கிழக்கு நோக்கிய படையெடுப்பு


கிழக்கிலங்கை நோக்கி அமைச்சர் பட்டாளம் படை நடக்க ஆரம்பித்து விட்டது. கிழக்கின் உதயத்தைப் பார்வையிடவோ அபிவிருத்தியை மதிப்பிடுவதற்காகவோ அல்ல. வரப்போகும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான முன் தயாரிப்பிற்காகவேயாகும். கிழக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னமும் ஒரு வருட காலம் இருக்கிறது. அப்படி இருந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு, அங்கு தேர்தல் நடத்த அவசரப்படுகிறது. ஜனநாயகம் என்பதும் அதன் கீழான விதிமுறைகள், நெறிமுறைகள் என்பன யாவும் வெறும் வார்த்தை ஜாலங்கள் என்பதை யாராவது நேரில் காண வேண்டுமானால் அதனை மஹிந்த சிந்தனையின் வழிகாட்டலில் கண்டுகொள்ளலாம்.
 
"காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' என்பது முதுமொழி. "வாய்ப்புள்ள போது தேர்தலை நடத்தி வெற்றி பெறு' என்பது மஹிந்த மொழி. அதற் கிணங்கவே, கிழக்கு மாகாணத் தேர்தல் நடத் தப்பட இருக்கிறது. அதன் முதல் காட்சியே அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் என்போரது கிழக்கிற்கான பயணச் சுற்றுலாவாகும். அதன் மூலம் கிழக்கின் நிலைமைகளையும் மக்களின் மன நிலைகளையும் நாடிபிடித்துப் பார்ப்பதும் அதன் நோக்கமாகும்.
 
பல நூற்றாண்டுகளாக கிழக்கு மக்கள் அந்தப் பிரதேசத்தின் வளங்களைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்திருக்கிறார்கள். தமது மொழி, மதப்பண்பாட்டின் தனித்துவங்களைப் பாதுகாத்து, வளப்படுத்தி விவசாயமும் மீன்பிடியும் ஏனைய தொழில்களும் வியாபாரங்களும் செய்து வந்த தமிழ் முஸ்லிம் மக்கள் தம்முள் வேறுபாடுகள் இன்றி ஒற்றுமையுணர்வுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
 
அதனை அவர்களது இன்றைய வாழ்விடங்கள் தொட்டு பழைமை வாய்ந்த பாரம்பரிய பிரதேசங்களும் பறைசாற்றி நிற்கின்றன. மதத்தாலும் அதன் பண்பாட்டம்சங்களாலும் தமிழ் முஸ்லிம் மக்கள் தனித்தன்மைகளைக் கொண்டிருப்பினும் மொழியால் ஒன்றுபட்டவர்களாகவும் பண்பாட்டுக் கூறுகளால் கொடுத்து வாங்கியவர்களாகவும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
 
அத்தகைய கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் பௌத்த சிங்களப் பேரினவாத உள்நோக்குடன் கொண்டு வரப்பட்டதோ, அன்றிலிருந்தே நாசங்களுக்கான விதைகள் விதைக்கப்பட்டன. நிலவளங்களும் நீர்வளமும் மிக்க கிழக்கு தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமுரிய தனித்துவ மாகாணமாக இருப்பதை எந்தவொரு பேரினவாத ஆட்சியினரும் விரும்பவில்லை. அதன் வழியில் திட்டமிட்ட குடியேற்றம் என்பதன் கீழ் கிழக்கில் மூன்றாவது இன மத மக்களாகச் சிங்கள விவசாயிகளுக்கு நிலங்களும் சலுகைகளும் வழங்கப்பட்டன. 
 
அதன் மூலம் சுதந்திரம் என்பதற்குப் பின்னரான காலப்பகுதியில் இரண்டு இன மக்களாக வாழ்ந்துஒரே மொழி பேசித் தமது பாரம்பரிய பிரதேசமாகக் கொண்டிருந்த கிழக்கு படிப்படியாக மூவின மக்களது பிரதேசமாக மாற்றப்ட்டது.
 
அத்துடன் அது பெருமையாகவும் சாதனையாகவும் காட்டப்பட்டது. இயல்பாகவே மக்கள் வளமுள்ள பிரதேசங்களை நாடிச்சென்று தமது வாழ்விடங்களாக்கிக் கொள்வதற்கும் திட்டமிட்டு பேரினவாத நோக்கில் வலிந்து குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. அதுமட்டுமன்றி, இன்றும் இந்தத் திட்டமிட்ட குடியேற்றமும் பாரம்பரிய இனங்களை அப்புறப்படுத்தி இனச் சுத்திகரிப்புப் பிரதேசங்களாக மாற்றுவதும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
 
அன்று கல்லோயாத் திட்டம், பதவியாத் திட்டம் என்பன விரிவடைந்ததுடன் திருகோண மலையை பௌத்த சிங்கள மாவட்டமாக்கும் முயற்சிகள் நடந்தேறின. இன்று சம்பூர், கண்முன்னே இடம்பெறும் தமிழ் மக்களது நில அபகரிப்பாகக் காணப்படுகிறது. 
 
இதனை இந்திய அனல் மின் நிலைய உருவாக்கம் என்பதன் மறைவில் அரசு அரங்கேற்றி வருகிறது. மட்டக்களப்பு, கிழக்கின் நடுமையப் பகுதியாக மட்டுமன்றி விவசாய வளத்தாலும் ஏனைய தொழில் துறைகளாலும் அழகான கடற்கரைகளாலும் காட்சி தரும் பிரதேசமாகக் காணப்படுகிறது. இந்த மாவட்டத்தில் தமிழ்ர்கள் கூடுதலாகவும் முஸ்லிம் மக்கள் அதற்கு அடுத்ததாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
 
அதேபோன்று அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களும் தமிழர்களும் அதிகளவாக வாழ்ந்து வந்த போதிலும் இன்று அது சிங்கள மக்களின் மாவட்டம் என்பதாக மாற்றப்பட்டுள்ளது. எந்த இன,மொழி, மத, மக்கள் எங்கு வாழ்ந்தாலும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு சமத்துவமாகவும் ஐக்கியத்துடனும் வாழ்ந்தால் பிரச்சினைகள் எழ இடம் ஏற்படாது.
 
ஆனால், ஆதிக்க நோக்கிலும் இன, மத, மேலாதிக்க நிலையிலும் விடயங்கள் முன்னெடுக்கப்படும்போதே பிரச்சினைகளும் பிளவுகளும் ஏற்படுகின்றன. இவற்றை சாதாரண மக்கள் உருவாக்குவதில்லை. அதிகாரம், பணம், பதவி, சொத்து, சுகம் தேட நிற்போரே தத்தமது குறுகிய அரசியல் நிலைப்பாட்டின் ஊடாக முன் னெடுக்கிறார்கள். மக்கள்தான் பாவம். அவர்கள் பலிகொள்ளப்படுகின்றார்கள்.
 
இவ்வாறு நோக்கும் போதே கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் என்ன நோக்கத்திற்காக முன்னெடுக்கப்படுகிறது என்பது அடிப்படையில் விளங்கிக் கொள்ளப்பட வேண்டும். அங்கு மூவின மக்களையும் ஒற்றுமையாகவும், சமத்துவமாகவும் வாழவைப்பதற்கும் போரினால்பட்ட காயங்களை ஆறவைத்து வாழவைப்பதற்கும் மாகாணசபைத் தேர்தலும் அதன் மூலமான நிர்வாகமும் என்ற நிலை இருப்பின் பரவாயில்லை என்றாவது கூறலாம். 
 
ஆனால், அப்படியில்லை. ஏற்கனவே முன்னாள் புலிப் போராளி மட்டுமன்றி, தளபதிகளில் ஒருவரான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவரே முதலமைச்சர். அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் பிரதிநிதியாகவே முதலமைச்சராக இருந்து வருகிறார். தமிழ் முஸ்லிம் மாகாண அமைச்சர்களும் இருந்து வருகிறார்கள். இதன் மூலம் மூவின மக்கள் வாழும் கிழக்கு மாகாணம் ஒரு முன்னுதாரணம் என்பதைக் காட்ட அரசு முன்னிற்கிறது. 
 
இதற்கு மேலால் வேறு என்ன அரசியல் தீர்வு வேண்டிக் கிடக்கிறது என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்தவே கிழக்கில் தேர்தல் நடத்தப்பட விருக்கிறது. அதுமட்டு மன்றி, அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆட்சிக்கு வர விடாது தடுத்து தமது அதிகாரத்தை நிறுவவே அரசு முழுமூச்சாக இறங்கி நிற்கிறது.
 
ஜனநாயகமும் அதன் கீழான தேர்தல் விதிமுறைகளும் ஒரு புறத்தே கிடக்கட்டும். எத்தகைய தில்லு முல்லுகளைச் செய்தாவது தமது மஹிந்த சிந்தனையிலான மாகாண சபை ஆட்சி நிறுவினால் போதும் என்றே அரசு தலையால் மண்கிண்ட முன் நிற்கிறது. அவ்வாறு ஆட்சி அதிகாரம் பெற்றால் அதனை சர்வதேச சமூகத்திற்கு ஒரு நற்சாட்சிப் பத்திரமாகக் காட்டமுடியும் என்றும் நம்புகிறது.
 
இதன் வழியிலே கிழக்கின் சிங்கள வாக்குகளையும் முஸ்லிம் வாக்குகளையும் பெரும்பான்மையாகவும் தம்முடன் உள்ளவர்களைக் கொண்டு கணிசமான தமிழ் வாக்குகளையும் பெற்று விட்டால் அதுவே தமக்கும் தமது உள்ளார்ந்த பேரினவாதத் திட்டங்களுக்கும் உள் உரையாக அமையக்கூடியது என்றே அரசு தரப்பு கணக்கிடுகிறது.
 
