சர்வமத மாநாட்டு தீர்மானங்கள்

போர் முடிவுக்கு வந்து மூன்று வருட காலம் கடந்துவிட்ட நிலையிலும் வடக்குகிழக்கில் இராணுவம் செறிவாக நிலை கொண்டிருப்பதால் மக்கள் யுத்த மனோபாவத்துடனேயே காணப்படுவதாக கொழும்பில் நடைபெற்ற சர்வமதத் தலைவர்களின் மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையிலிருந்து மக்கள் மீட்சி பெறுவதற்கு சமயத் தலைவர்கள், அரசியல்வாதிகள், சிவில் சமூகத்தினர் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் எனவும் சர்வமதத் தலைவர்கள் அழைப்பு விடுத்திருக்கின்றார்கள். நாட்டில் காணப்படும் முக்கியமான பிரச்சினை ஒன்றின்பால் சர்வமதத் தலைவர்கள் தமது கவனத்தை குவித்திருப்பதுடன், கோரிக்கை ஒன்றையும் முன்வைத்திருப்பது கவனத்துக்குரிய ஒன்றாகும்.


எவ்வித அரசியல் நோக்கங்களுக்கும் அப்பால் சர்வமதங்களினதும் தலைவர்கள் நடத்திய சர்வமத மாநாட்டிலேயே  இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போரின் பின்னர் காணப்படும் சந்தேகம், அச்ச நிலை, நம்பிக்கையின்மை போன்றவை நீக்கப்பட வேண்டும் என்பவற்றை பிரதான நோக்கமாகக் கொண்டே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.


போர் முடிவுக்கு வந்து வழமை நிலை தோன்றியுள்ளதாகக் கூறப்பட்டாலும் வடக்கு கிழக்கு பகுதிகளில் யுத்தமனோநிலையில்தான் பொதுமக்கள் இன்னமும் வைக்கப்பட்டுள்ளார்கள். சர்வமதத் தலைவர்களின் தீர்மானம் மட்டும் இதனைக் கூறவில்லை. அரசசார்பற்ற நிறுவனங்கள் பலவற்றின் அறிக்கைகள் கூட இதனைத்தான் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சுட்டிக்காட்டியிருந்தது. இராணுவத்தின் பிரசன்னம் தொடர்ந்தும் காணப்படுவது சிறார்களின் மனங்களில் போரின் வடுக்கள் ஆறுவதைத் தடுக்கின்றது என  “சேவ் த சில்ரன்’ என்ற அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி மேனகா கல்யாணரட்ண இரண்டு தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார். “இராணுவ நடமாட்டம் என்பது போரினால் அச்சமடைந்துள்ள சிறார்களுக்கு கடந்த போரை நினைவூட்டுகின்றது. அத்தோடு அந்த நினைவூட்டல் போர் இன்னமும் முடிவடையவில்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துகின்றது’ எனவும் அவர் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. 


இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன்ரன்கின் கூட இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படுவதைப் போன்ற விகிதாசாரத்தில் வட பகுதியிலும் இராணுவத்தை வைத்திருக்கலாம் என்பது தான் அவருடைய கருத்து. அவரது இந்தக் கருத்துக்கு சிங்களக் கடும் போக்காளர்களிடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பிய அதேவேளையில், இலங்கை அரசாங்கமும் இந்தக் கருத்தினால் சீற்றமடைந்திருந்தது வெளிவிவகார  அமைச்சுக்கு அழைக்கப்பட்ட உயர்ஸ்தானிகர் இவ்வாறான கருத்துகளை வெளியிட வேண்டாம் என கண்டிக்கப்பட்டார். 


ஆக வட பகுதியில் இராணுவம் குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை யாரும் வெளியிடுவதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இலங்கை அரசாங்கம் இல்லை என்பதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் எண்ணிக்கை கணிசமானளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருந்த போதும் வன்னிப் பிராந்தியத்தின் நிலைமைகள் அவ்வாறில்லை. வன்னியில் இராணுவ பிரசன்னத்தைக் குறைப்பதற்கான திட்டங்கள் எதனையும் அரசாங்கம் முன்வைக்கவும் இல்லை. வடக்கில் இவ்விதம் இராணுவம் செறிவாக வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே நில அபகரிப்பு, சிங்களக் குடியேற்றம் என்பன இடம்பெறுகின்றன. இராணுவத்தை தொடர்ந்தும் வைத்திருப்பதற்காக அரசாங்கம் கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவையாக இல்லை. 


கண்ணி வெடிகள் முற்றாக அகற்றப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு காரணங்களை அரசாங்கம் கூறிக்கொள்கின்ற போதிலும் கூட, தமிழ் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என்பதே உண்மையாகும். நில அபகரிப்பு, சிங்களக் குடியேற்றம் போன்றவற்றைச் சாத்தியமாக்குவதற்காகவே இவ்வாறு வட பகுதியில் தொடர்ந்தும் இராணுவம்  நிலை கொண்டிருப்பதாக மக்கள் கருதுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கின்றது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை இதற்குப் பொருத்தமான காரணம் ஒன்றைக் கூறக்கூடிய நிலையில் அது இல்லை. வடக்கில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு இராணுவம் அகற்றப்படுவது அவசியம். வடக்கில் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இராணுவம் அவசியமில்லை. ஆனால், இராணுவத்தின்  அதிகரித்த பிரசன்னம் தொடர்ந்தும் ஒரு யுத்த பீதிக்குள்ளேயே மக்களை வைத்திருக்கின்றது. உளவியல் ரீதியாக மக்களை இது பாதிக்கின்றது என்பதை மனித உரிமைகள் அமைப்புகள் பலவும் சுட்டிக்காட்டியுள்ளன. இவற்றுக்கு மத்தியிலும் இராணுவப் பிரசன்னத்தைப் பேண வேண்டும் என்பதில் அரசாங்கம் முனைப்புக் காட்டுவது ஏன்?


போர் முடிவுக்கு வந்துள்ள இன்றைய காலகட்டத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் சிவில் நடவடிக்கைகளில் பொலிஸாரே ஈடுபடுத்தப்பட வேண்டும். பொலிஸ் என்பது ஒரு சிவில் படையாகும். ஆனால், இராணுவம் அவ்வாறல்ல. சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தை ஈடுபடுத்துவது வேண்டத்தகாத  விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. எனவே மக்கள் மத்தியில் காணப்படும் அச்ச நிலையைப் போக்கி சுமுக நிலையை ஏற்படுத்துவதற்கு இராணுவக்குறைப்பு மிகமிக அவசியமானதாகும். சர்வதேச சமூகமும் இலங்கையிடம் இன்று அதனைத்தான் கேட்கின்றது. சர்வமத மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் அதனைத் தான் கேட்கின்றது. இந்த நிலையில் சிங்களத் தேசியவாதிகளைத் திருப்திப்படுத்துவதற்குப் பதிலாக அரசாங்கம் யதார்த்தமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்!


தினக்குரல்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment