கடந்த மே மாதம் 31 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தனிநபர் சட்டமூலம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. மதகுருமார் தேர்தல்களில் பங்குகொண்டு நாடாளுமன்றத்திற்கும், ஏனைய சபைகளுக்கும் தெரிவு செய்யப்படுவதைத் தடுப்பதே அச்சட்ட மூலத்தின் சாராம்சமாகும்.அதாவது அரசமைப்பில் தேர்தலுக்கு போட்டியிடுவதற்கான தகைமைகள் கொண்டோர் பற்றி விதந்துரைக்கப்படும் சரத்தில் மதகுருமார்களாக இருப்பவர்களும் என்ற சொற்பதத்தைச் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்பதையே மேற்படி தனிநபர் சட்டமூலம் சுட்டிக் காட்டுகிறது.
இது அரசியலமைப்பிற்கான ஒரு திருத்தமாகவே காணப்படுகின்றது. இத் தனிநபர் சட்ட மூலத்தை தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் விஜயதாச ராஜபக்ஷ முன்வைத்துள்ளார். அவர் ஒரு ஜனாதிபதி சட்டத்தரணியாவார்.
அத்துடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நடப்பாண்டின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவை மட்டுமின்றி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொது நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்கள் முறைகேடுகள் பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராகவும் கடமையாற்றியவர்.
பின்பு மஹிந்த சிந்தனை அரசுடன் முரண்பட்டு மேற்படி பதவிகளைக் கைகழுவி விட்டு எதிர்க்கட்சி வரிசை ஆசனத்திற்கு வந்து அமர்ந்தவர். அதன்பின்பு ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருபவர். இவ்வாறாக விஜயதாச ராஜபக்ஷ, மதகுருமார் நாடாளுமன்றம் வந்து சேர்வதை தடுக்கும் நோக்கிலான தனிநபர் சட்டமூலத்தை முன்வைத்திருக்கின்றார்.
இவ்வாறான ஒரு சட்டமூலத்தைப் நாடாளுமன்றத்தில் துணிவுடன் முன்வைத்தமைக்காக நாட்டின் நேர்மையான ஜனநாயக சக்திகள் அவருக்கு பாராட்டுகள் தெரிவிக்க வேண்டும். மேற்படி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விவாதிக் கப்படுமா அல்லது நிறைவேற்றப்படுமா என்பதுக்கும் அப்பால் நாட்டு மக்களிடையே ஒரு திறந்த விவாதத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
அதற்கு மாறாக ஒரு பௌத்த சிங்களவரும் நாடறிந்த சட்டத்தரணியும் சட்ட வல்லுனருமான விஜயதாச ராஜபக்ஷ மேற்படி சட்டமூலத்தை முன்வைத்திருப்பதால் அதிக ஆர்ப்பாட்டம் செய்ய முடியாது உள்ளனர். அப்படி இருந்தும் உறுமயவில் இருந்தும் மற்றொரு நாடாளுமன்றப் பௌத்த துறவியிடமும் இருந்தே தற்போது எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
ஆனால் விஜயதாச ராஜபக்ஷ தனது தனி நபர் சட்ட மூலத்தில் இருக்கக் கூடிய நியாயப்பாட்டை ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்தி வருகிறார். அவரது கருத்துகள் தர்க்க ரீதியில் நியாயமானவையாகவே இருந்து வருகின்றன. நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்ற அரசியலிலும் பௌத்த மதகுருமார் தவிர்ந்த வேறு எந்த வொரு மதகுருமாரும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
பௌத்த தர்மம் பணம், பட்டம், பதவி போன்ற ஆசைகளை நிராகரிக்கின்றது. அதிலும் பௌத்த துறவிகள் அவற்றை நாடவே கூடாது. அவ்வாறு இருக்கும்போது பௌத்த துறவிகள் அரசியலிலும் நாடாளுமன்றத்திலும் இருக்க விரும்புவது வியப்புக்குரிய விடயமாக இருப்பதாகவே அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலில் துறவிகள் ஈடுபடுவதால் கெட்ட பெயரே வந்து சேரும். எனவே, அவர்கள் தவிர்க்கவேண்டிய அரசியலில் அவமானங்களையும் நிந்தனைகளையுமே தேடிக் கொள்கின்றார்கள் எனக் கூறிய கருத்துக்கள் விஜயதாச ராஜபக்ஷவின் தனிநபர் சட்டமூலப் பிரச்சினைக்கு ஆதரவு தெரிவிப்பது போன்றே காணப்படுகின்றது.
எவ்வாறாயினும் இத்தனிநபர் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. ஏனெனில் இதனைக் கொண்டு வந்தவர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர். முன்பு மஹிந்த சிந்தனை அரசில் இருந்தவர். அத்துடன் இச்சட்டமூலம் பௌத்த துறவிகள் நாடாளுமன்றம் செல்வதைத் தடுக்கும் நோக்கம் கொண்டதாகும்.
மஹிந்த சிந்தனை அரசுக்கு ஆதரவும் பங்களிப்பும் வழங்கிவரும் பௌத்த துறவிகள் நாடாளுமன்றம் வருவதை தடைசெய்யும் தனிநபர் சட்டமூலத்திற்கு எவ்வாறு அரசு ஆதரவளிக்க முடியும். எல்லாவற்றிக்கும் மேலாக ஜனநாயகத்தையும் சோஷலிசத்தையும் தமது பெயராகக் கொண்ட இலங்கையின் அரச சாசனத்திலேயே வழங்கியுள்ள சூழலில் பௌத்த துறவிகளை நாடாளுமன்றம் செல்ல விடாது தடுப்பதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை.
மேற்படி தனிநபர் சட்டமூலம் ஜனநாயகமானது நியாயமானது என்பதும் வரவேற்க வேண்டிய உண்மையாகும். ஆனால், பௌத்த குருமார் அல்லாத துறவிகள் எனப்பட்டோர் நாடாளுமன்றம் செல்லாதிருந்த காலத்திலிருந்தே நாட்டின் இனவாதமும் ஏனைய மதமக்களை நிராகரிக்கும் போக்கும் இருந்து வந்திருக்கின்றது.
அதற்கு பௌத்த துறவிகளே முன்னிலை வகித்து வந்திருக்கின்றனர். அதேவேளை ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் மட்டுமின்றி சோஷலிச இடதுசாரிக் கருத்துகளையும் முன்னெடுத்து வந்த பௌத்த துறவிகளின் பங்களிப்பை எவ்வகையிலும் மறுத்துவிட முடியாது. ஆனால், அவர்களுடைய கருத்துகளையும் நிலைப்பாடுகளையும் மீறிய வகையில் பௌத்த சிங்கள பேரினவாதத் துறவிகளின் கருத்துகளே பிரதானமானவையாக இருந்து வந்துள்ளன. அதிலும் விசேடமாக இலங்கையில் பௌத்த மதம் என்பது வந்தேறிய மதமாகும்.
அது எப்பொழுதுமே அரசர்களினதும் மன்னர்களினதும் அரவணைப்பில் வளர்ந்த மதமாகும். அதிலும் பெரும்பான்மை யோரின் மதமாகவும் இருப்பதால் ஆதிக்கம் அரச அங்கீகாரம் வெளித்தனம் கொண்டதாக முன்னெடுக்கப்பட்டு வளர்ந்திருக்கின்றது.
பௌத்த மார்க்கத்தைத் தோற்றுவித்தவரான கௌதம புத்ததர் அதனை ஒரு மதம் என்ற கட்டத்தினுள் வரையறுக் கவில்லை. அவர் இந்து மத அரச குடும்பத்திலிருந்து வந்தவர். இந்து மதத்தை கட்டமைத்த பிராமணியத்தின் அடிப்படைக் கருத்துக்களை உள்வாங்க முடியாதவராகவே புத்தர் புதிய மார்க்கம் தேடினார். அவர் சமுதாயத்தில் மேலே இருந்த வர்களைத் தனது கவனத்திற்கு எடுக்கவில்லை. கீழே இருந்து புறக்கணிக்கப்பட்ட நலிவுற்ற சாதாரண மக்களிடம் சென்றே தனது போதனைகளுக்கான ஊற்று மூலகங்களைத் தேடிக் கண்டறிந்தார்.
ஆனால், இன்று பௌத்த தர்மம் பற்றி பேசுவோர் சந்திக்குச்சந்தி புத்தரின் சிலைகளை நிறுவிக்கொள்ளும் அதேவேளை தாம் மிகப் பொரும் அரண்மனை போன்ற வீடுகளில் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றார்கள். அன்பு, கருணை, அஹிம்சை, ஆசைகளைத் துறத்தல், மக்களிடையே நற்போதனைகள் செய்தல், மனிதர்களை மதித்தல் போன்றவற்றை புத்தரின் போதனைகள் எடுத்துக் கூறுகின்றன. ஆனால், இலங்கையில் பௌத்தத்தின் பெயரால் அன்றிலிருந்து இன்று வரை என்ன நடைபெற்று வருகின்றன என்பதை எழுதப் புகில் பக்கம் பக்கமாகவே எழுதிக்கொள்ள முடியும்.
தமிழர்கள் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் அல்லர் என்றும், வடக்கு கிழக்கு அவர்களது பாரம்பரிய பிரதேசங்கள் இல்லை என்றும் வாதிடும் சிங்கள மக்கள் மத்தியில் இனவாத நஞ்சைக் கொண்டு செல்வதிலும் நாடாளுமன்றத் துறவிகளே முன்நின்று வருகிறார்கள். இலங்கை, இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளின் இனமதச் சச்சரவுகளுக்கும் மோதல்களுக்கும் குறைவே இல்லை.
அன்று கொலனியவாதிகள் தமது கிறிஸ்தவ மதத்தைப் பரப்பிக்கொள்ள முன்னின்ற போது சுதேசிய நாடுகளின் மதங்களிடையே பிளவுகளையும் மோதல்களையும் உருவாக்கி அதன் மூலம் இலாபமடைந்தனர். நமக்கு நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற பேச்சு மன்றத்தை தந்து விட்டுச்சென்றவர்கள் பிரித்தானிய வெள்ளை எஜமானர்கள்.
அவர்கள் தமது நாட்டு அரசியலமைப்பில் நாடாளுமன்றத்திற்கு மதகுருமார் செல்வதைத் தடுத்துள்ளார்கள்.
ஆனால், மேல் சபையான பிரபுக்கள் சபைக்கு மதகுருமார் நியமிக்கப்படுவார்கள். இவ்விடயத்திலே ஒரு முக்கிய விடயத்தை காணமுடியும். மேற் குலக நாடுகளிலே மதம் அரசியலில் இருந்து பிரிக்கப்பட்ட பின்பே அந்நாடு களில் பல்துறை வளர்ச்சிகள் ஏற்பட்டன.
குறிப்பாக அரசியலில் மதம் எவ் வகையிலும் ஆதிக்கம் செலுத்தும் ஒன் றாக இருக்கவில்லை. இதன் மூலம் அந் நாடுகளின் முதலாளித்துவ வளர்ச்சியா னது விரிவு பெற்றுச்சென்றது. ஆனால், கீழை நாடுகளில் குறிப் பாக இலங்கை இந்திய நாடுகளில் மதமே அர சியல் அதிகாரத்தில் செல்வாக்குச் செலுத் தும் ஒன்றாக இருந்து வருகின்றது.
அத்தகைய மதங்களின் மதகுருமார் தத்தமது மதங்களின் பெயரால் மக்களைப் பிளவடையச் செய்யும் செயற் பாடுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனும் பதவி பெற்ற பௌத்த மதகுருமார் தமது பிறப்புரி மைகளைப் பயன்படுத்தி பேரினவா தத்தை உச்சப்படுவத்துவதில் முன்னிற்கி றார்கள். இவர்களது பதவித் துணிவில் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலுள்ள பேரினவாதத் துறவிகள் எனப்பட்ட வர்கள் பிற மதங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அதன் அண்மைய உதாரணமே தம் புள்ளை பள்ளிவாசல் தகர்க்கப்பட்ட மையாகும். அதனைத் தொடர்ந்து குருநாகலிலும், களுத்துறையிலும் முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு எதிரான முழக்கங்களுடன் பௌத்த துறவிகள் மதக் குரோதத்தையும் வன்முறையை யும் ஏவி வருகின்றனர்.
இன்று வடக்கு கிழக்கில் இராணு வத்தின் உதவியுடன் விகாரைகளும் புத்தர் சிலைகளும் நிறுவப்பட்டு வரு கின்றன. இத்தகைய இலங்கைச் சூழலில் விஜயதாச ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் கொண்டுவந்த மத குருமார் நாடாளுமன்றத்திற்குச் செல் வதைத் தடுக்கும் தனிநபர் சட்டமூலம் ஜனநாயகமும் நியாயமும் கொண்ட ஒன்றேயாகும். துணிவுடன் அதனைக் கொண்டு வந்த விஜயதாச ராஜபக்ஷ பாராட்டுக்குரியவராவார். ஆனால், இந்த நடவடிக்கை வெற்றிபெற மாட்டாது என்பதுடன் அரசமைப்பில் பௌத்த மதம் முதலிடம் பெற்றிருக்கும் வரை பேரினவாதத்தை மக்கள் எவ்வகையிலும் நிராகரிக்க மாட்டார்கள்.
மதமும் அரசியல் அதிகாரமும் பின் னிப்பிணைந்து இருக்கும் வரை நாட்டின் ஜனநாயமும் சமத்துவமும் நிலை நாட்டப்பட முடியாதவைகளாகும்.மதம் என்பது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட நம்பிக்கையாகும். மதம் எதனையும் நம்புவதற்கும் நம்பாமல் விடுவதற்கும் ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் உண்டு.
ஆனால், மதத்தின் பெயரால் ஏனைய மக்களை ஒடுக்கும் அரசியலுக்கு முண்டுகொடுக்கும் மதகுருமார்கள் பௌத்த மார்க்கத்தைப் பின்பற்றிய தோடு அதனை ஏனைய நாடுகளுக்கும் பரப்பிக் கொண்டனர். அதன் வழியே அசோகனின் மகன் மஹிந்தன் இலங்கைக்கு புத்த மதத்தைக் கொண்டுவந்து சேர்த்தான். அத்தகைய மதத்தின் காவலரான துறவிகள்தான் இலங்கை இராணுவத்திற்கு போர் முனைகளிலே பிரித் ஓதி நூல் கட்டி போரில் வெற்றிபெற ஆசிவழங்கி நின்றனர் என்பது நமது நாட்டின் வரலாறு. எனவே, இந்த நாட்டில் பௌத்தம் அரசியலில் இருந்தும் ஆட்சி அதி காரத்தில் இருந்தும் அடிப்படை அரச சாசனத்திலிருந்தும் எப்போது அப்புறப் படுத்தப்படுகிறதோ அப்போதுதான் இந்த நாடு சமாதானமும் ஜனநாயகமும் சமத்துவமும் ஐக்கியமும் கொண்ட நாடாக விளங்க முடியும்.
0 கருத்துரைகள் :
Post a Comment