போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்காவை மன்னித்துவிடக் கூடாது - ஐ.நா அறிக்கை தயாரித்த தருஸ்மன்


சிறிலங்கா இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என நாம் எமது அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயத்தை, கற்றுக் கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழுவானது புலிகளின் எறிகணையில் அல்லது துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டதாக பதிலளித்துள்ளது. இவ்வாறு சிறிலங்கா தொடர்பாக ஐ.நா அறிக்கையை தயாரித்த MARZUKI DARUSMAN அமெரிக்காவை தளமாகக் கொண்ட The New York Times ஊடகத்தில் எழுதியுள்ளார்.


சிறிலங்காவில் தொடரப்பட்ட குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தமானது 2009ல் நிறைவுக்கு வந்ததிலிருந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கவனத்தை திசை திருப்பியிருந்த சிறிலங்கா விவகாரம் தொடர்பாக இவ்வாரம் ஆரம்பமான இதன் கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட்டுள்ளது. புலிகள் அமைப்பின் எஞ்சியிருந்த உறுப்பினர்கள் மற்றும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்த பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் அகப்பட்டுத் தவித்த சிறிலங்காவின் வடகிழக்கில் அமைந்துள்ள குறுகிய, ஒடுங்கிய கரையோர, சதுப்பு நிலப் பகுதி ஒன்றில் சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் நிறைவுக்கு வந்தது.


தீவிரமான தாக்குதல் உத்திகள் பலவற்றைக் கையாண்டு தாக்குதல்களை நடாத்தியிருந்த புலிகள் அமைப்பு முற்றாக தோற்கடிக்கப்பட்டது தொடர்பில் சிறிலங்கர்களும், பல அனைத்துலக நாடுகளும் உளம் மகிழ்ந்தனர்.  இந்த யுத்த காலப்பகுதியில், சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவத்தினர் வெற்றிகளைக் குவித்திருந்த போதிலும் கூட, தமிழ்ப் பொதுமக்கள் பெருமளவில் இவ்வெற்றிக்கு விலையாகக் கொடுக்கப்பட்டனர் என்ற செய்தி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் பல அவதானிகள் மிக மோசமான யுத்த மீறல்கள் தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்த போதிலும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது சிறிலங்கா பெற்ற யுத்த வெற்றியைப் பாராட்டியதுடன், பரிந்துரை ஒன்றையும் மேற்கொண்டிருந்தது.


இக்காலப்பகுதியில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் தனது நாட்டில் இடம்பெற்ற யுத்த மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதாக உறுதிப்பாடு வழங்கியிருந்தார். ஆனால் இவ்வாக்குறுதி வழங்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்த நிலையிலும் கூட, சிறிலங்கா அதிபர் அதனை நிறைவேற்ற எந்தவொரு நகர்வுகளையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் ஐ.நா செயலாளர் நாயகம் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதுடன், அது தொடர்பான சிறிலங்காவின் பதிலையும்  அறிக்கை வடிவில் தருமாறு நான் [MARZUKI DARUSMAN] உட்பட மூவர் கொண்ட குழுவிடம் கேட்டுக் கொண்டார். இதன் பிரகாரம் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட யுத்த கால மீறல்கள் தொடர்பான உண்மைகளை நாம் கண்டறிந்து அறிக்கையாக தயாரித்தோம். எமது விசாரணையின் முடிவில், சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் பங்கு கொண்ட இரு தரப்புக்களும் சட்ட விதிமுறைகளை திட்டமிட்ட வகையில் மீறி நடந்து கொண்டதற்கான நம்பகமான ஆதாரங்களையும், சாட்சியங்களையும் நாம் கண்டுகொண்டோம்.


இரு தரப்புக்களும் யுத்த விதிமுறைகளை மீறியதால் 40,000 வரையானவர்கள் தமது உயிர்களை இழந்துள்ளனர் என்ற உண்மையையும் நாம் கண்டறிந்து கொண்டோம். அதாவது லிபியா அல்லது சிரியாவில் இடம்பெற்ற யுத்தத்தின் போது கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையின் பல மடங்காக இது காணப்படுகிறது. இவ்வாறு சிறிலங்காவில் கொல்லப்பட்ட மக்களில் பெருமளவானவர்கள் சிறிலங்கா அரசாங்கப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட செறிவான எறிகணை மற்றும் வான் குண்டுத் தாக்குதலின் போதே படுகொலைசெய்யப்பட்டனர். இதில் வைத்தியசாலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும் உள்ளடங்குகின்றன. இவ்வாறான யுத்தக் குற்றச்சாட்டுக்கள், உண்மையான ஆணைக்குழுவின் ஊடகவோ அல்லது குற்றவியல் விசாரணைகள் மூலமோ கற்றறியப்படாமல், இவற்றை விசாரணை செய்வதற்காக சிறிலங்கா அரசாங்கமானது 'கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவை' உருவாக்கிக் கொண்டது. சிறிலங்காவின் யுத்த களத்தின் இறுதி நாட்களில் உண்மையில் என்ன நடந்ததென்பதை மூடிமறைப்பதற்கான பொறிமுறைகளைக் கொண்டதாகவே இவ் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.


