கொடூரங்களைப் புரிந்தாலும் சிறிலங்காவுக்கு பிரித்தானியா ஆயுதஉதவி – பலத்த சர்ச்சை


சிறிலங்கா ஆட்சியாளர்களின் கொடூரமான நடவடிக்கைகள் தொடர்பான சாட்சியங்கள் இருந்தபோதிலும், அந்த நாட்டுக்கு பிரித்தானியா தொடர்ந்தும் ஆயுதங்களை விற்பனை செய்து வருவதற்கு, உள்துறை அமைச்சின் குழுநிலைக் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறிலங்கா இராணுவத்தினால் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டது பற்றிய மேலதிகமான சடசியங்களை சனல் 4 ஆவணப்படம் வெளிப்படுத்தியுள்ள நிலையில், சிறிலங்காவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்காக அனுமதி தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது ஏன் என்று விளக்கமளிக்கமாறு பிரித்தானிய அரசிடம் ஆயுத விற்பனைக்கு எதிரான பரப்புரை அமைப்பு கோரியுள்ளது. 

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009 மே மாதம் முடிவுக்கு வந்த பின்னர் பிரித்தானியா, 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பெறுமதியான இராணுவ மற்றும் இருபயன்பாட்டு கருவிகளை சிறிலங்காவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

அதேவேளை, பிரித்தானிய அனுமதி பெற்ற ஆயுதங்களை சிறிலங்கா அரசாங்கம் விடுதலைப் புலிகளைத் துடைத்தழிக்கும் முயற்சியின்போது பயன்படுத்தவில்லை என்று உத்தரவாதம் அளிக்க முடியாது என்று நாடாளுமன்றக் குழுநிலைக் கூட்டத்தில், ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டகம் கூறியுள்ளது. 

பிந்திய தகவல்களின்படி, 2011ம் ஆண்டின் முதல் 9 மாதங்களில், பிரித்தானியா 1.5 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான ஏற்றுமதிக்கு அனுமதியளித்துள்ளது. 

இவற்றில் 1.3 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான கருவிகள் சிறிலங்கா இராணுவத்துக்குரியவையாகும். 

இவற்றில் கவசவாகனங்கள், குண்டுதுளைக்காத உடற்கவசங்கள், “ பொறியில் சிக்க வைக்கும் எதிர் நடவடிக்கை கருவிகள் மற்றும் கூறுகள்” என்ற தலைப்பின் கீழ் வரும் கைக்குண்டுகள், குண்டுகள், ஏவுகணைகள் என்பன அடங்கியுள்ளன. 

இது பற்றிக் கருத்து வெளியிட்டுள்ள ஆயுத விற்பனைக்கு எதிரான பரப்புரை அமைப்பின் பெண்பேச்சாளர் காயி ஸ்ரியமன், “கிளர்ச்சியில் ஈடுபடும் சொந்த மக்களுக்கு எதிரான அரசாங்கங்களின் அடக்குமுறைகளை அரபுலக எழுச்சி உலகின் கவனத்துக்கு கொண்டு வந்தது. 

‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்- தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்‘ அதேபோன்று. தனக்கு எதிரானவர்கள் மற்றும் போர் வலயத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீது ஏவி விடப்பட்ட சிறிலங்கா அரசின் கொடூரமான நடவடிக்கைளை வெளிப்படுத்தியுள்ளது. 

இந்தநிலையில் பிரித்தானிய அரசு தொடர்ந்தும் சிறிலங்காவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளது ஏன் என்று நாம் கேட்க வேண்டியுள்ளது,“என்று கூறியுள்ளார்.

நன்றி - புதினப்பலகை
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment