதால் இந்தியாவையாவது தக்கவைக்க வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு இருந்தது.
இந்தப் பின்னணியில்தான் டில்லியுடன் வாஷிங்டன் தொடர்புகளை ஏற்படுத்தியது!
அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் கொண்டுவந்து மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என்பதில் செலுத்திய அக்கறையை பிரேரணையின் உள்ளடக்கம் வலுவானதாக இருக்க வேண்டும் என்பதில் செலுத்தவில்லை. பிரேரணை வலுவானதாக இருக்கும் நிலையில் அதனை நிறைவேற்றுவது கடினமாகலாம் என்ற அச்சமும் அமெரிக்காவுக்கு இருந்திருக்கலாம். பிரேரணை தொடர்பில் அமெரிக்கா நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடித்தமைக்கு இதுவும் காரணமாக இருந்திருக்கலாம். அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட முதலாவது வரைபில், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமானதும் நம்பகத்தன்மையைக் கொண்டதுமான விசாரணைகளை அந்நாட்டு அரசு மேற்கொள்ளவில்லை என அமெரிக்கா தனது ஏமாற்றத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருந்தது. இருந்தபோதிலும், அமெரிக்கா தாக்கல் செய்த பிரேரணையின் வரைபில், போர்க் குற்ற விசாரணைக்கான உரிய அழுத்தங்களை அமெரிக்கா பதிவு செய்யவில்லை என மனித உரிமை அமைப்புகள் சிலவற்றால் குறை கூறப்பட்டது.
இந்தியாவின் ஆதரவைக் கோருவதற்காக அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளாலேயே பிரேரணையை வலுவிழக்கச் செய்வதற்கான முதலாவது திருத்தத்தை இந்தியா செய்தது.
அமெரிக்க பிரேரணையின் 3 ஆவது பகுதியே இவ்வாறான சர்ச்சைக்குரிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது.
அதில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது:
"மேற்படி நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கான ஆலோசனைகள், தொழில்நுட்ப உதவிகளை மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட விஷேட தொடர்புடைய நடைமுறைகளை வழங்குவதையும் அவற்றை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதையும் ஊக்குவிக்கின்றது. அத்துடன் அத்தகைய உதவி வழங்கல் குறித்து 22 ஆவது கூட்டத் தொடரில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தைக் கோருகின்றது.' இந்தப் பிரேரணை வெளிநாட்டுத் தலையீட்டுக்கு வழிவகுப்பதாக அமையும் என்பதால் இலங்கை அரசு இதனைக் கடுமையாக எதிர்த்தது.
பிரேரணை கொண்டுவரப்படவிருப்பதாகத் தீர்மானிக்கப்பட்டபோது இந்தியாவுக்கு அது சங்கடமான நிலையைத்தான் கொடுத்தது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட விடயத்தில் தமிழகத்திலிருந்து உருவாகக்கூடிய அழுத்தங்களுடன், மேற்கு நாடுகளும் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்த்தன. இந்தியாவின் கொல்லைப் புறத்தில் பிரவேசிப்பதற்கு இதன் (இந்தியாவின்) ஆதரவு அவசியம் என்பதை அமெரிக்கா தெரிந்துகொண்டேயிருந்தது.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில் தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் மேலாதிக்க நிலையை ஏற்றுக்கொள்ளும் வகையிலேயே அதன் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. அந்த வகையில் இப்போது இலங்கை விவகாரத்தில் கூட இந்தியாவின் ஆதரவுடன் செயற்படுவதைத்தான் அமெரிக்கா விரும்பியது. அதனால்தான் இந்தப் பிரச்சினைக்குள் இந்தியாவையும் இழுக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா அக்கறை காட்டியது. மறுபுறத்தில் இலங்கைக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற தேவை ஒன்றும் இந்தியாவுக்கு இருந்தது. போர் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த மூன்று வருட காலத்தில் இந்தியாவுக்கு வழங்கிய எந்த ஒரு வாக்குறுதியையும் இலங்கை நிறைவேற்றவில்லை. இந்தியாவை ஒரு பொருட்டாகவே தான் கருதவில்லை என்பதை கொழும்பு பல தடவைகளில் வெளிப்படுத்தியிருந்தது.
இறுதியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் 13 பிளஸ் என உறுதியளித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பின்னர் அவ்விடயத்தில் வெளிப்படுத்திய கருத்துக்கள் இந்தியாவுக்குப் பெரும் சீற்றத்தைக் கொடுத்திருந்தது. இருந்தபோதிலும், இதனைக் காட்டிக்கொள்ளக் கூடிய நிலையில் இந்தியா இருக்கவில்லை.
இலங்கை தொடர்பில் கருத்துக்கூறுவதில் ஒரு அச்சம் கலந்த தயக்கத்தையே டில்லியிடம் காணமுடிந்தது. இந்தியாவின் இந்த அச்சத்தை கொழும்பு நன்கு பயன்படுத்திக்கொண்டது. சீனாவைப் பயன்படுத்துவது உட்பட பல்வேறு விடயங்களில் இலங்கை தமக்கு விரோதமாகச் செயற்படுவதை தெரிந்துகொண்டிருந்த போதிலும் கூட டில்லி மௌனமாக இருப்பதையே விரும்பியது. இவ்வாறான ஒரு பின்னணியில் இலங்கை தொடர்பான பிரேரணையை அமெரிக்கா கொண்டுவருவது இந்தியாவுக்குப் பெரிதும் சங்கடமான ஒரு நிலையைக் கொடுப்பதாகவே அமைந்திருந்தது. இவ்விடயத்தில் இந்தியா எந்தளவுக்குக் குழம்பிப்போயிருந்தது என்பது இவ்வார முற்பகுதியில் இந்தியப் பாராளுமன்றத்தில் தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் முரண்பாடான நிலைப்பாடுகளைப் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்கள்.
தமிழகக் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் கொடுத்த அழுத்தமும், குறிப்பாக தமிழக காங்கிரஸ் இந்தப் போராட்டத்தில் இணைந்துகொண்டமையும் இந்திய மத்திய அரசுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்தது. குறிப்பாக சக்திவாய்ந்த அமைச்சராக உள்ள ப.சிதம்பரம் தமிழக நிலைமைகளை நன்கு அவதானித்துள்ளார். இந்த நிலை தொடருமானால் அவரது அரசியல் எதிர்காலம் மட்டுமன்றி, தமிழகத்தைத் தளமாகக்கொண்ட அவரது அரசியல் வாரிசான மகனின் அரசியல் எதிர்காலமும் கேள்விக்குறியாகலாம் என்ற நிலையில் பிரதமர் மன்மோகன் சிங், சிரேஷ்ட அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசிய பின்னரே பிரேரணையை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டை டில்லி எடுத்தது.
இந்த நிலைப்பாட்டை டில்லி எடுத்த அதேவேளையில், அமெரிக்காவின் பிரேரணையில் இரண்டாவது திருத்தம் ஒன்றுக்கும் இந்தியா தயாரானது. பிரேரணையின் மூன்றாவது பிரிவின் மீதுதான் மீண்டும் கத்திவைக்கப்பட்டது. அதாவது, இலங்கை அரசின் சம்மதத்துடன் அமுல்படுத்துவதற்கான ஆலோசனைகள், தொழில்நுட்ப உதவிகளை மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட விஷேட தொடர்புடைய நடைமுறைகளை வழங்குவதையும், இதில் இலங்கையின் சம்மதத்துடன் என்ற பதம் இறுதி வரைபில் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இது இலங்கையைத் திருப்திப்படுத்துவதற்காக இந்தியாவால் சேர்க்கப்பட்டதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும், இது பிரேரணையில் வலுவான தாக்கம் எதனையும் ஏற்படுத்தக் கூடியதாக இருக்காது எனவும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் அமெரிக்காவுடன் இணைந்து வாக்களித்தமையால் கொழும்புக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய சீற்றத்தைத் தணிப்பதில் தான் அதன் முழுக் கவனமும் இப்போது இருக்கின்றது. பிரேரணை நிறைவேற்றப்பட்டவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையிலும் இதனையே காணக் கூடியதாக இருந்தது. அதாவது, தமிழக நிர்ப்பந்தம் அமெரிக்கா பக்கம் சாய வேண்டிய நிலையை இந்தியாவுக்கு ஏற்படுத்தியிருந்தாலும், கொழும்புக்கு அஞ்சும் நிலையில்தான் டில்லி இன்னமும் உள்ளது என்பதுதான் உண்மை!
நன்றி இன்போதமிழ்
0 கருத்துரைகள் :
Post a Comment