சீனாவும், ரஷ்யாவும் தமது பக்கம் உள்ளன என்ற மமதையில் இலங்கை அரசு தொடர்ந்தும் உலகை ஏமாற்றுமானால், ஒரு காலகட்டத்தில் அந்நாடுகளும் இலங்கை யைக் கைவிடலாம். எனவே, ஜெனிவாத் தீர்மானத்தை எதிர்த்து இலங்கை அரசு அடம்பிடிக்காமல் செயற்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அரசுடன் பேசுவதற்கு நாம் தயாராகவே உள்ளோம். இருப்பினும், எமது நிலைப்பாட்டில் சிறிதளவேனும் மாற்றம் இல்லை என்றும் அது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை ஏற்று உரிய நடவடிக்கைகளை கையாளமாட்டோம் நாம் தொடர்ந்து எமது பாதையிலேயே செல்வோம் என்றும், தெரிவுக்குழுவுக்கு கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் இலங்கை அரசு நேற்று தெரிவித்திருந்தது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச் சந்திரனிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு:
நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கையில் ஒரு விடயம் மட்டும் குறிப்பிடப் படவில்லை. வடக்கு, கிழக்கில் நிலைகொண்டுள்ள மேலதிக இராணுவத்தை அகற்றவேண்டும் என்பது உட்பட பல விடயங்கள் அந்த அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளன.
இதனை அரசு செய்யவேண்டும். தீர்வு விடயமும் அதனுள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனோரைக் கண்டுபிடிக்கும் வேலைத்திட்டத்தை அரசு முன்னெடுக்க வேண்டும் என்றும் ஆணைக்குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால், அரசு இதுவரை ஒன்றையும் செய்யவில்லை.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்தோர் தொடர்பான புள்ளிவிவரங்களை அரசு இன்னும் வெளியிடவில்லை. தமது பிள்ளைகளை படையினரிடம் ஒப்படைத்த பெற்றோர் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதுகூட தெரியாமல் தவிக்கின்றனர்.
இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல் படுத்துமாறே ஜெனிவாத் தீர்மானம் வலியுறுத்தி நிற்கின்றது. எனவே, இந்தத் தீர்மானத்தை மதிக்காமல் அரசு அடம்பிடிக்கு மானால் மென்மேலும் சர்வதேச அழுத்தங்கள் குவியும். என்றார்.
தொடர்புபட்ட செய்திகள்
இனப்பிரச்சினை தீர்வு காணும் பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் நிறுத்தவில்லை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும் என அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, அரசு தொடர்ந்தும் எதிர்பார்த்து இருப்பதாக, ஜெனீவா பிரேரணை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண தமிழ்த் தேசியக் கூட்மைப்புடன் அரசாங்கம் மேற்கொண்டுவரும் பேச்சுவார்த்தைகள் முறியடிக்கப்படவில்லை. பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அரசாங்கம் உறுதியாக உள்ளது. எனவே, தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைய வேண்டும் என்பதே அரசின் விருப்பம். கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் இணைவதற்கு வலியுறுத்துமாறு, புலம்பெயர் தமிழ் மக்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஜெனிவா தீர்மானத்தையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கூட்டமைப்பின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான, எம்.ஏ.சுமந்திரன் இந்தியாவில் இந்து பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில், கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் இலங்கை மீது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமையால் இலங்கை அரசு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராசா தெரிவித்தார்.
இலங்கை அரசுடனான பேச்சுகள் மீள ஆரம்பிப்பது தொடர்பாகக் கேட்கப்பட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப் படுத்துமாறே, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வலியுறுத்துகின்றது.
இந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதை ஐ.நாவின் மனித உரிமைகள் கண்காணிப்பாளர்கள் அவதானித்துக் கொண்டிருப்பர். மேலும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளில், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது, அதிகார பரவலாக்கம் போன்ற விடயங்கள் குறிப்பிடப்படிருப்பதால் அதனை நிறைவேற்ற வேண்டிய தேவை ஐ.நா. தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை அரசுக்கு எழுந்துள்ளது.
எனவே மேற்படி சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அரசின் பேச்சுக்கான திகதியை எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
உதயன்
0 கருத்துரைகள் :
Post a Comment