பூகோள அரசியல் கற்பனை கணிப்பீட்டுக்காக இலங்கைத் தமிழரை பணயம் வைக்க முடியாது


ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது ராஜபக்ஷ அரசாங்கத்தினதும் சிங்கள இன மேலாதிக்க வாதிகளினதும் நிலைப்பாட்டை இறுக்கமாக்கிய பெறுபேறை மட்டுமே ஏற்படுத்தியிருக்கிறது. அதேவேளை, நீதிக்கான இலங்கைத் தமிழர்களின் நீண்டகால விருப்பத்தை கற்பனை செய்யப்பட்ட பூகோள அரசியல் கணிப்பீடுகளுக்காக பணயம் வைக்க முடியாது.
இவ்வாறு இந்தியா ருடே சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு தரப்பிலும் விளையாட முயற்சிக்கும் பேராபத்துக்கள் எனும் தலைப்பில் எம்.சி.ராஜனின் கட்டுரையை நேற்று முன்தினம் புதன்கிழமை இந்தியா ருடே பிரசுரித்திருக்கிறது.

பேருவகை குறுகிய காலத்துக்கு மட்டுமே நீடித்திருந்தது. போர்க்குற்றங்களுக்காக கொழும்பை பதிலளிக்கும் கடப்பாடுடையதாக்க முடியுமென இந்தியா வாக்களித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட எதிர்பார்ப்புகள் இப்போது காய்ந்து வரண்டுவிட்ட ன என்று இதில் தெரிவிக்கப்பட்டிருப்பதுடன், மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதானது. தென்புறத்திலுள்ள எமது சின்னஞ்சிறிய அயலவரை சாந்தப்படுத்த பிரதமர் மன்மோகன்சிங் பின்னோக்கி வளைந்து கொடுத்தார். ஆனால் அது தொடர்பாக அதிகளவுக்கு மகிழ்ச்சியடைய எதுவும் இல்லை. ஆனால் மாநிலத்தில் (தமிழகம்) சகல கட்சிகளும் ஒரே குரலில் பேசுவதற்கான மத்திய ஸ்தானத்திற்கு இலங்கைத் தமிழர் விவகாரம் மீண்டும் திரும்பி வந்திருக்கிறது. வழமையாக எதிர்ப்புணர்வைக் கொண்டிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுக்கூட இந்த நிலைவரத்திற்கு எதிராகச் சென்றிருக்கவில்லை. இலங்கைப் போர்க்குற்ற விவகாரத்தின் எதிரொலிப்புகள் இன்னமும் மறைந்துவிடவில்லை என்பது தெளிவானதாகும். யுத்தத்தில் சத்தமில்லாத பங்காளியென காங்கிரஸ் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

தமிழர்களின்  கொள்கைகளுக்கு துரோகியாக மோசமான முறையில் தி.மு.க. பார்க்கப்பட்டது.இலங்கைத் தமிழர்களின் துன்பநிலை குறித்து மக்கள் மத்தியில் தொடர்ந்தும் பாரியளவில் கவனம் செலுத்தப்படுவதை அண்மைய அபிப்பிராய வாக்கெடுப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. மாநிலத்தில் ஓரத்திலுள்ள சிறிய குழுவென்ற நிலைமைக்கு காங்கிரஸ் தாழ்ந்த மட்டத்திற்கு சென்றுள்ளமை ஆச்சரியமான விடயமாகும். வாக்கெடுப்பும்  அதன் பின்னரான நிகழ்வுகளும் புதுடில்லியினதும் மற்றும் மாநிலத்தின் அரசியல் வர்க்கத்தினதும் தெளிவற்ற தன்மையை அம்பலப்படுத்துகிறது.

தமிழக  அரசியல்வாதிகளும் இலங்கைத் தமிழர்களுக்காக முன்னணியில் செயற்படுபவர்களும் தமது குரல்களை எழுப்புவதில் தாழ்ந்த மட்டத்தில் வைத்திருந்து திருப்தியுடன் தொடர்ந்து இருப்பது துன்பகரமான விடயமாகும். இலங்கைத் தமிழரின் பிரச்சினை தொடர்பான பிரதான நோக்கத்திலிருந்தும் அவர்கள் வெகு தொலைதூரத்திற்கு அகற்றப்பட்டிருக்கின்றனர். 

இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை விமர்சிக்க எவரும்  முயற்சித்திருக்கவில்லை.இலங்கையின் இராணுவம் தொடர்பாக ஆணைக்குழு சுத்தவாளியென்ற சான்றை வழங்கியிராத நிலையில்கூட எவரும் விமர்சிக்க முயற்சிக்கவில்லை.ஆனால் மனித உரிமை மீறல்கள் அதிக உயர்மட்டத்தில் இருப்பதாக சுயாதீன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையின் மனித துன்பங்களுக்கான சர்வதேசத்தின் பிரதிபலிப்புகள் தொடர்பான ஜெனீவாத் தீர்மானமானது கோட்பாட்டு ரீதியானதாக மட்டுமே காணப்படுகிறது.

