இலங்கைக்கு சார்பான நாடு, சார்பற்ற நாடு என்ற வித்தியாசமின்றி சர்வதேச நாடுகளுக்கும் சென்று பரஸ்பர பேச்சுக்களில் ஈடுபாடு மாநாடுகளில் பங்குபற்றுகை, ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுகை எனப் பல இன்னோரன்ன நடவடிக்கைகளில் ஜனாதிபதி அக்கறை காட்டிவரும் காலம் இது. ஊர்ப் பேச்சுக்கள், ஊடகங்கள், பல தகவல்களை வெளிக் கொணர்ந்தாலும் சற்றேனும் சறுக்காதவர் போல் தோன்றக் கூடிய ஜனாதிபதி தமது லண்டன் விஜயத்தின் போது ஏற்பட்ட சங்கடங்கள் தொடர்பில் சலனம் காண்பிக்கவில்லையாயினும் அங்கு இடம்பெற்ற அசாதாரண நிகழ்வுகள் தொடர்பில் அதைரியப்படாவிடினும் அகௌரவப்பட்டிரார் என்பதற்கில்லை.
லண்டனின் குறித்த நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டதற்கான காரணம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட புலிகளின் ஆதரவாளர்களையும் உள்ளடக்கியதாக 3000 அளவான தமிழர்களின் ஆர்ப்பாட்டம் என தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்க உடன்பட்டிருந்ததாக பல பிரிட்டிஷ் ஊடக நிறுவனங்கள் கூறியிருந்ததாக ஸ்கொட்லண்ட் யாட் பேச்சாளர் மேற்கொள் காட்டப்பட்டார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பரஸ்பரம் ஆதரவாகவும் எதிராகவும் எதிர்ப்பலைகளை வெளிப்படுத்தியதாக அறிய முடிந்தது. தமிழ்க் குழுவினர் ஸ்ரீ லங்கா ஜனாதிபதி யுத்தக் குற்றவாளி என்றும் இலங்கையை ஆதரிக்கும் மற்றுமொரு குழுவினர் வேறு ஒரு முனையில் நின்று கொண்டு ராஜபக்ஷ எங்களது அரசர் ராஜபக்ஷ எமது தலைவர் என்று ஆடிப்பாடி கோஷமிட்டனர்.
இத்தகைய நிகழ்ச்சிகள் கடந்த வருடம் டிசம்பரில் ஜனாதிபதி லண்டனுக்கு சென்றிருந்த போது நடந்ததையே மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருகிறது. அன்று ஒக்ஸ்போட் யூனியனில் உரையாற்ற விருந்த முதல் இலங்கை நாட்டுத் தலைவர் என வர்ணிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஷ பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி அதிகம் முக்கியத்துவப்படுத்தப்பட்டது. முன்பதாக ஒக்ஸ்போட் யூனியன் அங்கத்தவராகவோ அல்லது பதவியஸ்தராகவோ இருந்திராத இலங்கை ஜனாதிபதி ஒரு சிறப்புரையாளராக அழைக்கப்பட்டிருந்தமை ஒரு பெருமையாக முக்கியஸ்தர்களால் கருதப்பட்டது.
ஜனாதிபதி ராஜபக்ஷவின் உரையை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை செய்யவுள்ளதாக தமிழ்க் குழுக்கள் கூறியதைத் தொடர்ந்து தங்களால் ஒக்ஸ்போட் வீதி முழுக்கவும் பாதுகாப்பு வழங்க முடியாதென்று பொலிஸ் கூறியதன் நிமித்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உரையை இரத்துப் பண்ண வேண்டிய நிலை தோன்றியது. ஒக்ஸ்போட்டில் அன்றிருந்த கிறிஸ்மஸ் ஷொப்பிங்குக்கும் இடையூறாக இருந்திருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
அன்றும் இன்றும் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்ற சிக்கல்களுக்குள்ளாகி தப்பித்ததாக கூறப்படுகிறது. ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர் முந்திய ஜனாதிபதியின் விஜயத்தின் போது நீதிமன்ற நடவடிக்கையை எதிர்நோக்கியதாகவும், ஆனால் சம்பந்தப்பட்ட கட்டளை நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட தருணம் குறித்த அதிகாரி கொழும்பை நோக்கி திரும்பிக் கொண்டிருந்த பயணத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தடவையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுக்களில் ஒன்றான லண்டனைத் தளமாகக் கொண்ட உலகத் தமிழர் போரம் இலங்கை ஜனாதிபதியுடன் சென்றிருந்த இரு முக்கிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த விஸா இரத்து செய்யப்பட வேண்டும் என நீதிமன்றத்தைக் கோரியிருந்தது. தமிழர் போரத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் சம்பந்தப்பட்ட கோரிக்கை தவறாக புனையப்பட்டதாகவும், பிரிட்டனுக்குள் நுழைய ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்து முக்கியஸ்தர்களை வெளியேற்றுவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ளும் தேவை எழவில்லை என்றும் கூறியது.
குறித்த மனு மூலமான கோரிக்கை, காலம் பிந்தியதாக அமைந்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி சம்பந்தப்பட்ட இலங்கை பொலிஸ் அதிகாரிகள் ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்ட நிலையில் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதியுடன் இணைந்து கொள்ள வந்தடைந்து விட்டனர் என்று தெரிவித்தார். எவ்வாறாயினும் உலகத் தமிழர் போரம் யுத்தக் குற்றங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு குறித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளான ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த அங்கத்தவர்களுக்கு விஸா வழங்கியிருந்த கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் தீர்மானத்தை தமது மனுவின் மூலம் சவாலுக்குட்படுத்தியிருந்தது. அவ் விருவருக்கும் வழங்கப்பட்ட விஸா அனுமதி வாபஸ் பெறப்பட வேண்டும் என நீதிமன்றத்தை கோரியிருந்தனர். ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது.
எவ்வாறாயினும் ஒக்ஸ்போட் விவகாரத்தின் போதும் லண்டனுக்கான விஜயத்தின் போதும் முன்னுரிமைப்படுத்தப்பட்ட விளம்பர அணுகுமுறையில் பாரிய வித்தியாசமிருந்ததாகக் கூறப்படுகிறது. ஜனாதிபதியின் ஒக்ஸ்போட் விஜய காலத்தின் போது பிரிட்டனிலோ அல்லது வெளிநாட்டு ஊடகங்களிலோ பாரிய விளம்பரப்படுத்துகை இருக்கவில்லை எனக் கூறும் சர்வதேச நோக்கர்கள் அது ஒக்ஸ்போட்டில் ஒரு உரையாற்றும் குறிப்பிட்ட விவகாரமாக அமைந்திருந்ததாக கூறினார்.
ஆனால் சமீபத்திய ஜனாதிபதியின் லண்டன் விஜயம் மற்றும் நிகழ்ச்சிகள் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் ஊடாகவும் செய்தி ஸ்தாபனங்கள் மூலமாகவும் பல நாட்களாக பிரித்தானியாவின் மூலை முடுக்குகளையும் உலகின் பல பிராந்தியங்களையும் ஆக்கிரமித்திருந்தன. குறிப்பாக எலிஸபெத் மகாராணியாரின் வைர விழா கொண்டாட்டங்களின் உலகளாவிய நேரடி ஒளிபரப்பின் போது இலங்கை மீதும் ஜனாதிபதி மகிந்த மீதும் கூடுதல் கவன ஈர்ப்பு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அத்தகைய கவனஈர்ப்புக்கான காரணங்களாக போர்க்குற்றச் சாட்டுக்கள் இலங்கை மீதான ஜெனீவாத் தீர்மானம் போன்றவையாக இருக்கலாம். அநேகமாக பிரிட்டிஷ் பத்திரிகை ஒவ்வொன்றிலும் வைரவிழாக் கொண்டாட்டங்கள் தொடர்பான செய்திகள் முன்பக்கத்தை அலங்கரித்திருப்பினும் இலங்கை ஜனாதிபதியை மனிதஉரிமைகளை மீறியவர் என்ற தோரணையிலும் குற்றஞ்சாட்டியிருந்தன. கவலை என்னவென்றால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் கொடும்பாவியை காவிச் சென்றமை வீதிகளில் போட்டு எரித்தமையாகும். கொடும்பாவியின் கழுத்தைச் சுற்றியதாக ஒரு கயிற்றைப் போட்டு ஒரு பெரிய துணியில் தொங்கவிட்டமை இலங்கைப் பிரஜைகளால் பொறுத்துக் கொள்ள முடியாததாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
