சுயநிர்ணய உரிமையும் சிறுபிள்ளை வேளாண்மையும்! - வி.ரி. தமிழ்மாறன்


சுயநிர்ணய உரிமை யாருக்கு உரியது, யாரால் பிரயோகிக்கப்படலாம், யாருக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட வேண்டும் என்பது பற்றி எல்லாம் ஆயிரக்கணக்கில் நூல்கள் வெளிவந்துள்ளன. வெறுமனே ஓர் அரசியற் கருத்தேற்பாக இருந்து இன்று உரிமையாக மாறிவிட்ட இது தற்போது சட்டக் கோட்பாடாக நிலை பெற்றுள்ளது. இன்று சுயநிர்ணய உரிமை என்ற பதத்தை எல்லோரும் உச்சரிக்கக் கற்றுக் கொண்டுள்ளார்கள். ஆனால் அதனது அத்தனை பரிமாணங்களையும் உணர்ந்து செயற்படுகின்றார்களா என்பது வினாக்குறியாக உள்ளது.

சுயநிர்ணய உரிமை என்பது இன்று ஆட்சிமுறைமை ஒன்றின் நெறிமுறைத் தன்மைக்கான அளவுகோலாகவே பாவிக்கப்படும் நிலையிலுள்ளது. இதில் குறைபாடு காணப்பட்டால் ஜனநாயக அம்சங்களை மேம்படுத்தும்படி சர்வதேச சமூகம் கோரிக்கை வைக்க முயலும்

முதலாம் உலகப்போர் முடிவில் மேற்கு நாடுகள் இந்தக் கருத்தேற்பினைப் பாவித்து பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை உலகளாவிய ரீதியில் அறிமுகப்படுத்த முற்பட்டனர். ஆயின், சோசலிஸ நாடுகள் இது (ஒடுக்கப்படும்) மக்களின் உரிமை என்பதால் மக்களே இது பற்றித் தீர்மானிக்க வேண்டும் என்றனர். ஆனால் உண்மையானதும் சுதந்திரமானதுமான முறையில் மக்கள் தீர்மானிக்க வழியுண்டா என்பது பற்றி பின்னையவை கவலைப்படவில்லை. 1960களில், குடியேற்ற நாடுகள் சுதந்திரம்கோரி நின்றபோதும் சுயநிர்ணய உரிமை பற்றியே பேசப்பட்டது. .நா பொதுச்சபையில் பெரும்பான்மைப் பலம் மேற்கத்தைய நாடுகள் அல்லாதவைக்குக் கிடைத்தமையினால், இந்த உரிமையானது குடியேற்ற ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறுதற்கான உரிமை மாத்திரமே என்றளவில் குறுகிப் போயிற்று. மூன்றாம் உலக நாடுகள் எல்லாமே இந்த நிலைப்பாட்டை இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டன.

ஆனால், 1980 களிலிருந்து நிலைமை பழைய நிலைக்குத் திரும்பலாயிற்று. அதாவது ஆரம்ப காலத்தைய மேற்குலக நிலைப்பாட்டைத் தழுவிய 'பிரதிநிதித்துவ ஜனநாயகத்துக்கான மக்களின் உரிமையே' என்ற பொருள்கோடலே தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. ஆகவே இன்று சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி நிற்போர் ஜனநாயக நிறுவனங்களில் பங்குபற்றும் தமது உரிமை மறுக்கப்படுவதை உலகுக்குக் காட்டி நிற்கவேண்டும். இதற்கு மறு பெயராகவே 'உள்ளக சுயநிர்ணய உரிமை' என்ற சொற்றொடர் பாவனைக்கு வந்து சேர்ந்தது.
 
குறிப்பாக, ஐரோப்பிய யூனியனின் திட்டவட்டமான அணுகுமுறை இன்று இவ்வாறாகவே உள்ளது. இதை ஓரளவுக்கேனும் உணர்ந்து கொண்டுதான் விடுதலைப் புலிகளின் ஆலோசகர், ஒஸ்லோ பிரகடனத்தின் உள்ளடக்கத்தை 'உள்ளகச் சுயநிர்ணய உரிமை'க்குள் நின்று விளங்கப்படுத்த முற்பட்டார்.

பிரகடனத்தின் முக்கிய பகுதி வருமாறு அமைகின்றது:
'விடுதலைப் புலிகளின் தலைமையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்குப் பதிலளிக்கையில்தமிழ்ப்பேசும் மக்களது வரலாற்று ரீதியான வசிப்பிடப் பிரதேசங்களில் 'உள்ளகச் சுயநிர்ணய உரிமை'க் கோட்பாட்டின் மீதமைந்ததான தீர்வொன்றினை, ஐக்கிய இலங்கைக்குட்பட்ட கூட்டாட்சிக் கட்டமைப்பின் அடிப்படையில் ஆராய்வதற்குத் திறத்தவர்கள் உடன்பட்டுள்ளனர்…’

இரு தேசங்கள் இணைந்து மத்திய அரசாங்கத்தை உருவாக்குதல் என்றெல்லாம் அவர்கள் பேச முற்படவில்லை. எது விளையும், எது விளையாது என்பதை உணர்ந்தவர்கள் அப்படித்தான் பேசியிருப்பார்கள்.
விடுதலைப் புலிகளின் 2003 ஆம் ஆண்டைய 'இடைக்கால தன்னாட்சி அதிகார அமைப்பு' யோசனையில் சுயநிர்ணய உரிமை பற்றிக் குறிப்பிட்டிருந்தாலும் தேசங்கள் இணைதல் பற்றிய பிற்காலச் சிந்தனை பற்றி எதுவுமே கூறியிருக்கவில்லை.
 
வெளியிலுள்ள தேசங்கள் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைத்தல் என்றவாறான சுயநிர்ணய உரிமைப் பிரயோகத்தை குடியேற்ற ஆட்சிகள் முடிவுக்கு வந்த 1970களின் பின்னர் எந்த அரசுமே வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளுவதில்லை. வெளிநாட்டின் ஆக்கிரமிப்புக்கும் அடக்குமுறைக்கும் உட்பட்டிருக்கும் மக்களின் உரிமை எனப் பின்னர் சிலர் இதற்கு நீட்டிப்பு விளக்கம் கொடுத்தாலும் அது ஒரு நாட்டின் ஆள்புலத்திலுள்ள எல்லா மக்கள் மீதானதுமான ஆக்கிரமிப்பாகவும் அடக்குமுறையாகவும் பார்க்கப்பட்டதே தவிர ஒரு நாட்டுக்குள் உள்ள ஒரு பகுதி மக்கள் மீதான அடக்குமுறைக்கும் விஸ்தரிக்கப்படலாம் என்று எந்த அரசுமே ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னையதை சிறுபான்மையினர் உரிமைகள் என்றளவில் முடக்கிவிடவே புதிய அரசுகள் விரும்பின.

ஆயினும், சிறுபான்மையினர் மீதான அடக்குமுறையானது மிக மோசமாகப் போகுமிடத்து இனப்பாரபட்சமானது உள்ளக குடியேற்றவாதமாக மாறிவிடும் என்றளவில் உள்ளக சுயநிர்ணய உரிமைப் பிரயோகம் சிறுபான்மையினருக்கும் பொருந்தும் என்ற வாதம் பிரான்ஸ் போன்ற நாடுகளால் முன்வைக்கப்பட்டது.

1966 இல் .நா ஆக்கிய இரு கட்டுறுத்துக்களையும் 1960, 1970 இன் பொதுச்சபைப் பிரகடனங்களையும் சேர்த்து வாசிப்பின் ஆள்புல ஒருமைப்பாட்டில் சர்வதேசம் கொண்டிருக்கும் விடாப்பிடியான அழுத்தம் தெளிவாக விளங்கிக் கொள்ளப்படலாம். இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகையில் இந்தியாவும் பிரான்ஸூம் எங்ஙனம் நேரெதிர் நிலைப்பாடுகளை எடுத்திருந்தன என்பதையும் கவனிக்க வேண்டும். .நா வைப் பொறுத்தளவில் ஆள்புல ஒருமைப்பாட்டைச் சட்டரீதியில் கட்டிக்காப்பதில் இந்தியாவின் தலைமையிலேயே ஆபிரிக்க, ஆசிய நாடுகள் செயற்பட்டு வெற்றிகண்டன என்பதையும் மறக்கக் கூடாது. இதே இந்தியா, பங்களாதேஷை உருவாக்கியபோது அதனைக் கண்டித்து இலங்கை .நா பொதுச்சபையில் கூறிய விளக்கத்தையும் ஞாபகத்தில் கொண்டால் அரசுகள் எங்ஙனம் ஆள்புல ஒருமைப்பாட்டைக் கட்டிக் காப்பதில் உறுதியாக உள்ளன என்பது பெறப்படும்.

நாட்டின் ஒரு பகுதி மக்கள் மீது அதே அரசு மேற்கொள்ளும் அடக்குமுறை என்பது அக்குறிப்பிட்ட மக்கள் பிரிவானது ஆட்சியில் பங்குபற்றுதலை அடியோடு மறுப்பதாக இருக்கையில், ஜனநாயக மறுப்பு என்றளவில் சர்வதேச சமூகம் அக்கறை காட்டத் தொடங்குகின்றது. ஆனால் அதற்காக அந்த அரசின் ஆள்புல ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் முயற்சியில் அவை ஈடுபடமாட்டா. இனப்பாரபட்சத்தை ஒழிக்கும் சமவாயத்தின் விசேட குழு 2000 ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையில் இது அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தப்பட்டுள்ளது

ஜனநாயக மறுப்பினைச் சரிசெய்ய வேறு எந்த மார்க்கமும் இல்லையெனில் கடைசியில், சர்வதேச சமூகம் ஆட்சிமாற்றத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஊக்குவிக்கலாம். இது சர்வதேச அரங்கில் அப்பிரச்சனை தொடர்பான ஆதரவுத் தளத்தைப் பொறுத்து அமைவதாகும்.

இப்படி நான் கூறுகையில், ஈஸ்ரிமோர், கொசோவோ மற்றும் தென் சூடானில் என்ன நடந்தது என்று சிலர் கேட்க முற்படுவர்.

ஈஸ்ரிமோர் நிலைமை மிக அண்மைக் காலத்தைய குடியேற்ற நாட்டு ஆட்சிமுறைமையின் ஒரு விளைவாகப் பார்க்கப்பட வேண்டும். அல்லது வெளிநாட்டு ஆக்கிரமிப்பாகவும் பார்க்கப்படலாம். உண்மையில், .நா இதனை சர்வதேசச் சட்டத்தை மீறிய இந்தோனேசிய ஆக்கிரமிப்பாகவே பார்த்தது. அதாவது, குவைத் மீதான ஈராக்கின் ஆக்கிரமிப்புக்கும் இதற்கும் இடையில் அவ்வளவாக வித்தியாசம் பார்க்கப்படவில்லை.

90% அல்பேனிய இனத்தவரைக் கொண்ட சேர்பிய மாகாணம் ஒன்றாக இருந்த கொசோவோவைப் பொறுத்தளவில், 1999 இல் நேட்டோ நாடுகளுக்கும் யூகோஸ்லாவியாவுக்கும் இடையிலான இராணுவ மோதலை அடுத்து, அது .நா வின் மேற்பார்வை அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தது. கணிசமான சுயாட்சியுடனான தன்னாட்சி அதிகாரமே முதலில் முன்வைக்கப்பட்டாலும் பின்னர் அது பூரண சுதந்திரத்தை நோக்கி நகர்ந்தது. ஆனால் இன்றும்கூட அதனை ஓர் அரசாக ஏற்பதற்கு இலங்கை உட்படப் பல அரசுகள் பின்னிற்கின்றன.

தென்சூடானில், முதலில் சுயாட்சி அதிகாரம் முன்வைக்கப்பட்டு அது செயற்படுவதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டு அதன் பின்னரே சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. ஆக, ஜனநாயக வழிமுறைகள் பரீட்சிக்கப்பட்டன. பேரினவாதிகளின் ஆட்சிமுறைகள் என்று கூறிவிட்டு எவருமே அந்தரத்தில் பந்தல் போட்டுக் கொண்டிருக்கவில்லை.

சுயநிர்ணய உரிமைப் பிணக்குகளைத் தீர்ப்பதில், பொஸ்னியா-ஹேசேகொவினா சுயாட்சி தொடர்பான Dayton உடன்படிக்கைகள், சூடான், மாசிடோனியா தொடர்பாக பாதுகாப்புச் சபையினால் உறுதிப்படுத்தப்பட்ட சுயாட்சி உடன்படிக்கைகள், ஜோர்ஜியாவிலுள்ள அப்ஹாஸியா மாகாணத்துக்கான சுயாட்சி யோசனைகள் போன்றவையும் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கும் ஆள்புல ஒருமைப்பாட்டுக்கும் இடையிலான ஒவ்வாமையைச் சரிப்படுத்த சர்வதேச சமூகம் கைக்கொள்ளும் வழிமுறையையே சுட்டிநிற்கின்றன.

ஐரோப்பிய யூனியனால் தாபிக்கப்பட்ட யூகோஸ்லாவியக் கமிட்டியானது (1992) குரோஷியா, பொஸ்னியா ஹேசேகொவினா என்பவற்றுக்குள் வாழும் சேர்பியர்களுக்குச் சுயநிர்ணய உரிமை உண்டா என்பதைத் தீர்மானிக்கையில், அவர்களின் மனித உரிமைகள் எந்தளவுக்கு மதிக்கப்படுகின்றன என்பதை அளவுகோலாகக் கொண்டு தீர்மானமெடுக்கத் தலைப்பட்டனர்.

மேற்சொன்ன எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இரு தேசங்கள் சேர்ந்து ஒரு நாட்டுக்குள் மத்திய அரசாங்கத்தை உருவாக்குதல் என்ற வழிமுறையை சர்வதேச சமூகம் ஒருபோதுமே ஊக்குவிக்கவில்லை.

ஒற்றையாட்சி முறைமையை ஒருபோதுமே ஏற்றக் கொண்டிராத தமிழ் மக்கள் என்றளவில், மாற்று முறைமையைக் கோரிநிற்றலில் இருக்கும் நெறிமுறைத் தன்மையும் ஆதரவுச் சூழ்நிலையும் வெளிவாரி சுயநிர்ணய உரிமையைச் சுட்டிநிற்பதான சந்தேகத்தை ஏற்படுத்தவல்ல தேசங்கள் இணைதல் என்ற நிலைப்பாட்டில் இருக்க முடியாது.

தேசங்கள் இணைதல் என்ற நிலைப்பாட்டில் நின்று பேச்சுவார்த்தை நடாத்துவதாயின் பின்வரும் இரண்டு நிகழ்வுகளில் ஏதாவது ஒன்று எமக்குச் சாதகமாக இருக்க வேண்டும்