மேற்கு  நாடுகளின் பூகோள அரசியல் ஆர்வங்கள் யதார்த்தமாக இருக்கின்ற நிலையில் பாரியளவிலான கொலைகளுக்கான  நீதியைக் கோரும் வலியுறுத்தல்கள் பொருட்படுத்தப்படாமல் சென்றுவிடக்கூடாது, விபரங்களை தெளிவாக அறிந்துகொண்ட ரீதியிலான பொதுமக்களின் பகிரங்கக்கருத்துகள்  இல்லாத நிலையில் தீக்கோழி போன்ற நிலைப்பாட்டை எடுப்பதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்துள்ளது. அதேவேளை, தீர்மானத்திற்கு நாடு (இந்தியா)ஆதரவு  அளித்ததற்கான நியாய பூர்வத்தன்மை குறித்து சில ஊடக விமர்சகர்கள் கேள்வி எழுப்புவதுடன், பிராந்திய மட்டத்திலான உணர்வுகளின் கைதியாக வெளியுறவுக்கொள்கை உருப்பெற்று வருவதாக புலம்புகின்றனர்.

ஆனால் அர்த்தத்திலும் சுருதியிலும் மன்னிப்புக்கோரும் தன்மையை கொண்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கலாநிதி மன்மோகன்சிங் எழுதிய கடிதம் காணப்படுவதற்கு அப்பால் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட தலைமையைக் கொண்டதாகத் தென்படவில்லை. நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுவதே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அர்த்தபுஷ்டியுடனான தீர்வுக்குத் தேவைப்படுகிறது.

ராஜபக்ஷவை சாந்தப்படுத்த பிரதமர் கடிதம் எழுதியிருக்கக்கூடாது என்று இலங்கை விவகாரங்கள் தொடர்பான நிபுணரான பேராசிரியர் சூரிய நாராயணன் அபிப்பிராயத்தை கொண்டிருக்கிறார்.

இது தேவையற்றது என்பது அவரின் கருத்தாக உள்ளது. ஜெனீவாத் தீர்மானத்தில் தளர்வுகளை ஏற்படுத்தியுள்ள போதிலும் அத்தீர்மானத்தை நியாயப்படுத்துவதற்கு  புதுடில்லிக்கு போதிய காரணங்கள் உள்ளன. கொழும்புக்கு எதிராக வாக்களிப்பதற்கு தயக்கத்தை  கொண்டிருப்பதாக தென்பட்டபோதும் நியாயப்படுத்த பல காரணங்கள் இருக்கின்றன. சாந்தப்படுத்தும் கடிதமானது தீர்மானத்தை பலவீனப்படுத்துகிறது என்பது அவரின் கருத்தாகும்.  கொழும்பு மீது செல்வாக்குச் செலுத்துவதற்கான போதிய விடயங்களை இந்தியா கொண்டிருக்கிறது. இலங்கை தொடர்பான சீனாவின்  அச்சுறுத்தலென்பது மிகைப்படுத்தப்பட்டதொன்றாகும்.

ராஜீவ் காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளாத கொள்கையை புதுடில்லி கடைப்பிடித்தமையானது முன்னாள் பிரதமரின் பாரிய தொலைநோக்கான 13 ஆவது திருத்தத்தை இலங்கைஅழித்து நாசமாக்கி விடுவதற்கு மட்டுமே உதவியது.13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்வதாக ராஜபக்ஷ பேசினாலும் அவர் தனது மனதில் எதனைக் கொண்டுள்ளார் என்பது குறித்து இதுவரை வெளிப்படுத்தவில்லை.

பெறுபேறை அடிப்படையாகக்கொண்ட அதிகளவுக்கு அர்த்த புஷ்டியானதுமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவை இந்தியாவுக்கு உள்ளது. ஆனால் இதுவரை இந்த விடயத்தில் மாறான தன்மையே காணப்படுகிறது. பதிலளிக்கும் கடப்பாடு மற்றும் உண்மையான நல்லிணக்கத்தை நோக்கி முன்நகர்வை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்களில் ராஜபக்ஷவை தூண்டுவதற்கு இந்தியா தரப்பில் தயக்கமே காணப்படுகிறது. இத்தகைய சாட்சிகளின் அடிப்படையில் நியாயமான காரணத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக கடுமையான நிலைப்பாட்டை இலங்கையானது உள்ளீர்த்து வருவது ஏமாற்றமளிக்கும் விடயமாகும்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வாக்களிப்புக்குப் பின்னர் இந்தியா துரிதமாக பின்வாங்கிச் சென்றுள்ளதாகத் தென்படும் அதேவேளை, கொழும்பு துணிச்சலுடனான பலத்தைப் பெற்றிருப்பதாகத் தோன்றுகிறது.ஆனால் கற்பனை செய்யப்பட்ட பூகோள அரசியல் கணிப்பீடுகளுக்கு இலங்கைத் தமிழரின் நீதிக்கான தீவிர விருப்பத்தை பணயம் வைக்க முடியாது. நீதி வழங்கப்படவேண்டும் என்பது மட்டுமன்றி அதனை நிறைவேற்றுவது பார்க்கப்படவேண்டும் என்பதை கூறத் தேவையில்லை.

Share on Google Plus

About அகிலன்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment