போருக்குப் பின்னரான மீள்கட்டமைப்புப் பரிமானங்களின் நிலையைக் காட்டும் ஒரு வரைபு, தொடக்கப் புள்ளியிலேயோ அல்லது வீழ்ச்சிப் புள்ளியிலேயோ நகராது நீண்ட காலம் நிற்கும் நிலையில் அபிவிருத்தியின் இலக்குகளும் மாற்றம் பற்றிய சிந்தனைகளும் முரண்பாடுகளிலிருந்து விலகாதனவாக தோற்றுவாய்களிலேயே தொங்கி நிற்க நிர்ப்பந்திக்கின்றன.
தமிழர்கள் புலிக்கோஷத்தை தாயகக் கோஷத்தை நிறுத்தாதவரை நமது நாட்டில் அமைதி ஏற்படும் என நினைக்கிறீரா எனச்சிங்கள நண்பர் ஒருவர் கேட்ட போது நான் திணுக்குற்றுப் போனேன்.
தமிழ் மக்கள் இங்கே பதாகைகளுடன் பாதைக்கு இறங்குவதும், பட்டினி ஊர்வலம் செய்வதும் சிங்களவர்களின் பார்வையில் புலிக்கோஷங்களாக விளங்கிக் கொள்ளப்பட்டனவா என்ற கவலையும், தமிழ் சிங்கள மக்களுக்கிடையிலான புரிந்துணர்வுகளுக்குத் தடையாக இருக்கும் பேரினவாத அரசியல் சித்தாந்தங்கள் குறித்த ஆதங்கமும் ஒன்றுக்கொன்று மிகப் பாரிய தொடர்புகளைக் கொண்டவை.
போருக்குப் பின்னரான மீள்கட்டுமானப் பணிகளில் அரசு வெளிப்படையாகக் காண்பித்து வருகின்ற புறக்கணிப்பு, மக்களின் நலன்களில் அக்கறை காண்பிக்கப்படாமை போன்றவற்றின் வெளிப்பாடாகவே தமிழ் மக்கள் தொடர்ந்தும் கோஷம் எழுப்புகின்றனர். பசிக்கிற பிள்ளைதான் அழும் என்ற மிகச் சாதாரண யதார்த்தத்தைக்கூடப் புரிந்துகொள்ள முடியாதவர்களாக சிங்களவர்களை மாற்றியது சிங்களப் பேரினவாத அரசியல் முறைமையே என்பதில் எள்ளளவும் சந்தேகம் இருக்க முடியாது.
ஆயினும், தமிழர்களின் அபிலாஷைகளை ஏற்றுக் கொள்ளத்தக்க புரிந்து கொள்ளத்தக்க முற்போக்கான சிங்களத் தனிநபர்களும், அமைப்புகளும் இல்லாமலில்லை. இருந்தபோதும், அவர்களால் தமிழ் மக்களுக்கு ஆன அல்லது ஆகக்கூடிய நன்மை என்ன என்பது கேள்வியே?
மேலும், இந்த முரண்பாடுகளின் பின்னணியில் தமிழ்த் தலைவர்களின் தூர நோக்கற்ற செயற்பாடுகளும் நியாயமான செல்வாக்குச் செலுத்தியிருப்பது ஏற்றுக்கொள்ள வேண்டியதே.
போருக்குப் பின்னர் இரு விடயங்கள் மக்களின் இயல்பு வாழ்வுக்கு மிகப்பெரும் தடையாக இருப்பது பகிரங்கமானது. ஒன்று, போர்க் காலத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டோர் மற்றும் இறுதிப்போரின்போது சரணடைந்து தடுப்பில் இருப்போரும் காணாமல் போனோரும். இரண்டாவது, உயர் பாதுகாப்பு வலயங்களால் குடியிருப்புகளை இழந்து தற்காலிக குடியிருப்புகளில் தங்கவைக்கப்பட்டுள்ளோர் மீள்குடியேற்றப்படாதோர்.
இவ்விரு வகைகளிலும் பாதிக்கப்பட்ட மக்களது கோஷங்களின் பின்னாலுள்ள நியாயங்களை எதன் அடிப்படையிலாவது புறந்தள்ள முடியுமா? தமது சொந்த வீடுகளில் புறத்தான் வாழ்வதையும் சொந்த நிலங்களின் வளங்கள் சுரண்டப்படுவதையும் எத்தனை தசாப்தங்களுக்குத்தான் சகித்துக் கொண்டிருக்க முடியும்?
கிழக்கில் திருகோணமலையிலும், வடக்கில் வன்னியிலும் யாழிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் மக்களின் சொத்துக்களையும் இராணுவம் முடக்கியுள்ளது. போர் முடிந்து மூன்று ஆண்டுகள் முடிவுற்ற பின்னரும் உரிய மக்களின் இயல்பு வாழ்வுக்கு வழி செய்யாதிருப்பதென்பது நேரடியான அடக்குமுறையின் உச்சக்கட்ட வெளிப்பாடே.
திருகோணமலை சம்பூர் பிரதேச மக்கள் 2006 ஏப்ரல் 25 இல் இடம் பெயர்ந்தவர்கள், ஆறு மாதங்களில் மீள்குடியமர்த்துவதாக அரசினால் அளிக்கப்பட்ட உத்தரவு ஆறு வருடங்களாகியும் அடைய முடியாததாகவே உள்ளது.
சம்பூர்க் கிராமத்தில் வாழ்ந்த 890 குடும்பங்களும், கூனித்தீவில் 335 குடும்பங்களும், சூரகுடா கிராமத்தில் 170 குடும்பங்களுமாக சுமார் 1,395 குடும்பங்கள் அரச உயர் பாதுகாப்பு வலயத்தினால் சொந்த வீடுகளையும் வயல் காணிகளையும் இழந்துள்ளனர்.
இவற்றுள் 573 குடும்பங்கள் கிளிவெட்டியிலும், 265 குடும்பங்கள் பட்டித்திடலிலும், 180 குடும்பங்கள் மண்சேனையிலும் மேலும் சில குடும்பங்கள் சேனையூர் மற்றும் பள்ளிக்குடியிருப்பு பகுதிகளிலும் தற்காலிக குடியிருப்புகளில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கு உலக உணவு நிறுவனத்தால் வழங்கப்பட்டுவந்த உலர் உணவு நிவாரணம் கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மின்சார, குடிதண்ணீர் வழங்கல்களும் விரைவில் நிறுத்தப்படலாம் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
வடக்கில் யாழ். மாவட்டத்தின் வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு, வலிகாமம் வடக்கு, மருதங்கேணி, யாழ். நகரின் சில பிரதே\ங்களிலும் இதே நிலையிலேயே மக்களின் குடியிருப்புக் காணிகள் இராணுவத்தால் பலவந்தமாக ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டு உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு சுமார் 8,000 ஏக்கர் குடியிருப்புக் காணிகளும், வயல் காணிகளும் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் முடக்கப்பட்டுள்ளன. இராணுவம் நிலைகொண்ட வீடுகளில் 50 வீதமானவை மக்களிடம் கையளிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்படும் அரச தகவல்களை வலுவற்றவையாகவே கொள்ளப்பட வேண்டியுள்ளது.
400 வீடுகளிலேயே இராணுவம் நிலை கொண்டுள்ளதென்றும், அவை விரைவில் உரிய மக்களிடம் கையளிக்கப்படும் என்றும் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்ததை அண்மையில் ஊடகங்களில் காணவும் கேட்கவும் முடிந்தது.
1995 முதல் யாழ். மாவட்டத்தின் வளங்கள் பொருந்திய நிலங்கள் பல இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளன. யாழில் சுமார் 20 ஆயிரம் படையினர் கடமையாற்றுகின்றனர் என்று ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அரசு தெரிவித்திருக்கிறது.
"வோர் ஹீரோஸ்' போர் கதாநாயகர்கள் எனச் சமகாலத்தில் புகழப்படுகின்ற படையினரை நிரந்தரமாகக் குடியேற்றுவதற்கான பெரும் வேலைத்திட்டங்கள் அரசால் முன்னெடுக்கப்பட்டு வருவதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் காணப்படும் அரச காணிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகளை பிரதேச செயலர் பிரிவுகள் ஊடாக மேற்கொள்ளப்போவதாக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி அண்மையில் அரச ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்த செய்தியும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
இராணுவத்தை வடக்கில் நிரந்தரமாக நிலைகொள்ளச் செய்வதற்கான பிள்ளையார் சுழியே இது. மக்களின் இயல்பு வாழ்வை முற்றாகப் பாதிக்கின்ற செயற்பாடுகள் மட்டுமன்றி, தமிழ் மக்களின் எதிர்கால அபிலாஷைகள் இருப்பு என்பவற்றை மேலும் அச்சுறுத்தலான சூழலுக்குள் முடக்குவதற்கான பெரும் சதியாகவும் இது பார்க்கப்படவேண்டியது.
இராணுவ நிலைகொள்ளல் காரணமாக வடக்கில் பொருளாதார முடக்கம், பொருளாதார ரீதியான அப்பட்டமான சுரண்டல் நிலையும், முற்றுமுழுதாக இராணுவ மயப்படுபத்தப்பட்ட நிர்வாக அமைப்பும் காணப்படுகின்றது.
சமூகமயப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிப்பு, எத்தகைய ஒன்றுகூடல்களுக்கும் சமூக செயற்பாடுகளுக்கும் இராணுவத்திடம் அனுமதி கோரவேண்டிய நிலை என்பன இராணுவ நிர்வாகத்தை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றன.
உயர் பாதுகாப்பு வலயங்கள் அல்லது முகாம் பகுதிகள் என்று கூறப்படும் இடங்களில் வாழிடங்களை இழந்து தற்காலிக குடியிருப்புகளில் துயருற்றிருக்கும் மக்களும் அவர்களுக்கு ஆதரவாக சமூக நிறுவனங்களும் இணைந்து நடத்துவதற்கு ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்துக்கு யாழ். நீதிமன்றம் அனுமதி வழங்க மறுத்துள்ளது.
வடக்கில் குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் எந்தவொரு ஒன்றுகூடலை நடத்துவதற்கும் அந்தந்தக் கிராமங்களில் இருக்கின்ற இராணுவ முகாம்களின் அனுமதியைப் பெறவேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகின்றது.
ஒன்று கூடலில் இராணுவ உறுப்பினர்களும் கலந்துகொள்வதுடன், கலந்துரையாடல்களைத் தமிழிலிருந்து சிங்களத்துக்கு மொழிபெயர்க்க வேண்டும் என்ற கட்டாய நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன.
முற்றிலும் ஜனநாயகத்துக்கு எதிரான இச்செயற்பாடுகளில் மக்களின் இயல்புவாழ்வுக்கு பச்சையாகத் தடையாக இருக்கின்ற அடிப்படை உரிமைகளை எதிர்த்து தமிழர் கோஷம் எழுப்புவதென்பது எந்த வகையிலும் நியாயமற்றதோ அல்லது புலிக்கோஷம் என அடையாளப்படுத்தத் தக்கதாகதோ அல்ல.
இராணுவ மயப்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கைகளினால் உடைந்து தகர்ந்த வீடுகளில் சுவர்களின் இடிபாடுகளை பொலித்தீன் துண்டுகளால் மறைத்தபடி மீளக்குடியேறியுள்ள மக்களும் கூட அசௌகரியங்கள் நிறைந்த அச்சம் சூழ்ந்த நிலையிலேயே வாழ்கின்றனர். போரின் பின்னர், போரால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களின் மிக அத்தியாவசியமான தேவைகளில் உள ஆற்றுப்படுத்துகையும் மிகப்பிரதான இடம் வகிக்கின்றது.
போரின் முடிவைத் தொடர்ந்து இடம்பெறுகின்ற நடவடிக்கைகளில் அனேகமானவை மக்களின் மனதை கிலேசமடையச் செய்வனவாகவே அமைகின்றன.
சொந்த இடங்களையும் தொழில் செய்வதற்கான வயல் காணிகளையும் இழந்து தொழிலற்று நிற்கும் உள்ளூர் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நியாயமான வாய்ப்புகள்கூட மறுக்கப்பட்டுள்ளன.
இராணுவ உறுப்பினர்கள் வெளிப்படையான வியாபாரச் செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர். தொலைத் தொடர்பு நிலையங்களை நடத்துதல், தெற்கிலுள்ள உற்பத்திகளை சந்தைப்படுத்துதல் போன்ற செயற்பாடுகளிலும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இது உள்ளூர் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகளை இழக்கச் செய்து நேரடியான பொருளாதாரச் சுரண்டலுக்குள் மக்களை முடக்கியுள்ளது. தமிழ் மக்களின் உரிமைக் கோஷங்களை முற்றிலும் புறந்தள்ளிய நிலையில் ஜனநாயகத்துக்கு எதிராகவும் வடக்கை முற்றிலும் இராணுவ நிர்வாகத்தின் கீழும் நிலைப்படுத்துவதற்கான செயற்பாடுகளின் பல்பக்க வெளிப்பாடுகளே இவை.*
நன்றி - உதயன்
0 கருத்துரைகள் :
Post a Comment