சுயமரியாதையுள்ள எந்த இலங்கையனும் எத்தகைய அரசியல்கோட்பாடுகளை கொண்டிருப்பினும் நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஒருவர் வெளிநாட்டு மண்ணில் வைத்து அவமானப்படுத்தப்படுவதை காண்பதற்கு விரும்பான். இதனை ஒரு அளவு கடந்த மிலேச்சத்தனமான செயல் எனக்குறிப்பிடும் அக்கறையுள்ள பிரஜைகள் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் உண்டு பண்ணிய செயல் என ஆதங்கப்படுகின்றனர். லண்டன் வீதிகளில் இலங்கையின் நற்பெயர் களங்கப்படும் வகையில் நாட்டுப்பிரச்சினைகள் வியாபிப்பு கண்டுள்ளதையிட்டு புத்திஜீவிகள் கவலையடைந்துள்ளனர்.ஆசியாவில் சிறந்த ராஜதந்திரி என்ற விருதைப் பெற்றுக்கொண்டவர்கள் கூட ஜனாதிபதியின் லண்டன் விஜயத்தை செம்மையாக்கவும் செப்பனிடவும் தவறிவிட்டதான குற்றச்சாட்டுகளுமுண்டு.
எவ்வாறாயினும் பிரிட்டனில் இலங்கையைபிரதிநிதித்துவப்படுத்தும் ராஜதந்திரி தனது சொந்த ஜனாதிபதி லண்டனுக்கு விஜயம் செய்கையில் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை சரியானமுறையில் கணிப்பீடு செய்ய முடியாதிருந்த இயலாமை சுட்டிக்காட்டப்படுகிறது. முன்னர் அங்கிருந்த ராஜதந்திரி இலங்கை வெளிக்கொணர்ந்த ராஜதந்திரிகளில் சிறந்தவராக கருதப்படக்கடியவரல்ல என்று கூறப்பட்ட அந்நபர் குறைந்தபட்சம் கடந்த டிசம்பரில் ஒக்ஸ்போர்ட்டுக்கு ஜனாதிபதி வருவது உசிதமானதல்ல என்பதை எச்சரித்திருந்தாராம். தற்போதைய ராஜதந்திரி பொதுநலவாய வர்த்தக சங்கத்தில் ஒரு பணிப்பாளர். ஆபிரிக்காவிலும் கடமையாற்றியுள்ள அவர் ஒரு வர்த்தகரும் கூட. ஆயினும் கவுன்சிலின் பணிப்பாளர் என்ற கோதாவில் ஜனாதிபதி பொதுநலவாய வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் அமர்வில் உரையாற்றுவதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாமல் போய்விட்டது.
ஜேர்மன்,பிரான்ஸ் போன்ற தூர இடங்களில் இருந்தெல்லாம் பயணம் செய்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்றுகூடியமை ஒரு பெரிய ரகசியமல்ல என்பதை அசௌகரியத்துக்குள்ளான வெளிநாட்டமைச்சின் அதிகாரிகள் உணருகின்றனர். குறித்த ஜனாதிபதியின் உரை இரத்துச் செய்யப்படாவிட்டால் அவரது உரையை அசௌகரியப்படுத்தும் வகையில் செயல்படவென தமிழர் ஆதரவுக் குழுக்கள் குறைந்தது ஐம்பது நுழைவுச்சீட்டுகளையேனும் தமது இரண்டாவது நடவடிக்கையாக கொள்வனவு செய்திருந்ததாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவித்தன.
நாட்டுத் தலைவர், அரச தலைவர் என்றடிப்படையில் இல்லையென்றாலும் அடுத்த வருடம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் தலைவர் என்ற வகையில் பிரிட்டிஷ் பிரதமரை ஜனாதிபதி சந்திக்க விரும்பினார். பொதுநலவாய செயலக தலைமையான கமலேஷ்சர்மா வழங்கிய விருந்துபசாரத்தில் வைத்து ஒரு சில வார்த்தைகளை பிரிட்டிஷ் பிரதமரோடு பேசக்கிடைத்ததாக அறிய முடிந்தது. நாட்டின்அபிவிருத்தி தொடர்பான ஒரு சிநேக பூர்வ சந்திப்பு என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் கூறின.
ஆனால் பிரிட்டிஷ் பிரதமரின் பேச்சாளரை மேற்கோள்காட்டி அங்கு ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கள் பின்வருமாறு அமைந்திருந்ததாம். இலங்கையில் போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உரிய முறையில் விசாரிக்கப்படுவதை உறுதிப்படுத்தப்படுவதை பேசியதாகவும் பகல் போசனத்துக்காக 52 நாடுகளைச் சேர்ந்த பொதுநலவாய தலைவர்கள் ஒன்றுகூடியதால் இருவருக்கும் இடையில் ஒரு நீண்ட சம்பாஷணை சாத்தியப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.
எது எவ்வாறாயினும் பிரிட்டனிலும் ஏனைய இடங்களிலும் லண்டன் விவகாரம் தொடர்பில் வெளியாகியிருந்த அறிக்கைகள் மற்றும் வித்தியாசமான தலைப்புகள் நிதர்சனமான நிலைமைக்கு அசௌகரியமான சூழலை தோற்றுவித்தன. என்று அபிப்பிராயம் தெரிவிக்கப்படுகின்றது. பிரிட்டனின் கார்டியன் செய்தி வெளியிடுகையில் ஆர்ப்பாட்ட அச்சங்கள் காரணமாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி தனது உரையை ரத்துச் செய்யவேண்டிய பலவந்தத்துக்குள்ளானதாக குறிப்பிட்டிருந்தது.
லண்டன் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் தனது செய்தியில் பொதுநலவாய பகற்போசனத்தில் தமிழர் ஆர்ப்பாட்டம், நூற்றுக்கணக்கான மனிதஉரிமை ஆர்வலர்கள் மத்திய லண்டனிலுள்ள மல்பரோ இல்லத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆஆஇ உலக சேவை தொலைக்காட்சி கூறுகையில், பொதுநலவாய தலைவர்களுக்கான ராஜ்ய பகல் போசனத்தை தமிழர் எதிர்க்கின்றனர். பகல் போசனத்துக்கான இலங்கை ஜனாதிபதியின் பிரசன்னத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யப்படுகின்றது என்று தெரிவித்தது. க் ஹிந்து பத்திரிகை தனது செய்தியில் ராஜபக்ஷ மறுபடியும் லண்டனில் ஆற்றவிருந்த உரையை ரத்துச் செய்வதாக கூறியிருந்தது.
மிகப் பிந்திய இலங்கைச் செய்திகளின் படி புலிஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக ஆற்றவிருந்த உரையை ரத்துச்செய்ய நேர்ந்தமையையிட்டு பிரிட்டிஷ் பிரதமர் இலங்கை ஜனாதிபதியிடம் வருத்தம் வெளியிட்டபோது தனது 42 வருட கால அரசியல் வரலாற்றில் ஆர்ப்பாட்டங்களுக்கு பழக்கப்பட்டவன் என்பதாலும் பொதுநலவாய மாநாட்டு ஏற்பாட்டாளர் என்பதாலும் கவலைப்படத் தேவையில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பதிலளித்தாராம்.
எது எவ்வாறாயினும் ஏற்புடைய நியமங்கள் மறுக்கப்பட்டு ஒரு ஜனாதிபதிக்கு அசௌகரியமும் ஒரு தேசத்துக்கு அவமானமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.
இஸ்மாயில் பி.ம.ஆரிஃப்
கட்டுரையாளர்சட்டத்தரணியும் சுயாதீன தேசிய முன்னணியின் தலைவருமாவார்.
நன்றி - தினக்குரல்
0 கருத்துரைகள் :
Post a Comment