சங்கிரிலா கருத்தரங்கு என்று அழைக்கப்படும் 11வது ஆசிய பாதுகாப்பு மாநாடு கடந்த வாரம் சிங்கப்பூரில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட 27 நாடுகளின், பாதுகாப்புத்துறை சார்ந்த 371 பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். இந்த மாநாட்டில் பெரும்பாலான நாடுகளை பாதுகாப்பு அமைச்சர்களே பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தனர். இலங்கையில் இருந்தும், பங்களாதேசில் இருந்தும் மட்டும் தான் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்றிருந்தனர். அமெரிக்காவின் சார்பில் பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனேற்றாவும், பிரதி இராஜாங்கச் செயலர் வில்லியம் பேர்னும் கலந்து கொண்டனர். வழக்கமாக, இலங்கையின் சார்பில் பாதுகாப்புக் கருத்தரங்குகளில் பங்கேற்கும் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ஸ, வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தலைமையிலான குழுவின் ஒரு உறுப்பினராகவே பங்கேற்றார்.
இந்த மாநாட்டின் போது நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான - தனிப்பட்ட சந்திப்புகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும், கோத்தாபய ராஜபக்ஸவும், கூட்டுப்படைகளின் தளபதி எயர் மார்ஷல் றொசான் குணதிலகவும் குறிப்பிட்ட சில நாடுகளின் பிரதிநிதிகளைத் தான் சந்திக்க முடிந்தது. அவர்களில் இந்தியா, இந்தோனேசியா, பங்களாதேஸ் ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் தான் முக்கியமானவர்கள். இதில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனியுடன் நடத்தப்பட்டுள்ள சந்திப்பு முக்கியமானது. ஏனென்றால் இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானத்தின் பின்னர் இந்திய அரச உயர்மட்டத்துக்கும், இலங்கை அரச உயர்மட்டத்துக்கும் இடையிலான தொடர்புகளும், உறவுகளும் விட்டுப் போயுள்ளன. இந்தநிலையில் இந்தச் சந்திப்பு முக்கியமானதாக கருதப்பட்டது. அதைவிட இந்தச் சந்திப்பின் போது, இந்தியாவிடம் மேலதிக பயிற்சி உதவிகளை இலங்கை கோரியுள்ளது. அதற்கு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அது எந்தவகையிலானது என்று இன்னமும் தீர்மானம் எடுக்கப்படவில்லை. அதேவேளை, இலங்கைக் குழுவினர் சந்தித்த மற்றொரு முக்கியமானவர் அமெரிக்காவின் கூட்டுத்தலைமை அதிகாரிகளின் தலைவர் ஜெனரல் மார்ட்டின் டெம்சே.
இந்தக் கருத்தரங்கில் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் , பிரதி வெளிவிவகார அமைச்சர் உட்ளிட்ட பலரும் கலந்து கொண்ட போதும், கருத்தரங்கில் பங்கேற்க வந்த அமெரிக்கப் படை அதிகாரி ஒருவரைத் தான் இலங்கை குழுவினால் சந்திக்க முடிந்தது. இந்தச் சந்திப்பின் போது அமெரிக்காவிடம் இருந்தும் பயிற்சி வசதிகளை இலங்கை கோரியுள்ளது. அதற்கு அமெரிக்கப் படைத்தளபதி இணங்கம் தெரிவித்துள்ளார். ஆசியப் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு வளர்ந்து வரும் நிலையில், அதை முறியடிப்பதற்காக அமெரிக்கா வியூகம் வகுக்கத் தொடங்கி விட்டது. அந்த வியூகத்தை இந்த மாநாட்டின் போது தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அவுஸ்ரேலியாவில் பாரிய தளத்தை அமைக்கவும், கொகோஸ் தீவில் ஆளில்லா விமானங்களின் அணியை நிறுத்தவும் அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கைகள் சீனாவை சினங்கொள்ள வைத்துள்ளது.
அமெரிக்காவின் அதிகரித்து வரும், படைத் தலையீட்டை இந்த மாநாட்டில் சீனா வெளிப்படையாகவே எதிர்த்திருந்தது. செசல்ஸ், பாகிஸ்தான், மாலைதீவு, இலங்கை, பர்மா என்று இந்தியாவைச் சுற்றி சீனா ஒரு முத்துமாலையை கோர்க்கத் தொடங்கிய சந்தர்ப்பத்தில் தான் அமெரிக்காவும், இந்தியாவும் விழித்துக் கொண்டுள்ளன. இந்தியாவும், அமெரிக்காவும் நெருங்கி வரத் தொடங்கியுள்ள நிலையில், சீனாவின் வியூகம் கேள்விக்குள்ளாகி வருகிறது. அமெரிக்க, இந்திய உறவுகள் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு நெருக்கமாகியுள்ளதற்கு சீனாவே முக்கிய காரணம். சீனாவை முறிடிக்க வேண்டிய தேவை இரு நாடுகளுக்கும் உள்ளது. அதை அடுத்தே இரு நாடுகளும் எல்லா வழிகளிலும் ஒத்துழைக்கத் தொடங்கியுள்ளன. எல்லா வழிகளிலும் என்பதற்குள், இலங்கை விவகாரமும் ஒன்று.
ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது அதன் ஒரு கட்டம் தான். தெற்காசியாவில் மாறிவரும் அரசியல் சூழலை இலங்கை தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளத் தலைப்பட்டுள்ளது என்பது சங்கிரிலா கருத்தரங்கின் போது இலங்கை கோரியுள்ள உதவிகளில் இருந்து வெளிப்பட்டுள்ளது. அதாவது தெற்காசியாவின் பாதுகாப்புக்கு இலங்கையும், அதன் கடற்படையும் முக்கியம் என்பதால் அதனைப் பலப்படுத்த உதவுங்கள் என்கிறது இலங்கை. இலங்கையின் துணையுடன் முத்துமாலை வியூகம் வகுக்கும் சீனாவுக்கு இலங்கையின் இந்தக் கோரிக்கையும், அதற்கு உதவ இந்தியாவும் அமெரிக்காவும் இணங்கியுள்ளதும் இனிப்பான செய்தியாக இருக்க முடியாது.
இந்தியாவையும் அமெரிக்காவையும் பகைத்துக் கொண்டு நீண்டகாலத்துக்குத் தாக்குப் பிடிக்க முடியாது என்ற உண்மை இலங்கைக்கு நன்றாகப் புரியத் தொடங்கியுள்ளது போலத் தெரிகிறது. அதனால் தான் ஆசிய பாதுகாப்பு மாநாட்டைச் சாட்டாக வைத்துக் கொண்டு அருகே போக முயன்றுள்ளது. இந்தச் சூழலை தமிழர் தரப்பும் உற்றுக் கவனிக்க வேண்டிய தேவை ஒன்றுள்ளது. இந்திய, அமெரிக்க நெருக்கமும், அதனைச் சார்ந்து நகர்கின்ற இலங்கையின் அணுகுமுறையும் தமிழரின் அரசியல் நகர்வுகளுடன் தொடர்புபட்டுள்ளன. மாறுகின்ற அரசியல் சூழலில் இந்திய, அமெரிக்க வியூகத்துக்குள் இலங்கை சிக்கிக் கொள்ளுமா என்ற கேள்வி எழுகிறது. சீனாவின் முத்துமாலை வியூகத்துக்குள் இலங்கை இருப்பது தான்- தமிழர் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தி, இன்றைய கவனிப்பு நிலைக்குக் கொண்டு செல்லக் காரணமாகியது. அதேவேளை இந்திய, அமெரிக்க வியூக அணிக்கு இலங்கை பணிந்து போகுமேயானால், தமிழர் தரப்பின் அரசியல் நலன்கள் அனைத்தும் அடிபட்டுப் போகும்.
சர்வதேச அரசியல் சூழலையும், அதற்கேற்றவாறு சீனா என்ற சக்தியையும் பயன்படுத்திக் கொண்டு விடுதலைப் புலிகளை அழித்த இலங்கை அரசுக்கு, தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை நசுக்குவது தான் அடுத்த இலக்காக இருக்கும். இதற்கு சீனாவை சார்ந்து நிற்பது பயன் தராது. தமிழரின் அரசியல் உரிமைகளைப் பலவீனப்படுத்துவதற்கு, அதற்கு ஆதரவாக இருக்கும் அணியை உடைக்க வேண்டும் அல்லது தன்பக்கம் இழுக்க வேண்டும். சீனாவுக்கும் தமிழரின் உரிமைப் பிரச்சினைக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை. அமெரிக்காகவும் இந்தியாவும் தான், தமிழர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கின்றன. எனவே, தமிழரின் அரசியல் உரிமைக் கோரிக்கைகளைத் தோற்கடிப்பதற்கு, இலங்கைக்கு இருக்கக் கூடிய ஒரே வழி அமெரிக்க, இந்திய ஒத்துழைப்பைப் பெறுவது தான். இதற்கே இலங்கை இப்போது பிள்ளையார் சுழி போடத் தொடங்கியுள்ளது போலத் தெரிகிறது.
ஆனால் இது ஒன்றும் சுலபமான காரியமல்ல.
சீனாவுடன் பாரிய வணிக, பொருளாதார உறவுகளைக் கொண்டிருக்கும் இலங்கையால்- அவ்வளவு இலகுவாக அதனை வெட்டி விட்டு அமெரிக்கா பக்கம் நகரமுடியாது. அதேவேளை சீனா அளவுக்கு அமெரிக்காவும், இந்தியாவும் பொருளாதார உதவிகளை இலங்கைக்கு அள்ளி வழங்கவும் முடியாது. இருந்தாலும், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசின் வொசிங்டன் பயணத்தின் பின்னர், அமெரிக்காவின் சொல்லை சற்றேனும் மதிக்கின்ற போக்கு ஒன்று கொழும்பில் உருவாகத் தொடங்கியுள்ளது. ஜெனிவா தீர்மானத்தை வைத்து அமெரிக்கா கொடுக்கின்ற- அழுத்தங்களினால் மட்டும் இது நடப்பதாகத் தெரியவில்லை. எதிர்காலத்தை மையப்படுத்திய இலங்கையின் இராஜதந்திரமாகவும் இதைக் கருதலாம். ஆனால் அமெரிக்காவோ மனிதஉரிமைகள் என்ற விவகாரத்தை வைத்து இலங்கையை ஆட்டுவிக்கப் பார்க்கிறது, இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள மைக்கல் சிசன் கொழும்பு வர முன்னரே, தாம் மனிதஉரிமைகளுக்கே முன்னுரிமை கொடுக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார். இது இலங்கையுடன் அவ்வளவு நெருக்கத்தை அமெரிக்கா உடனடியாக விரும்பாது என்பதையே காட்டுகிறது.
என்னதான் மனிதஉரிமைகள் பற்றிப் பேசினாலும், இலங்கைக்கு இராணுவ உதவிகள், ஆயுதவிற்பனை என்று வரும்போது- அமெரிக்கா அதை வேறு விதமாகவே பார்க்கிறது. ஏற்கனவே அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்துக்கும் இலங்கைக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் இருந்தே வருகின்றன. அதேபோல, அண்மையில் பெல் ஹெலிகொப்டர்களை இலங்கைக்கு விற்பனை செய்யவும் அமெரிக்கா அனுமதி வழங்கியிருந்தது. அதுபோலத் தான் இலங்கைக்கு பயிற்சிகளை அளிக்கவும் அமெரிக்கா இணங்கியுள்ளதா அல்லது இறங்கிவரும் இலங்கையுடன் நெருங்கிப்போக விரும்புகிறதா என்பது விரைவிலேயே தெரியும். ஆனால் ஒன்று, சீனாவுடனான இலங்கையின் நெருக்கம் எப்போது குறைந்து போகிறதோ – அமெரிக்க, இந்திய வியூகத்துக்கு அது எப்போது நெருங்கிப் போகிறதோ- அப்போது தமிழரின் அரசியல் நகர்வுகள் மீண்டும் பின்நோக்கித் தள்ளப்படும் ஆபத்து ஏற்படும் என்பது மட்டும் உண்மை.
கட்டுரையாளர் சுபத்ரா
0 கருத்துரைகள் :
Post a Comment