கடந்த நவம்பரில் இந்த ஆணைக்குழுவானது தனது இறுதி அறிக்கையை வெளியிட்ட போது, எமது அறிக்கையின் இறுத்தீர்வுகளைக் கூட கவனிக்கத் தவறியுள்ளது அல்லது அதனை அசட்டை செய்துள்ளது. அத்துடன் பொதுமக்களின் இழப்புக்கள் தொடர்பாக எம்மால் கண்டறியப்பட்ட காரணங்களையும் ஆணைக்குழு தனது அறிக்கையில் திருத்தி வெளியிட்டுள்ளது. அதாவது சிறிலங்கா இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என நாம் எமது அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயத்தை, கற்றுக் கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழுவானது புலிகளின் எறிகணையில் அல்லது துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டதாக பதிலளித்துள்ளது.


இந்த ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை வெளிவந்த பின்னர், அதன் பரிந்துரையின் படி தற்போது யுத்த கால மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக சிறிலங்கா அரசாங்கமானது இராணுவ அதிகாரிகள் மற்றும் அரச வழக்கறிஞர்களைக் கொண்ட இராணுவ நீதிமன்றம் ஒன்றை அமைத்துள்ளது. இவ்விரு சாரரும் பல பத்தாண்டுகளாக சிறிலங்கா ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல மீறல்களை தமது கவனத்தில் எடுக்கத் தவறியுள்ளனர். இந்நிலையில் நீதியை நிலைநாட்டத் தவறிய இராணுவ மற்றும் வழக்கறிஞர்கள் தற்போது இராணுவத்தினரின் யுத்த மீறல்களை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.


இக்கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் வரவேற்கத்தக்க சில பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. சிறிலங்காவில் யுத்தம் தொடரப்பட்டதற்கான அடிப்படைக் காரணிகள் எவை என்பதை ஆணைக்குழு கற்றறிந்து கொண்டுள்ளது. அத்துடன் பொது மக்களின் இழப்புக்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கமும் புலிகளும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. சிறிலங்காவானது உண்மை, நீதி என்பவற்றை நாட்டில் நிலை நாட்டி, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்டஈடுகளை வழங்குவதுடன், தடுப்பில் உள்ளவர்களை விடுவித்தல் மற்றும் அரச அச்சுறுத்துலுக்கு உள்ளாக்கப்பட்ட ஊடகவியலாளர்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என எம்மால் முன்வைக்கப்பட்ட விடயத்திற்கு கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவானது தனது அறிக்கையின் மூலம் மேலும் வலுச்சேர்த்துள்ளது. ஆனால் சிறிலங்காவில் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் கூட இன்னமும் அமுல்படுத்தப்படவில்லை என்பதே உண்மையான நிலைப்பாடாகும்.


சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உண்மையான, நீதியான தீர்வை எட்டுவதுடன், உரிய வகையில் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அமெரிக்காவால் உருவாக்கப்படும் பிரேரணை ஒன்றுக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் தமது ஆதரவை நல்குவதற்கான வழிவகைகள் தொடர்பாக தற்போது ஆராயப்படுகிறது. இந்த விடயத்தில் மனித உரிமைகள் பேரவையானது தனது நகர்வை மேற்கொள்வதற்கு அமெரிக்கா முன்னின்று செயற்பட வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளது. சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது 2009ம் ஆண்டிலிருந்து தான் கொண்டுள்ள குழப்பநிலையை தீர்ப்பதற்கான உகந்த நேரம் இதுவாகும். இவ்வாறானதொரு கோரிக்கை மட்டும் போதுமானதல்ல. நாம் எமத அறிக்கையில் பரிந்துரைத்ததன் படி, சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த கால மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனைத்துலக சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்றை பேரவையானது உருவாக்கிக் கொள்ள வேண்டும். 


சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த மீற்லகள் தொடர்பில் வெற்றி பெற்றுக் கொண்டவர் என்பதை விடுத்து, உண்மையான பொறுப்புக் கூறல் என்பதைக் கண்டறியவேண்டியது இன்றியமையாததாகும். தென்னாபிரிக்கா, சியாராலியோன், ஆர்ஜென்ரினா போன்ற நாடுகளிடமிருந்து கற்றுக் கொண்ட பாடங்களைக் கொண்டு சிறிலங்கா விடயமும் கையாளப்பட வேண்டும். சிறிலங்காவில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் அனைத்துலக சமூகமானது போதியளவு ஆர்வத்தைக் கொண்டிருக்காவிட்டாலும் கூட, தொடர்ந்தும் இவ்வாறானதொரு சூழலை கவனத்திற் கொள்ளாது, அசட்டையாக இருந்து விட முடியாது, இந்த விவகாரத்தை மன்னித்து விடவும் முடியாது. சிறிலங்கா அரசாங்கமானது தனது எல்லா மக்களுக்கும் ஏனைய உலக நாடுகளுக்கும் தனது மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதை உறுதிப்படுத்த வேண்டிய தனது கடப்பாட்டை அனைத்துலக சமூகமானது தட்டிக்கழிக்காது, அதனை நிறைவேற்ற வேண்டிய காலம் இதுவாகும்.



Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment