இலங்கையின் ஐக்கியம், இறைமை என்பவற்றின் மீது கூடிய அக்கறை காட்டுவோருக்கு இலங்கையின் கிழக்கு பகுதியிலுள்ள மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ் அரசியல் கட்சிகளிடையே மிகப் பெரியதான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (த.தே.கூ) தலைவர் ஆர். சம்பந்தன் ஆற்றிய உரை சிவப்புக் கொடியைக் காட்டுவதாக இருந்தது. இது தொடர்பான விபரங்களை ஊடகங்களில் வெளியாகியுள்ள அறிக்கைகள் மற்றும் விளக்கவுரைகளிலிருந்து தெரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. இதனிலிருந்து மாறுபட்ட வகையில் ஒரு மாதத்திற்கு முன்னர் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (த.தே.கூ) தலைவர் தேசியக் கொடியை யாழ்ப்பாணத்தில் உயர்த்தி தூக்கிப் பிடித்திருந்தார்.
வட பகுதி தலைநகரில் மே தின ஊர்வலத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுடன் இணைந்தே தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்திருந்தார். இன முரண்பாடுகளுக்கான அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் மிகச் சிறியளவிலேயே தீர்வுக்காக ஆவன செய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கை தேசியக் கொடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தூக்கிப் பிடித்தமை சிங்கள பெரும்பான்மையினரது ஆதிக்கத்திற்கு ஏதோ ஒப்பந்தத்தின் கீழ் (அவர்) சரணடைந்து விட்டதாகவே தமிழ்த் தேசியத்துவ அபிப்பிராயங்கள் வெளியாகியிருந்தன.
சிங்கள மற்றும் தமிழ்த் தேசியத்துவ சிந்தனைகள் நீண்ட காலமாகவே தேசியக் கொடியைப் பொறுத்து போட்டிக்குரியதாகவே இருந்து வந்துள்ளன. இக் கொடி இன்றைக்கு ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் தான் வடிவமைக்கப்பட்டது. அக் கொடியின் நடு மத்தியில் சிங்கத்தின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தமை இலங்கையில் சிங்கள இனமே மைய நிலை அந்தஸ்தினைக் கொண்டதாக இனங்காட்டப்படுவதனை உறுதி செய்வதாக சிறுபான்மை இன பிரதிநிதிகள் கொடியை வடிவமைத்த குழுனருக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். கணிசமான அளவிலான வாதாட்டங்களின் பேரில் நாட்டில் தமிழர்களும் முஸ்லிம்களும் இருப்பதனை அங்கீகரிக்கும் வகையில் கொடியின் ஒரு அந்தத்தில் (சிறுபான்மையினரையும் அங்கீகரிப்பதாக) இரண்டு செங்குத்து கோடுகளை சேர்த்து வரைய இணக்கம் காணப்பட்டது.
மே தின பேரணியின் போதும் சம்பந்தன் ஐக்கிய இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு மாகாண மட்டத்தில் அதிகாரங்கள் தேவையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புவதாக கூறியிருந்தார்கள். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நெடுங்கால கோரிக்கையாகும். இருந்தபோதிலும் சிங்கக் கொடியை உயர்த்தி ஏந்தியமை தொடர்பில் அவர் ஏன் அவ்வாறு செய்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மத்தியில் விவாதமும் விமர்சனங்களும் இடம்பெற்றன. சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற பிரதிநிதிகள் இச் சம்பவம் தொடர்பில் தமது அதிருப்தியினை தெரிவித்திருந்தனர்.
இவ்வாறு தமிழ்ச் சமூகம் இச் சம்பவம் தொடர்பில் கோபமுற்றதாக கூறப்பட்ட ஊடக அறிக்கைகளுக்கு பதிலளித்த போது அவர் தமது கட்சி இலங்கைத் தொழிலாளர்களுடன் கொண்டுள்ள கூட்டொருமையினை எடுத்துக் காட்டாவும் நாட்டில் தமிழ் சிங்கள மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காகவுமே அவ்வாறு செயற்பட்டதாகவும் விளக்கியிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மே தின பேரணியின் போது தான் நடந்து கொண்டமை பற்றியும் தனது நிலைப்பாடு பற்றியும் விளக்குகையில் தன்னை அவ்வாறு செயற்படுமாறு எவரும் வற்புறுத்தவில்லை என்பதனையும் எடுத்துக் கூறியிருந்தார்.
அச்சமூட்டல்:
நாட்டின் ஐக்கியத்தினை பலப்படுத்த உறுதி செய்யும் வகையில் தமது அர்ப்பணிப்பினை காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரது எதிர்மறையற்ற நடவடிக்கையின் அடிப்படையில் பொருத்தமான ஏற்பாடுகளை மேற்கொள்ள அரசாங்கம் இதுவரையிலும் எதுவித நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை துரதிர்ஷ்டவசமானதாகும். அரசாங்கத்தின் அங்கத்தவர்கள் அவருடைய நல்லெண்ணம் தொடர்பான சைகையினைப் பாராட்டி அவருடைய சைகை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் ஈழத்திற்கான கோரிக்கையை கைவிட்டுவிட்டதாகக் கூறி தமது அரசியல் சாதனைக்கு வலுவேற்றுவதில் ஆர்வங்காட்டியதுடன், அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு அவர் ஒத்துப் போவதனை எடுத்துக் காட்டும் முதல் சைகை என்றும் விளக்கிக் கொண்டனர்.
ஆனால் மறுபுறத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின பேரணியை நிகழ்த்தியமை அரசாங்கத்திற்கு எதிரான ஒரு சவால் என்றும் எண்ணுவதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக அன்றைய நிகழ்ச்சிகளை தம்மால் இயன்றளவுக்கு மதிப்புக் குறைவான முறையில் விமர்சித்து யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் தொகையில் மிகச் சிறிய அளவினரே அதில் கலந்து கொண்டதாகவும் அவர்கள் விமர்சித்திருந்தனர்.
இதுமாத்திரமன்றி அரசாங்கம் மேற்கொண்ட எதுவித பயனுமற்ற காரியம் இன்னொன்றும் உண்டு. சில அநாமதேயப் பேர்வழிகளைக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளினது கொடியை அந்த பேரணியின் போது அசைக்கச் செய்து அதனை தொலைக்காட்சியில் காட்டச் செய்ததாகும். இக் காட்சி அரச தொலைக்காட்சிகளில் மாத்திரமே காட்டப்பட்டதால் இது அரச பிரசார குழுவினரால் செய்யப்பட்ட சதியென சந்தேகப்படவும் இடமுண்டு.
அரசாங்கம் பயன்படுத்தும் பெருமளவினதான பாதுகாப்பும் படை பிரிவினர் இருக்கத்தக்கதாக தமிழீழ விடுதலைப் புலிக் கொடியை அசைத்தவர்களை இவ்வாறான சட்ட விரோத செயலில் ஈடுபட்டமைக்காக கைது செய்யாமையும் கூட இத்தகைய புலிக் கொடி நாடகம் உ ண்மையானது அல்ல என சந்தேகிக்க இடமளிக்கின்றது இவற்றிலிருந்து அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய அச்சத்தை நாட்டில் தொடர்ந்து தனது அரசியல் நோக்கங்களுக்காக பேணி வருகின்றது எனக் கூறுவது நியாயமானதாகவே தோன்றுகின்றது.
தேசிய ஒற்றுமை மற்றும் இறைமையினை பாதுகாப்பது என்பனவே யாவற்றிற்கும் மேலாக மதிக்க வேண்டியவை என்ற தேசியத்துவ உணர்வு மட்டுமே அரசாங்கம் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவுள்ள அரசியல் ஆதரவுக்கு உறுதியான ஆதாரமாக தென்படுகின்றது.
பெரும்பான்மையினமான சிங்கள மக்கள் மத்தியில் நாடு பிரிக்கப்படலாம் என்ற அச்ச உணர்வு நிலைத்திருக்கும் வகையில் அதுவும் குறிப்பாக நாட்டுப் பிரிவினை தொடர்பான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இப்போதைய அரசாங்கம் வெற்றியினை ஈட்டியுள்ளதால் அவர்கள் தொடர்ந்தும் மிகப் பெரியளவிலான பெரும்பான்மை மக்களது ஆதரவினை வைத்திருக்கப் போவது உறுதியாகவே காணப்படுகின்றது.
இத்தகைய பின்னணியிலிருந்து பார்க்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமது கட்சியின் வருடாந்த கூட்டத்தில் ஆற்றிய உரையானது பெரும்பான்மை சிங்கள வாக்காளர் மத்தியில் நிலவும் அச்சத்தினை அதிகரிக்கச் செய்யக் கூடும் என்பதனால் அரசாங்கம் தனது தேர்தல் தொகுதிகளில் கொண்டிருக்கும் பலமானது மேலும் அதிகரிக்கவே அது உதவுவதாக இருக்கும். அவர் தனது உரையில் ஐக்கியப்படுத்தப்பட்ட இலங்கையில் தமிழ் மக்கள் சுய நிர்ணய உரிமைகளுக்கு அருகதையானவர்கள் என்றும் அரசியல் அமைப்பு ஐக்கியப்படுத்தப்படாததாக (சுயநிர்ணய உரிமைகளுக்காக) உள்ள இலங்கையிலேயே அது சாத்தியமாகும் என்றும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர் இவ்வுரிமை தொடர்ந்தும் மறுக்கப்பட்டே வருமேயானால் அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிவாரியான சுய நிர்ணய உரிமைகளை கோரி நிற்க வேண்டி வரலாம் என்றும் கூறியுள்ளார்.
சிறிய விடயங்கள்
எதிர்க் கட்சித் தலைவருடன் இணைந்து இலங்கையின் தேசியக் கொடியை யாழ்ப்பாணத்தில் ஏந்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மட்டக்களப்பில் இடம்பெற்ற அவரது கட்சிக் கூட்டத்தில் தனது கட்சி மாற்று உபாயமாக பிரிவினையை ஆதரிக்கப்போவதான அணுகு முறையை மேற்கொள்ள வேண்டிய வரலாம் என ஏன் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பதே கேள்வியாக நிற்கின்றது.
அரசாங்கத்தில் உள்ள ஏனைய பாராளுமன்ற பிரதிநிதிகளைப் போன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தனது தேர்தல் தொகுதியை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதில் ஆர்வமாக இருப்பதாகவே தோன்றுகின்றது. வடக்கு, கிழக்கு பகுதி மக்களுக்கு இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைத்துவத்தின் மிதவாதப் போக்கினைக் கொண்ட அணுகு முறையினால் எதுவித நன்மையினையும் பெற்றுக் கொடுக்க முடியாது போயுள்ளது. இதனால் அவருடைய கட்சியிலுள்ள கூடிய தேசியத்துவ (தமிழ்) உணர்வுடன் செயற்படும் அங்கத்தவர்கள் அவரை ஒதுக்கித் தள்ளி கட்சியில் தமது முக்கியத்துவத்தினை அதிகரித்துக் கொள்வதுடன் மாத்திரமன்றி தலைவரை கட்சியை விட்டே வெளியேற்றி விடலாம் என்ற நிலைமையும் காணப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கூடியளவு (தமிழ்) தேசியத்துவம் மற்றும் பிரிவினை வாதத்துவ எண்ணம் கொண்ட தலைமைத்துவம் அரசாங்கத்தில் இடம்பெற இயன்றளவிலும் மென்மேலும் கடுமையாக முயற்சிக்கலாம். இனத்துவ ரீதியான (துவேஷ) முனைவாக்கம், தீவிரவாத போக்கினைக் கொண்ட அரசாங்கத் தரப்பினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் நன்மையை தருவதாக இருக்கலாம். ஆனால் அது நாட்டின் அனைத்து மக்களுக்கும் நன்மையைத் தரக் கூடிய வகையில் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக இருக்காது.
தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் உணர்வு பூர்வமானதும் அடையாளம் சார்ந்ததுமான முக்கியத்துவம் வாய்ந்த சில பிரச்சினைகள் நிலவுகின்றன. அவற்றை அரசாங்கம் விரைவில் தீர்த்து வைப்பதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை போன்ற மித வாதிகளைப் பலப்படுத்த முடியும். அவற்றில் காணாமல் போனவர்கள் பற்றியதும் அவர்கள் அரசாங்கத்தின் காவலில் உள்ளனரா என்பது பற்றியதுமாகும். அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள் அல்லது அவர்களுக்காக பணியாற்றினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை ஏதுமின்றி தடுத்து வைக்கப்பட்டவர்கள் பற்றிய பிரச்சினையும் அவ்வாறானதேயாகும். இவையாவும் ஒரு வகையான பிரச்சினையாகும்.
அடுத்து வடக்கிலும் கிழக்கிலும் பெருமளவு இராணுவத்தினர் நிலை கொண்டிருப்பதுடன் தொடர்பான பிரச்சினையாகும். அவர்கள் அவ்வாறு நிலை கொண்டிருப்பதால் மக்களுடைய சமூக நிகழ்ச்சிகளில் தலையிடுவதுடன் வியாபாரம் மீன் பிடித்தல் தொடர்பாக அனுமதி வழங்கும் போது சிங்கள வியாபாரிகளுக்கும் சிங்கள மீனவர்களுக்கும் முன்னுரிமை (சலுகைகள்) வழங்கும் பிரச்சினைகள் பற்றிய முறைப்பாடுகள் நிலவுகின்றன. பல தரப்பட்ட பெரும் பிரச்சினைகள் நிலவும் இக் கால கட்டத்தில் ஒப்பளவில் இவையாவும் சிறிய விடயங்கள் மட்டுமே ஆகும். ஆனால் அவை மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புபட்டுள்ளதுடன் தமக்கு சம சந்தர்ப்பம் வழங்கப்பட வில்லை என்ற மனக்குறையினை ஏற்படுத்துவதுமாக உள்ளன.
மேற்கூறிய ஒரு சில பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசியல் சீர்திருத்தம் தொடர்பான அங்கீகாரங்கள் எதுவும் தேவையில்லை. இவ்வாறான பிரச்சினைகளுக்கு எதிர்க் கட்சிகளது ஒத்துழைப்பு ஏதுமின்றியும் கூட தனது தீர்மானத்தின் அடிப்படையில் தீர்வுகளை வழங்கும் தகுதி இவ்வரசாங்கத்திற்கு உண்டு. இருந்த போதிலும் கூட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க இனமுரண்பாடுகளைத் தீர்க்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தனது ஆதரவினை வழங்க தான் தயாராக இருப்பதாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளார்.
எனவே மக்களது அன்றாட பிரச்சினைகளை விரைவாக தீர்த்து வைத்து அவர்களது மனக்குறைகளை போக்குவதன் மூலமாக மேலதிகமான சீர்திருத்தங்களை உருவாக்குவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்குத் தேவையான விவாதங்களை மேற்கொள்ள முடியும். இவற்றின் மூலம் எந்த ஒரு கட்டத்திலும் பிரிவினை வாதத்தினை பின்பற்றி அதற்காக பெருமளவு உயிர்களை பலி கொடுப்பது பற்றிய அரசியல் வன்முறைகள் பற்றி சிந்திக்காத சம்பந்தன் போன்ற தமிழ்த் தவைர்களை பலத்துடன் செயற்படச் செய்ய முடியும். யுத்தம் முடிந்து மூன்று வருடங்களின் பின்னர் தற்போது கிடைக்கக் கூடியதாயுள்ள சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி இன முரண்பாடுகளை தீர்ப்பதற்கு தேவையான வற்றில் முன்னேற்றம் அடையாதிருக்கும் இப்போதைய நிலையை நீக்கி ஆவன செய்ய வேண்டியது அவசியமாகும்.
தினக்குரல்
0 கருத்துரைகள் :
Post a Comment