சிறிலங்கா அரசைத் தட்டிக் கேட்கவே சிவ்சங்கர் மேனனை கொழும்புக்கு அனுப்புகிறது புதுடெல்லி

சிறிலங்காவின் மெத்தனப் போக்கைப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த இந்திய அரசு, இத்தனை மாறுதல்கள் ஏன் என்று நேரிலேயே விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது. இதற்காகவே சிவ்சங்கர் மேனனை கொழும்புக்கு அனுப்பவுள்ளது.இவ்வாறு தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் ‘தினமணி‘ நாளேட்டில், அதன் கொழும்பு செய்தியாளர் கே.எஸ்.பாலச்சந்திரன் எழுதியுள்ள செய்திக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா அரசுக்கு "எல்லா வகையிலும்'' உதவிகளைச் செய்திருந்தாலும் சமீபகாலமாக இந்திய அரசையே அலட்சியப்படுத்துகிறது சிறிலங்கா அரசு.

இந்தியாவுடன் செய்து கொண்ட உடன்பாடுகளை ரத்து செய்யவும், கொடுத்த வாக்குறுதிகளைக் காலில் போட்டு மிதிக்கவும் தயாராகி வருகிறது.

அத்துடன் சீனாவுடன் கொஞ்சிக் குலாவத் தொடங்கிவிட்டது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த இந்திய அரசு, சிறிலங்காவின் போக்கில் இத்தனை மாறுதல்கள் ஏன் என்று நேரிலேயே விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனை இதற்காகவே இம் மாதம் 29ம் நாள் (வெள்ளிக்கிழமை) கொழும்புக்கு அனுப்பி வைக்கிறது.

அவர் சனிக்கிழமையும் அங்கு தங்கி சிறிலங்கா தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார்.

இந்தியன் எண்ணெய் கூட்டுத்தாபனம் மிகப்பெரிய பெட்ரோலியப் பண்டங்கள் சேமிப்புக்கான தொட்டிகளையும் எண்ணெய் வழங்கல் கட்டமைப்பையும் திருகோணமலை துறைமுகம் அருகில் உருவாக்கியிருக்கிறது. 

அந்த நிறுவனம் "சிறிலங்கா இந்தியன் எண்ணெய் கூட்டுத்தாபனம்'' (எல்.ஐ.ஓ.சி.) என்ற பெயரிலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

2002-ம் ஆண்டு இதற்காக இருதரப்பு உடன்பாடும் செய்து கொள்ளப்பட்டது.

அப்போது சிறிலங்காவில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தது. இப்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி செய்கிறது.

பெட்ரோலிய சேமிப்பு தொட்டிகள் உள்ள நிலம் சிறிலங்கா பெட்ரோலியத்துறைக்குச் சொந்தமானது அல்ல, திருகோணமலை மாவட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமானது என்பதால் எண்ணெய் கொள்கலன்களையே அரசுடைமையாக்குவது குறித்து சட்ட நிபுணர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்று ""சிலோன் டுடே'' என்ற நாளிதழ் ஜூன் 9-ல் செய்தி வெளியிட்டது.

அந்தச் செய்திக்கு ஆதாரமாக அரசின் உயர்நிலை வட்டாரங்களை அது மேற்கோள்காட்டியிருந்தது.

அது சாதாரணமான செய்தியல்ல, இந்திய அரசை ஆழம் பார்க்கக் கசியவிடப்பட்ட செய்தி என்று புரிகிறது.

எண்ணெய் கொள்கலன்களைக் கைமாற்றிக் கொடுத்தற்கான உடன்பாடு தான் கையெழுத்தாகியிருக்கிறதே தவிர, அந்த இடத்தை இந்திய எண்ணெய் நிறுவனத்துக்குக் குத்தகைக்குத் தந்ததற்கான உடன்பாடு 10 ஆண்டுகளாகியும் இன்னமும் கையெழுத்தாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பலமுறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியும் சிறிலங்கா அரசு அதிகாரிகள் அதைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

இந்த எண்ணெய் சேமிப்புத் தொட்டிகளை நவீனப்படுத்தவும் வலுப்படுத்தவும் இதுவரை சுமார் 66 கோடி ரூபா செலவிடப்பட்டிருக்கிறது. மேலும் 93.5 கோடி ரூபா செலவிட உத்தேசித்திருக்கிறது.

சிறிலங்காவின் எந்தவொரு வளர்ச்சித் திட்டமாக இருந்தாலும் அது சீனாவுக்கே தரப்படுகிறது.

சம்பூர் என்ற இடத்தில் இந்தியா நிறுவிவரும் மின்னுற்பத்தி நிலையம் போன்றவற்றைச் சீர்குலைக்கும் வகையிலேயே சிறிலங்கா அரசின் நடவடிக்கைகள் அமைந்து வருகின்றன.

இந்த திட்டம் குறித்து 2006 முதலே பேசி வருகின்றனர். ஆனால் இன்னமும் இதை நடைமுறைப்படுத்த வழி ஏற்படவில்லை.

இந்த திட்டம் தொடர்பாக ஏற்கெனவே பேசி முடிக்கப்பட்ட அம்சங்கள் தொடர்பாகக் கூட சிறிலங்காவின் தலைமை அரசு வழக்குரைஞர் ஏதாவது சந்தேகங்களைக் கிளப்பிக் கொண்டே இருக்கிறார்.

நல்லிணக்க ஆணைக்குழு அளித்த அறிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தகவல்களைக் கூட அமெரிக்க அரசுக்குத் தான் தெரிவிக்கிறது சிறிலங்கா அரசு.

இந்தியாவுக்கு அது குறித்து எதையும் தெரிவிப்பதில்லை.

சிறிலங்காவின் வடக்கில் தமிழர் வசிப்பிடங்களில் அளவுக்கு அதிகமாக இராணுவ வீரர்களைத் தங்கவைத்து பொதுமக்களை அச்சுறுத்தக் கூடாது, அவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஒப்புக்கொள்ளப்பட்ட விடயத்திலும் சிறிலங்கா அரசு வேண்டுமென்றே மெத்தனம் காட்டுகிறது.

அத்துடன் அது குறித்து இந்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைப் போல நடந்து கொள்கிறது.

இராணுவத்தினரின் எண்ணிக்கையும் குறையவில்லை, குடியியல் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் ஆதிக்கமும் குறையவில்லை.

தமிழர்களுடைய வீடுகளையும் நிலங்களையும் சிறிலங்கா இராணுவம் தன் வசம் எடுத்துக் கொள்வது வேகமாகவும் அதிக அளவிலும் நடக்கிறது.

இது பற்றி எரியும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இந்திய அரசு இனியும் இதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டு வருகிறது.

சிறிலங்காவின் கிழக்கு மாகாணசபையின் பதவிக்காலம் இன்னும் ஓராண்டு இருக்கிறது என்றாலும் அதையும் கலைத்துவிட வேண்டும் என்று மாகாண முதலமைச்சர் எஸ். சந்திரகாந்தன் நிர்ப்பந்திக்கப்பட்டார்.

இதையும் இந்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது.

சிறிலங்காவின் வடக்கிலும் கிழக்கிலும் வசிக்கும் தமிழர்களின் துயர நிலை குறித்து நேரில் அறிய இந்தியத் தூதுவர் சமீபத்தில் விரிவாக சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவர் அளித்த அறிக்கைகள் சிறிலங்காவில் என்ன நடக்கிறது என்பதை இந்திய அரசு புரிந்துகொள்ள உதவி வருகிறது.

எனவே சிவசங்கர மேனனின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment