உயர்பாதுகாப்பு வலயங்களை குறைத்து, தமிழர் நிலங்களை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள சிறிலங்கா படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்று கொண்டு வரப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தின் மீது உரையாற்றிய போதே இந்திய பிரதிநிதி இவ்வாறு கூறியுள்ளார்.
“சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை இந்தியா வரவேற்றிருந்தது.
சிறிலங்காவில் வாழும் அனைத்து இன மற்றும் மதக் குழுக்களுக்கும் மதிப்பளிக்கும் வகையிலான அரசியல்தீர்வு மூலமான நல்லிணக்கத்தை அந்த நாட்டில் கொண்டு வருவதற்கு இந்தப் பரிந்துரைகள் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தரும் என்று இந்தியா நம்புகிறது.
அரசியல் தீர்வை சிறிலங்கா அரசாங்கம் ஆர்வத்துடன் தலைமையேற்று முன்னெடுக்க வேண்டும் என இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
13வது அரசியலமைப்புத் திருத்தத்தையும் அதற்கும் மேற்பட்ட அதிகாரங்களை பகிர்ந்தளிக்கப்படுவதை நோக்கி சிறிலங்கா அரசாங்கம் முன்னேறிச் செல்ல வேண்டும்.
பரந்துபட்ட கலந்துரையாடலுடன் கூடிய அரசியல் நடவடிக்கைகளை அது முன்னெடுக்க வேண்டும்.
மீறல்களை மேற்கொண்டவர்களை அதற்குப் பொறுப்பேற்கச் செய்வதிலும் மனிதஉரிமைகளைப் பேணுவதிலும், தனக்கு இருக்கின்ற அனைத்துலக கடப்பாடுகளை நிறைவேற்றும் நோக்கில் சிறிலங்கா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதேவேளை, நல்லிணக்கம், சமாதானம் போன்ற இலக்குகளை அடைய சிறிலங்கா போன்ற ஒரு ஜனநாயக நாட்டுக்கு போதிய அவகாசமும், செயற்படுவதற்கான இடமும் வழங்கபட வேண்டும்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை சிறிலங்கா தமது இலட்சியங்களை எட்ட உதவியாக இருக்க வேண்டும், தடையாக இருக்கக் கூடாது.
காணாமல் போனவர்கள் மற்றும் தடுப்புக்காவலில் உள்ளவர்களின் விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும்.
சிறிலங்காவில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடு கட்டித்தருவது, சுகாதாரம் வசதிகளை சீர்செய்வது, கண்ணிவெடிகளை அகற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவி செய்யும்.
உயர் பாதுகாப்பு வலயங்களை சிறிலங்கா அரசு உடனடியாக குறைத்துக் கொள்ள வேண்டும். இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு சொந்தமான இடங்களை ஒப்படைக்க வேண்டும்.
தமிழர்கள் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தை திரும்பப் பெறவேண்டும்“ என்று இந்தியப் பிரதிநிதி மேலும் கூறியுள்ளார்.
------------------------------------------------------------------------------------------
குற்றச்சாட்டுகள் குறித்து காலவரையறைக்குட்பட்ட சுதந்திரமான விசாரணையைக் கோருகிறது இந்தியா
நல்லிணக்க ஆணைக்குழுவினால் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ள மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, காலவரையறைக்குட்பட்ட, சுதந்திரமான - நம்பகமான விசாரணப் பொறிமுறை ஒன்றை உருவாக்கி, விசாரிக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் கொழும்பு விசாரிக்க வேண்டும் என்றும் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, நேற்று எழுத்துமூலம் அளித்துள்ள பதில் ஒன்றிலேயே இந்தியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் பிரனீத் கௌர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
“சிறிலங்காவுக்கு எதிரான மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான தீர்மானம் ஒன்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் விவாதத்துக்கு வரவுள்ளது.
எவ்வாறாயினும், காயங்களை ஆற்றுவது மற்றும் இறுதியான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை சிறிலங்கா அரசுக்கு இந்தியா வலியுறுத்தி வருகிறது.
சிறிலங்காவில் பொறுப்புக்கூறுதல் தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கையை இந்தியா கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகமான விசாரணைகளை சிறிலங்கா நடத்த வேண்டும்.
0 கருத்துரைகள் :
Post a Comment