ஈழத்தமிழர்கள் சிறீலங்கா அரசிற்கு ‘அரசியற் கடமைப்பாடு’ உடையவர்களா?தனது அரசியல் எல்லைக்கு உட்பட்டதாக கூறிக்கொள்ளும் மக்களிடமிருந்தே தேசியத்தை பாதுகாத்து கொள்ள வேண்டிய நிலையில் சிறீலங்கா அரசு உள்ளதென்றால் தமிழ் மக்கள் மீதும் சிறீலங்கா அரசு மீதான தமிழ்மக்கள் கொண்டுள்ள கடமைப்பாடு [A Question on political obligation] குறித்தும் எவ்வளவு நம்பிக்கை கொண்டுள்ளது என்ற கேள்வி எழுகிறது. வடக்கிலே ஏ9 நெடுஞ்சாலை துரித கதியில் புனரமைக்கப்பட்டு வருகிறது. வீதி நெடுகலாக புழுதி பறக்க கனரக வாகனங்கள் அங்கும் இங்கும் ஓடித்திரிகின்றன. புதிய மதகுகள் அமைக்கப்பட்டு மின்சார கம்பங்கள் அகட்டி நடப்பட்டு வீதியின் இரு மருங்கிலும் இடம் பிடிக்கப்பட்டு வேலைகள் கடுகதியில் இடம் பெற்று வருகிறது. வடக்கிற்கான பழைய தொடருந்துப்பாதை இருந்த இடம் மீண்டும் கிளறி எடுக்கப்பட்டு புதிய பாதைக்கான தயார்படுத்தல்கள் ஏற்கனவே ஆரம்பமாகி விட்டது.


புதிய தனியார் வங்கிகள், அரச பணிமனைகள், என புதிதாக நவீன கட்டிட தொகுதிகள் திடீர் திடீரென எழுந்து வருகின்றன. தொலைத்தொடர்பு கோபுரங்கள் ஆங்காங்கே வானத்தை நோக்கி வளர்ந்துள்ளன. இவற்றிக்கு தகுந்தாற்போல தனியார் கடைகளின் புதிதாக வரையப்பட்ட பெயர்ப்பலகைகள் வர்ண ஜாலம் காட்டி நிற்கின்றன.


இதுதான் எமது அதே பழைய ஊர்களின் புதிய கோலம். இதற்கும் மேலாக இராணுவ பிரசன்னத்தின் விகிதம் கூட குறைந்திருப்பதை சுட்டிக்காட்டும் வடக்கில் வாழும் தமிழ் மக்கள், தாம் கடந்த ஜெனீவா தீர்மானத்திற்கு அயராது உழைத்தவர்களுக்கு நன்றிக்கடன்பட்டவர்கள் என்பதையும் கூறத்தவறவில்லை. 


“எல்லாம் வெளிநாடுகளில இருக்கும் எங்கட ஆக்களின்ர அயராத உழைப்பால தான் இவங்கள் இந்தளவுக்கென்டாலும் செய்யிறாங்கள்” என்றார் முதியவர் ஓருவர். 


அடுத்தகட்ட தீர்மானங்கள் தம்மை நோக்கி வருவதற்கு முன்னர் சிறீலங்கா அரசு பாரிய முன்னெடுப்புகளை செய்து வருகிறது. பொருளாதார நிலையில் தமிழ் மக்கள் யுத்தத்திற்கு முன்னய காலகட்டத்திலும் பார்க்க அரச கட்டுப்பாட்டின் கீழ் அதிவேகமாக முன்னேறி வருகின்றார்கள் என்று அனைத்துலகத்திற்கு போலியான தோற்றத்தைக் காட்டுவதிலே அரசு மிகக்கவனம் செலுத்துகிறது. 


தமிழ் மக்களது அரசியல் உரிமைகளுக்கு பரிகாரம் தேடுவதிலும் பார்க்க அனைத்துலக நாடுகளை திறுப்திப்படுத்தும் நடவடிக்கைகளிலேயே சிறீலங்கா மும்முரமாக இருப்பதை எடுத்துகாட்டுவதற்கு இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை முக்கியமான உதாரணங்களாக கொள்ளலாம். உதாரணமாக இடம் பெறும் கட்டுமான வேலைகள்யாவும் மத்திய சிறீலங்கா அரசின் ஒப்பந்தாரர்களின் கீழேயே இடம் பெறுகிறது. இந்த ஒப்பத்த தொழிலாளர்களில் தொண்ணுற்ரொன்பது சதவிகிதமானவர்கள் தென்பகுதி தொழிலாளர்கள், உள்ளுர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்பு இல்லாத நிலை இன்னமும் உள்ளது. அத்துடன் கட்டுமானங்கள்யாவும் மத்திய சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டில் பிரதான வீதிகள் மட்டுமே புனரமைக்கப்பட்டு வருகிறன. நகர சபைகளின் கட்டுப்பாட்டிலோ அல்லது பிரதேச சபைகளின் கட்டுப்பட்டிலோ அபிவிருத்திகள் எவையும் இடம் பெறவில்லை. 


இதனால் உள்ளுர் பொருளாதார சுழற்சிக்கு உந்து சக்தியாக இருக்ககூடிய அரச பங்களிப்பு எதுவும் வடக்கு கிழக்கில் இருப்பதாக தெரியவில்லை. இன்னமும் வடக்கு கிழக்கு பகுதி வெறும் சந்தைப்படுத்தல் மையமாகவே பார்க்கப்படுகிறது. 


வெளிநாடுகளிலிருந்து உறவினர்கள் அனுப்பும் தொகையே தமிழர்களது பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அதி கொடூர போர் அழிவுகளால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை உள்ளுர் பொருளாதார வளர்ச்சியிலே பங்கு கொள்ள வைக்கும் அளவுக்கு எந்த வித அரச முதலீடுகளும் நடைமுறைக்கு இலகுவான, சாத்தியமான வகையில் இல்லை. 


இத்தகைய நிலை வெளிநாடுகளை ஏமாற்றும் கொள்கையே அரசிடம் இன்னமும் உள்ளது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது. அதுமட்டுமல்லாது இராணுவத்தளபதி சரத் பொன்சேகா விடுதலை, குற்றம் செய்த இராணுவ சிப்பாய்களை விசாரிக்கவென புதிய நீதிமன்றம் என அனைத்துலகத்தை நோக்கிய செயற்பாடுகளே சிறீலங்கா அரசில் முனைகொன்டுள்ளதே தவிர உள்நாட்டின் தேசிய இனப்பிரச்சனை மீது கரிசனை கொண்டதாக தெரியவில்லை. 


நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ் பிரதி நிதிகளை சேர்த்து கொள்ளும் தந்திரமும் கூட அடுத்த மார்ச் மாதம் தயாரிக்கப்பட இருக்கும் அறிக்கைக்கு ஒத்திசைவான போக்கை உருவாக்குவதே அன்றி நியாயத்தை கண்டறிவதற்கான முயற்சியாக எடுத்துக் கொள்ள முடியாதுள்ளது. 


தற்போது ஒருவகையிலான காலவரையறைகள் கொடுக்கப்பட்டது போன்று தென்பட்டாலும் அனைத்துலக நாடுகள் சிறீலங்கா மீது கடந்த காலங்களில் அரசியல் தீர்வு குறித்து மிதமான போக்கையே கடைப்பிடித்து வந்துள்ளன. சிறீலங்காவுக்கு தேவையான கால அவகாசத்தை கொடுப்பதிலே பிராந்திய வல்லரசுகளும் சரி அனைத்துலக நாடுகளும் சரி தாராள மன நிலையை கொன்டிருந்தன. 


இந்நாடுகள் தமது நலன்களுக்கு இசைவாக சிறீலங்கா எத்தகைய உறுதிமொழிகளை கொடுக்கின்றது என்பதில் கவனம் செலுத்துகின்றனவே தவிர தமிழர்களின் தீர்வு விடயத்தில் ஆத்மார்த்த ரீதியாக எந்த ஒரு நாடும் கவனம் செலுத்துவதாக இல்லை. 


நோர்வே நாட்டின் இராசதந்திரி எரிக் சொல்கையிம் கடந்த காலங்களில் தமிழர்களது தேசிய இனப்பிரச்சனை குறித்த சமாதான பேச்சுவார்த்தைகளில் தலையிட்டு தோல்வியுடன் தமது செயற்பாடுகளை நிறுத்தி கொண்டாலும் அவர் அண்மையில் ஒஸ்லோவில் இடம் பெற்ற கருத்தரங்கு ஒன்றில் அனைத்துலக நாடுகளின் நிலைப்பாட்டை விளக்கியிருந்தார். 


இந்தியா, ஐரோப்பிய நாடுகள், ஐக்கிய அமெரிக்கா, உட்பட மேற்கைத்தேய நாடுகளின் நிலையில் தமிழீழ கோட்பாடு என்ற சொல்லுக்கே இடமில்லை எனக்கருத்து பட கூறியிருந்தார். 


இந்த நிலையில் அரச இயந்திரமயபடுத்தப்பட்ட குடியேற்ற திட்டங்களும் அதற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்படும் கட்டுமான திட்டங்களும் தமிழ் மக்களின் தனித்துவம் வாய்ந்த தாயகத்தை கூறுபோட்டு அடையாளத்தை சிதைக்கும் வகையில் செயற்பட்டுவருவதாக தமிழ் அரசியல் வாதிகளும், சமூக ஆர்வலர்களும் கூறி வருகின்றனர். 


இதற்கு மாதகல், திருமுறிகண்டி, முல்லைத்தீவு, மன்னார், மற்றும் கிழக்கு மாகாணத்தில் இடம் பெற்று வரும் இடைவிடாத குடியேற்றத்திட்டங்கள் மிக முக்கியமான உதாரணங்களாகும். 


ஏற்கனவே பாடசாலைகளில் பாடத்திட்டங்களில் தமிழ் சிறார்களின் மனதை மாற்றும் வகையில் புதிய சிங்கள மேலாதிக்க பாடத்திட்டங்களை புகுத்திவருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை கொன்டுள்ளனர். 


இதற்கும் மேலாக கடந்த மூன்று ஆண்டுகளாக யுத்தம் முடிவுற்ற போதிலும் தமிழ் மக்களின் சமூக வாழ்வு இன்னல்கள் நிறைந்ததாகவும், அரசியல் கருத்துகளை வெளிப்படுத்த முடியாததாகவும் உள்ளது. மிகவும் பயமுறுத்தப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 


இது தமிழ்பிரதேசங்களில் தமிழ் மக்கள் தமக்கு கிடைக்க வேண்டிய அரசியல் உரிமைகளை கேட்கத்தக வகையில் சனநாயகத்தின் இருப்பை சிறீலங்கா அரசு ஏற்படுத்தி கொடுக்கவில்லை என்பதையே எடுத்து காட்டுகிறது. 


ஆகவே தமிழ் மக்கள் சனநாயக விழுமியங்களுக்கு ஏற்ற வகையில் சிறீலங்கா அரசுக்கு கடமைப்பட்டவர்களா? [A Question on political obligation] என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 


தமிழ் மக்களுக்கு பொருளாதார வள நிலையை ஏற்படுத்தி கொடுப்பதாக அனைத்துலக நாடுகள் மத்தியில் காண்பிக்க விருக்கும் சிறீலங்கா அரசு, அடிப்படை அரசியல் உரிமையை போராட்டத்திற்கு முந்திய காலத்திலிருந்தே மறுத்து வருகிறது. 


பொருளாதாரதேவைகள் எல்லாவற்றிக்கும் அப்பால் அரசியல் உரிமையே தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் முக்கியமானது என்பது சிறீலங்கா அரசினால் தட்டிக்கழிக்கப்பட்டு வருகிறது. 


தமது உரிமை குறித்த கேள்வியில் தமிழ் மக்கள் எதிர் கொள்ளவிருக்கும் அபாயமும் இதுவாகத்தான் இருக்க முடியும். பொருளாதார நடவடிக்கைகளும் புனர்வாழ்வு அறிக்கைகளும் அடுக்கடுக்காக நடாத்தப்பட்டு வரும் தேர்தல்களும் சிறீலங்காவின் இறைமையை தமிழ் மக்கள் ஏற்று கொண்டு வாழ்கின்றனர் என்பதை காட்டுவதற்கேயாகும். இதன் அடிப்படையிலேயே மேலைத்தேய நாடுகளும் நோக்குகின்றன. 


ஆனால் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களின்; உண்மை மனநிலை வேறானது இந்த மன விருப்பை வெளிப்படுத்த கூடிய அரசியல் நிலை அங்கு தற்போது இல்லை. உள்ள கெட்டனவற்குள்ளே நல்லதை தேர்ந்தெடுக்கும் நிலையிலேயே தமிழ் மக்கள் உள்ளனர். ஆனால் இந்த தேர்வே சிறீலங்கா அரசு தனது இறைமையை சுட்டிக்காட்ட போதுமானதாகும். 


ஆகவே தமிழ் மக்கள் சிறீலங்காவின் ஆட்சியில் ‘அரசியல் கடப்பாடற்றவர்கள்’ என்பதை தகுந்த ஆதாரங்களுடன் வெளியுலகிற்கு எடுத்து காட்டுவதே சனநாயக விழுமியங்களை மதித்து போராடக்கூடிய தமிழ் மக்களின் அடிப்படை தந்திரமாக இருக்க முடியும. 


தமிழ் மக்கள் சிறீலங்காவின் அரசாட்சியை ஏற்றுக்கொள்கின்றனர் என்பதை நிரூபிக்கும் பொருட்டு பல்வேறு நிகழ்வுகளை பேரினவாத அரச இயந்திரத்தின் பகுதிகளுடாக நிறைவேற்றியும் வருகிறது. 


உதாரணத்துக்கு, தமிழ் தலைவர்களை கொண்டு சிறீலங்கா கொடியை ஏற்றுதல், தமிழ் மக்கள் மத்தியிலே சட்டத்திற்கு முரணான நிகழ்வுகளை அரசின் உதிரிகள் ஊடாக உருவாக்குதல், இதற்கு உதாரணத்திற்கு கிறீஸ் மனிதர்கள் நாடகம், ஊள்ளுரில் இடம் பெறும் கொள்ளைகளும் அவற்றை காவல்துறையினர் கண்டு பிடித்தல், இதன் மூலம் தமிழ் மக்களை சிறீலங்கா அரசின் சட்ட நடைமுறைகளை நாடிச்செல்ல வைத்தல், சமூக சீர்கேடுகளை உருவாக்குவதன் மூலம் தமிழ் சமூகத்தை அரச உள்ளுராட்சி அமைப்புகளின் உதவிகளை நாடவைத்தல். இவையனைத்தும் சிறீலங்கா அரச கட்டமைப்புகளுக்கு தமிழ் மக்கள் கடமைப்பாடுடையவர்கள் என்பதை உணர்த்துவதற்கேயாகும். 


அதேவேளை அனைத்துலக அளவில் சிறீலங்கா தரப்பில் மனித உரிமை மீறல்கள் என்ற பிரச்சனையை சீவனற்ற நிலைக்கு கொண்டு செல்வதே தற்போதைக்கு பெரும் சவாலாக கருதப்படுகிறது. அதேபோல மேலைநாடுகளின் நலன்கள் திருப்திப்படுத்தப்படும் நிலையில் முள்ளி வாய்க்கால் கூட வெறும் வரலாறாகிப்போய்விடும் என்பது சிறீலங்கா அரசின் போக்காக தெரிகிறது. 


புலம் பெயர் தமிழர்களின் போராட்டம் அவ்வப்போது பெரும் இடையூறு விளைவிப்பதாக இருந்தாலும் சிறீலங்காவின் இராசதந்திர பயன்பாட்டில் தமிழர்களின் போராட்ட வேகத்தை மழுங்கடிப்பதும் அறிக்கைகள் மூலம் திசைதிருப்புவதும் தான் தற்போது சிறீலங்கா அரசின் போராட்டமாகும். 


தமிழர்கள் தரப்பில் தாயகத் தமிழர்களது மன விம்பங்களாக புலம்பெயர் வாழ் தமிழர்கள் தான் தாயகத்தமிழர்களது குரலாக ஒலிக்க வேண்டும் என்பதில் பல தமிழ் அமைப்புகளும் தனிபட்டவர்களும் ஒருமித்த கருத்து கொண்டிருக்கின்றனர். 


அதேவேளை தமிழ் மக்களில் ஒரு சிறு பகுதி சிறீலங்கா அரசு மீது ஒருவகை எதிர்பார்ப்புடன் ஏதோ ஒருவகையில் அமைதி ஏற்பட்டு விடும் என்று எதிர்பார்த்திருந்த இந்த சிறு பகுதியினரும் கூட சலிப்படைந்து போய் சுதந்திர வாழ்வின் மீது அவாப்பட்டவர்களாக தற்போது காணப்படுகின்றனர் என்பது தான் உண்மை. 


அதேவேளை உலக நகர்வுகளும் கூட பெயரளவுக்காயினும் கனிந்து வரும் நிலை தென்படுகிறது. இந்நிலையில் வீதிப்போராட்டங்கள் என்ற அதிரடி செயற்பாடுகளுக்கு அப்பால் தமிழ் மக்களது மனநிலையை வெளியுலகிற்கு எடுத்து சொல்லும் நிகழ்ச்சித்திட்டங்களாக உலகின் கண்முன் கொண்டு வரவேண்டிய நிலையில் புலம் பெயர்வாழ் தமிழர்கள் தயாராக வேண்டும். 


ஏனெனில் பல ஆண்டுகளாக தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சனையில் ஈடுபாடு காட்டிவந்த எரிக் சோல்கையிம் போன்றவர்கள் கூட தமிழ் அமைப்புகளின் கருத்தாதரவுக்குள் கொண்டு வரமுடியாத நிலை உள்ளது. தமது நிலையிலிருந்து மறுபுறம் சிந்திக்க மறுக்கும் இராசதந்திரிகளையும் அவர்கள் சார்ந்த அரசுகளையும் அழுத்தத்திற்கு உள்ளாக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ் மக்கள் உள்ளனர். 


இவ்வேளையில் அனைத்துலக அரங்கில் பனிப்போர்காலத்திற்கு பின்பு உலகின் ஏகநீதியாளனாகவும் ஒழுங்காற்றாளனாகவும் இருந்த ஐக்கிய அமெரிக்கா பல்வேறு பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கும் பொறுப்பாக இருந்ததோடு உலகின் பிரதான கடல் வழிப்பாதைகளின் பாதுகாப்பையும் உறுதிசெய்து வந்ததோடு அனைத்துலக வர்த்தக முறைமையின் நிறைவேற்றாளனாகவும் ஆதிக்கம் செலுத்தி வந்தது. தற்போது இந்த நிலை சீன வளச்சியின் காரணமாக பறிபோகும் நிலையை எட்டி விட்டது.


அமெரிக்காவின் பலத்தில் இலவச சவாரி செய்து வந்த பல சிறிய நாடுகள் கூட பதில் பலத்தில் நம்பிக்கை கொள்ள கூடிய அளவுக்கு நிலைமை மாறி வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா தனது ஏக பலத்தை நிருபிக்க வேண்டிய அளவுக்கு கூட்டுகளை உறுதி செய்து கொள்ள முனைந்து நிற்கிறது. 


ஆனாலும் அனைத்துலக பொருளாதார மற்றும் ஆயுத பல நிலையிலும் அமெரிக்கா தொடர்ந்து ஏகாதிபத்திய பொறுப்பை கைவசப்படுத்தி வைத்திருக்க முடியாத நிலையே இருக்கிறது. இந்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு காணப்படுவதாக அமெரிக்க பத்திரிகைகளே சுட்டிக்காட்டுகின்றன. 


இது நாட்டையே வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்லலாம் கடுமையான கடன் பழுவும் அமெரிக்க மத்திய தர மக்களின் தளர்வு கண்டிருக்கும் பொருளாதாரத்தால் தொழில்துறை வெறுமையடைந்து வருவதும், நாட்டின் கட்டமைப்புகள் திருத்தியமைக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தடங்கல்களும் மிக குறைந்த ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ள கல்வித்துறையும் என அமெரிக்கப் பத்திரிகைகள் பட்டியலிட்டு கொண்டே போகின்றன. 


இந்நிலையில் அமெரிக்க ஏக போக உலக ஆட்சியாளன் நிலை கைநழுவிப்போவது தவிர்க்க முடியாதது என்பது இந்த பத்திரிகைகளின் பார்வையாக தெரிகிறது. 


இதனால் தனக்கு ஆதரவாக வளர்ந்து வரும் நாடுகளின் பங்களிப்பில் அமெரிக்கா தற்போது தங்கியுள்ளது. அமெரிக்காவில் இலவச சவாரி செய்து வந்த நாடுகளில் சிறீலங்காவும் ஒன்று ஆனால் தற்போது அமெரிக்காவை பல்வேறு இடங்களில் உதாசீனம் செய்து வருகிறது. இந்த நிலையில் சிறீலங்கா மீதான அழுத்தங்களை பிரயோகிப்பது அமெரிக்காவுக்கு தவிர்க்க முடியாததாக உள்ளது. 


இதுவே அமெரிக்கா தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படுவது போன்ற தோற்றத்திற்கு காரணமாக உள்ளது. ஆனால் இரு வேறு பிரிவை கையாள்வது போல தனது நலனுக்கு ஏற்ப உள்நாட்டிலும் புலம் பெயர் நாடுகளிலும் சனநாயக போக்கு கொண்ட தலைவர்களை அங்கங்கே மதிப்பளித்து கலந்துரையாடல்களை நடாத்தி வருகிறது. 


சிறீலங்கா மீதான அழுத்தத்திற்கு புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகளின் தலைவர்களும் உள்நாட்டு கட்சி தலைவர்களும் அனைத்துலக மட்டத்தில் முக்கியமானவர்களாக கருதப்படும் இந்த சந்தர்ப்பத்தில் அதே அனைத்துலக மட்டத்தில் ஈழத்தமிழர் பிரச்சனையை எடுத்து செல்வதற்கும் தமிழர்கள் சார்பான புரிந்துணர்வை அனைத்துலக தலைவர்கள் மத்தியில் உருவாக்குவதற்கும் இந்த சந்தர்ப்பத்ததை தமிழர் தரப்பு பயன் படுத்தும் என்பதில் ஐயமில்லை. 


தமிழர்கள் மீது எதற்கெடுத்தாலும் பயங்கரவாத முத்திரை குத்த துடிக்கும் சிறீலங்காவின் பரப்புரை நடவடிக்கைகளுக்கு எதிராக பதில் பரப்புரைக்கும் எமது பாரம்பரீய தாய்மண் கோட்பாட்டையும் மீள வலியுறுத்த இது சிறத்த சந்தர்ப்பமெனலாம். 


அண்மைய காலங்களில் புலம் பெயர்வாழ் தமிழர்கள் சிறீலங்கா அரசு மீது எந்தவித கடமைப்பாடும் அற்றவர்கள் என்பதை மிக வலிமையாக தெரிவித்துள்ளனர். அனைத்துலக நாடுகள் மத்தியில் இது பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதனை நிரந்தரமான ஒரு விடயமாக மாற்றம் பெற செய்ய வேண்டுமாயின் புதிய நிகழ்ச்சித்திட்டங்களில் தமிழ் மக்கள் தம்மை ஈடுபடுத்தி கொள்ள தள்ளப்பட்டுள்னர். 


பிரித்தானிய மகாராணியாரின் பவள விழாவில் சிறீலங்கா தலைவருக்கு எதிராக இடம் பெற்ற நிகழ்வும். யாழ் நகரில் சிறிய அளவில் இடம் பெற்றாலும் மகிந்தவுக்க இந்நிகழ்ச்சிகு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிராக பிரித்தானிய காலனித்துவ யாப்பு எரிப்பு நிகழ்ச்சியும் அந்த நிகழ்ச்சியை உலகிற்கு கொண்டுவந்த தமிழர் ஊடகங்களின் செயற்பாட்டையும் சிறந்த உதாரணங்களாக கூறலாம். 


தமிழர்கள் பாரம்பரீயமாக வாழ்ந்து வந்த பிரதேசங்களை பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வைக்குள் தேசியபாதுகாப்பு என்ற சட்ட உரிமையுடன் சிறீலங்கா அரசு வடக்கு கிழக்கு பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து கொண்டுள்ளது. 


கடந்த கிழமை வலிகாமம் வடக்கு மக்கள் மிக ஆவேசமாக ஒரு அமைதிப் போராட்டத்தை நடாத்தி இருந்தனர். அப்போராட்டத்தில் பங்குபற்ற சென்ற இராணுவ நில ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளது. 


நாட்டின் தேசிய இனம் ஒன்றின் இருப்புரிமையை பாதுகாப்ப வேண்டியது ஒரு சனநாயக அரசின் கடைமையாகும் இதிலே அரச இயந்திரங்களான பாதுகாப்புதுறை சட்டதுறை என்பன மிக முக்கியமான பங்கு வகிக்கிறன. யுத்தம் முடிந்த காலத்திலிருந்து தமிழ் மக்கள் தரப்பில் எந்த வித வன்முறை போராட்டமும் இடம் பெற்றதாக செய்திகள் இல்லை. இங்கே தேசிய பாதுகாப்பு என்ற பதம் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. 


தனது அரசியல் எல்லைக்குட்பட்டதாக கூறிக்கொள்ளும் மக்களிடமிருந்தே தேசியத்தை பாதுகாத்து கொள்ள வேண்டிய நிலையில் சிறீலங்கா அரசு உள்ளதென்றால் தமிழ் மக்கள் மீதும் சிறீலங்கா அரசு மீதான தமிழ்மக்கள் கொண்டுள்ள கடமைப்பாடு [A Question on political obligation] குறித்தும் எவ்வளவு நம்பிக்கை கொண்டுள்ளது என்ற கேள்வி எழுகிறது.


இதுவே தமிழ் மக்கள் சிறீலங்கா அரசுக்கு கடைமைப்பாடு உடையவர்களா? [A Question on political obligation] என்ற கேள்வியை மீன்டும் ஒருமுறை கேட்க தூண்டுகிறது. 


சிறீலங்கா அரசுமீது தமிழர்கள் அழுத்தம் கொடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் புதிதாக அமெரிக்க அதிபரால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறீலங்கா மற்றும் மாலைதீவு தூதர் [Michele Sison] மிசேல் சிசன் அவர்களின் கொள்கையும் கூற்றுகளும் உள்ளன.


சிறீலங்காவில் மனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை அமெரிக்கா எதிர்பார்க்கிறது என்பது மறுபுறத்தில் சிறீலங்காவில் தமிழர்கள் தமது உரிமை குறித்து பேச வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது என்றும் பொருள்படுகிறது. 


இந்நிலையில் தமிழர்கள் மிகவும் தந்திரமாக தமது சனநாயக உரிமைகளின் ஊடாக தமது விருப்புகளை நிறைவேற்றுவர் என்றே எதிர்பார்க்க வேண்டும். இதிலே புலம் பெயர் தமிழர்களினதும் உள்நாட்டு தமிழர்களதும் கூட்டிணைந்த செயற்பாடுகள் மிகவும் அவசியம். வல்லரசகளின் நலன்களுக்காக தமிழ் சமுதாயம் மீண்டும் உயிர் இழப்புகள் வேண்டாம்.


ஆகவே எவ்வளவுதான் பொருளாதார அபிவிருத்திகளை காட்டி ஏமாற்ற முற்பட்டாலும் அரசியல் நிர்ணய சுதந்திரம் இல்லாத தமிழ் சமூகம் சிறீலங்கா அரசுக்கு கடைமைப்பாடற்றது என்பதை உலகிற்கு காட்டுவதற்கும் அனைத்துலக இராசதந்திரிகளை அழுத்தத்திற்கு உள்ளாக்குவதற்கும் தமிழர் தரப்பு அமைப்புகளின் இராசதந்திர செயற்பாடுகளுக்கும் அப்பால் தமிழ் மக்கள் சார்பாக இன்று பல்வேறு முறைகள் உள்ளன. 


உதாரணத்துக்கு தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் சிங்களத்திலும் தமிழிலும் வர்த்தக நிலையத்தின் பெயர் பொறிக்கப்பட வேண்டுமென்பது இராணுவ ஆட்சியின் முக்கிய சட்டங்களில் ஒன்றாக ஆரம்பிக்கப்பட்டது. இதனால் அனைத்து வர்த்தக நிலையங்களும் தமது பெயர் பலகையை மாற்றம் செய்து கொண்டனர். இந்த முறை நாட்டின் ஐக்கியத்ததை வெளிப்படுத்துவதாக இராணுவ ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். 


இதனை மறுதலிக்கும் முகமாக சிறீலங்கா அரசிற்கு தமிழ் மக்கள் அரசியற் கடைமைப்படற்றவர்கள் என்பதை எடுத்த காட்டுவதற்கு, புலம் பெயர் நாடுகளில் தமிழ் வர்த்தக நிலையங்களின் பெயர்பலகைகளில் எமது தாயக கோட்பாட்டை பிரதிபலிக்க கூடிய வாசகங்கள் பொறிப்பதன் மூலமாகவோ, புலம் பெயர் தமிழர்கள் வீடுகளில் தமது தேசிய கொடியை ஏற்றுவதன் மூலமாகவோ வெளிப்படுத்த வேண்டியவர்களாக தமிழர்கள் உள்ளனர். 


அத்துடன் தமிழர்கள் பொறுப்புடனும் நேர்மையுடனும் காரியங்களை செயலாற்ற வேண்டியவர்களாகவும் உள்ளனர். ஏனெனில் தற்போதய காலங்களில் தமிழர்கள் மீது அவர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ள அரச பகுதிகளான சட்டம் ஒழுங்கு மற்றம் நிர்வாக பகுதிகள் மத்தியில் ஒரு வகை புரிந்துணர்வு உள்ளதாகவே தெரிகிறது. இந்த புரிந்துணர்வை மேலும் வளர்ச்சி அடைய செய்யவேண்டும் என்பது முக்கியமானதாகும். 


அதேவேளை போட்டிக்கு சிறீலங்கா அரசும் இரசதந்திர செயற்பாடுகளில் மிக மும்முரமாக செயற்பட்டு வருகிறது. எவ்வளவு தான் சீன சார்புநிலை என்று நாம் கருதினாலும் மேலைத்தேய வல்லரசுகளில் சில சிறீலங்காவுக்கு இலவச சவாரிகளுக்கான உத்தரவாதங்களை வழங்கி உள்ளன. அண்மையில் இடம் பெற்ற பாதுகாப்பு அமெச்சர்களுக்கான சங்கிரிலா மகாநாட்டில் சிறீலங்கா நழுவலாக நடந்து கொண்டு இந்த சலுகைகளை பெற்றுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். 


*இலண்டனில் வசித்துவரும் லோகன் பரமசாமி அரசறிவியல் துறைசார் மாணவராவர். கட்டுரை பற்றியதான கருத்தினை எழுதுவதற்கு: loganparamasamy@yahoo.co.uk
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment