விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு அமெரிக்கப் பாதுகாப்பு பிரிவுகள் எவ்வாறு உதவின என்பது பற்றிய இரகசியத் தகவல்களை, இறுதிகட்டப் போரின் போது சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினால் உருவாக்கப்பட்ட ‘முக்கியமான படை‘ ஒன்றின் உறுப்பினர் வெளியிட்டுள்ளார்.
வெளிநாடுகளின் எந்த உதவியும் இன்றியே விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து போரை முடிவுக்குக் கொண்டு வந்ததாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அண்மையில் கூறியிருந்தார்.
அவரது இந்தக் கருத்தை நிராகரிக்கும் வகையிலேயே, சிறிலங்காவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா எவ்வாறு உதவியது என்ற தகவலை சரத் பொன்சேகாவினால் உருவாக்கப்பட்ட முக்கிய படை ஒன்றைச் சேர்ந்தவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வெளியிட்டுள்ளார்.
2006ம் ஆண்டில் அப்போதைய சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்க இராஜாங்கச் செயலர் கொன்டலிசா ரைசிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து அமெரிக்காவில் விடுதலைப் புலிகளின் எல்லாச் செயற்பாடுகளை தடுப்பதற்கு, ஒரு செயலணிக்குழு அமைக்கப்பட்டது.
இதன்படி, கனேடிய எல்லை வழியாக அமெரிக்காவில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்ய வந்த விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டனர்.
2007 ஜனவரியில் இவர்கள் கைது செய்யப்பட்டவுடன், புலிகளின் ஆயுத வலையமைப்பின் செயற்பாடுகளைத் தடுக்க முடிந்தது.
அமெரிக்காவுடன் மங்கள சமரவீர கொண்டிருந்த நல்லுறவினால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சிறிலங்கா அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, அமெரிக்க அரசாங்கம் ஹவாயில் உள்ள பசுபிக் கட்டளைப்பீடத்தின் கீழ் உள்ள, 7வது கடற்படை அணியின் போர்க்கப்பலான ‘யுஎஸ்எஸ். புளூ றிட்ஸ்‘ இல் இருந்து, விடுதலைப் புலிகளின் கப்பல்களின் நடமாட்டம் பற்றிய- குறிப்பாக ஆயுதக்கப்பல்களின் நகர்வுகள் பற்றிய செய்மதிப் படங்கள் சிறிலங்கா அரசுக்குத் தொடர்ச்சியாக வழங்கப்பட்டன.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஊடாக, இந்தச் செய்மதிப் படங்கள் சிறிலங்கா இராணுவத்திடம் கொடுக்கப்பட்டன.
இந்த செய்மதிப் படங்களை கிரகித்துக் கொள்ளும் ஆற்றல்மிக்க அதிகாரிகள் எவரையும் சிறிலங்கா இராணுவம் அப்போது கொண்டிருக்கவில்லை.
இதையடுத்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், மேஜர் கெலும் மத்துமகே என்ற சிறிலங்கா இராணுவ அதிகாரிக்கு புலமைப்பரிசில் வழங்கி, கொலராடோவில் உள்ள இராணுவ அக்கடமியில் இது பற்றிய பயற்சிநெறியை மேற்கொள்ள உதவியது.
அதன்பின்னர், சிறிலங்கா கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட பேர்ல் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளைத் தடுப்பதற்கான சிறப்பு பயிற்சிகள், கரையில் இருந்த 700 கடல்மைல் தொலைவில் வைத்து அளிக்கப்பட்டன.
இந்த சிறப்புப் பயிற்சியை அடுத்து அமெரிக்காவின் 7வது கடற்படை அணியின் ‘யுஎஸ்எஸ் புளூ றிட்ஜ்‘ தொழில்நுட்ப உதவிகளை வழங்கியதுடன், சிறிலங்கா இராணுவத்தினால் பெறப்பட்ட செய்மதிப் படங்களின் அடிப்படையில் ஆழ்கடலில் விடுதலைப் புலிகளின் கப்பல்களை அழிக்க சிறிலங்கா கடற்படை மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்து வந்தது.
அமெரிக்க இராணுவத்திடம் இருந்து பெறப்பட்ட உதவியின் மூலம் உயர்திறன் கொண்ட ஆயுதங்கள் மற்றும் கருவிகளை ஏற்றி வந்த விடுதலைப் புலிகளின் எல்லாக் கப்பல்களையும் சிறிலங்கா கடற்படை ஆழ்கடலில் தாக்கியழித்தது.
தாக்கியழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் 7-8 கப்பல்களில் இருந்த ஆயுதங்கள் வடக்கைச் சென்றடைந்திருந்தால், போரின் இறுதி முடிவு வேறுமாதிரியாக அமைந்திருக்கும்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை எதிர்காலத்தில் தாம், இந்தப் போரின் போது இஸ்ரேல் மற்றும் பிரித்தானியா என்பன சிறிலங்காவுக்கு எவ்வாறு உதவி வழங்கின என்ற தகவலையும் வெளியிடப் போவதாகவம் அவர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள் :
Post a Comment