கடந்த முறை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பங்கு கொள்ளவில்லை. அது ஆளும் தரப்பிற்கு வசதியாகிக் கொண்டது. ஆனால் இம்முறை அப்படி இடம்பெற வாய்ப்பு இல்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முழுமையாகக் கிழக்கின் தேர்தலில் பங்கு கொள்ளவே இருக்கிறது. 
 
அதன் முன்னோட்டமாகவே அண்மையில் மட்டக்களப்பு நகரில் தமிழரசுக் கட்சி மாநாடு நடத்தப்பட்டது. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யபட்ட ஐந்து பேர் உள்ளனர். 
 
எனவே, கிழக்கில் தமிழ் வாக்குகள் பெருமளவிற்கு தமிழ்த் தேசியத்திற்கே கிடைக்கும். அதை எப்படி உடைக்கலாம் என்பதே அரசத் தரப்பில் இருந்து வரும் ஆலோசனையாகும்.
 
இந்த வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகுந்த நிதானத்துடனும் தூரநோக்குடனும் செயற்பட வேண்டியுள்ளது. கிழக்கின் முஸ்லிம் மக்களோடு இணைந்து மாகாணசபை அதிகாரத்தைக் கைப்பற்றக் கூடிய ஒரு உறுதியான தந்திரோபாயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்க வேண்டும்.
 
வெறுமனே முஸ்லிம் தலைமைகளுடன் பேசுவதுடன் நிறுத்தாது முஸ்லிம் மக்களுடன் பேச வேண்டும். ஏற்கனவே வெடிப்புகளுக்கும், பிளவுகளுக்கும் உள்ளாகி நிற்கும் தமிழ் முஸ்லிம் உறவை மீளநிலை நிறுத்த வேண்டும். 
 
கிழக்கில் தமிழ்க் கூட்டமைப்பு வாக்கு வங்கியை வைத்திருப்பது போன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கணிசமான வாக்கு வங்கியைக் கொண்டுள்ளது.அதே போன்று அரசில் அங்கம் பெறும் ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கும் அப்பால் முஸ்லிம் அமைப்புகள் இருந்து வருகின்றன. 
 
எனவே, இந்தத் தேர்தலில் தமிழ் முஸ்லிம் மக்களது ஐக்கியம் அவசியமானதாகும். அத்தகைய ஐக்கியத்தின் மூலம் தமிழ் முஸ்லிம் மற்றும் முற்போக்கான ஜனநாயக சிங்கள மக்களது ஐக்கியத்துடன் ஒரு மாகாண ஆட்சி முறை உருவாகுவதே இன்றைய தேவையாகும். 
 
அந்த ஆட்சியானது பேரினவாதத் திட்டங்களுக்குத் தடையாகவும் முட்டுக் கட்டையாகவும் அமைவது இன்று தேவையானதாகும். இது கிழக்கின் ஜனநாயக சக்திகளின் சிந்தனைக்குரிய விடயமாகும்.
 
இதனை விடுத்து தமிழ் முஸ்லிம் தேசியங்கள் தத்தமது எல்லைகளுக்குள் நின்றவாறு குறுகிய அரசியல் நிலைப்பாட்டை இன, மத குரோத அடிப்படையில் முன்னெடுக்க முற்பட்டால் அது ஆளும் பேரினவாத சக்திகளுக்கே வாய்ப்பும் வசதியும் ஆகிவிடும். 
 
மஹிந்த சிந்தனை அரசு மட்டுமன்றி முன்னைய ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியும் கிழக்கில் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தியே வந்துள்ளது. இன்றும் கூட அவ்விதமான நரித்தந்திரத்தையே பயன்படுத்த நிற்கிறார்கள். தமது சொந்த நலன்கள், பதவிகள், பட்டங்களுக்காக இன, மத வேறுபாடுகளைத் தூண்டி வாக்குச்சேகரிப்பதும் அதனைப் பேரினவாதிகளின் காலடியில் ஒப்படைப்பதும் மக்களுக்குச் செய்யும் மோசமான துரோகமாகும்.
 
இதுவரையான அனுபவம் பட்டறிவுகள் மூலம் தமிழ்த் தலைமைகளும் முஸ்லிம் தலைமைகளும் உண்மைகளையும் யதார்த்தங்களையும் காணத் தலைப்பட வேண்டும். ஏன் வடக்கு மாகாண சபைக்குத் தேர்தல் நடத்த மறுப்பதில் இருந்து அரசின் உள்நோக்கம் தெளிவாகவே புலனாகிறது. சிலவேளை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை வடக்கில் குடியேற்றி வாக்காளர்களாக்கிக் கொண்ட பின்புதான் வடக்கின் தேர்தல் நடத்தப்படுமோ தெரியாது.*

நன்றி-உதயன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment