அமெரிக்காவின் ஆசிய பசுபிக் பிராந்திய பாதுகாப்பு திட்டத்தின் ஒர் அங்கமாக, அவுஸ்ரேலியாவுக்குச் சொந்தமான கோக்கோஸ் தீவில் பாரிய கடற்படைத்தளத்தினை அமைக்கும் திட்டம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. ஆளில்லா வேவு விமான தளத்துடன் கூடிய, பிரமாண்டமாக அமைக்கப்படவுள்ள இந்தக் கடற்படை தளத்துக்கான அனுமதியை அமெரிக்காவின் நாடாளுமன்றம் வழங்கியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் டார்வின் தீவிலும் அமெரிக்கப்படைகளை நிலைநிறுத்துவதற்கான தளம் ஒன்று அமைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அவுஸ்திரேலியாவின் கோக்கோஸ் தீவில் இந்தப் பாரிய படைத்தளம் உருவாகின்றது. அமெரிக்க அரசுத் தலைவர் ஒபாமாவின் அவுஸ்திரேலிய பயணத்தின் போது இருநாடுகளிடையே இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடைப்பட்ட இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான காக்கோஸ் தீவில் பிரம்மாண்ட கடற்படை தளத்தை அமெரிக்கா அமைக்க உள்ளது. தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றையும் கண்காணிக்கக் கூடிய வகையில் அமெரிக்காவின் இந்த நகர்வு சீனாவுக்கு மிகவும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஆசிய பசுபிக் பிராந்திய பாதுகாப்பு மூலோபாய திட்டத்துக்கு ஏற்கனவே சீனா தனது கடும் எதிர்பினைத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சீனா உரிமைகோரி வரும் எண்ணெய்வளம் மிக்க தென்சீனக் கடலை எளிதில் கண்காணிக்கக் கூடிய கோக்கோஸ் தீவில் கடற்படை தளத்தை அமைக்க முடிவு செய்திருப்பது சீனாவிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. தென்சீனக் கடலில் ஏராளமான தீவுகளுக்கு ஆசிய நாடுகளான புருனே, பிலிப்பைன்ஸ், மலேசியா,வியட்நாம் போன்றவை உரிமை கொண்டாடி வருகின்றன. வியட்நாம் அரசின் ஒத்துழைப்புடன் தென்சீனக் கடலில் இந்தியா எண்ணெய் அகழாய்வுப் பணியில் ஈடுபட, தொடர்ந்து சீனா எச்சரித்து வரும் நிலையில் அமெரிக்காவும் தென்சீனக் கடலை முற்றுகையிட்டு நிற்க உள்ளது. மேலும் வளைகுடா நாடுகளிலிருந்து சீனாவுக்கு எண்ணெய் எரிபொருள் கொண்டுவரப்படும் மிக முக்கியமான மலாக்கா ஜலசந்தியை கோக்கோஸ் தீவிலிருந்து போர்க் கப்பல்கள் எளிதில் சென்றுவிட முடியும்.
இதேவேளை அமெரிக்கா தற்போது முகாமிட உள்ள கோக்கோஸ் தீவு இந்தியாவின் அந்தமான் தீவுகளுக்கு சற்று கீழே உள்ளவைதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. கோக்கோஸ் தீவில் முகாமிடுவதன் மூலம் இந்தியா,சீனா ஆகிய இருநாட்டு கடற்படை செயற்பாடுகளை முழுவதுமாக அமெரிக்கா வேவு பார்க்கும். எதிர்காலத்தில் இந்தியா-சீனா அல்லது அமெரிக்கா-சீனா இடையே ஒரு போர் அல்லது பதற்ற நிலை உருவானால் மலாக்கா ஜலசந்தியை போர்க்கப்பல்கள் வழி மறிக்கும் பூகோள முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமெரிக்கா நிலை கொள்ள முனைந்திருப்பது தென்னாசிப் பிராந்தியத்தின் எதிர்கால அரசியலில் பல மாற்றங்களை நிகழ்த்த வல்லதோடு இலங்கைத்தீவிலும் இது எதிரொலிக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.
நன்றி நாதம்
0 கருத்துரைகள் :
Post a Comment