லண்டனில் மகாராணியின் விருந்துக்கு தனது வாகனத்தில் இருந்த சிங்கக்கொடியை அகற்றிவிட்டு இரகசியமாகச் செல்ல வேண்டிய நிலை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்டுள்ளது. பிரித்தானிய மகாராணிக்கு கொமன்வெல்த் செயலர் அளித்த மதிய விருந்தில் பங்கேற்ற சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மத்திய லண்டனில் பால் மாலில் இருந்து பேரணியாகச் சென்ற சுமார் 1500இற்கும் அதிகமான தமிழர்கள், விருந்துபசாரம் இடம்பெற்ற மல்பரோ ஹவுஸ் முன்பாக இன்று காலை ஒன்று கூடிப் போராட்டத்தை நடத்தி வந்தனர்.
மதியம் அளவில் மேலும் பெருமளவிலானோர் அவர்களுடன் இணைந்து கொண்டனர்.
பேரணியில் சிறிலங்கா அதிபரின் கொடும்பாவி இழுத்துச் செல்லப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டதுடன் தீயிட்டு எரிக்கப்பட்டது.
சுமார் 3000 இற்கும் அதிகமான தமிழர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மல்பரோ ஹவுஸ் விருந்தில் பங்கேற்க வந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோன் உள்ளிட்ட 70இற்கும் அதிகமான வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் விருந்தினர்கள் தமிழர்களின் இந்த எதிர்ப்புப் பேரணியை பார்த்துச் சென்றனர்.
விருந்தினர்கள் கடந்து சென்றபோது, 'சிறிலங்கா அதிபர் போர்க்குற்றவாளி' என்ற முழக்கம் கடுமையாக எதிரொலித்தது.
பிரதான வாயில் வழியாக மகிந்த ராஜபக்ச மல்பரோ ஹவுசில் நுழைந்த போதும், அவரது வாகனத்தில் சிறிலங்காவின் தேசியக் கொடியான சிங்கக்கொடி பறக்கவிடப்பட்டிருக்கவில்லை.
பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது வாகனத்தில் இருந்த சிங்கக்கொடி அகற்றப்பட்டிருந்த்து குறிப்பிடத்தக்கது.
மல்பரோ ஹவுசில் விருந்துபசாரத்தில் பங்கேற்ற வெளிநாட்டுத் தலைவர்களை வரவேற்றபோது, எலிசபெத் மகாராணி சிறிலங்கா அதிபர் மகிநத ராஜபக்சவையும் கைலாகு கொடுத்து வரவேற்றார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் லண்டனில் தமிழர்கள் நடத்தியுள்ள மிகப்பெரிய போராட்டம் இதுவென்று பிரித்தானிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment