ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்இ மீண்டும் சிங்களத் தேசியவாதத்தை உசுப்பிவிடும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. அண்மையில் ஜாதிக ஹெல உறுமயவின் மத்தியகுழுக் கூட்டத்தில் முக்கியமான மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
- சிங்களக் கடும் போக்காளர்களை ஓரணியில் திரட்டும் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.
- வியட்நாமில் அமெரிக்கா கற்றுக் கொண்ட பாடத்தை இலங்கையில் அமெரிக்காவுக்கு புகட்ட வேண்டும்.
- நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை தடுக்க வேண்டும். இவையே அந்த மூன்று முக்கிய தீர்மானங்களுமாகும்.
இந்தநிலையில் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடெங்கும் போராட்டங்களை அரசாங்கம் ஒழுங்கு செய்யப் போவதாக அறிவித்துள்ளார் அமைச்சர் விமல் வீரவன்ச. ஜாதிக ஹெல உறுமயவும், விமல் வீரவன்சவும், சிங்களத் தேசியவாதத்தை உசுப்பி விட்டுத் தான் தம்மை அரசியல் ரீதியாக வளர்த்துக் கொண்டவர்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை. போர் நடந்த காலத்திலும் சரி, போர்நிறுத்த காலத்திலும் சரி, போர் முடிந்த காலத்திலும் சரி, இவர்களின் போராட்டங்கள் மேற்குலகை கடும் அதிருப்தி கொள்ள வைத்தது. அமைதியைக் குழப்புவதும், போரை ஊக்குவிப்பதும் இவர்கள் செய்த நல்ல காரியங்கள்.
ஐ.நா பொதுச்செயலர் நிபுணர் குழுவை நியமித்தபோது, அதற்கெதிராக போராட்டம் நடத்திஇ பான் கீ மூனுக்கு பாடம் கற்பிக்கப் போவதாக கூறியவர்கள் சர்வதேச எதிர்ப்பைக் கண்டு அடங்கிப் போயினர். அதற்குப் பின்னர் இப்போது மீண்டும் இவர்கள் சிங்களத் தேசியவாதத்தை தட்டியெழுப்ப முனைகின்றனர். இது அமெரிக்காவுக்கு எதிரான நகர்வாக மட்டும் தெரியவில்லை. இதன் அடிப்படைக் காரணம் அதற்கும் அப்பாற்பட்டது. போர்க்குற்ற விசாரணைகளைத் தடுப்பது, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதைத் தடுப்பது ஆகியன இவர்களின் முக்கியமான இலக்குகள்.
சிங்களக் கடும் போக்காளர்களை அணி திரட்ட வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய நிறைவேற்றியுள்ள தீர்மானம் சாதாரணமானதொன்றாக இருக்க முடியாது. வருங்காலத்தில் சிங்களக் கடும் போக்காளர்களை வைத்து அரசுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நெருக்கடி கொடுப்பதற்கான முயற்சியாகவே தெரிகிறது. ஜாதிக ஹெல உறுமயவும் சரி விமல் வீரவன்சவும் சரி, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை விரும்பவில்லை.அது போரில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்த படையினருக்குச் செய்யும் துரோகமாகவே அவர்கள் கருதுகின்றனர். இத்தகைய பின்னணியில் சிங்களப் பேரினவாதத்தை தூண்டிவிட்டு இந்த முயற்சியை முறியடிக்க முனைகின்றனர்.
அதிகாரப்பகிர்வு, அரசியல்தீர்வு எல்லாவற்றையும் முடக்குவதற்கு சிங்களப் பேரினவாதத்தின் மீள் எழுச்சி தான் உதவும் என்பது இவர்களின் வாதம்.
அதனை மையப்படுத்தியே இப்போது அமெரிக்காவுக்கு பாடம் புகட்டப் போவதான பிரச்சினையை கையில் எடுத்துள்ளது ஜாதிக ஹெல உறுமய.
வியட்நாமில் கற்ற பாடத்தை இவர்கள் இங்கு புகட்டுவதற்கு, அமெரிக்கப் படைகள் இங்கே தங்கவும் இல்லை. இவர்கள் ஆயுதம் தரித்த வியட்கொங் போராளிகளும் இல்லை.
அமெரிக்காவுக்கு பாடம் புகட்டுவது என்பது வீதியில் இறங்கி சில போராட்டங்களை நடத்துவது தான்.
இது தான் இவர்களின் அடிப்படை இலக்கல்ல.
இப்போதைய சூழலில் புலிகளையோ அல்லது போரை முன்னிறுத்தியோ, போரின் வெற்றியை அடிப்படையாக வைத்தோ சிங்களப் பேரினவாதத்தை தட்டியெழுப்பி உசுப்பி விட முடியாது. போர்க்குற்ற விசாரணைக்காக இலங்கைப் படையினரை சர்வதேசம் இழுத்துச் செல்லும் நிலை வந்தால் கூட, அதை சிங்கள மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளும் நிலை உருவாகாது என்றே தோன்றுகிறது. ஏனென்றால், போர் வெற்றியின் மாயை உடைந்து விட்டது. அதைச் சார்ந்த உருவாக்க வைத்திருந்த மதிப்பை அரசாங்கமும் சரி, அரசபடைகளும் சரி, போருக்குப் பிந்திய மூன்றாண்டுகளில் தொலைத்து விட்டன. போரில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்த- சிங்கள மக்களால் துட்டகெமுனுவாகப் பார்க்கப்பட்ட- சரத் பொன்சேகாவை சிறையில் தள்ளியபோதே சிங்களத் தேசியவாதம் அவருக்குச் சார்பாக எழவில்லை. சரத் பொன்சேகாவை விடவும் போரில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒருவர் இலங்கை இராணுவத்தில் இருக்க முடியாது. அவருக்காகவே கிளர்ந்து எழாத சிங்களத் தேசியவாதம், அவருக்குக் கீழ் பணியாற்றிய படையினருக்காக கிளர்ந்தெழும் என்று கருதுவது அவ்வளவு பொருத்தமானதாகத் தெரியவில்லை. இது சிங்களத் தேசியவாதத்தை நம்பி அரசியல் நடத்தும் சக்திகளான ஜாதிக ஹெல உறுமயவுக்கும் விமல் வீரவன்சவுக்கும் நன்றாகவே தெரியும். எனவே, சிங்களத் தேசியவாதத்தை மீளவும் உயிர்ப்பித்து, அதன் மூலம் குளிர்காயும் முயற்சியில் இந்தத் தரப்புகள் இறங்கியுள்ளன. அதற்கு அடித்தளம் போடும் வகையில் தான் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வர முனையும் அமெரிக்காவில் தொடங்கியுள்ளனர்.
வரும் நாட்களில் சிங்களத் தேசியவாத அமைப்புகள் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்களை தீவிரமாக மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.
அது தனியே அமெரிக்காவுக்கு எதிரானதாக மட்டும் அமையப் போவதில்லை. அது படிப்படியாக தமிழருக்கு உரிமைகளை வழங்குவதற்கு எதிரானதாக விரிவாக்கம் பெறும் ஆபத்து உள்ளது. ஆனால் என்ன, இந்தத் தரப்புகள் சிங்களப் பேரினவாதத்தை முன்னரைப் போன்று உசுப்பி விடுவது இலகுவில் வெற்றியளிக்காது. அவ்வாறு உசுப்பி விடுவதற்கு முனைந்தாலும், அது சர்வதேச அரங்கில் இலங்கை அரசுக்கு அதிகளவிலான பாதிப்பைத் தான் ஏற்படுத்துமே தவிர, இப்போதுள்ள நெருக்கடிகளைக் குறைக்கப் போவதில்லை.
தொல்காப்பியன்
0 கருத்துரைகள் :
Post a Comment