நீண்ட காலப் போராட்ட வாழ்வில் முரண்பாடுகளுக்குள் இணக்கத்தை உருவாக்க வேண்டியது பலவீனப்பட்டுப் போயிருக்கும் எமது தமிழ் சமூகத்தைப் பொறுத்த வரை மிகவும் தேவையானது. இணக்கத்திற்கான முன் முயற்சிகள் முன் நகர்த்தப்பட வேண்டியதும் காலத்தின் இன்றைய தேவையாகும். இதற்கான ஒரு பூர்வாங்க முன்னோடி நடவடிக்கையாக தமிழ் சிவில் சமூகத்தைச் சார்ந்த பிரதிநிதிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்ட கூட்டமொன்று கடந்த பதினெட்டாம் திகதி சனி அன்று வவுனியாவில் நடைபெற்று முடிந்திருக்கிறது. பல் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனும் தமிழ் சிவில் சமூகத்தின் உறுப்பினர்களும் அதன் தலைமைப் பிரதிநிதியுமான மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையும் கிட்டத் தட்ட பல மணித்தியாலங்களுக்கும் மேலாக இப் பேச்சுவார்த்தைகள் கருத்துப் பரிமாற்றங்களுடன் கலந்துரையாடப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து விலகிச் செல்வதாகவும் அந்த விலகல் நிலைமையானது இலங்கை அரசின் கைப் பொம்மைகளாகவும் இந்திய அரசின் ஆலோசனையை அதிகம் கேட்பதாகவும் அதனூடாக எமது இனத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துரோகம் இழைத்து விடுவார்கள் என்ற எண்ணக் கருவை அடியொற்றி பல்வேறு கோணங்களிலிருந்து பல்வேறுபட்டவர்களினால் ஆழமான கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. தமிழ் பேசும் மக்களுடைய சுயநிர்ணய உரிமை, தாயகக் கோட்பாடு, தன்னாட்சி அதிகாரம் போன்றன முக்கிய உள்ளடக்கமாக விமர்சிக்கப்பட்டது. இந்த விமர்சனங்களிலிருந்து தம்மைத் தெளிவுபடுத்துவதற்கான ஒரு களமாகவும் இந்த அமர்வு இனங்காணப்பட்டது. இந்த விமர்சனக் கருத்தரங்கில் மன்னார் ஆயரின் நிதானமான போக்கும் பார்வையும் மிகவும் நேர்த்தியானது.
இந்த அமர்வில் கலந்து கொள்வதற்காக கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருமலை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த அரசியல் அவதானிப்பாளர்கள், புத்திஜீவிகள், பல்கலைக்கழக மாணவர்களென பலரும் கலந்து கொண்டதோடு மிகவும் சாதூரியமான வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டதுடன் அந்தக் கருத்துப் பரிமாற்றங்களை நிறைந்த பயனையும் தந்தது. ஆனாலும் இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன் கூட்டிய அழைப்பு விடுக்கப்பட்டும் அவர்கள் கடைசி நேரத்தில் கலந்து கொள்ளாமல் விட்டிருந்தமை பல்வேறு விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் உள்ளாகியது.
தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் சந்திப்பில் பரந்துப்பட்ட அளவில் பொதுவான விடயங்களில் இணக்கம் காணப்பட்டதை பாராட்டியே ஆகவேண்டும். ஏனெனில் தமிழ் இனமானது ஆயுதப் போராட்டமாக முப்பது வருடங்களுக்கும் மேலான அனுபவங்களிலிருந்து ஒப்பு நோக்குகையில் எமது அரசியல் உரிமைகளில் அபிலாஷைகளில் பாதிப்பைஇ ஏமாற்றத்தை ஏற்படுத்தாத வகையில் தமிழர் தரப்பு பற்றுறுதியுடன் செயற்பட வேண்டிய பொறுப்பும் கடமையும் மிகவும் நிதானமானவைகளாகும். பல்வேறுபட்ட அபிப்பிராயங்களின் அடிப்படையிலும் வியூகத்தின் தன்மைகளிலிருந்துமே தமிழ் சிவில் சமூகத்தின் சந்திப்புக்கள் தெளிவுறப்பட்டிருக்கின்றன.
தமிழ் சிவில் சமூகத்தை பின்புலத்திலிருந்து வழி நடத்தக் கூடியவர்கள் வெவ்வேறு பரிமாணங்களையும் பின்னணியையும் கொண்டவர்களாக இருப்பினும் மன்னார் ஆயரின் கருத்துகள் சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தமிழர் தரப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுத்து தமிழர்களுக்குள்ளேயே மாற்று சக்தியினரைத் தேட முடியாது என்பதைத் தெளிவுறக் கூறியிருந்தார். கூட்டமைப்பின் தவறுகளை பலவீனங்களை நாம் திருத்திக் கொள்ள மாற்ற முற்பட வேண்டும். இன்றைய யதார்த்த நிலையில் தேசியத்தின் தலைவர்களாக இனங்காட்டி நிற்கும் அவர்களை ஓரங்கட்டவோ ஒதுக்கிவிடவோ நாம் முயலக் கூடாது என்பதையும் சாமர்த்தியமாகக் கையாண்டு கொண்டார்.
எட்டப்பட முடியாத விடயத்திற்காக ஏன்? தமிழ் மக்கள் அணி திரள வேண்டும் என்ற விடயமும் ஸ்ரீ லங்கா அரசு தமிழர்களுக்கான தீர்வாக எதைத் தந்தாலும் (அதிகாரம் மிகக் குறைந்ததான) ஏற்றுக் கொள்வோமென்ற தன்மையும் இந்தக் கலந்துரையாடலில் சந்திப்பில் பல்வேறுபட்ட தன்மை கொண்டோரும் கலந்து கொண்டிருப்பினும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் பின் கூட்டமைப்பின் மீதான அக்கறையும் அணுகு முறையும் கருத்துகளும் மிகவும் காத்திரமானவையாகக் கொள்ளமுடிகிறது.
ஆனாலும் அரசுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறுபட்ட கருத்துக் களங்களைத் தாண்டிச் சிந்திக்க வேண்டியதும் செயற்பட வேண்டியதும் மிகவும் முக்கியமான விடயங்களாகும். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழக் கூடிய தமிழ் மக்களின் பொதுவான அபிப்பிரயங்கள், மேற்குலக நாடுகளில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்களுடன் கூடிய கருத்துக்கள், உள்ளூரில் நோக்கும் போது தமிழ் சிவில் சமூகம் போன்ற அமைப்புகளின் கருத்துக்களென பல்வேறுப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருப்பதும் அனைவராலும் அவதானிக்கத் தக்கதாகவுள்ளது. அந்த வகையில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆயருக்கு வெளிக் காட்டிய நம்பிக்கை மிகுந்த கருத்துகள் சிறந்தவை ! அதன் பரிமாணத்தை ஆண்டகை அமர்வு நிறைவுற்றவுடன் ஊகடத்துறைக்கு வழங்கிய பிரத்தியேகச் செவ்வியிலிருந்து புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
அந்தத் தெளிவூட்டல்களின் பின்னரான பொழுதுகளையும் சற்றுத் தொட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது. ஆயரின் விடைபெறலைத் தொடர்ந்து நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களின் தமிழரசுக் கட்சியின் புதிய கிளை நிறுவல், புதிய உறுப்பினர்களின் இணைவுகள் போன்ற பாரிய பிரச்சினையாகவே கருத்துக்கள் முட்டி மோதின ! மட்டக்களப்பு, அம்பாறை, திருமலை மாவட்டங்கள் உள்ளடங்கலாக வடக்கு, கிழக்கு பகுதிகளிலிருந்து வருகை தந்த கல்விமான்கள், புத்திஜீவிகள், அரசியல் ஈர்ப்புடையோர் போன்றோரின் கேள்விகளால் தமிழரசுக் கட்சியின் செயலாலர் மாவை சேனாதிராஜா தட்டுத் தடுமாறித் தான் போனார்
.
இருப்பினும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் சில தெளிவான கருத்துக்களாலும் தமிழரசுக் கட்சியின் செயலர், மாவை சேனாதிராஜாவின் சாமர்த்தியமான மௌனத்தாலும் அக் கட்சியின் உத்தியோக பூர்வ பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச் சந்திரன் மற்றும் செல்வம் அடைக்கல நாதன், ஆனந்த சங்கரி, தர்மலிங்கம் சித்தார்த்தன் போன்றோரின் நெறிப்படுத்தலினாலும் மென்மேலும் தமிழரசுக் கட்சி தொடர்பான முரண்பாடுகள் தலை தூக்காது தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் கோரிக்கைகள், கருத்துகள் போன்றன ஆணித்தரனமாக உறுதிப்படுத்தப்பட்டது. ஆனாலும் இந்த அமர்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் (அண்மையில் தமிழரசுக் கட்சியில் உறுப்புரிமை பெற்றார்கள்) இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துக் கொண்டமை மிகுந்த விசனத்ததை ஏற்படுத்தியது.
கடந்த காலங்களில் முரண்பாடுகளினால் நமது சமூகம் சந்தித்த துயரங்கள் எழுத்ததில் வடிக்க முடியாதவை! ஒரு மனிதன் ஆத்திரப்படும் போதும் அதில் உள்ளார்ந்த நியாயம் இருக்க வேண்டியது உண்மை என தன் கவிதை வரிகளினால் எடுத்தியம் பிய பிரஞ்சுக் கவிஞன் போஸ்ட்டன் கார்ஸை, இந்த இடத்தில் கோடிட்டுக் காட்டுவது மிகவும் பொருத்தமாகும். தமிழ் அரசியல் தலைமைகள் அனைவரும் ஒன்றாக (விடுதலை இயக்கங்களும் மிதவாத அரசியல் தலைமைகளும்) இணைந்து செயற்படுவதற்கான காலம் கனிந்து வரும் வேளையில் முரண்பாடுகளுக்குள் நாம் முட்டிமோதிவிடவோ, ஆத்திரத்தின் அடிப்படையில் முடிவுகள் எட்டப்பட முடியாதவாறு செயற்பட வேண்டும்!
மேற்குறிப்பிட்ட விடயங்களை இன்றைய தமிழ்த் தலைமைகள் உதாசீனம் செய்ய முற்படின் எதிர்காலத்தில் மிதவாதத் தலைமைகள் வேறாகவும் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் வேறு ஒரு வடிவமாகவும் செயற்படுவதற்கான நிலைமையானது தமிழ் மக்ககளைப் பொறுத்தவரை மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தலாம்! இந்த இக்கட்டான நிலைமையைப் புரிந்து கொள்வது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். விட்டுக் கொடுப்புடனும் நம்பிக்கையுடனும் செயற்பட்டால் எமது இனத்திற்கான விடிவு வெகு தூரத்தில் இல்லை.
நன்றி - தினக்குரல்
0 கருத்துரைகள் :
Post a Comment