விவாதங்களில் உருளும் தமிழீழக் கோரிக்கை


தமிழீழக் கோரிக்கை என்பது கைதட்டல், விசிலடிப்புகள் மத்தியில் உணர்ச்சிவசப்பட்டு வெளியிடப்படும் பிரகடனமோ அல்லது கடந்த தேர்தலின் போது தமிழ் மக்கள் தமிழீழக் கோரிக்கைக்கு ஆணை வழங்கவில்லை எனக் கூறி மேற்கொள்ளும் பிரகடனமோ அல்ல. அது இலங்கையில் தமிழ் மக்கள் தமது நியாயபூர்வமான உரிமைகளுக்காகப் போராடிப் பெற்ற அனுபவங்கள் மூலமாக உருவான ஒரு அறிவுபூர்வமான கோரிக்கையாகும். இக்கோரிக்கை தமிழீழ விடுதலைப்புலிகளின் இலட்சியமாக விளங்கிய காரணத்தால் அவ்வமைப்பு சிதைக்கப்பட்டதுடன் அந்தக் கோரிக்கைகயும் அர்த்தமற்றுப் போய் விட்டதாக ஒரு மயக்கத்தை ஏற்படுத்த சில சக்திகள் முனைகின்றனர்.

அப்படியான முயற்சிகள் வரலாற்றை நிராகரிக்கும் ஒரு அப்பட்டமான கபடத்தனமாகும். அது மட்டுமன்றி சந்தர்ப்பவாத அரசியலில் சிக்கி தமிழ் மக்களின் தேசியம், சுயநிர்ணயம் என்பவற்றை விலைபேசும் படுமோசமான துரோகமாகும். இலங்கைத் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை மறைமுகமாக நிராகரிக்கும் ஒரு எதிர்மறைப் போக்காகும்.

1956ம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியின் தலைமையில் சாத்வீகப் போராட்டங்களை நடத்தினர். அதன் பலனாக 1957ல் பண்டாசெல்வா ஒப்பந்தம் கைச்சாத்தானது. ஆனால் 1958ல் ஜே.ஆர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட கண்டி யாத்திரை, பிரதமர் வாசஸ்தலத்தின் முன் பிக்குகள் நடத்திய சத்தியாக்கிரகம் என்பன காரணமாக பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது.

அது இன அழிப்பு நடவடிக்கைகள் மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன. சொத்துக்கள் சூறையாடப்பட்டன. அன்று தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைகளுக்குச் சிங்கள இனவெறியர்கள் குருதி குடிக்கும் வன்முறைகள் மூலம் பதில் வழங்கினர்.

1960ம் ஆண்டு மார்ச் மாதத் தேர்தலின் போது திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவுடன் மேற்கொண்ட ஒரு உடன்பாட்டின் அடிப்படையில் ஆட்சியமைக்க தமிழரசுக் கட்சி இணக்கம் கண்டது.

ஆனால், அன்றைய மகாதேசாதிபதி சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஆட்சியமைக்க அனுமதிக்காது மீண்டும் தேர்தலை நடாத்தினர். 1960 யூலையில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த திருமதி சிறிமாவோ தமிழ் மக்களின் கோரிக்கைகளைத் தூக்கி எறிந்து விட்டார்.

1965ல் டட்லி செல்வா ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ் என்பன ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைக்க ஆதரவு வழங்கின. நான்கரை ஆண்டுகள் இழுத்துப் பறித்து எவ்வித பயனுமற்ற நிலையில் தமிழரசுக் கட்சி அரசை விட்டு வெளியேறியது.

1971ல் ஆட்சியமைத்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி 1972ம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்டம், கல்வியில் தரப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை மேலும் மேலும் பறித்தது.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் 1950 தொடக்கம் 1970 வரையான காலத்தில் பெற்றுக் கொண்ட கசப்பான அனுபவங்கள் எந்த ஒரு சிங்கள ஆட்சியாளர்களும் தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகளை வழங்கப் போவதில்லை என்பது தான். எனவே தான் தமிழ் மக்கள் பிரிந்து போவதைத் தவிர வேறு எந்த வழியுமில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.

அது ஒரு எழுந்தமானமான முடிவல்ல. இருபது வருட அனுபவத்தில் கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து பெறப்பட்ட தவிர்க்க முடியாத தீர்மானம். அவ்வகையில் தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி 1976ல் நடத்திய வட்டுக்கோட்டை மாநாட்டில் தமிழீழக் கோரிக்கையை முதல் முதலாக முன்வைத்தது. 1977ல் இடம்பெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் 90 வீதத்திற்கு மேலான வாக்குகளை வழங்கித் தமிழீழக் கோரிக்கைக்கு ஆணை வழங்கினர்.

இது என்றுமே அழிக்க முடியாத ஒரு வரலாறு. அது மட்டுமன்றி 2005ல் இடம்பெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும் தமிழ் மக்கள் தமிழீழக் கோரிக்கைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆணை வழங்கினர்.எனவே, தமிழீழக் கோரிக்கை என்பது தமிழ் மக்களால் எப்போதோ ஆணை வழங்கப்பட்ட ஒரு ஜீவாதாரக் கோரிக்கை என்பது ஆணித்தரமானதும் அசைக்க முடியாததுமாகும்.

இந்நிலையில் ஒரு புனிதமான அடிப்படையான தமிழ் மக்களின் கோரிக்கை இன்று சில அரசியல் வாதிகளால் சந்தர்ப்பவாத அடிப்படையில் உருட்டியெடுக்கப்படுவது தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளவோ பொறுத்துக் கொள்ளவோ முடியாத விடயமாகும். அண்மையில் தமிழ் நாட்டில் இடம்பெற்ற தி.மு.க வின் கூட்டத்தில் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தனித் தமிழ் ஈழமே ஒரே தீர்வு என முடிவெடுக்கப்பட்டது. அது மட்டுமன்றி தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி தான் தமிழீழம் அமைக்கப்படுவதைக் கண்ட பிறகே கண்களை மூடுவேன் எனச் சூளுரைத்துள்ளார்.
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் உச்சகட்டப் போர் நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் ஒரு போர் நிறுத்தத்தை வலியுறுத்திய போது தமிழகமே திரண்டு இலங்கைத் தமிழ் மக்களுக்காகப் பொங்கியெழுந்த நிலையில் பதவிகள் ராஜினாமா என்றும் உண்ணாவிரதம் எனவும் ஏமாற்று நாடகங்களை அரங்கேற்றியவர் கருணாநிதி அவர்கள். அக்காலப் பகுதியில் இவர் நேர்மையான முறையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் ஒரு போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி விடுதலைப் புலிகளை அழிவிலிருந்து பாதுகாத்திருக்கலாம். ஏராளமான தமிழ் மக்களின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம். தமிழீழத்தை அடையக் கூடிய வலிமையும், நேர்மையும் விடுதலைப்புலிகளிடம் இருந்தன என்பதை எவருமே மறுதலித்து விட முடியாது.

இன்று அவ்வமைப்பு முற்றாகவே சிதைக்கப்பட்ட பின்பு கலைஞருக்கு ஏற்பட்டது காலங்கடந்த ஞானம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. எனினும், இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக கலைஞர் மத்திய அரசுக்கு நேர்மையாக அழுத்தம் கொடுப்பாரானால் அது பயனுள்ளதாக அமையும். எனவே கலைஞரின் தமிழீழச் சூளுரை தொடர்பாக நாம் பெரிதாக விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் அது நேர்மையானதாக இருக்க வேண்டும் என்பதே எமது விருப்பம்.

அதே வேளையில் அண்மையில் யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மன்றத்தில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தரங்கு ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் உரையாற்றும் போது தமிழீழக் கோரிக்கை பற்றி அவர் வெளியிட்ட கருத்துக்களை நாம் அலட்சியப்படுத்தி விட முடியாது.


இதில் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் கலந்து கொண்டு உரையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.அங்கு நாடாளுமன்ற உறுப்பினர் உரையாற்றும் போது தமிழ் மக்கள் தமிழீழம் கோரவில்லை எனவும் அதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தனிநாடு கேட்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். அது மட்டுமன்றி கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலோ உள்ளுராட்சி சபைத் தேர்தலிலோ தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து மக்களிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆணை கோரவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

ஜனநாயக வழிமுறையில் தனிநாடு பெற முடியாது என்பது உலக வரலாறு கூறும் உண்மை. ஆயுதப் போராட்டங்கள் முனைப்படைந்து வெற்றியை நெருங்கும் நிலையிலேயே ஐ.நா.வோ அல்லது வல்லரசுகளோ தலையிட்டு பொதுசன வாக்கெடுப்பின் மூலம் தனிநாட்டை உருவாக்குவது என்பது தான் உலகம் சந்தித்த அனுபவம். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக வழியில் மட்டும் நம்பிக்கை வைத்திருக்கிறது என்ற வகையில் அது தனிநாடு கோருவதில் அர்த்தமில்லை.

ஆனால, தமிழ் மக்கள் தனிநாடு கோரவில்லை என்றும் அதற்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கவில்லை எனவும் கூற சுமந்திரனுக்கு என்ன உரிமை இருக்கிறது?தமிழ் மக்கள் 1977ல் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் 2005ல் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் தங்கள் வாக்குகளை அளித்தனர். தமிழீழக் கோரிக்கை என்பது எவரின் கற்பனையில் உதித்ததோ அல்லது ஒரு கனவில் உருவானதோ அல்ல. தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட அனுபவங்களிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற ஒரு கோரிக்கை. வரலாறு என்பது பின்பக்கமாகச் சுற்றுவதில்லை என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழீழக் கோரிக்கை என்பது இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களின் மரணத்தில; முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளின் உயிர்க் கொடையில், பல்லாயிரம் கோடி சொத்தழிவில் எத்தனையோ இடப்பெயர்வு இடர்களில் புடம் போடப்பட்டு சுடர்விடும் ஒரு புனிதமான கோரிக்கை. அது சிந்தப்பட்ட குருதியில் செழித்து வளர்ந்தது.
அதைக் கொச்சைப்படுத்த எந்த ஒரு அரசியல்வாதிக்கும் உரிமை இல்லை. இன்று அது சாத்தியமில்லாமல் இருக்கலாம். அதற்குத் தலைமை தாங்கும் ஆற்றல் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லாமல் இருக்கலாம். அதற்காக எவரும் அதை நிராகரித்து விட முடியாது.ஆனால் இங்கு ஏன் இந்தக் கருத்து முன் வைக்கப்பட்டது என்ற கேள்வி தான் முக்கியமானது. இது அங்கு யாருக்காகக் கூறப்பட்டது என்பதும் சிந்திக்க வேண்டியது தான்.

ஜனநாயக அரசியலில் ராஜதந்திரம் என்ற பாதையில் கால் வைத்து சரணடைவு அரசியலில் சிக்கிக் கொண்டவர்கள் நிறையவே உண்டு. தமிழரசுக் கட்சியின் தளபதி என அழைக்கப்பட்ட மறைந்த அமிர்தலிங்கம் அவர்கள் ஒரு சிறந்த உதாரணமாகும்.அப்படி ஒரு சிக்கலில் தேசியக் கூட்டமைப்பு சிக்கி விடக் கூடாது என்பதுதான் தமிழ் மக்களின் ஆதங்கம்.

கடந்த மேதினத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இலங்கைத் தேசியக் கொடியை ஏந்தி விட்டு பின்பு அதை நியாயப்படுத்த முயன்றமை போன்ற சில சம்பவங்கள் தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பான சில சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இன்றுவரை இலங்கைத் தமிழ் மக்கள் இலங்கையின் தேசிய இனம் என ஆட்சியாளர்களாலோ எந்த ஒரு அரசாங்கத்தாலோ ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அப்படியான நிலையில் நாம் இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றுக் கொள்ள முடியுமா? அப்படியானால் ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற கொள்கையை சம்பந்தர் அவர்கள் ஏற்கிறாரா?

எப்படியிருந்த போதிலும் தமிழீழக் கோரிக்கை என்பது கலைஞர் கருணாநிதி நினைப்பது போல் சூளுரைக்கும் சங்கதியுமல்ல. சுமந்திரன் நினைப்பது போல் நிராகரிக்கப்படக் கூடிய கருதுகோளும் அல்ல. இது செந்நீரும் கண்ணீரும் சொரிந்து வளர்ந்த ஜீவத் துடிப்புள்ள தமிழ் மக்களின் இதயநாதம். அதை எவராவது கிள்ளுக்கீரையாக நினைத்தால் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் தூக்கி வீசப்படுவது நிச்சயம்.

–தமிழீழத்திலிருந்து ஈஸ்வரன்-


Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment