அன்று முள்ளிவாய்க்கால்… இன்று கூடங்குளம்…

முள்ளிவாய்க்காலில் எப்படி ஈழத்தமிழர்களை கடல்,, வான், தரை என்று மூன்று பக்கங்களிலும் நெருக்கி சிங்கள ராணுவம் வன்முறையை ஏவியதோ அதே போலவே கூடங்குளத்தில் அணு உலையைத் திறக்கின்றோம் என்ற போர்வையில் கூடங்குளம், இடிந்தகரை அதைச் சுற்றியுள்ள மக்களை காவல்துறை தரை வழியாகவும், கடலோர காவல்துறை கடல்வழியாகவும், கடற்படையின் உலங்கு வானூர்ந்திகள் வான்வழியாகவும் மக்களை நெருக்கி வன்முறையை ஏவ ஏதுவாக உள்ளன. கூடங்குளம், இடிந்தகரை கிராமங்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் அங்கு உள்ளே செல்லவோ, அந்த பகுதி மக்கள் வெளியே செல்லவோ முடியாதபடி சிறைவைக்கப்பட்டுள்ளார்கள். மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான பால், உணவு பொருட்கள் கூட இந்த பகுதிகளுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுஇ அடுத்து தண்ணீர் வழங்கலையும் துண்டிக்கத் திட்டமிட்டுவருகின்றனர் அதிகாரிகள். 144 தடையுத்தரவும் அங்கு அமலில் இருக்கின்றது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த முள்ளிவாய்க்காலே நம் நினைவை விட்டு இன்னும் அகலாத நிலையில் இந்திய,தமிழக அரசுகள் அதே போன்றதொரு நிகழ்வை நிகழ்த்த இருக்கின்றன.

இனப்படுகொலை இலங்கை அரசு தமிழர்களை படுகொலை செய்ய பிரயோகப்படுத்திய அதே “மாதிரி வடிவம்” இன்று ஒரு அமைதிவழிப் போராட்டத்தை ஒடுக்க மத்திய, மாநில அரசுகளால் பயன்படுத்தப்பட்டு வருவதென்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.      

மத்திய அரசு தொடக்கம் முதலே இந்தப் போராட்டத்தின் மீது பலவிதமான பொய்க்குற்றச்சாட்டுகளை வீசி, போராடும் மக்களை மைய நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்த தொடர்ந்து முயன்றது. அதன் நீட்சியாகத் தான் “அந்நிய நிதி”, “அந்நிய சதி” போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாரயணசாமி தொடங்கி பிரதமர் மன்மோகன் வரை கூறி, போராடும் மக்களை இந்திய மக்களிடமிருந்து அந்நியப்படுத்தினார்கள். ஆனால் இன்று வரை இதற்கு எந்தவொரு ஆதாரமும் மக்கள் மன்றத்தின் முன்னால் வைக்கப்படவில்லை. தமிழக அரசோ செயற்கையான மின்தட்டுப்பாட்டை உருவாக்கி போராடும் மக்களை தமிழக மக்களிடமிருந்து தனிமைப்படுத்தியது. 

தமிழகம் இருளில் மூழ்கியிருப்பதற்கு அணு உலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் தான் காரணம் என்ற சித்திரம் தமிழக மக்களின் பொது புத்தியில் நன்கு பதியவைக்கப்பட்டுவிட்டது. இதற்கு ஊடகங்களின் இராஜ விசுவாசம் மிக முக்கியமான காரணமாகும். இந்த நிலையில் தான் நேற்று கூடங்குளம் அணு உலை செயல்படுவதற்கு தமிழக அமைச்சரவை அதாவது முதல்வர்.செயலலிதா ஒப்புதல் கொடுத்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் செயலலிதா அதிகமாக மாறிவிட்டார், முன்னர் நேருக்கு நேர் மக்களின் எதிரியாக இருந்தவர், இப்பொழுது கூடிக் கவிழ்க்கும் துரோகிகளின் பட்டியலில் சேர்ந்துவிட்டார். ஒப்புதல் கொடுப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னரே கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த முக்கிய காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு தனக்குத் தோதான அதிகாரிகளை அங்கு பணியமர்த்தினார். 