(1) குடியேற்ற ஆட்சியிலிருந்து நாம் சுதந்திரம் பெறுகின்ற காலகட்டத்தில் இருக்க வேண்டும். அல்லது
(2)   ஏற்கனவே பௌதீக ரீதியில் முற்றாக விலகி நிற்கின்றோம் என்று காட்டக் கூடியதாக இருக்க வேண்டும். (இதனையே விடுதலைப் புலிகள் நிரூபிக்க முற்பட்டார்கள்). ஆதரவுப் பின்புலம் என்று இதனையே கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால் இன்றைய எமது நிலையில் மேற்சொன்ன இரண்டுமே எமக்குப் பொருந்தாது. பங்குபற்றல் மறுக்கப்படுகின்றது என்ற விளக்கம் மட்டுமே எம்மால் கொடுக்கப்பட முடியும்.
1990 இல் யுனெஸ்கோவினால் கூட்டப்பட்ட நிபுணர்கள் கூட்ட அறிக்கையில் 'மக்கள் சர்வதேசச் சட்டத்தின் கீழ் மக்கள் குழும உரிமையைப் பெறுவதானால் கொண்டிருக்க வேண்டிய' பிரதான விடயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றுள் நான்காவதாக அவர்கள் குறிப்பிடுவது:

'அம்மக்கள் குழுவானது தனது பொதுவான சிறப்பியல்புகளையும் அடையாளத்துக்கான விருப்பையும் வெளிப்படுத்துவதற்கென ஏதேனும் நிறுவன அமைப்புக்களை அல்லது வேறு ஏதேனும் வழிவகைகளைக் கொண்டிருக்க வேண்டும்.'

இத்தகைய நிறுவன அமைப்புக்கள் ஒரு நாட்டுக்குள் இருப்பதால் மட்டும் அந்த மக்களின் சுயநிர்ணய உரிமை பாதிக்கப்பட்டுவிடாது.

தேசங்கள் இணைந்து ஓர் அரசாக அமைவதென்றால் முதலில் அந்த இரு தேசங்களும் எங்கே இருக்கின்றன என்ற கேள்வி எழும். சுதந்திரத்துக்குப் பிந்திய அரசொன்றைப் பொறுத்தளவில் தேசங்கள் வெளியில் இருக்க முடியாது. அவை ஒரே நாட்டுக்குள்ளேதான் இருக்கின்றன என்பதை ஒப்புக்கொண்டேயாக வேண்டும். இதுதான் சர்வதேச சமூகம் ஏற்றிருக்கின்ற நியதி. இருக்கின்ற அரசில் குறைபாடுகள் உள்ளன என்பதற்காக அப்படியோர் அரசே இல்லையென வாதிடுதலைச் சட்ட அறிஞர்கள் ஏற்றிட முன்வர மாட்டார்கள்.

கிழக்கு ஜேர்மனியும் மேற்கு ஜேர்மனியும் இணைந்தமை, வடக்கு யேமனும் தெற்கு யேமனும் மீண்டும் இணைந்தமை என்பனவும் சுயநிர்ணய உரிமைப் பிரயோகமே என்றாலும் அவை 'வெளியில் இருந்த' தேசங்களின் இணைவு என்பதை மறக்கக் கூடாது

'ஒரு நாட்டுக்குள்' என்று வந்தவுடனேயே எல்லைகள்தான் முதலில் வரும். அப்படி வருகையில் அதற்குட்பட்டவர்கள் யாவருக்குமான உரிமை என்றே சுயநிர்ணய உரிமை முதலில் பார்க்கப்படும். அப்படியில்லை, இதுவொரு குறிப்பிட்ட மக்கள் கூட்டஞ்சார்ந்த பிரச்சனை என்று வாதிடுவதானால் ஜனநாயக மறுப்புக்கான ஆதாரம் காட்டப்பட வேண்டும்.

ஆள்புலத்தைவிட மக்கள் தான் முக்கியம் என்று வாதிட்டாலும் அரசுகளின் நடைமுறை என்ன என்பதைப் பார்க்க வேண்டும். சர்வதேசச் சட்டம் என்பது அரசுகளால் அரசுகளுக்காக அவற்றின் நடைமுறைகளால் ஆக்கப்பட்டது மட்டுமே என்பதைச் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டும். .நா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் பூட்ரஸ் பூட்ரஸ் காலி இது விடயத்தில் வருமாறு கூறியிருக்கின்றார்

'இன, மத அல்லது மொழிக்குழு ஒவ்வொன்றும் அரசுத் தன்மையைக் கோரினால் அரசுகள் சிதறுண்டு போவதற்கு அளவே இருக்காது. அது மட்டுமன்றி எல்லா மக்களுக்குமான சமாதானம், பாதுகாப்பு, பொருளாதார சேமநலன் என்பவற்றை ஈட்டுதல் இன்னும் கடினமாகிவிடும்.' 
 
இதை ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால், இன்றைய காலகட்டத்தில் இறைமைமிக்க அரசின் மீதான தலையீடு என்பது சர்வதேச சமூகத்தினால் இரண்டு காரணங்களுக்காக மட்டுமே மேற்கொள்ளப்பட முடியும் என்பதை வலியுறுத்தவே. அதாவது, அரசின் கீழுள்ள அத்தனை மக்களும் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்படுவதான அடக்குமுறை ஆட்சி. மற்றையது, குறிப்பிட்ட இனக்குழுமம் ஒன்று மீதான திட்டமிட்ட அழிப்புமுறை. இந்த இரண்டையும் நிவர்த்திக்கவே சர்வதேச சமூகம் ஆர்வம் காட்டும். ஆனால் அங்ஙனம் தலையிடும்போதெல்லாம் அரசை மீளுருப்படுத்த வேண்டும் என்ற அவசியமும் சர்வதேச சமூகத்துக்குக் கிடையாது.

முள்ளிவாய்க்கால் காலத்தில் காட்டாத அக்கறையை அதே சர்வதேச சமூகம் இப்போது ஏன் காட்டுகின்றது என்பதை சற்று ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதற்கும் அப்பால் மீறிச் செயற்படுவதனால் அதற்கான இராணுவ பலம் தேவைப்படும். இதை வைத்துத்தான் சுயநிர்ணய உரிமை என்பது might is right' என்றவாறாகப் பயன்படுவதாக முன்பொரு தடவை எழுதியிருந்தேன். அதற்கு உதாரணமாக பயாவ்ஃரா, மற்றும் 'கட்டாங்கா' பிரிவினை நிகழ்வுகளையும் அவற்றின் விளைவுகளையும் சுட்டிக்காட்டியிருந்தேன்.

சுயநிர்ணய உரிமையைப் பிரயோகித்து புதிய அரசொன்று உருவாகுவதைச் (ஆள்புல ஒருமைப்பாடு பாதிக்கப்படுவதால்) சர்வதேசச் சட்டம் ஏற்றுக் கொள்ளாத அதேவேளை அதனைத் தடுக்கவும் இல்லையென கியூபெக் வழக்கில் (1995) கனேடிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை might is right' என்பதை உறுதிசெய்வதாகவே இருந்தது.

எப்படிப் பார்க்கினும் சட்ட அறிஞர்கள் எல்லோரும் ஒப்புக்கொள்ளும் விடயம் சுயநிர்ணய உரிமையில் இரண்டு அம்சங்கள் மட்டுமே உள்ளன என்பதையே. உள்ளக, வெளிவாரி என்ற இந்த இரண்டுக்கும் அப்பால் மூன்றாவது அம்சம் என்று எதுவுமில்லை.

சுயநிர்ணய உரிமையை இருக்கின்ற அரசுக்குள் மட்டுமே பாவிக்க வேண்டும் என்று கட்டாயமில்லைத்தான். ஆனால், அதற்கும் அப்பால் பாவிக்கலாம் எனக் கருதுதல் நிச்சயமாக உள்ளக சுயநிர்ணய உரிமையன்று. அப்படியானால் அது என்ன பிரயோகம்? கியூபெக் வழக்குத் தீர்ப்பின் திரிபடைந்த வியாக்கியானம் இது.

இது விடயத்தில் இன்னுமிரு விடயங்கள் பற்றிக் குறிப்பிட விரும்புகின்றேன்.
ஈட்டிய இறைமை (earned sovereignty) மற்றும் நிவர்த்திப்பு பிரிவினை (remedial secession) என்ற இரு கோட்பாடுகள் தற்போது சட்டவாளர் மத்தியில் விவாதிக்கப்படுகின்றன.

ஈட்டிய இறைமை என்பது Michael Scharf என்பவரின் பிரசித்திபெற்ற நூலொன்றில் வாதிடப்பட்டுள்ள விடயங்களை வைத்து முன்னெடுக்கப்படும் விடயமாகும். குறிப்பிட்ட ஆறு கட்டங்களைத் தாண்டி இறைமைமிக்க அரசொன்றாகத் தன்னை நிலைநிறுத்தும் தகுதியை நிரூபித்தல் என்று இதனைப் பொருள் கொள்ளலாம். இது சர்வதேச மேற்பார்வையின் கீழ் நடைபெற வேண்டிய விடயமாகும். கொசோவோ மற்றும் ஈஸ்ரிமோரில் சர்வதேசம் செயற்பட்ட விதத்தை வைத்தே இந்த வாதம் முன்னெடுக்கப்படுகின்றது

சுயநிர்ணய உரிமை, மனிதாபிமானத் தலையீடு என்பன ஒருபுறத்திலும் இறைமையும் ஆள்புல ஒருமைப்பாடும் மறுபுறத்திலுமாக முரண்படும் நலன்களுக்கிடையில் ஒத்திணக்கம் செய்வதற்கு சர்வதேச சமூகத்துக்கு வழிசமைக்கும் விதத்தில் இக்கோட்பாடு முன்வைக்கப்பட்டது.
விடுதலைப்புலிகள் இடைக்கால நிருவாகத்தைக் கோரியபோது அதற்கான சர்வதேச அங்கீகாரத்தை இதன் அடிப்படையிலேயே எதிர்பார்த்திருந்தார்கள். சர்வதேசத்தின் ஆதரவுத் தளம் அந்தளவுக்குச் செல்லாது என்பதை நன்கறிந்திருக்கின்றோம்.

அரசொன்றுக்குள்ளான மக்கள் குழுமம் ஆட்சியில் பங்குபற்றலிலிருந்து முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுமாயின், பிரதிநிதித்துவ முறையிலமையாத அந்த அரசிலிருந்து விடுபட உதவுவதே நிவர்த்திப்பு பிரிவினை எனலாம். உண்மையில் 1776 இல் வெளியிடப்பட்ட அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் இதனையே பறைசாற்றியது

ஆள்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் சர்வதேசச் சட்டக் கடப்பாட்டின் உட்கிடையாக இந்த உரிமை உள்ளதாகச் சிலர் வாதிடுகின்றனர். ஆனால் நடைமுறையில் இதற்கு ஆதரவை நாடுகளோ, சர்வதேச நிறுவனங்களோ வழங்கவில்லை. கியூபெக், ரட்டாஸ்ரன், செச்சென்யா ஆகிய மூன்று வழக்குகளும் இதற்கு மாறான கருத்தையே தெரிவித்திருந்தன. 1986 இல் சர்வதேச நீதிமன்றம் Burkina Faso/Mali எல்லை வழக்கிலும் இதே கருத்தையே தெரிவித்திருந்தது.

உரிமையின் உள்ளமை என்பது வேறு. அதன் பிரயோகம் என்பது வேறு. எமக்குள்ள பிரச்சனை இரண்டாவதேயாகும். இது தனிப்பட்ட கோட்பாட்டு அடிப்படையில் பார்க்கப்படாமல் யதார்த்த நிலைநின்று பார்க்கப்பட வேண்டியதாகும். இந்த யதார்த்த நிலையில் 2009 மே மாதத்தின் பின்னர் வேறுபாடுண்டு என்பதை உணராதவர்கள் உள்ளதையும் கோட்டைவிட்டு அடுத்த சந்ததிக்கும் தவறிழைக்கின்றனர் என்பதே எனது கருத்தாகும்.

நன்றி - பொங்குதமிழ்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment