எதிர்க் கட்சியை பலப்படுத்தும் மேற்குலகம்


சர்வதேச சமூகம் ஐக்கிய தேசியக் கட்சி மீது பூரண நம்பிக்கையை வைத்துள்ளது இனி வரும் தேர்தல்கள் அரசுக்கு அக்கினிப் பரீட்சையாகவே அமையக்கூடும். தேர்தல் முடிவுகள் அரசை ஆட்டம் காண வைக்கலாம் என்றே வல்லுநர்கள் அடித்துக் கூறுகின்றனர்.ஒரு நாட்டில் எதிர்க்கட்சி பலமாக இருந்தால்தான் குறித்த நாட்டை ஆளும் அரசு ஜனநாயக அரசியல் என்ற கோட்பாட்டுக்கிணங்க செயற்படும். மாறாக எதிர்க்கட்சி பலமிழந்து காணப்பட்டால் அந்த நாட்டை ஆளும் அரசு சர்வாதிகாரத்தை நோக்கியே அரசியல் நகர்த்தல்களை மேற்கொள்ளும்.

எதிர்க்கட்சியின் முக்கியத்துவம்

ஒரு நாட்டில் இறைமை ஜனநாயகம் உரிமைகள் சுதந்திரம் ஆகியன முழுமையாக  முறைமையாக செயற்பட வேண்டுமானால் பலமானதொரு எதிர்க்கட்சி இருத்தல் அவசியம். அவ்வாறு இல்லாத பட்சத்தில் ஜனநாயகம் என்ற புனிதமான மக்கள் ஆட்சி அம்சத்தை அந்தநாட்டில் எதிர்பார்க்க முடியாது. 

ஒற்றையாட்சி முறைமை

குறிப்பாக, ஒற்றையாட்சி முறைமையானது சர்வாதிகார ஆட்சி முறைமைக்கு ஒப்பான தாகும். அரசு கண்களை மூடிக் கொண்டுதான் நினைத்ததை இலகுவில் செய்யலாம். அவற்றைத் தட்டிக் கேட்பதற்கு எவரும் முன்வரமாட்டார்கள். அவ்வாறு எவராவது முன்வந்தால் அவர்களை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் முடக்கிவிடுவார்கள். 

முடக்கி விடுவார்கள் என்பதை விட வேரோடு அழித்து விடுவார்கள் எனச் சொல்வதே மிகவும் பொருத்தமானதாக இருக்கும். எனவே, ஒரு நாடு, ஜனநாயக விழுமியங்களைப் பின்பற்றி அரசியல் பொருளாதார ரீதியில் தன்னிறைவு அடையவேண்டு மானால் பலமானதொரு எதிர்க்கட்சி இருத்தல் அவசியம் என்பது மறுக்க முடியாத உண்மையாக இருந்து வருகின்றது.

எதிர்க்கட்சியொன்று இருக்கும் பட்சத்தில்தான் ஜனநாயக அரசியல் என்ற விடயம் சாத்தியமாகின்றது. இன்று இலங்கையை எடுத்துக் கொள்வோமானால், இங்கு பல எதிர்க்கட்சிகள் இருக்கின்ற போதிலும் நடைமுறையில் உள்ள அரசு அவற்றைப் பலவீனப்படுத்திவிட்டு ஒற்றையாட்சி முறைமை என்ற பாதையில் பயணிக்கின்றது.

நாட்டின் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை இனி இல்லையென்றளவு பலவீனப்படுத்தியுள்ள அரசு, நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை  பலத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.

மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்ற பின்னர் அதனைப் பயன்படுத்தி தனக்குத் தேவையான அனைத்தையும் அரசு இலகுவில் நிறை வேற்றிக்கொண்டு வருவதுடன், தவறுகளைச் சுட்டிக் காட்டுவதற்கு தகுதி இல்லாதவாறு பிரதான எதிர்க் கட்சியைப் பலவீனப்படுத்திக் கொண்டுவருகின்றது.  

நினைத்ததைச் சாதிக்கும் பலத்தில் அரசு

இன்று நாட்டில் பலமான தொரு எதிர்க்கட்சி இல்லாததன் காரணமாக அரசு தனக்குத் தேவையான அனைத்தையும் உடனுக்குடன் அதிகாரத்தை அடாவடியைப் பயன்படுத்தி செய்து முடிக்கின்றது.

*எரிபொருள்களின் விலையை அதிகரிக்க வேண்டுமா? முன்னறிவித்தல் எதுவுமின்றி அதை இரவோடிரவாகச் செய்து முடிக்கின்றது.

*அத்தியாவசியப் பொருள்களின் விலையை அதிகரிக்க வேண்டும் என்ற தேவைப்பாடு அரசுக்கு ஏற்பட்டால், உடனடியாக அதனைச் செய்கின்றது. ஆட்சிபீடம்  மக்களைப்பற்றி கடுகளவேனும் சிந்திப்பதில்லை.