இப்பொழுது நெல்லை, குமரி மாவட்டங்களில் உள்ள எல்லா மீனவ கிராமங்களிலும் முழுக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு கிராமமும் வேலி வைத்து கிராமத்திற்கு உள்ளே வரவோ, வெளியோ செல்லவோ முடியாமல் தடுக்கப்பட்டுள்ளது. தங்கள் சொந்த நாட்டிலேயே அம்மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கூடங்குளத்தைச் சுற்றியுள்ள எல்லா மீனவ கிராமங்களும் முள்ளிவாய்க்காலைப் போல காவல் துறையால் சூழப்பட்டுள்ளது. பால், தண்ணீர், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட இக்கிராமங்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை (மருந்து பொருட்களையும், உணவுப் பொருட்களையும் போர்க்கருவிகளாக கொண்டு எப்படி ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது). மேலும் இங்கு 144 தடையுத்தரவும் போடப்பட்டுள்ளது. இப்பொழுதுவரை 15,000 காவல்துறையினர் இக்கிராமங்களைச் சுற்றிவளைத்துள்ளனர். இடிந்தகரை கிராமம் காவல்துறை, கடலோர காவற்படை, உலங்கு வானூர்தி என எல்லாபுறங்களிலும் முற்றுகையிடப்பட்டுள்ளது. 



தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்த மறுநொடி போராடும் மக்களில் இருநூறுக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இவர்களில் 11பேர் மீது இந்திய ஒன்றியத்திற்கு எதிராக போர் தொடுத்த பிரிவிலும், தேசத் துரோக பிரிவிலும் பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் மீது சட்டத்திற்கு புறம்பாக ஒன்றுகூடுதல் பிரிவில் பொய் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதும் 2 பெண் மாணவிகள் உட்பட 43 பேர் பெண்களாவர். இவர்களனைவரையும் திருச்சி சிறையில் அடைத்துள்ளார்கள். 

இந்த செய்திகள் எதையுமே 'மக்களாட்சியின் நான்காவது தூணான' ஊடகங்கள் ஒரு சிலவற்றைத் தவிர வேறெதிலும் வெளிவரவில்லை. மட்டுமின்றி, காவல்துறை அதிகாரிகளையும், வாகனங்களையும் மக்கள் தாக்குகின்றனர் என்ற காவல்துறையின் வதந்தியை தொடர்ந்து ஒளிபரப்பி இம்மக்களின் மீது வன்முறையை பிரயோகிப்பதற்கான பொது புத்தியை உருவாக்கி தொடர்ந்து தங்களது இராஜவிசுவாசத்தை வெளிப்படுத்தி வருகின்றன.

காவல் துறை அதிகாரியான இராஜேஸ்குமார் சன் செய்திகள் தொலைக்காட்சியில் பேசியது, கோத்தபயாவை நினைவூட்டியது. உதயகுமாரும், ஒரு சிலருமே அங்கு போராடிவருவதாகவும், மற்றவர்களெல்லாம் அணு உலைக்கு ஆதரவாக இருப்பது போன்ற ஒரு பொய்யான பிம்பத்தை உருவாக்குகின்றார், இதையே தான் கோத்தபயாவும் சொன்னார். பிரபாகரனாலும், புலிகளாலும் மட்டுமே பிரச்சனை என்றும் அவர்கள் மக்களை பணயமாக பிடித்து வைத்துள்ளார்கள் என்றும் மக்களை மீட்கும் மனிதாபிமான போரை நடத்துவதாகவும் கூறினார். அதுவே தான் இங்கும் நடைபெறுகின்றது. மனிதாபிமானப் போர்களில் மனிதர்களைத் தான் காணவில்லை.

உதயகுமாரை தனியே உங்களிடம் ஒப்படைக்க மாட்டோம், 200 பேருந்துகளையும், இரண்டு காவல்துறையினரையும் அனுப்பி வையுங்கள் நாங்களும் கைதாகின்றோம் என்பது அங்குள்ள மீனவ மக்களின் கோரிக்கை. 

மின்சாரம் இல்லாததால் எல்லா மீனவ கிராமங்களும் இருளில் மூழ்கியுள்ளன. இடிந்தகரையில் குண்டு மட்டும்தான் வீசப்படவில்லை.  குறிப்பிட்ட மொழி, மதம், அல்லது இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் மீது அரசோ, அதிகாரபீடங்களோ காட்டும் பாரபட்சமான நடவடிக்கை, துவேசம் அல்லது தாக்குதல் இதில் எந்த ஒன்று நடந்தாலும் அது இனக்கொலைக்கு சமம். இப்பொழுது சொல்லுங்கள் இடிந்தகரை இப்பொழுது முள்ளிவாய்க்கால் தானே.. நாளை இடிந்தகரை என்னவாக இருக்கும்?

ஈழத்தமிழ் மக்களை இனப்படுகொலை செய்வதற்கு இலங்கை உபயோகித்த மக்களை தனிமைப்படுத்துதல், பின்னர் பயங்கரவாதி அல்லது வெளிநாட்டில் காசு வாங்கிக்கொண்டு இங்கு போராடுகின்றார்கள் என்று முத்திரை குத்துவது, ஊடகங்களை அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றுவது, மற்ற பகுதியினரை அந்தப் பகுதிக்குள் வரவிடாமல் தடை செய்வது, மக்களின் மீது மிகவும் கடுமையான வன்முறையை ஏவுவது என்ற வழிமுறையைத தான் இந்திய தமிழக அரசுகள் அமைதிவழியில் போராடிவரும் மக்களின் மேல் பயன்படுத்திவருகின்றது.

இன்று கூடங்குளம் மக்களின் மேல் ஏவப்பட்டிருக்கும் வன்முறை, மனித உரிமை மீறல்கள், நம்மை நோக்கி நீள்வதற்கு நீண்ட நேரம் தேவைப்படாது, மேலும் கூடங்குளத்தால் கிடைக்கும் மிகக்குறைந்த பட்ச மின்சாரம் கூட மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ள சிறுகுறு தொழில்களுக்கோ, விவசாயத்திற்கோ, வீட்டு உபயோகத்திற்கோ கொடுக்கப்படப் போவதில்லை, வழமை போல முதலில் கவனிக்கப்படுவது பன்னாட்டு நிறுவனங்களும், வணிக வளாகங்களுக்குமே. முல்லைப் பெரியாறு பிரச்சனையில் கேரளாவிற்கு ஆதரவாகவும், தென் பெண்ணையாற்று பிரச்சனையில் கர்நாடகாவிற்கு ஆதரவாகவும் இதே போன்றொரு தீர்மானம் தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்படலாம். இதை தடுக்கவேண்டுமென்றால் இன்றே நாம் போராடும் மக்களுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும், இல்லையென்றால் நாளை நம் மீது வன்முறை ஏவப்படும் பொழுது நமக்கு ஆதரவு கொடுக்க யாரும் இருக்கமாட்டார்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பேரிழப்பிற்கான நீதிக்காக போராடி வரும் நாம் நம் கண்முன்னே கூடங்குளம் மக்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதையும், குழந்தைகளுக்கான பால் கூட உள்ளே செல்லமுடியாமல் தடுக்கப்பட்டிருப்பதையும் கண்டும் காணாமல் இருக்கப்போகின்றோமா? அம்மக்களுக்கு ஆதரவாக களம் இறங்கப்போகின்றோமா? இல்லை ஐ.நா போன்றதொரு அமைப்பு கூடங்குளத்தில் நடைபெற்று வரும் இந்த அடக்குமுறையை விசாரித்த பிறகோ, சேனல் 4 போன்ற செய்தி நிறுவனங்கள் இது குறித்த ஒரு ஆவணப்படத்தை ஒளிபரப்பிய பின்னர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதிகேட்டும் மட்டும் நாம் போராடப்போகின்றோமா?

“எமது நிலத்தைக்
காக்கும் இந்த போராட்டத்தில்
நாம் வென்றாக வேண்டும்
இல்லையேல்
நாம்
கொல்லப்படுவோம்
ஏனெனில் தப்பியோடுவதற்கு
எமக்கு வேறு நிலங்களில்லை”…… கென் சரோ விவா 

கூடங்குளம் நிலவரம் 11.25

உதயகுமார் அவர்களின் பள்ளிக்கூடம், கணிப்பொறி, பள்ளி பேருந்து போன்றவை அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. நேற்றிலிருந்தே குடிநீர், உணவு போன்றவை கூடங்குளத்திற்குள்ளே செல்வது காவல்துறையால் தடுக்கப்பட்டுள்ளதால், உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் காட்டு வழி, கடற்கரையோர வழிகள் மூலமாக அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று உணவு பொருட்களை சேகரித்து வருகின்றார்கள். மேலும் குழந்தைகளுக்கு தேவையான பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

மேலும் மருந்து பொருட்கள் கையிருப்பும் குறைந்துள்ளது. இந்த நிலையில் ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு வலி ஏற்பட, ஒரு வயதானவருக்கு சில மருந்து தேவை ஏற்பட இவர்கள் இருவரும் அப்பகுதியை விட்டு மருத்துவமனைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

ஊடகங்கள் இன்று இடிந்தகரை பகுதியினுள் அனுமதிக்கப்படவில்லை.

அதிகமான பெண் காவல்துறையினர் விஜயாபுரம் பகுதியில் வந்து குவிந்து கொண்டே உள்ளனர்.

- நற்றமிழன்.ப(Save Tamils Movement)

Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment