‘கோத்தாவின் போர்’ நூல் வெளியீட்டு விழாவில் ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க நிகழ்த்திய உரை புதுடெல்லியின் கோபத்தைக் கிளறி விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்களுக்கு இந்தியா ஆயுதப் பயிற்சியைக் கொடுத்ததுடன், கொழும்பில் தாக்குதல்களில் ஈடுபடவும் வழிநடத்தியது என்று லலித் வீரதுங்க முதலாவது குற்றச்சாட்டை வீசியிருந்தார். இலங்கையில் போர் நீடித்ததற்கு இந்தியாவே காரணம் என்றும், இந்தியா தலையிடாமல் விட்டிருந்திருந்தால், எப்போதோ போர் முடிவுக்கு வந்திருக்கும் என்று இரண்டாவது குற்றச்சாட்டை அவர் சுமத்தினார்.
அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்த போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் அனைவரும் அங்கிருந்தனர். இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா உள்ளிட்ட பல வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகளும் இருந்தனர்.
லலித் வீரதுங்கவின் இந்த உரை, ஏற்கனவே சீர்கெட்டுப் போயுள்ள இந்தியாவுடனான உறவுகளை மேலும் கெடுத்து விடும் என்று அமைச்சர்கள் பலரும் வெளிப்படையாகவே முணுமுணுத்ததாகத் தகவல். ஆனால் லலித் வீரதுங்கவின் அந்த உரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ எதிர்பாராத்தோ - அவருக்குத் தெரியாமல் நிகழ்த்தப்பட்டதோ அல்ல என்பதே அரசியல் வட்டாரங்களின் பொதுவான கருத்தாக உள்ளது. அதாவது வேண்டுமென்றே இந்தியாவை லலித் வீரதுங்க சீண்டியுள்ளார் என்றே கருதப்படுகிறது.
ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரித்த பின்னர், புதுடெல்லிக்கும் கொழும்புக்கும் இடையிலான உறவுகள் மந்தநிலையில் காணப்படுகின்றன. வழக்கமான இருதரப்பு பயணங்கள் உள்ளிட்ட சுறுசுறுப்பான எந்த நகர்வுகளையும் காணமுடியவில்லை. ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததை இலங்கை எதிர்பார்க்கவும் இல்லை, அதனை இன்னமும் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. இதனால் இந்தியாவுக்கு தனது எதிர்ப்பை முடிந்தவரை எந்தவகையில் தெரிவிக்க முடியுமோ அந்த வகையில் வெளியிட்டும் வருகிறது.
நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதி பதவிக்காக ஐ.நாவில் இந்தியா நிறுத்திய நீதிபதியை எதிர்த்துப் போட்டியிட்ட பிலிப்பைன்ஸ் நீதிபதிக்காக இலங்கை வாக்களித்தது. இது இந்தியா மீது இலங்கை வெறுப்பைக் காண்பித்த முதலாவது நிகழ்வாக கருதப்படுகிறது. அதற்கடுத்து இலங்கை ஏவிய இரண்டாவது அஸ்திரம் தான், “கோத்தாவின் போர்“ வெளியீட்டு விழாவில் இந்தியா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. போரை இந்தியாவே நீடிக்கச் செய்ததாக மட்டும் லலித் வீரதுங்க குற்றம்சாட்டவில்லை. இந்தியாவின் துணையுடன் போர் வெல்லப்பட்டதையும் கூட அவர் மறைத்து விட்டார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை வெற்றிபெற இந்தியாவே முக்கிய காரணம். அதை மறந்த, மறக்கும் வகையில், இந்தியாவை மிகத் தந்திரமாக இணங்க வைத்துப் போரில் வெற்றியீட்டியதாகவே லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
அதுபோலவே ‘கோத்தாவின் போரும்‘ விபரிக்கிறது.
அதாவது கோத்தாபயவின் இராஜதந்திரத்தின் மூலமே போர் வெற்றி கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு எரிச்சலைக் கொடுத்துள்ளதாகவும், இது குறித்து விரைவில் வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அதேவேளை, ஜெனிவா தீர்மானத்துக்குப் பின்னர் எந்தவொரு இலங்கை அமைச்சரும் இந்தியா செல்லவில்லை. பசில் ராஜபக்ஸ கடந்த மாத இறுதியில் புதுடெல்லி செல்வார் என்று முன்னர் கூறப்பட்ட போதும் அதுவும் நடக்கவில்லை. இது இரு நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவதையே காட்டுகிறது.
இது இந்தநிலையில் இருக்கும்போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இப்போது வெளிநாடுகளுக்குப் பறக்கத் தொடங்கியுள்ளார். அண்மையில் பாகிஸ்தான், சிங்கப்பூர், ரஸ்யா, கட்டார், தாய்லாந்து பயணங்களை முடித்துக் கொண்ட அவர் இந்த வாரம் இங்கிலாந்துக்கும் வந்து சென்றுள்ளார். அதனையடுத்து வத்திக்கான், பிறேசில், கியூபா என்று பல வெளிநாட்டுப் பயணத்திட்டங்கள் அவரது கைவசம் உள்ளன. ஆனால் அவர் இந்தியா போகும் எண்ணத்தைக் காணவில்லை. அவர் இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு இரண்டு ஆண்டுகளாகி விட்டன. அதேபோல, இந்தியப் பிரதமரும் கொழும்புக்கு வரும் திட்டமில்லை. அவரும் அக்கம் பக்கம் அயல் நாடுகளுக்கெல்லாம் சென்று வருகிறார். ஆனால் இலங்கைப் பக்கம் எட்டிப் பார்ப்பதாகவே தெரியவில்லை.
மகிந்த ராஜபக்ஸவின் அழைப்பை ஏற்றுக் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் மன்மோகன்சிங் கொழும்புக்கு வராதது இலங்கைக்கு ஆத்திரமாக உள்ளது. இதனால் மகிந்த ராஜபக்ஸவும் புதுடெல்லிப் பக்கம் தலைகாட்டுவதைத் தவிர்க்கிறார். அமைச்சர்களும் கூடவே கொழும்பையும், புதுடெல்லியையும் தவிர்த்து நடந்து கொள்கின்றனர். இது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் சந்திப்புகள் குறைந்து போய்விட்டதைக் காட்டுகிறது. இதற்குக் காரணம் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதே என்று தெரிகிறது.
போர் முடிவுக்கு வந்தவுடன் அரசியல் தீர்வை இந்தியா வலியுறுத்தியது. 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வை நடைமுறைப்படுத்தக் கோரியது. இதற்கெல்லாம் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. ஆனால் அவை எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இத்தகைய பின்னணியில் தான் ஜெனிவா தீர்மானத்தின் மீது இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. அதுவும் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் மீது ஒர் இடைவெளியை ஏற்படுத்தி விட்டது.
இருநாடுகளும் வரட்டுப் பிடிவாதத்தில் நின்று கொண்டிருப்பதால், இந்த இடைவெளியை சீராக்கும் உயர்மட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியா இப்படி ஒதுங்கி நின்றாலும் கூட, இலங்கை தொடர்ந்து அப்படியே நிற்குமா என்பது முக்கியமான கேள்வி. ஏனென்றால் ஜெனிவாவில் மற்றுமொரு தடையை இலங்கை தாண்ட வேண்டியுள்ளது. அதில் இந்தியாவின் கையில் தான் இலங்கையின் குடுமி இருக்கிறது.
நவம்பர் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ள இலங்கையின் மனிதஉரிமைகள் நிலை குறித்த மீளாய்வுக்குப் பொறுப்பாக இந்தியா, பெனிஸ், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் இந்தியாவை சமாளித்துக் கொண்டால் தான் இலங்கைக்கு சாதகம். இதனை மனதில் வைத்து இந்தியாவுடன் நெருங்கிச் செல்ல முனைந்தாலும், புதுடெல்லி அதற்கு இணங்கிப் போகுமா என்பது சந்தேகம் தான். அங்கேயும் கசப்புணர்வுகள் அதிகரித்து விட்டதால், இந்த இடைவெளியை இலகுவில் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை.
கட்டுரையாளர்கபில் இன்போ தமிழ் குழுமம்
0 கருத்துரைகள் :
Post a Comment