புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களால் உடைந்துபோன மகிந்த ராஜபக்ஸவின் கனவு...!


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கடந்தவாரம் பிரித்தானியாவுக்கு வந்து சென்ற பயணம் - மற்றுமொரு கசப்பான பயணமாக அமைந்து விட்டது. எந்த நோக்கம் கருதி அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தாலும், அது ஈடேறியதாகக் கருதிக்கொள்ள முடியாது. ஏனென்றால், இந்தப் பயணம் இலங்கை அரசுக்கும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கும் கடுமையான அழுத்தங்களைக் கொடுப்பதாக அமைந்து விட்டது. 2010 டிசம்பரில் ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றுவதற்காகச் சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்புப் போராட்டங்களால், அந்த உரையை நிகழ்த்த முடியாமல் திரும்பி வர நேர்ந்தது. 

அப்போதும் அவர், பிரித்தானிய அரசின் அதிகாரபூர்வ விருந்தினராக அல்லாமல்- ஒரு தனிப்பட்ட பயணமாகவே லண்டன் சென்றிருந்தார். தமிழர்களின் எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து, உரையாற்றுவதற்கு அழைப்பு விடுத்திருந்த ஒக்ஸ்போர்ட் யூனியனே, அவரது உரையை ரத்துச் செய்தது. அதுபோலத் தான் இம்முறையும் நடந்தேறியுள்ளது. 

கொமன்வெல்த் செயலரின் அழைப்பின் பேரில் லண்டன் சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, கடந்த புதன்கிழமை காலை மான்சன் ஹவுசில் உரையாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவரோடு நமீபிய ஜனாதிபதியும், மால்டா பிரதமரும், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரும் கூட அன்றைய காலை அமர்வில் உரையாற்றுவதாக இருந்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ லண்டன் சென்று இறங்க முன்னரே வெடித்த தமிழர்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடையத் தொடங்கின. அவரது மான்சன் ஹவுஸ் உரையைத் தடுக்கும் வகையில் உச்சக்கட்டப் போராட்டத்துக்கு ஏற்பாடுகள் நடந்தன. 

இந்தநிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை உரையாற்ற ஒழுங்கு செய்திருந்த கொமன்வெல்த் வர்த்தக சபையே, செவ்வாய் மாலையில் அதை நிறுத்தியது. தனியே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் உரையை ரத்துச் செய்யாமல், ஒட்டுமொத்த காலை அமர்வுகளையுமே ரத்துச் செய்தது. இதனால், லண்டனில் உரையாற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் கனவு மீண்டும் தகர்ந்து போனது. இந்த உரை ரத்துச் செய்யப்பட்டதானது முகத்தில் கரிபூசியது போன்று அமைந்து விட்டது. 

ஆனால் ஒரு விடயத்தில் அரசாங்கம் ஆறுதலடையலாம். 

தனியே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் உரையை மட்டும் அவர்கள் ரத்துச் செய்யவில்லை. ஒட்டுமொத்த காலை அமர்வே நிகழ்வுமே ரத்துச் செய்யப்பட்டது. அவ்வாறு செய்யப்படாமல், தனியே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் உரையை மட்டும் நிறுத்தியிருந்தால், அது அவரை இன்னும் அவமானப்படுத்தியதாக அமைந்திருக்கும். இந்த உரை நிறுத்தப்பட்டதன் பின்னணியில் லண்டன் மாநகர நிர்வாகமும் இருந்துள்ளது. மத்திய லண்டனில் இயல்புநிலையை குழப்ப வேண்டாம் என்று கொமன்வெல்த் வர்த்தக சபைக்கு லண்டன் நகர நிர்வாகம் ஆலோசனை கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

புலம்பெயர் தமிழர்கள் அனைவரையும் புலிகள் என்ற கோணத்தில் பார்க்கும் அரசாங்கம், அவர்களுக்குச் சவால் விடும் வகையிலேயே மான்சன் ஹவுஸ் உரையை கருதியது. ஆனால் புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்புப் போராட்டங்களின் முன்பாக அந்த உரையை ஆற்ற முடியாத பரிதாப நிலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு ஏற்பட்டது. அவரது இந்தப் பயணத்தின் மூலம் பல பின்னடைவுகளை அரசாங்கம் வெளிச்சம் போட்டுக் காட்டியது தான் மிச்சம். இதில் முக்கியமானது, லண்டனில் உரையாற்றும் கனவு- புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களால் உடைந்து போனதாகும். 

லண்டனில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் சுதந்திரமாகச் சென்றுச் தரையிறங்கவோ, நடமாடவோ முடியாதபடி போராட்டங்கள் நடந்தன. இதனால் அவர் முக்கிய நிகழ்வுகள் தவிர்ந்த நேரங்களில் ஹில்டன் விடுதிக்குள்ளேயே முடங்க வேண்டியிருந்தது. அதைவிட, ஹீத்ரோ விமான நிலையத்தில் நடைபெறும் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு முகம் கொடுப்பதைத் தவிர்ப்பதற்காக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கொழும்பில் இருந்து புறப்படும் நேரமே மாற்றியமைக்கப்பட்டது.  

ஜூன் 3ம் திகதி பிற்பகல் 1.05 மணிக்கு லண்டன் புறப்படுவதாக இருந்த அவர், அன்றிரவே இரகசியமாகப் புறப்பட்டுச் சென்றார். இது லண்டனில் மட்டுமல்ல, கொழும்பின் மீதும் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்கள் அழுத்தம் கொடுக்கும் நிலையில் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது..அடுத்து, கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா மால்பரோ ஹவுசில் ஒழுங்கு செய்திருந்த விருந்துக்குக் கூட, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால், இலங்கையின் தேசியக்கொடியை துறந்து விட்டே செல்ல வேண்டியிருந்தது. நாட்டின் தலைவர் ஒருவர் தனது வாகனத்தில் இருந்த தேசியக்கொடியை அகற்றிவிட்டு இரகசியமாக விருந்துக்குச் சென்ற முதல் சந்தர்ப்பமாக இது இருக்கக் கூடும். பண்டைய வரலாற்றுப் போர்களிலே, தமது தேர்களின் மீதிருக்கும் கொடிகளை இழக்கும் வீரர்கள், அரசர்கள் மதிக்கப்படுவதில்லை. 

இது நவீன காலத்துக்கும் பொருந்தக் கூடியதே. ஆனால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால், தன்னை இலங்கையின் தலைவர் என்று வெளிப்படுத்தும் வகையில் - தேசியக்கொடியைப் பறக்க விட்டுச் செல்ல முடியாது போனது.ஏனைய 53 கொமன்வெல்த் நாடுகளின் அரச தலைவர்களும், பிரதிநிதிகளும் தமது நாடுகளின் தேசியக்கொடிகள் கம்பீரமாகப் பறக்கும் வாகனங்களில் சென்று மால்பரோ ஹவுசில் இறங்க - இலங்கை ஜனாதிபதி மட்டும் எதுவுமேயற்ற வாகனத்தில் சென்று இறங்கினார். 

இலங்கையின் தேசியக்கொடியான சிங்கக்கொடியை சிங்கள இனத்தின் பெருமைக்குரிய சின்னமாகவே சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் கருதுகின்றன. ஆனால், சிங்கள,பௌத்த பேரினவாத சக்திகளால் மிகச்சிறந்த தலைவராகப் போற்றப்படும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, சிங்கக்கொடி அகற்றப்பட்ட வாகனத்தில் விருந்துக்குச் சென்றதை அவர்களால் அவ்வளவு இலகுவாக ஜீரணித்துக் கொள்ள முடியாது. 

வரலாற்றில் இதை அவர்கள் ஒரு கறைபடிந்த சம்பவமாகவே பதிவு செய்யவும் கூடும். அடுத்து, பிரித்தானியாவில் நான்கு நாட்கள் தங்கியிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன், எந்தவொரு அதிகாரபூர்வ சந்திப்பையும் வெளிவிவகார அமைச்சினால் ஒழுங்கு செய்ய முடியாது போனது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் வருகையை பிரித்தானிய அரசாங்கம் கண்டுகொள்ளவேயில்லை. 

மகாராணிக்கு வழங்கப்பட்ட விருந்துபசாரத்தில் பங்கேற்ற போது தான், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனுக்கு அருகே நின்று படம் எடுத்துக் கொண்டார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ. ஆனால் இந்த விருந்தின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனுடன் பேச்சு நடத்தியதாக அரசாங்கம் தகவல் வெளியிட்டது.எனினும் பிரித்தானிய அரசாங்கம் இதனை உறுதி செய்யவில்லை. 

மகாராணியின் வைரவிழா நிகழ்வுக்கு பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்தே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தகவல் வெளியிட்டிருந்தது. ஆனால், உண்மையில் அந்த அழைப்பை விடுத்தது கொமன்வெல்த் செயலகம் தான். அதனால் தான் அவரால் பிரித்தானிய அரசின் அதிகாரபூர்வ விருந்தினர் என்று அந்தஸ்து கிடைக்காமல் போனது. இந்த விருந்துக்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு அழைப்பு விடுக்கலாமா – இல்லையா என்று பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கும் கொமன்வெல்த் செயலகத்துக்கும் இடையில் நீண்ட விவாதம் நடந்ததாகவும் தகவல். அதற்குக் காரணம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பயணத்தை பிரித்தானியா வரவேற்கவில்லை- விரும்பவில்லை என்பதே. 

கொமன்வெல்த் செயலரின் அழைப்பில் வந்திருந்தாலும் கூட, தமது நாட்டுக்குப் பயணம் மேற்கொண்ட ஏனைய நாடுகளின் தலைவர்களை விடவும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பில் பிரித்தானியா கூடுதல் அக்கறை காண்பித்திருந்தது. அதேவேளை அவருக்குத் தமிழர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவும் முழுமையான சுதந்திரத்தை வழங்கியிருந்தது.ஒருவகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை, நெருக்கடிக்குள் தள்ளுவதற்கான பிரித்தானியாவின் உத்தியாகவும் இதனைக் கருதலாம்.

எவ்வாறாயினும் இந்தப் பயணத்தின் மூலம் பிரித்தானியாவுக்குள் இனிமேல் அடிஎடுத்து வைக்க முடியாது என்ற கருத்தை உடைப்பதில் மட்டும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ வெற்றி பெற்றுள்ளார். ஒரு நாட்டின் ஜனாதிபதியாக - உலகின் எந்த மூலைக்கும் சென்று வருவதற்கு உள்ள இராஜதந்திரப் பாதுகாப்பு – அவரது இந்த வெற்றிக்குக் கைகொடுத்துள்ளது. ஆனால், ஒரு நாட்டின் தலைவராக - எத்தகைய இராஜதந்திரப் பாதுகாப்புடன் சென்றாலும் கூட, அவையெல்லாம் கௌரவமானதும், மதிப்புமிக்கதுமான பயணங்களாக அமைய முடியாது என்பதை அவரது இந்த பிரித்தானியப் பயணம் எடுத்துக் காட்டியுள்ளது.

- இன்போதமிழ் குழுமம் -
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment