இலங்கை என்ற இந்தத் தேசத்தை ஆட்சிபுரியும் அரசு தனிவழியிலான அரசியல் பாதையை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கின்றது. செங்கோல் ஆட்சிக்குப் பதிலாக கொடுங்கோல் ஆட்சி முறைமையையே அது பின்பற்றி வருகின்றது. இலங்கை என்ற இந்தத் தேசத்தை ஆட்சிபுரியும் அரசு தனிவழியிலான அரசியல் பாதையை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கின்றது. செங்கோல் ஆட்சிக்குப் பதிலாக கொடுங்கோல் ஆட்சி முறைமையையே அது பின்பற்றி வருகின்றது.
இவ்வாறு தொடர்ந்தும் தவறுகளை இழைத்துக்கொண்டு தவறான வழியில் பயணிக்கும் இலங்கை அரசுக்கு நல்வழியைக் காண்பிப்பதற்கு சர்வதேச சமூகம் முயற்சிக்கும் போது இறையாண்மை, சுயாதீனம் போன்ற கேடயங்களைப் பயன்படுத்தி சர்வதேசத்தின் ஆலோசனைகளை அரசு புறந்தள்ளிவிடுகின்றது.
அதாவது, "என்னசெய்ய வேண்டும் என்பது எமக்கு நன்கு தெரியும். எனவே, எவரின் உபதேசமும் எமக்குத் தேவையில்லை. உங்களின் வேலையை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.'' என்ற ஆணவப் போக்கையே இலங்கை அரசு இன்று அரசியல் கொள்கையாகக் கடைப்பிடிக்கின்றது.
அத்துடன், சர்வதேசக் கூண்டில் தான் குற்றவாளியாக அடையாளப் படுத்தப்பட்டுள்ள போதிலும், அதை ஏற்கமறுத்து தான் நிரபராதிதான் என்ற கோதாவில் இலங்கை தேசத்தை ஆள்பவர்கள் செயற்படுகின்றமையானது, நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. உலக வல்லுநர்களும் இந்த விடயத்தையே சுட்டிக்காட்டுகின்றனர் .
சர்வதேசத்திடம் இனி இல்லை என்றளவு உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் இந்த அரசு, சர்வதேசத்தின் கோரிக்கைகளை ஆலோசனைகளை புறக்கணித்துவருவதால் இனிவரும் காலங்களில் சர்வதேசத்தின் உதவிகளை இழந்து, உலக அரங்கில் அநாதையாய் வலம் வரவேண்டியதொரு நிலைமை இலங்கைக்கு ஏற்படும்.
குறிப்பிட்டதொரு எல்லைக்கு மேல் குற்றவாளியை எவராலும் காப்பாற்ற முடியாது. அவ்வாறு காப்பாற்ற முனைந்தால் தானும் குற்றவாளியாக மாறும் நிலை ஏற்படும்.எனவே, அடங்காப்பிடாரி போல் தொடர்ந்தும் இலங்கை அரசு செயற்படுமானால் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு பக்கபலமாக இருந்துவரும் சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கூட முழுமையாக கைவிட்டுவிட்டு பறந்து செல்லும் நிலைமை உருவாகலாம்.
அதற்கான சூழல் சர்வதேச அரங்கில் தற்போது உருவாகி வருகின்றது. தம்மிடம் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை அரசு நிறைவேற்றும் வரையில் அந்த நாட்டுடன் பேச்சுகளை நடத்தமாட்டோம் என்ற இந்தியாவின் அறிவிப்பும், நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துமாறு ரஷ்யா பிரயோகித்துவரும் அழுத்தங்களையும் இதற்கு சிறந்த உதாரணமாகக் குறிப்பிடலாம்.
வாழ்வா சாவா என்ற இக்கட்டான நிலையில் தற்போது இருக்கும் மஹிந்த அரசு, ஆணவக்போக்கை கைவிட்டுவிட்டு ஜனநாயக பாதையில் பயணிக்கத்தவறின் இனி வரும் காலங்களில் சனி அதி உச்சத்தில் இருந்து ஆட்டிப்படைக்கும் என்ற கருத்தில் மறுதலிப்பதற்கு ஒன்றும் இருக்காது என்றே சொல்லவேண்டும்.
அண்மையில் நடைபெற்ற போர் வெற்றி விழாவின் போது இலங்கை பாதுகாப்புப்படை தமது ஆயுதபலத்தை வெளிப்படுத்தியது. அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, இஸ்ரேல், ரஷ்யா ஆகிய நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களே பெரும்பாலும் காட்சிப்படுத்தப்பட்டன. இதன் மூலம் சர்வதேசத்தின் உதவியுடனேயே இலங்கை அரசு போரை முடிவுக்குக் கொண்டுவந்தது என்ற விடயம் மீண்டுமொருமுறை அம்பலமாகின்றது.
எனவே,போர் காலத்தில் சர்வதேசத்திடம் தலையாட்டி பொம்மையாக செயற்பட்ட அரசு, தற்போது சர்வதேசத்தை எதிர்ப்பது ஏன் என்ற கேள்வியும் எம்முள் எழுகின்றது அல்லவா? அதற்கு பல காரணங்கள் உள்ளன.
உள்நாட்டுப் போரை முடிப்பதற்கு இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கிய சர்வதேச சமூகம் போர் முடிவடைந்த பின்னர் ஆரம்பத்தில் முக்கியமான சில விடயங்களை உள்நாட்டில் செய்துமுடிக்குமாறு இலங்கை அரசுக்கு மிகவும் விநயமான முறையில் கோரிக்கைகளை விடுத்தன.
போர்க் காலத்தில் தமது கட்டுப்பாட்டில் இருந்த கொழும்பு அரசு, தாம் சொல்வதைச் செய்யும் என்றே சர்வதேசம் எதிர்ப்பார்த்திருந்தது. எனினும், சர்வதேசத்தின் நம்பிக்கையைத் தவிடுபொடியாக்கும் வகையில் கோரிக்கைகளை அடியோடு நிராகரித்தது இலங்கை.
இதனால் பொறுமையிழந்த சர்வதேச சமூகம் ஜெனிவாவில் தீர்மானமொன்றை நிறைவேற்றி "நாங்கள் சொல்வதைச் செய்து முடி' எனக் கடுந்தொனியில் கட்ட ளைகளைப் பிறப்பித்தது.
அதாவது, புரையோடிப் போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுகளை நடத்தி தீர்வைக்காணுங்கள், என சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக இலங்கையை வலியுறுத்தி வருகின்றது. ஜெனிவாத் தீர்மானமும் இவற்றுக்கு இசைவாகவே இருக்கின்றது என்பது இங்கு குறிப்பிட வேண்டியதொரு விடயமாகும்.
ஆனால்,சர்வதேச சமூகம் கூறியவற்றுள் ஒன்றையேனும் செய்வதற்கு அரசு இன்னும் முன் வரவில்லை. மாறாக, காலத்தை இழுத்தடிக்கும் கைங்கரியத்தையே அது கையாள்கின்றது. அதுமட்டுமன்றி, கூட்டமைப்புடன் பேச்சுகளை முறித்துக்கொண்டு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகவே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என அடம்பிடிப்பதுடன், சர்வதேசத்திலிருந்து அரசியல் தீர்வை இறக்குமதி செய்யமுடியாது என்றும் சர்வதேசத்தைக் கொதிப்படைய வைக்கும் வகையில் கருத்துகளை அள்ளி வீசுகின்றது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் விடயத்தை எடுத்துக்கொள்வோமானால், அந்தக் குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்த விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு இன்னும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையேனும் முன்னெடுக்கவில்லை.
முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஒன்றும் "பைபிள்' அல்ல என்றே அது வீறாப்பு பேசிவருகின்றது. அடுத்தபடியாக வடக்கில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றி தமிழர் நிலங்களை அவர்களிடம் ஒப்படையுங்கள் என வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில், "எந்தக்கொம்பன் சொன்னாலும் வடக்கில் இருந்து படை முகாம்களை அகற்றமாட்டோம்'' என நாட்டின் ஜனாதிபதியே கடுந்தொனியில் முழக்கமிடுகின்றார்.
ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கு பல அர்த்தங்கள் உள்ளன. தமிழர்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்கமாட்டோம்; இராணுவத்தை வைத்து முழு நாட்டையும் ஆட்டிப்படைப்போம். ஆகிய விடயங்களை இவ்வாறான கருத்துகள் மூலம் அவர் மறைமுகமாகக் கூற முற்படுகின்றார்.
இன்றைய நவீன உலகில் இனவாதம் பேசுவதாலேயோ அல்லது ஒரு இனத்துக்கு எதிராகக் கடும்போக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாலேயோ பிரச்சினைகள் தீரப்போவதில்லை. சர்வதேசத்தின் கோரிக்கைகளுக்கு அமைய தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசு முன்வர வேண்டும், இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும்.
சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்காது இலங்கை அரசு தொடர்ந்தும் பிடிவாதப்போக்கில் செயற்படுமானால் சர்வதேச சமூகம் இலங்கையைத் தனிமைப்படுத்தலாம். அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமானால் ஆசியாவின் அதிசய நாடாக மாற்றம் பெறவேண்டும் என்ற கனவைக் கொண்ட இலங்கை தேசம் ஆசியாவின் "அநாதை' நாடாகவே மாற்றம் பெறும்.
ஆசியாவின் ஆச்சர்யமா? அநாதையா? இவை இரண்டுமே ஆட்சியாளர்களின் கைகளில்தான்.
நன்றி - உதயன்
0 கருத்துரைகள் :
Post a Comment