*வரிகளை மேலதிகமாக அறவிட வேண்டுமா? ஆலயங்கள், பள்ளி வாசல்களை அபிவிருத்தி என்ற போர்வையில் உடைக்கவேண்டுமா? இவை அனைத்தையும் அரசு தனது அதிகாரத்தை ஆட்களைப் பயன்படுத்தி கண்களை மூடித்திறப்பதற்கு முன்னரே   திறம்படச் செய்துமுடிக்கும் சிறப்பம்சத்தைக் கொண்டுள்ளது.

சட்டத்தைத் தன்கையில் எடுக்கும் அரசு

அரசின் இவ்வாறான செயற்பாடுகளைத் தட்டிக் கேட்பதற்கு எதிர்க்கட்சிகள் முனைந்தால் அல்லது அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு முயற்சித்தால் அரசு சட்டத்தைத் தன்கையில் எடுத்துக்கொண்டு அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. காவல்துறையும் அரசுக்கு "செல்யூட்' அடிக்கும் நிலையிலேயே உள்ளது.

அரசின் நல்லிணக்கம் எது?

சர்வதேச சமூகம், குறிப்பாக மேற்குலகம் கூறுவதுபோல யுத்தத்தின் பின்னரான காலப் பகுதியில் நாட்டில் நல்லிணக் கத்தை ஏற்படுத்துவதற்கு அரசு துளியளவேனும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. மாறாக அது இன ஐக்கியத்தைக் குழப்பும் வகையிலேயே செயற்பட்டு வருகின்றது. இன வாதத்தையே அரசியல் கொள்கையாகக் கடைப்பிடித்து வருகின்றது.

தமிழர்களின் தாயக பூமியை ஆக்கிரமித்தல், கோவில் மற்றும் பள்ளிவாசல்களை இடித்தல் ஆகிய செயற்பாடுகளே அரசின் நல்லிணக்கமாக இருந்துவருகின்றன. இனியும் அவை தொடரும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதனால் இலங்கை அரசின் மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் கடும் கோபத்தில் உள்ளது. அதைவெளிப்படையாகவே அமெரிக்கா தற்போது காண்பித்து வருகின்றது. இது இலங்கைக்குப் பெரும் தலையிடியாக இன்று மாறியுள்ளது.

ஆட்சி மாற்றம்

இது இவ்வாறிருக்க, இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டால்தான் ஏதாவது மாற்றம் ஏற்படும் என்ற நிலைமையே மேற்குலக நாடுகளுக்கு மத்தியில் இன்று உருவாகியுள்ளது.

இலங்கையின் ஆட்சிமாற்றமே மேற்குலகத்தின் அடுத்த இலக்கு என தமரா குணநாயகம் ஜெனிவா மாநாட்டின்போது தெரிவித்திருந்த கருத்துகள் இதனை உறுதிப்படுத்துவதற்கு சிறந்த உதாரணமாகத் தற்போது அமைந்துள்ளன; அமைந்துவிட்டன.

வெட்கத்துக்குரிய நாடு

இலங்கை வெட்கத்துக்குரிய நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்ற ஒருகாரணத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் முன்னேற்றத்தை எடைபோடுவதற்கு மேற்குலகம் ஒன்றும் மடையர் வாழும் தேசம் அல்ல என்பதை ஆட்சியாளர்கள் சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுடன், தாங்கள் இன்னும் நிறைய வேலைகளைச் செய்து முடிக்கவேண்டியுள்ளது என்ற உண்மையையும் அரசு உள்வாங்கி அதற்கேற்ப செயற்படவேண்டும். 

இலங்கையில் ஆட்சிமாற்றமே சர்வதேசத்தின் அடுத்த இலக்கு என்ற உண்மை தற்போது வெளிப்படையாகவே தென்படுகின்றது. இலங்கை அரசுக்கு எதிராக மேற்குலகம் முன்னெடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகள் இதனைப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன.

குறிப்பாக, வசந்தகாலப் புரட்சிகளை ஏற்படுத்தி மத்திய கிழக்கு நாடுகளில்  ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியது போல் இலங்கையில் அந்த விடயத்தை மேற்குலகத்தால் இலகுவில் செய்யமுடியாது. இந்த உண்மையை மேற்குலகம் நன்கு அறியும். ஏனெனில், இலங்கைத் தீவில் பெரும்பான்மையினராக வாழும் சிங்கள மக்கள் அரசின் பக்கமே நிற்கின்றனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந் தெழுந்தனர். ஆனால், இங்கு அவ்வாறு இல்லை. தேசப்பற்று என்ற மந்திரத்தை ஒதி சிங்கள மக்களை அரசு நன்றாகவே ஏமாற்றியுள்ளது. அரசுக்கு எதிரான செயற்பாடுகளை எவராவது முன்னெடுத்தால் புலி என்ற முத்திரையைப் பயன்படுத்தி அரசு தன்னைப் பலப்படுத்திக் கொள்கின்றது. 

எனவே, இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால், அங்கு பலமானதொரு எதிர்க்கட்சியை முதலில் கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறு கட்டியெழுப்பிய பின்னர் தேர்தல்களின் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் என மேற்குலகம் புதிய திட்ட மொன்றை வகுத்து தற்போது செயற்பட்டு வருகின்றது என இராஜதந்திர மட்டத்திலான தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு மேற்குலகம் இலங்கையை வலியுறுத்தி வருவதன் நோக்கமும் இதுதான் எனக்கூறப்படுகின்றது.

ஐ.தே.கவுக்குப் பலமாக இருக்கும் கூட்டமைப்பு

குறிப்பாக, இன்று உள்நாட்டு அரசியல் நிலைமைகளை எடுத்துக்கொண்டால் ஐக்கிய தேசியக் கட்சி புத்துயிர் பெற்று வருகின்றது என்றே சொல்ல வேண்டும். அரசின் முக்கிய பிரமுகர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளனர். இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் எழுச்சிப் பயணம் தொடர்ந்தவண்ணமேயுள்ளது. தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்ற தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒத்துச் செல்கின்றது. அத்துடன், ஐ.தே.க. தற்போது பலமானதொரு கூட்டு எதிர்க் கட்சியையும் அமைத்து வருகின்றது.

களம் அமைத்துக் கொடுக்கும் மேற்குலகம்

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்குக் களம் அமைத்துக்கொடுத்து மேற்குலகமும் அந்தக் கட்சியை பலப்படுத்தி வருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதற்கு அந்நாடுகள் வழி சமைத்துக் கொடுத்துள்ளன.சர்வதேச சமூகம் ஐக்கிய தேசியக் கட்சி மீது பூரண நம்பிக்கையை வைத்துள்ளது.

குறிப்பாக, நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அழைத்துப் பல நாடுகள் இன்று பேச்சு நடத்துகின்றன.ரணில் விக்கிரமசிங்கவுக்கு சர்வதேச அமைப்புகளில் முக்கிய பதவிகள் கிடைக்கின்றன. 

உலக அமைப்புகளில் அவர் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றார். ஏனெனில், அவர் ஜனநாயகத் தலைவனாக வலம் வருவதே பிரதான காரணமாகும். சிறுபான்மையின மக்களை மதிக்கும் தலைவர் அவர்.

 எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அண்மைக்காலமாக வெளிநாடுகளுக்கு முக்கிய விஜயங்களை மேற்கொள்கின்றார். தற்போது கூட அவர் சீனா சென்றுள்ளார்.

சீனாவின் ஆதரவைப்பெறும் ஐ.தே.க.

அவரின் வெளிநாட்டு (சீன) விஜயத்தின் பின்னணியில் மேற்குலக நாடொன்றே இருக்கின்றது என உறுதியான தகவல்கள் கூறுகின்றன. ஆசிய பிராந்தியத்தில் இலங்கைக்குப் பக்கபலமாக இருக்கும் சீனாவை இலங்கை அரசுக்கு எதிராக செயற்பட வைக்கும் நோக்கிலேயே மேற்குலகத்தின் அந்த நாடு ரணிலை இராஜதந்திரியாகப் பயன்படுத்துகின்றது என்றும் அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியை நன்றாகப் பலப்படுத்திவிட்டு அதன்பின்னர் இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதே மேற்குலகத்தின் இன்றைய தேவைப்பாடாக உள்ளது.  

அத்துடன், இந்த அரசை எப்படியாவது வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் உள்ளன. 

இனிவரும் தேர்தல்கள் அரசுக்கு அக்கினிப்பரீட்சையே!

எது எப்படியிருப்பினும், இனி வரும் தேர்தல்கள் அரசுக்கு அக்கினிப் பரீட்சையாகவே அமையக்கூடும். தேர்தல் முடிவுகள் அரசை ஆட்டம் காண வைக்கலாம் என்றே வல்லுநர்கள் அடித்துக் கூறுகின்றனர். இந்திய ஜோதிடர் ஒருவர் கூறியதுபோல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு தற்போது ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. இது ஆட்சி மாற்றம் வரை நீடிக்கலாம் என்றே கூறப்படுகின்றது.

சரத்பொன்சேகாவும் ஐ.தே.கவுக்குப் பலமாக

அதேவேளை, முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவும் விடுதலையாகித் தற்போது வெளியிலிருந்து கொண்டு அரசுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை கூட ஐக்கிய தேசியக் கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கையாகவே அமைந்துள்ளது.

எனவே, ஐக்கிய தேசியக் கட்சி வெகுவிரைவில் புத்துயிர் பெற்று ஆட்சிப் பீடத்தில் அமரும் நாள் தொலைவில் இல்லை என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். மேற்குலகத்தின் நடவடிக்கைகளும் அதற்கேற்றவாறே அமைந்துள்ளன.

நன்றி - உதயன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment