இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்புக் கூறாவிட்டால் இலங்கையில் மீண்டும் போர் உருவாகக்கூடிய ஆபத்து இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை செய்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்கா விடுத்த இந்த எச்சரிக்கையை எவரும் சாதாரணமாகக் கருதிவிட முடியாது. இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் கொண்டு வருகின்ற அமெரிக்கா, வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் மிகத் தெளிவாக உள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை.
இந்நிலையில் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறும்; நிறைவேறாது என்ற வாதப்பிரதிவாதங்கள் நிலவுகின்ற இவ் வேளையில், அரசு பொறுப்புக் கூறத் தவறினால் இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும் என்று கூறப்பட்ட கருத்தில் இலங்கை அரசு ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதென்பது தெளிவாகின்றது.
விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துவிட்டோம். 30 ஆண்டு காலப் பயங்கரவாதத்தை ஒழித்த எங்களை போர்க் குற்றவாளிகளாகக் காட்டுவதற்கு மேற்குலகம் திட்டமிட்டுள்ளதென்ற அரசின் குற்றச்சாட்டுக்களின் மத்தியில், பொறுப்புக் கூறத் தவறினால், இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும் என நிறுத்திட்டமாக அமெரிக்கா எச்சரிக்கை செய்திருப்பதானது இலங்கை அரசின் உறக்கத்தை கலைப்பதாகவே இருக்கும். விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாகக் கூறி அதனைத் தடைசெய்த நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.
பல சந்தர்ப்பங்களில் விடுதலைப்புலிகளை அமெரிக்கா கண்டித்ததும் உண்டு. இவ்வாறாக இருந்த நிலைமையை அமெரிக்கா இப்போது மாற்றி அமைத்துவிட்டது. வன்னிப் போருக்குப் பின்பு இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை மட்டுமன்றி உலக நாடு களையும் ஏமாற்ற முற்பட்டதே இதற்கு காரணமாகும். போருக்குப் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சி னைகளுக்கு தீர்வு காணப்படும் என இலங்கை அரசு கூறி வந்த போதிலும் அதனை நிறைவேற்றுவது பற்றி அரசு இம்மியும் சிந்திக்கவில்லை. மாறாக இனப்பிரச்சினை என்று எதுவும் கிடையாது என கோஷம் இடவும் அரசு தலைப்பட்டது.
இவ்விடத்தில்தான் இலங்கை அரசு தமிழினத்திற்கு எதிராக திட்டமிட்டு செயற்படுகிறது எனும் உண்மையை மேற்குலகம் உணர்ந்து கொண்டது. ஆக பொறுப்புக்கூறுவதில் இருந்து இலங்கை அரசு விலகுமாக இருந்தால் இலங்கையில் போர் வெடிக்கும் என்ற அமெரிக்காவின் எச் சரிக்கையில் இருக்கக்கூடிய நிஜங்களுக்கு பலவாறாக பொருள் கொள்ள முடியும். எதற்கும் பொறுத்திருந்து பார்க்கலாம்.
நன்றி- வலம்புரி
0 கருத்துரைகள் :
Post a Comment