இலங்கையில் எதன் விளைவாகப் போர் தொடங்கியதோ- அதுவே போரின் முடிவின் பின்னர் இன்னும் தீவிரமாகி வருகிறது. அதாவது, போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையில் சிறுபான்மையினர்கள் மீதான இன, மொழி, மதப் பாகுபாடுகள் கூர்மையடையத் தொடங்கியுள்ளன. அண்மையில் அமெரிக்கா வெளியிட்ட மனிதஉரிமைகள் அறிக்கையிலும், சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆண்டு அறிக்கையிலும் இந்த விடயம் தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. போர் இடம்பெற்ற காலத்தை விட போர் முடிவுக்கு வந்த பின்னர் தான், இனவாதமும் சரி, மதவாதமும் சரி மேலோங்கத் தொடங்கியுள்ளன. போருக்குப் பின்னர் நல்லிணக்க சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, இந்தப் பாகுபாடு கூர்மையடைந்து வருகிறது.
இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஒன்றைத் தமிழர்கள் தேர்வு செய்ததற்கும், தனிநாடு ஒன்றை அமைக்கும் கோரிக்கையை வலியுறுத்துவதற்கும் காரணமாக அமைந்தது இந்தப் பாகுபாடு தான். தமிழர்கள் இனரீதியாகவும், மதரீதியாவும், மொழி ரீதியாகவும் அடக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட போது தான் கிளர்ச்சிகள் வெடித்தன. பல தசாப்த வரலாறு கொண்ட இந்தப் பாகுபாடு, விடுதலைப் புலிகள் பலம் பொருந்திய ஒரு அமைப்பாக மாறியபோது சற்று வலுவிழக்கத் தொடங்கியது. தமிழருக்கு எதிராக காட்டப்படும் இனப்பாகுபாடு அல்லது மொழி- மதப் பாகுபாடு, விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் தமது போருக்கு குந்தகமாக அமையும் என்று தென்னிலங்கை நம்பியது. அதைவிட தமிழரைத் தாக்கினால் புலிகள் பதிலுக்குத் தாக்குவார்கள் என்ற அச்சமும் இருந்தது. இதனால் தான் 1958, 1977, 1983 என்று தொடராக நடந்து வந்த இனக்கலவரங்கள் அதற்குப் பின்னர் நிறுவன மயப்படுத்தப்பட்டதாக இடம்பெறவில்லை. முன்னர் தமிழருக்கு எதிரான கலவரங்கள் அனைத்துமே சிங்கள பௌத்த பேரினவாதிகளின் திட்டமிட்ட தாக்குதல்களாகவே இருந்தன. ஆனால் விடுதலைப் புலிகள் பலம் பொருந்தியவர்களாக மாறிய பின்னர், அவ்வாறான தாக்குதல்களை, கலவரங்களைத் தூண்டிவிட முடியவில்லை. அப்படித் தூண்டிவிடுவது சுவரில் எறியப்பட்ட பந்து திருப்பி வந்து எப்படி அடிக்குமோ- அதுபோலவே தம்மையும் தாக்கும் என்பது அவர்களுக்குத் தெரிந்தேயிருந்தது. ஆனால் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இனவாதம், மதவாதம், மொழிப் பாகுபாடு என்பன தீவிரமடைந்துள்ளன. இவை இன்று தமிழருக்கு எதிராக மட்டும் திருப்பி விடப்பட்டுள்ளவை அல்ல. முஸ்லிம்களையும் தான் குறிவைக்கத் தொடங்கியுள்ளன. வடக்கிலும், கிழக்கிலும் தமிழ்- முஸ்லிம்கள் செறிவாக வாழும் பகுதிகளில் ‘கிறிஸ் பேய்‘ என்ற பெயரில் தூண்டி விடப்பட்ட வன்முறைகள் இவற்றில் ஒன்று.
தமிழரின் பாரம்பரிய வாழ்விடங்களிலும், இந்துக்களினதும், கிறிஸ்தவர்களினதும் புனித பகுதிகளில் புத்தர்சிலைகளை வைத்தும் விகாரைகளை அமைத்தும் நடத்தப்படும் ஆக்கிரமிப்பு மற்றொன்று. தம்புள்ளவில் பள்ளிவாசலை அகற்றுவதற்கு காட்டப்படும் முனைப்பும், தெகிவளையில் மதரஸாவுக்கு எதிரான போராட்டமும் முஸ்லிம்களுக்கு விரோதமான உணர்வுகளைத் தூண்டிவிடும் முயற்சிகளேயாகும். தெகிவளையில் இருந்து 23ஆயிரம் முஸ்லிம்களை வெளியேற்றும் முயற்சிகள் நடப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கூறியுள்ள குற்றச்சாட்டையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இன்னொரு பக்கத்தில் நாட்டின் வடக்குப் பகுதி தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்கிறார் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸ. அவருக்கு ஒத்து ஊதும் வகையில், அரசில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினா எல்லாவெல மேதானந்த தேரர், வந்தேறு குடிகளான தமிழர்கள் வடக்கிற்கு உரிமைகோர முடியாது என்கிறார்.
இறுதியாக நடத்தப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பில் கூட, வடக்கு மாகாணம் தமிழர்கள் மிகமிகப் பெரும்பான்மையாக வாழும் பகுதி என்று சான்று அளித்துள்ளது. இலங்கையின் வரலாற்று ரீதியான சனத்தொகைக் கணக்கெடுப்புகள் அத்தனையிலும் கூட இது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் வடக்கு-கிழக்கு தமிழரின் தாயகம் என்பதை நிராகரிக்கின்ற போக்கு முன்னெப்போதையும் விட இப்போது தீவிரமடைந்து வருகிறது. தமிழர்களுக்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் தூண்டி விடப்படும் இந்தப் பாகுபாடு, நாட்டின் எதிர்காலத்துக்கு சிறந்ததொன்றாக இருக்கப் போவதில்லை. நாட்டின் பாரம்பரிய வாழ்விட, இனத்துவக் கட்டமைப்புக்களை உடைக்கும் விதத்தில் மேற்கொள்ளப்படக் கூடிய எந்த முனைப்புமே மீண்டும் ஒரு மோதலைத் தூண்டிவிடவே வழிவகுக்கக் கூடும்.
நீண்டதொரு போரின் முடிவில் அமைதியைத் தேட முனையும் ஒரு நாட்டுக்கு இது பொருத்தமான கொள்கையாகவோ, கோட்பாடாகவோ இருக்க முடியாது. நிலையான அமைதியை உருவாக்கும் அர்ப்பணிப்பும் ஆவலும் கொண்ட எந்தவொரு தலைமையும் இலங்கையில் இனங்களுக்கு இடையில் மதங்களுக்கு இடையில் பாகுபாட்டை வளர்க்கின்ற போக்கிற்கு துணையாக இருக்க முடியாது. ஆனால் மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் அதற்கு நேர் எதிர்மாறாக செயற்பட்டு வருகிறது. சிறுபான்மையினங்கள் போக்கிடமின்றி- எதிர்க்க வலுவின்றி இருக்கின்றன என்ற துணிச்சல் தான் இந்த பாகுபாடு கூர்மையடைவதற்கு முக்கியமான காரணமாகும் . ஆனால் இதையே சிறுபான்மையினங்களின் பலவீனமாக கருதிக் கொள்வது முட்டாள்தனமானது. இந்தப் இன ஒற்றுமைக்குப் தில் பாகுபாடுகளையே வளர்த்து – நாட்டைப் பலவீனப்படுத்தி விடும் என்பதை தென்னிலங்கை அறியாதிருக்காது. சர்வதேச சமூகம் இலங்கையைத் தனது கண்காணிப்பில் வைத்துள்ள சூழலில் இத்தகைய பாகுபாடுகளில் இருந்து விலகி நிற்க முனைவதே ஒரு பொறுப்புள்ள அரசின் கடமையாக இருக்க முடியும். அதை மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் செய்யுமா என்பது சந்தேகம் தான்.
கட்டுரையாளர் ஹரிகரன் இன்போ தமிழ் குழுமம்
0 கருத்துரைகள் :
Post a Comment