சட்டியில் இருந்து அடுப்புக்குள் வீழ்ந்துள்ள சரத் பொன்சேகா


சுமார் 27 மாதங்களாக சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கடந்தவாரம் வெளியே வந்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பொதுமன்னிப்புக்கு அமைய விடுதலை செய்யப்பட்டுள்ள சரத் பொன்சேகாவுக்கு, இப்போது தான், மீண்டும் ஒரு ‘பொறி‘யில் தான் சிக்கியுள்ளேன் என்ற உண்மை புலப்படத் தொடங்கியுள்ளது. வெளியே வந்ததும், எந்த அடிப்படையில் விடுவிக்கப்பட்டேன் என்று தெரியாது என சரத் பொன்சேகா கூறியிருந்தார். ஆனால் சரத் பொன்சேகா மீண்டும் ஒரு திறந்தவெளிக் கைதியாகவே விடப்பட்டுள்ளார் என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குறிப்பிடுகிறார். அதாவது பல்லுப் பிடுங்கிய பாம்பாகவே- அவர் சிறைக்கு வெளியே திறந்து விடப்பட்டுள்ளார். 

சரத் பொன்சேகாவை எப்படியாவது வெளியே கொண்டு வந்து விடவேண்டும் என்ற துடிப்பில் இருந்த அவரது குடும்பத்தினரும், ஆதரவாளர்களும், சரத் பொன்சேகாவைச் சுற்றி வைக்கப்பட்ட பொறி என்னவென்று தெரியாமலேயே, அதில் தாமும் விழுந்து அவரையும் வீழ்த்தியுள்ளனர். அமெரிக்காவிடம் இருந்து தொடர்ச்சியாக கிடைத்து வந்த அழுத்தங்களும், அமெரிக்க இராஜாங்கச் செயலரைச் சந்திக்க வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் சென்றிருந்ததும் தான் பொன்சேகாவின் விடுதலைக்கான அடிப்படைக் காரணமாக கருதப்படுகிறது. ஆனால் அதையும் தாண்டி, விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள அரசாங்கம், எதிர்க்கட்சிகளுக்குள் குழப்பதை எற்படுத்துவதற்கே அவரை விடுவித்துள்ளதாகவும் தகவல்கள் உள்ளன. எவ்வாறாயினும் சரத் பொன்சேகாவின் விடுதலை என்பது அவரது நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட ஒன்று அல்ல. சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும்படி உள்நாட்டில் பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்கள் கோரிக்கை விடுத்தனர். அமெரிக்காவும் வேறு பல நாடுகளும் தொடர்ச்சியாக இதே கோரிக்கைகளை விடுத்து வந்தன. அப்போதெல்லாம் இறங்கி வராத அரசாங்கம் இப்போது வலிந்து சென்று அவரை விடுதலை செய்துள்ளது. அவசரப்பட்டு சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காட்டிய தனிப்பட்ட ஆர்வத்தைக் கொண்டே, இதன் பின்னால் உள்ள பொறி என்னவென்று புரிந்து கொள்ளலாம். 

அனோமா பொன்சேகாவை இணங்க வைப்பதற்காக ரிரான் அலஸின் வீட்டுக்கே போனார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ. அந்தளவுக்கு அரசாங்கம் அவசரம் காட்டியது. சரத் பொன்சேகாவுக்கு இராணுவ நீதிமன்றம் அளித்த தண்டனையை நீக்கி விடுதலை செய்ய முடியாது என்று சட்டமா அதிபர் திணைக்களம் கூறிய போதும், அதை உதாசீனப்படுத்தி விட்டே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, அவரை விடுதலை செய்ததாக கூறியுள்ளார் சரத் என் சில்வா. அதைவிட, உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுக்கள் விசாரணையில் இருக்கும் போது ஒருவருக்குப் பொதுமன்னிப்பு அளிக்க முடியாது. சரத் பொன்சேகாவின் ஒன்றுக்கு இரண்டு மேன்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருந்த போதே, சரத் பொன்சேகாவின் விடுதலைக்கான ஆவணங்களில் கையெழுத்திட்டிருந்தார் ஜனாதிபதி. அரசின் உயர் பொறுப்பிலுள்ள அவர், வெறும் நம்பகத்தின் அடிப்படையில் இவ்வாறு கையெழுத்திட முடியாது. கட்டாரில் இருந்து திரும்பி வர, 2 நாட்கள் ஆகும் என்பதால் தான் முன்னரே அவர் கையெழுத்திட்டிருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை வைத்திருந்தவரை இரண்டு நாட்கள் கூடத் தாமதமாகாமல் விடுவிக்க வேண்டும் என்று அரசாங்கம் ஒற்றைக்காலில் நின்றது. இதெல்லாம், அரசின் அவசரத்தனத்தை வெளிப்படுத்தியது. 

அரசின் அவசரத்துக்கான காரணத்தைப் புரிந்து கொள்ளாமல் சரத் பொன்சேகாவும் வெளியே வந்து விட்டார். அதன் பின்னர் தான், ஏழு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற உண்மை தெரிந்துள்ளது. குடியுரிமையை இழந்தே அவர் வெளியே வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றவர்களால் தேர்தலில் போட்டியிட முடியாது. ஏற்கனவே, சரத் பொன்சேகா இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவித்து விட்டதால், ஏழு ஆண்டு தடையை நீக்க முடியாது. ஜனாதிபதி அவருக்கு முழு அளவிலான பொதுமன்னிப்பை வழங்கினால் மட்டுமே, அவரால் தேர்தலில் போட்டியிடலாம். அப்படி முழுஅளவிலான பொதுமன்னிப்பை வழங்கினால், அவர் சிறையில் கழித்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலான காலத்துக்காக இழப்பீடு கோரலாம். சரத் பொன்சேகாவின் விடுதலையை அரசாங்கம் தமக்கு சார்பாக மாற்றிக் கொண்டுள்ளது, அதைவிட இரண்டு நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக செய்த மேன்முறையீடுகளையும் அவர் விலக்கிக் கொண்டு விட்டார். இதனால், அவர் ஒரு வகையில் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டவராகி விட்டார். சரத் பொன்சேகாவை விடுவித்ததன் மூலம் ஒரே கல்லில் பல காய்களை வீழ்த்தி விட்டார் மகிந்த ராஜபக்ஸ. 

சரத் பொன்சேகாவை உள்ளே வைத்திருந்து சர்வதேச அரங்கில் கெட்டபெயரை வாங்கிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, அவரை வெளியே விட எடுத்த முடிவு அரசின் புத்திசாலித்தனமே. பல்லுப் பிடுங்கிய பாம்பாக வெளியே வந்துள்ள அவரால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலோ பொதுத்தேர்தலிலோ நிற்கமுடியாது. யாரையாவது முன்னிறுத்தி வேண்டுமானால் அரசியல் செய்யலாம். ஒரு கட்சியை உருவாக்குவதானால் கூட, தனது பெயரில் உருவாக்க முடியுமா என்ற கேள்விக்கு சட்டரீதியாக விடை தேட வேண்டிய நிலையில் தான் சரத் பொன்சேகா உள்ளார். 

மகிந்த ராஜபக்ஸ அரசுக்கு எதிராக ஊடகங்களுக்கு கருத்துக் கூறலாம். அதற்கு அப்பால் அவரால் எதையும் செய்ய முடியாது. விரும்பியவாறு வெளிநாடு செல்வதற்குக் கூட முடியாது. இதைவிட அவர் எஞ்சிய சிறைத்தண்டனைக் காலத்தையும் அனுபவித்திருந்தால், அரசுக்கு அதிகளவு அழுத்தங்களைக் கொடுத்திருக்கலாம். வெளியே வர ஆசைப்பட்ட அவர், இப்போது சட்டியில் இருந்து நெருப்புக்குள் விழுந்த கதையாகி விட்டது.

கட்டுரையாளர் ஹரிகரன் இன்போ தமிழ் குழுமம்
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment