ஆணைப் பெண்ணாக்க முடியாததைத் தவிர வேறு எதனையும் செய்யக்கூடிய சர்வவல்லமை வாய்ந்தது என்று தற்போதைய அரசியலமைப்பின் கர்த்தாவான மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன மார்தட்டிக்கொண்ட அரசியலமைப்பிலுள்ள நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதியும் 2010 ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தவருமான சரத் பொன்சேகாவிடமிருந்து உரத்த குரல் வெளிப்பட்டிருக்கிறது.
சிறைவாசத்தின் பின்னர் முதன்முறையாக நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடத்திய செய்தியாளர் மாநாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்களை இல்லாமல் செய்துவிடுவதற்கான போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக சூளுரைத்திருக்கும் பொன்சேகா, நாட்டின் சட்டவாக்க சபையான பாராளுமன்றத்திற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதிலளிக்கும் கடப்பாட்டைக் கொண்டவராக மாற்ற வேண்டும் என்று தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் .
சட்டத்தை நிறைவேற்றுவதற்கும் வரவுசெலவுத் திட்டத்தை அங்கீகரிக்கப்பதற்கும் மட்டுமே பாராளுமன்றத்தின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அச்சத்தை எதிர்கொண்டால் சட்டமா அதிபரின் உதவியுடன் குற்றச்சாட்டுக்களைத் தயாரித்து எவரையும் சிறையில் தள்ளிவிடுவதற்கு ஏற்புடையதாக தற்போதைய முறைமை இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள பொன்சேகா, அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்தின் மூலம் பொது, பொலிஸ், தேர்தல், நீதி, ஊழல், மோசடி ஒழிப்பு ஆணைக்குழுக்களின் சுயாதீனம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போதைய ஆட்சிக்கு வலுச் சேர்க்கும் முக்கிய நோக்கத்துடனேயே இச்சட்டமூலத்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் நாட்டின் சட்ட ஆட்சி வலுப்பெற வேண்டுமானால் இந்த ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை பேணப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
ஜேர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் "தேசப்பற்று' என்ற வார்த்தையை தனது இனத்தை மேம்படுத்த அவர் பயன்படுத்தியிருந்ததற்கும் இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய போக்கிற்கும் பொன்சேகா சமாந்தரம் வரைந்துள்ளதையும் காணமுடிகிறது. சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராக பெரும்பான்மை இனவாதத்தை அரசாங்கம் வெளிப்படையாக ஊக்குவிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற பல்லவி கடந்த மூன்று தசாப்தங்களாக தென்னிலங்கையில் பாடப்பட்டுவரும் நிலையில் பொன்சேகா இப்போது தெரிவித்திருப்பது பெரும்பாலானவர்களுக்கு "ஆறின கஞ்சியா'கவே இருக்கும் என்பதில் வியப்பில்லை.
நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக இடதுசாரிகளையும் தன்னுடன் அணிதிரட்டி 1994 இல் ஆட்சி பீடமேறிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க இரு தடவைகள் நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக பதவி வகித்த போதும் அதனை நீக்கிவிடுவதற்கான நடவடிக்கைகளை தனது ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கவில்லை. பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வும் இந்த ஜனாதிபதி நிறைவேற்றதிகார முறைமையை ஒழிக்கவேண்டும் என்பதில் இப்போது முழுமையான விருப்பத்தை கொண்டிருப்பதாகத் தென்படவில்லை.
ஜனாதிபதி தேர்தல் பிரசார மேடைகளில் இந்த விவகாரம் சூடுபிடிப்பதும் பின்னர் அமுங்கிப்போவதும் பல வருடங்களாக பார்க்கப்பட்ட காட்சிகள். ஆனால், நாட்டில் ஊழல், மோசடி தலைவிரித்தாடுவதாகவும் சகலதுறைகளையும் இது மோசமாக அரித்து நாசமாக்கிக் கொண்டிருப்பதாகவும் அதனால் இந்த அரசாங்கத்தை பதவி கவிழ்க்க பொது எதிரணிக் கூட்டணியை அமைப்பதே தனது தற்போதைய இலக்கு என்று பொன்சேகா கூறியிருப்பது யதார்த்தபூர்வமான விடயமாகத் தென்படுகிறது. ஜனநாயகக் கட்டமைப்புக்குள் இதற்கான அவரின் முயற்சிக்கு இடம் இருப்பதுடன் எதிரணியின் ஆதரவையும் அவர் திரட்டிக் கொள்ள முடியுமென எதிர்பார்க்க முடியும்.
ஆனால், சிறுபான்மைச் சமூகங்களின் குறிப்பாக தமிழ் மக்களின் நீண்டகால இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு தொடர்பாக அதாவது அதிகாரப் பகிர்வை உள்ளடக்கிய தீர்வு பற்றி பொன்சேகாவிடமிருந்து தீர்க்கமான யோசனை எதுவும் காணப்படாத தன்மையே அவரின் முதலாவது செய்தியாளர் மாநாட்டில் வெளிப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பான கேள்விக்கு பதிலளித்திருக்கும் பொன்சேகா தமிழ், முஸ்லிம், சிங்கள மற்றும் இதர சமூகங்கள் பரஸ்பரம் தொடர்பாடல்களை மேற்கொண்டு தங்களுக்கிடையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் ஊக்குவிப்பை வழங்க வேண்டுமென்று கருத்து தெரிவித்ததுடன், இந்த விவகாரம் தொடர்பான தனது கருத்துகளை மட்டுப்படுத்திக்கொண்டதாகத் தென்படுகிறது.
யுத்தம் முடிவடைவதற்கு முன்னர் கனடிய ஊடகமொன்றுக்கு வழங்கியிருந்த பேட்டியொன்றில் இந்நாட்டில் தமிழ் மக்கள் வாழ முடியும். ஆனால், பெரும்பான்மைச் சமூகமான சிங்களவர்களுக்குள்ள அதேவிதமான உரிமைகளைக் கோரும் பாத்தியதை அவர்களுக்கு இல்லையெனக் கூறியிருந்தமை கடும் விமர்சனங்களைத் தோற்றுவித்திருந்தது. ஆயினும் 2010 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதற்கிணங்க வட, கிழக்கிலுள்ள பெரும்பான்மைத் தமிழ் மக்கள் அச்சமயம் பொன்சேகாவுக்கு வாக்களித்திருந்தனர்.
இப்போது சிறை வாழ்க்கை முடிந்து விடுதலையான நிலையில் பொன்சேகா பெரும்பான்மை இனவாதத்துக்கு அரசு தீனி போடுவதாக குற்றம்சாட்டியிருப்பது சிங்கள கடும் போக்காளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் தோற்றுவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேசமயம் அவரே கூறியிருந்ததுபோன்று சிறைவாழ்வு அனுபவம் அவரை புடம்போட்டு மெருகுபடுத்தியிருக்கக்கூடும். ஆனால், அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு இலங்கையின் அரசியல் தலைவர்கள் வெளிப்படுத்தும் திட்டங்கள், கருத்துகளையொத்ததாகவே பொன்சேகாவினதும் கருத்துகள் காணப்படுகிறது. உன்னதமான அரசியல் கலாசாரத்தை நாட்டில் தோற்றுவிக்க பொது எதிரணிக் கூட்டணியை ஏற்படுத்திப் பாடுபடப்போவதான அவரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா என்பதை காலமே தீர்மானிக்கும்.
தினக்குரல்
0 கருத்துரைகள் :
Post a Comment