யாழ். குடாநாட்டில் நிலைகொண்டுள்ள இராணுவம் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் அதிதீவிரமாக ஈடுபட்டுள்ளது என எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரித்த யாழ்.மாவட்ட இராணுவக்கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, அங்கு படை முகாம்களை அமைப்பதற்கென அரச காணிகளை இராணுவம் கையகப்படுத்தவுள்ளமையை ஒத்துக்கொண்டார்.
ஆனால் தனியார் காணிகளை சுவீகரிக்கும் திட்டம் இராணுவத்திடம் கிடையாது என்று உறுதியாகக் கூறினார். வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகம் தொடர் அழுத்தங்களைப் பிரயோகித்து வரும் இவ்வேளையில், யாழ். நகர்ப்புறங்களில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் விரைவில் முற்றாக அகற்றப்படும் என்ற விடயத்தையும் அவர் "சுடர் ஒளி'யிடம் தெரிவித்தார்.
அத்தோடு, சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடு உள்ளது என எழுந்துள்ள விமர்சனங்களையும் யாழ்.கட்டளைத் தளபதி திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தமிழ் மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அபகரித்துக்கொண்ட இலங்கை இராணுவம், தற்போது யாழ். மாவட்டத்திலும் நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது என்றும், இதில் முதற்கட்டமாக 61 ஏக்கர் நிலப்பரப்பை கையகப்படுத்துவதற்கு இராணுவம் திட்டம் தீட்டியுள்ளது என்றும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
நல்லூர், கோப்பாய், தெல்லிப்பளை ஆகிய மூன்று பிரதேச செயலர் பிரிவுகளிலும் இருந்து மாத்திரம் 61 ஏக்கர் நிலம் அபகரிக்கப்படவுள்ளது. இவற்றில் தனியாரின் உறுதிக்காணிகளும் உள்ளடங்குகின்றன என்று குடாநாட்டுப் பத்திரிகைகள் புள்ளிவிவரங்களுடன் செய்திகளை வெளியிட்டிருந்தன.
அதுமட்டுமன்றி, பிரதேசசபைகள், திணைக்களங்கள் மற்றும் முக்கியமான சில அலுவலகங்கள் ஆகியவற்றுக்குச் சொந்தமான காணிகளை அரச காணிகள் என்ற போர்வையில் சுவீகரிப்பதற்கும் தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் கூறப்படுகின்றது.
யாழில் நிலைகொண்டுள்ள இராணுவம் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளது என உறுதியான தகவல்கள் வெளியாகியதையடுத்து யாழ்.மக்கள் பெரும் பதற்றமடைந்துள்ளனர். தங்களின் நிலங்களும் அபகரிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்ச உணர்வுடனேயே அங்கு மக்கள் வாழ்கின்றனர் என அறியமுடிகின்றது.
அதேவேளை, நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டிய இத்தருணத்தில் படை நடவடிக்கைகளை வடக்கில் பலப்படுத்துவது அநீதியான செயல் என்றும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
யாழ். குடாநாட்டில் இராணுவம் நில அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றது எனக் கூறப்படும் தகவல்கள்மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளன.
இந்நிலையில், யாழ். குடாநாட்டில் நடைபெறுவது என்ன? இராணுவம் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் உண்மைதானா என்பவை உட்பட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதியிடம் "சுடர் ஒளி' வினவியது.
"யாழ். குடாநாட்டில் இராணுவம் நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது எனக் கூறப்படுகின்றதே என நாம் எழுப்பிய கேள்விக்கு,
"இல்லை....இல்லை... இராணுவம் நில அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை. அவ்வாறானதொரு தேவைப்பாடும் எமக்குக் கிடையாது. இராணுவம் வீடுகள் போன்ற இடங்களிலேயே தற்போது தங்கியுள்ளது.
எனவே, முகாம்களை அமைப்பதற்கு நாங்கள் சில அரச காணிகளையே இனங்கண்டுள்ளோம். படை முகாம்கள் அமைக்கப்படும் என்பதன் அர்த்தம் படை நடவடிக்கைகளைப் பலப்படுத்துவது என்பது அர்த்தமில்லை. முகாம்களை அமைக்காவிட்டால் இராணுவத்தினர் எங்கு தங்குவது?
யாழ். குடாநாட்டில் நகர்ப்புறங்களில் உள்ள படை முகாம்கள் விரைவில் அகற்றப்படும். இராணுவம் தங்குவதற்கான தளங்களை அமைப்பதற்கே சில அரச காணிகளை நாம் இனங்கண்டுள்ளோம். இதற்குப் பெயர் அபகரிப்பு நடவடிக்கை அல்ல எனப் பதிலளித்தார் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க.
இல்லை....மேஜர் ஜெனரல், "இராணுவம் தனியார் காணிகளையும் அபகரிப்பதற்குத் திட்டமிட்டுள்ளது என்றும், அதுகுறித்து புள்ளி விவரங்களுடன் செய்திகள் வெளியாகியிருக்கின்றனவே'' என்றும் நாம் எழுப்பிய இன்னுமொரு கேள்விக்கு,
""இல்லை...இல்லை. நாம் தனியார் காணிகளை அபகரிக்கவில்லை; சுவீகரிக்கவும் மாட்டோம். அவ்வாறு எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை'' எனப் பதிலளித்தார் யாழ். கட்டளைத்தளபதி ஹத்துருசிங்க.
அதேவேளை, யாழ். குடாநாட்டில் நிலைகொண்டுள்ள இராணுவம் 61 ஏக்கர் நிலப்பரப்பை அபகரிக்கும் முயற்சியில் தற்போதே இறங்கிவிட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி நேற்று "சுடர் ஒளி'யிடம் தெரிவித்தார். இது விடயம் தொடர்பில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அரசிடம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்கும் எண்ணம் கிடையாது. அதன் காரணமாகத்தான் இராணுவத்தை ஏவிவிடுகின்றது என்றும் அரசியல் தீர்வுப் பேச்சுகளை ஒருபுறம் வைத்துவிட்டு எமது இனத்தின் அடையாளங்கள், எமது நிலங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான தேவைப்பாடு தற்போது எமக்கு ஏற்பட்டுள்ளது என்றும் விநாயகமூர்த்தி எம்.பி. சுட்டிக்காட்டினார்.
மேலும், தமிழர் விடயங்களை சுட்டிக்காட்டும்போது ஆளும் தரப்பு உறுப்பினர்கள் நாடாளுமன்றில் இருப்பதில்லை. ஆசனங்களே மிஞ்சியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்க, யாழ்ப்பாணம், நல்லூர், தெல்லிப்பளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் 61 ஏக்கர் நிலத்தை கபளீகரம் செய்வதற்கு முயன்றதுபோல தென்மராட்சிப் பிரதேசத்திலும் ஏறத்தாள 300 ஏக்கர் நிலத்தை அபகரிப்பதற்கு இராணுவம் முயன்று வருகின்றது என பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், இதுகுறித்து உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
உதயன்
0 கருத்துரைகள் :
Post a Comment