ஆயுதப்போரின் ஆரம்பநாட்களும், போராட்ட முன்னோடிகளும் -பகுதி 1


1967ஆம் ஆண்டு முதல் குறிப்பிட்ட அரசியல் இலக்கின்றி சிங்கள காவற்படைகளையும் ஆயுதப்படைகளையும் தாக்கும் முயற்சியில் வெடிகுண்டுகளை செய்வது துப்பாக்கிகளை சேகரிப்பது ஈழத்தமிழரின் சுயஆட்சிக்கான  சித்தாந்தங்களை அலசுவது என இரகசிய இராணுவ குழுவாக உருவாகிக்கொண்டிருந்த பெரியசோதி தங்கத்துரை குட்டிமணி சின்னச்சோதி நடேசுதாசன் மற்றும் அவர்களுடன் இணைந்து இயங்கிக் கொண்டிருந்த மாணவனான பிரபாகரனிற்கும் 1970மே 27இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் அதனைத்தொடர்ந்து இலங்கையை சிங்களபௌத்த குடியரசாக மாற்றும் சிறிமாவோ அரசாங்கத்தின் முயற்சியும் பெரும் சீற்றத்தை உண்டாக்கி இருந்தது. இந்நிலையே  கொள்கைரீதியான மாற்றங்களை இவர்களிடத்தே ஏற்படுத்தி புதியவழியில் சிந்திக்கதூண்டியது.

வல்வெட்டித்துறையில் அப்பாவிப்பொதுமக்களை தேவையின்றி தாக்கும் சிங்களப்படைகளை திருப்பித்தாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இவர்களின் இலக்கு தமிழ் என்னும் மொழி உணர்வின் ஊடாக ஈழத்தமிழரின் இருப்பிற்கான அரசியல் அபிலாசைகளை நோக்கித்திரும்பியது. இதன் காரணமாக வல்வெட்டித்துறை என்ற சமூக வட்டத்தைவிட்டு ஈழத்தமிழரின் உரிமையை பெறுவதற்கு ஆயுதப்போராட்டமே ஒரேவழி என்பதை வெறுமனே கொள்கைரீதியாக அல்லாமல் நடைமுறை ரீதியாக செயற்படுத்த முனைந்தனர்.

இந்நிலையிலேயே 1971 மார்ச் 11 ந்திகதி யாழ்ப்பாணம் பிரதான வீதியின் ‘பிறிமியர் கபே’யின் டிஸ்கோ நடனஅரங்கை திறந்து வைக்கவந்த மேயர் துரையப்பா மீது நடந்த தாக்குதல் முயற்சியில் அவர் தப்பிக் கொண்டார். அவருடைய கார் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டிருந்த இத்தாக்கு தலை திரு.பொன்.சிவகுமாரன் திரு.பொன்.சத்தியசீலன் மற்றும் அவர்களது நண்பரான சத்தி என்பவர்களே திட்டமிட்டு நேரம் பார்த்து நடத்தியிருந்தனர்.  இவர்களுடன் இணைந்திருந்த ஞானமூர்த்தி சோதிலிங்கம் எனப்பட்ட பெரியசோதி இத்தாக்குதலிற்கான வெடிபொருட்களை கொள்வனவு செய்வதற்கான பணத்தினை வல்வெட்டித்துறையை சேர்ந்த பிரபல தொழிலதிபரான திரு.கா.வடிவேலிடம் பெற்றிருந்தார் என்பது இங்கு குறிப்பி டத்தக்கது. இத்தாக்குதலைத் தொடர்ந்து பொன்.சிவகுமாரனும் அரியரத்தினமும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டனர்.

              

1968 யூலையில் நடந்த சமூக விடுதலைப்போராட்டமான மாவிட்டபுரம் ஆலயப்பிரவேசகாலத்தில் வல்வெட்டித்துறைக்கு வந்து தம்முடன் இணைந்து கொண்டதுடன் சிங்கள ஆயுதப்படைகளிற்கு எதிரான புரட்சிகர இராணுவ செயற்பாடுகளில் ஈடுபட்ட தமது அன்பிற்குரிய நண்பன் பொன்.சிவகுமாரனின் கைது நடேசுதாசன் குழுவினருக்கு கடும்சீற்றத்தை ஏற்படுத்தியது. இதன்காரணமாக பொன்.சிவகுமாரனை காட்டிக்கொடுத்ததாக சந்தேகிக்கப்பட்ட கோண்டாவிலைச் சேர்ந்த தாடித்தங்கராசா மீது இவர்களின் கவனம் திரும்பியது.

1948இல் இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே சிங்கள அரசியல்வாதிகளினால் தமிழினப்புறக்கணிப்பு திட்டமிட்டு பல்வேறு வடிவங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. எனினும் இனரீதியான எதிர் தாக்கம் ஆயுதரீதியாக தமிழ்மக்களிடம் தோற்றம் பெறவில்லை என்றே கூறலாம். 1950 முதல் அரசபடைகளும் போர்க்குணமிக்க வல்வெட்டித்துறை மக்களும் தொடர்ச்சியாக மோதிக்கொண்டிருந்தனர். மட்டக்களப்பு பெரியநீலா வணையிலும் 1958 இல் அரசபடைகளுடன் மக்கள் ஒருமுறை மோதிக் கொண்டனர். எனினும் இவைகள் யாவும் திட்டமிட்டரீதியாகவன்றி உணர்ச்சி வசப்பட்ட மக்களின் உடனடியான கோபாவேசத் தாக்குதல்களாகவே  அமைந்திருந்தன.
1970 யூலை 13 ந்திகதி உரும்பிராயில் கலாச்சார உதவிஅமைச்சர் சோமவீர சந்திரசிறியின் காருக்கு அதிலும் குறிப்பாக கூறினால் கார்ரயரின் கீழே சாதாரண கையெறிகுண்டினை சாதுரியமாக வைத்து கார்நகரும் போது ஏற்படும் அழுத்தத்தினால் குண்டினை வெடிக்கச்செய்த பொன்.சிவகுமாரன் மற்றும் பட்டு எனும் ஞானமூர்த்தி ஆனந்தக்குமரேசன் என்பவர்களின் செயல் அன்றையநாளில் அசாதாரணமானதே. இதுபோலவே 1971 மார்ச்சில் முன்கூறிய பிறிமியர் கபேக்கு வெளியில் நடந்த குண்டுவெடிப்பிலும் கெற்புடன் இணைந்த டைனமெற்றினை திரியினூடாக பரவும் நெருப்பின் மூலம் சிலநிமிட இடைவெளியில் வெடிக்கச்செய்த நிபுணத்துவமும் கூட அரசியல் நோக்கம் கொண்டமுயற்சியே. எனினும் மேற்கூறிய இரண்டு நிகழ்வுகளிலும் ஆளில்லாத வெறுமையான கார்களிலேயே குண்டுகள் வைக்கப்பட்டு வெடிக்கப்பட்டிருந்தன.

ஆனால் தாடித்தங்கராசாவின் மீதானதாக்குதலில் நேரடியாகவே அவர் குறிவைக்கப்பட்டார். 1970யூலையில் உருவாக்கப்பட்ட இலங்கைக்குடியரசு அரசியலமைப்பு நிர்ணயசபையில் ஈழத்தமிழ்மக்களின் அனைத்துகட்சிகளின் சார்பில் தமிழர்கூட்டணியினரால் ஒருமுகமாக கொண்டுவரப்பட்ட ‘வல்வைத் தீர்மானங்கள்’ இன் நிராகரிப்பிற்கு காரணமாக சிங்கள அரசியல்வாதிகளுடன் இணைந்து செயற்பட்டவர்களில் ஒருவரும் ஈழத்தமிழர்களினால் துரோகி என வர்ணிக்கப்பட்டவருமான நல்லூர் பாராளுமன்ற உறுப்பினரான திரு.அருளம்பலத்தின் நெருங்கிய கையாளாகவே தாடித்தங்கராசா அன்று செயற்பட்டு வந்தார். அத்துடன் வாகனத்தரகர் என்ற போர்வையில் பல சமூகவிரோத செயல்களிலும் பொலிசாரின் உதவியுடன் இவர் ஈடுபட்டுவந்தார்.

முதலாவது நேரடியான தாக்குதல் என்பதால் இலக்கினை தாக்குதல் என்பதைவிட தாக்கிவிட்டு அவ்விடத்தைவிட்டு தப்புதல் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தவேண்டிய தேவை போராளிகளிற்கு அன்று ஏற்பட்டிருந்தது. காரணம் வல்வெட்டித்துறையிலிருந்து கோண்டாவிலிற்கு சென்று பல நாட்க ளாக தாடியின் நடமாட்டங்களை அவதானித்தபோதும் அன்றைய நிலையில் கோண்டாவிலில் வைத்து தங்கராசாவை தாக்கிவிட்டு தப்பிவருவது கடின மான பணியென்பதைப் புரிந்துகொண்டனர்.

ஆயுதப் போராட்டம் பற்றிய விழிப்புணர்வு அற்ற அக்காலத்தில் வல்வெட்டித்துறையில் இருந்து பிறிதொரு கிராமத்திற்கு சென்று அக்கிராமத்தவரையே தாக்கும்போது அல்லது தாக்கிவிட்டு தப்பும்போது ஏதுமறியா அப்பாவிப்பொதுமக்களுடன் ஏற்படும் தேவையற்ற மோதலைத் தவிர்க்க வேண்டியது முதன் நிலைக்காரணமானதுழூ. அதுபோலவே தமிழ்இன உரிமைகளை நிலை நிறுத்துவதற்காக இரகசிய ஆயுதக்குழுக்களுடன் தமிழ்மாணவர் பேரவை தொடர்புகளை கொண்டிருந்த போதும் வெவ்வேறு ஊர்களிலும் சமூகங்களிலும் உருவாகி இருந்த தீவிரவாத இளைஞர்களை சத்தியசீலன் மட்டுமே இணைத்து அவர்களின் ஒரேயொரு தொடர்பாளராக விளங்கினார். 

இந்நிலையில் சிவகுமாரனின் கைதுடன் யாழ்ப்பாணத்தை விட்டுவெளியேறிச் சென்றிருந்த சத்தியசீலனின் ஒத்துழைப்பையும் உடனடியாக பெற்றுக்கொள்ள முடியாது போய்விட்டது. இதனால் எந்தநிலையிலும் பொலிசாரின் உதவியை பெற்றுக்கொள்ளும் தங்கராசாவை அவரது கிராமத்திற்கு வெளியில் வைத்து தாக்குவதென முடிவாயிற்று. இந்நிலையிலேயே காட்டியும் கூட்டியும் கொடுக்கும் தாடித் தங்கராசா ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சந்நிதி கோவிலிற்கு வருகின்றார் என்பதை அறிந்துகொண்டனர். மாணவர்பேரவையின் தீவிரஆதரவாளராக விளங்கிய CTB மணியம் என்பவர் கொடுத்ததகவலின் மூலம் இதனை இவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டனர்.

இதனைத் தொடாந்து 1971 மார்ச் மாதத்தின் பின்னாட்களில் வந்த வெள்ளிக்கிழமை அன்று இரவும்பகலும் உரசிக்கொள்ளும் மாலை நேரத்தின் மெல்லிய இருட்டொளியில் தங்கராசாவின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் கோவிலின் கிழக்குப்புறமாக சின்னச்சோதியும் ஜெயபாலும் மேற்க்குபுறமாக நடேசுதாசனும் மோகனும் குறிவைத்து காத்திருந்தனர். இவர்களின் எதிர்பார்பிற்கு ஏற்றார்ப்போல் கோவிலின் பின்வீதியில் குறித்த வளையத்தினுள் வைத்து நடேசுதாசனால் தாக்குதல் நடத்தப்பட்டது. இடது முழங்கைக்கு மேல் குண்டடிப்பட்ட காயத்துடன் ஓடிய தங்கராசா கோயில் வழிபாட்டிற்கு வந்த மக்களுடன் ஒன்றாக கலந்துவிடவே அத்துடன் தாக்குதல் நிறுத்தப்பட்டது.

இந்த வரலாற்றுத்தாக்குதலில் தமிழீழ விடுதலைப்போராட்ட முன்னோடிகளான திரு.நடேசுதாசன் சின்னச்சோதி ஜெயபால் மற்றும் மோகன் என்போர் நேரடியாக கலந்து கொண்டனர். எனினும் அத்தாக்குதலின் முன்பும் பின்புமான பல செயற்பாடுகளில் குறிப்பாக இன்றைய இராணுவ வார்த்தைகளில் கூறினால் ஒரு தாக்குதலின் மிகஇன்றியமையாத செயற்பாடான பின்கள வேலைகளில் வேலுப்பிள்ளை பிரபாகரன் அதிக ஈடுபாட்டுடன் செயலாற்றியமை இங்கு குறிப்பிடத்தக்கது.  நாற்பதுவருடங்கள் நீண்ட அவரது போராட்டப்பாதையில் தாக்குதலணியின் ஓர்அங்கமாக அவர் கலந்துகொண்ட முதலாவது சரித்திரப்பிரசித்தி பெற்ற தாக்குதல் இது வேயாகும். இத்தாக்குதலில் முன்னின்ற திரு.நடேசுதாசன் தாடித்தங்கராசாவினால் அடையாளம் காணப்பட்டதனால் பொலிசாரின் கைதில் இருந்து தப்புவதற்காக தனது பகிரங்க நடமாட்டத்தை தவிர்த்து தனது தலைமறைவு வாழ்க்கையை ஆரம்பித்தார்.

தொடரும்…!


Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment