நியாயம் கேட்கும் தமிழினம், என்ன செய்யப் போகிறது கூட்டமைப்பு?


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா. கூட்டத் தொடரில் பங்கேற்றாலும் சரி, பங்கேற்காவிட்டாலும் சரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளில் ஒரு வரலாற்றுக் கடமை ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் பங்ககேற்பதில்லையென தீர்மானித்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் அறிவித்துள்ளார். சம்பந்தனின் அறிவிப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பொதுமக்கள் மத்தியிலும் பலவிதமான முரண்பாடான கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஜெனிவா கூட்டத் தொடரில் பங்கேற்பதில்லையென்ற முடிவு சம்பந்தனின் தனிப்பட்ட முடிவேயன்றி கூட்டமைப்பின் முடிவு அல்ல என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.சம்பந்தன் ஜனாதிபதிக்கு முண்டு கொடுக்கிறார் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜ.நா. கூட்டத் தொடரில் பங்கேற்றாலும் சரி, பங்கேற்காவிட்டாலும் சரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளில் ஒரு வரலாற்றுக் கடமை ஒப்படைக்கப்பட்டுள்ளது.  அந்தக் கடமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரிவரச் செய்ய வேண்டும். தமிழர்களுக்கு துரோகமிழைத்து விட்டது என்ற பழிச் சொல்லுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடமளிக்கக்கூடாது.
ஐ.நா. கூட்டத்தொடரில் விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயம் போர்க்குற்றம் அல்லது மனித உரிமை மீறல். இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள யுத்தக்குற்றச்சாட்டு அல்லது மனித உரிமை மீறல் விவகாரம்  மீதான வாக்கெடுப்பின்போது இலங்கை அரசுக்கெதிரான தீர்மானம் நிறைவேற்றப்படலாம். சில வேளை இலங்கை அரசாங்கம் தனது வழமையான ராஜதந்திரத்தின் மூலம் தீர்மானத்தை தோற்கடிக்கச் செய்யலாம். ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கெதிரான தீர்மானம் வெற்றியடைகிறதா தோல்வியடைகிறதா என்பது தமிழர்களைப் பொறுத்த மட்டில் அவசியமற்றதொன்று. இலங்கைப் போரை மிக மோசமான முறையில் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று விரும்பிய ஒரு பகுதி நாடுகள் மட்டுமே இன்று இலங்கையை எதிர்க்கின்றன. விடுதலைப் புலிகளுடனான போரில் அவர்களை முற்றாக அழிக்க வேண்டும் என்று அடம்பிடித்து நின்ற இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இன்னமும் மௌனித்தே இருக்கின்றன.  அவை இப்போதும் இலங்கைப் பக்கம் பார்த்துக் கொண்டிருக்கும் மதில் மேல் அமர்ந்த பூனைகள்தான். அத்தோடு இலங்கைப் பிரச்சினை என்னவென்றே அறியாத சில நாடுகள் குறிப்பாக வட ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் கண்மூடித்தனமான ஆதரவை வழங்குகின்றன.
இந்த நிலையில் ஜெனிவாவில் இருக்கும் இலங்கை உயர் அதிகாரிகள் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வந்திருக்கும் பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகளையும் சந்தித்து வருகின்றனர். இந்தச் சந்திப்புக்களின் பிரதான நோக்கம் அமெரிக்காவால் முன்வைக்கப்படவிருக்கும் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவே. 
  
தமிழர்களைப் பொறுத்தமட்டில் தமிழர்களின் அறுபதாண்டு கால உயிர், உடைமை இழப்புகளுக்கு விடிவு வேண்டும்.  தமிழர்கள் தமது குடிசையில் நிம்மதியாக சுதந்திரக் காற்றை அனுபவித்தவாறு அமைதியாக ஆழ்ந்த உறக்கத்தில் திளைக்க வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டிய ஒரேயொரு விடயம் நிரந்தர அரசியல் தீர்வே. இந்த அரிய பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வளவு தூரம் கூடுதலான அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ள முடியுமோ அவ்வளவு தூரம் அதிகாரங்களை சர்வதேசத்தின் உதவியுடன் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதிகாரம் என்பது வெறுமனே 13+, காணி காவல்துறை போன்ற அற்ப விடயங்களுடன் நின்று விடக்கூடாது.  ஒரு கையால் கொடுத்து விட்டு மறுகையால் பறிக்கும் அதிகாரங்கள் தமிழர்களுக்குத் தேவையில்லை. அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். அதிகாரப் பரவலாக்கல் தமிழர்களுக்குத் தேவையில்லை. சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில், நாடாளுமன்ற அதிகாரத்தின் மூலம் வழங்கிய அதிகாரத்தை திரும்பப் பெறுவதற்கும் சந்தர்ப்பமுண்டு. அரசமைப்பின் 29 ஆவது சரத்து, மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள், வடக்கு கிழக்கு இணைப்பு என்பனவற்றுக்கு நடந்தது என்ன என்பதை வரலாறு உணர்த்தி நிற்கின்றது.
எனவே அதிகாரப் பரவலாக்கல் என்ற சொல்லை விடுத்து பூரண சுயாட்சியுடைய சமஷ்டி ஆட்சியை (நிதி உட்பட), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டும். இலங்கை அரசு மனித உரிமையை மீறுவதற்கு உதவி ஒத்தாசை புரிந்தவர்களே இன்று இலங்கை அரசுக்கெதிரான பிரேரணையைக் கொண்டு வருகிறார்கள்.  போர் நடைபெற்ற போது சகல உதவி ஒத்தாசைகளையும் வழங்கியவர்களே இன்று இலங்கை  அரசாங்கத் திற்கெதிராக போர்க் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான அண்மைய சர்வதேச நிலைப்பாடு இவ்வாறு இருக்கையில் தமிழர்களை தலைமைதாங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்யப் போகிறது.  இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுத் திட்டங்களுக்கு அமைவாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தனிக்குமா?

 இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் வெளிநாட்டு நிதியுதவியைப் பெற்றுக் கொள்ளும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டும். இல்லையேல் முல்லைத்தீவிலும், வவுனியாவிலும் நடைபெறும் உதவிகளைத் திசை திருப்பும் விடயம் தொடர்கதையாகிவிடும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவனத்திலெடுக்க வேண்டும். இப்போது பந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளில். கூட்டமைப்பு என்ன செய்யப்போகிறது என்பதே இன்று இலங்கைத் தமிழர்கள் ஒவ்வொருவரின் மனங்களிலும் எழுந்துள்ள கேள்வி.              

நன்றி - உதயன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment