வறுமையில் வாழும் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய சர்வதேச விமர்சனத்தின் மத்தியில், அரசாங்கம் யுத்த அகதிகளை "மீள்குடியேற்றுதல்' என்னும் தனது பிரசாரத்தினை ஆரம்பித்தது. அகதிகளில் 90 வீதமானவர்களை மீளக்குடியமர்த்தியுள்ளதாக வலியுறுத்தியுள்ள அரசாங்கம், அவர்களது வாழ்க்கை யுத்தத்திற்கு முன்னர் இருந்ததைவிட நல்ல நிலையில் இருப்பதாக கூறிக் கொள்கின்றது.

2009 மே மாதம் யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்டது. ஆயினும், முன்னாள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான இலங்கையின் வடக்கில் வன்னியில் வாழ்கின்ற "மீள்குடியமர்த்தப்பட்டுள்ள' தமிழர்கள் மிகவும் பரிதாபகரமான நிலையில் வாழ்கின்றனர். பின்வரும் கட்டுரை அந்தப் பிரதேசத்துக்கு விஜயம் செய்த உலக சோசலிச வலைத்தள நிருபர்கள் குழுவால் தயாரிக்கப்பட்டது. வெளிப்படையான பாதுகாப்புக் காரணங்களுக்காக குடியிருப்பாளர்களின் பெயர்கள் வெளிப்படுத்தப்படவில்லை.

கிளிநொச்சியில் இருந்து 13 கிலோமீற்றர் தூரத்தில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள தர்மபுரம் கிராமத்துக்கு சென்றது. அக்கிரமம் யுத்தத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டதாகும். மீளக் குடியமர்த்தப்பட்டதில் இருந்து 6 மாதங்கள் மட்டும் உணவு, நிவாரணம் வழங்கப்பட்டது. தற்போது அகதிகளுக்கு பொருத்தமான வேலையோ அல்லது வருமானமோ இல்லை. அடிக்கடி உணவு இல்லாமல் நாட்களைக் கடத்துகின்றார்கள். இந்தக் கிராமத்தின் முதலாவது பரம்பரையினர், 1950 களில் ஏற்பட்ட தமிழர் விரோத இனக்கலவரம் காரணமாக வெளியேறிய இலங்கையின் மத்திய மாகாணங்களில் வாழ்ந்த தோட்டத் தொழிலாளர்கள் ஆவர். அவர்களுடன் 1990 களில் யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து அகதிகளான மக்களும் கலந்து வாழ்கின்றனர். 

யுத்தத்தின் இறுதிக் கட்டதின் போது தர்மபுரம் வாசிகள் அகதிகளாக வெளியேறி முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்தார்கள். தர்மபுரம் கிராமத்தை 2009 ஜனவரி 15 அன்று இலங்கை இராணுவத்தினர் புலிகளிடம் இருந்து கைப்பற்றினர்.தர்மபுரத்தில் உள்ள தரப்பாள் குடிசைகூடுதலான மக்கள் இன்னமும் யு.என்.எச்.சி.ஆர். நிறுவனத்தினால் வழங்கப்பட்ட தரப்பாள்களினால் அமைக்கப்பட்ட குடிசைகளின் கீழ் வாழ்கின்றனர். அதற்குப் பின்னர், கூரைக்கு உபயோகிப்பதற்காக அவர்களுக்கு 8 தகரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடிசையும் 8 து 8 அடி நீள அகலம் கொண்ட ஒரு அறையைக் கொண்டதாகும். அதைத்தான் படுக்கை அறை, சமையல் அறை மற்றும் வரவேற்பறையாகவும், பயன்படுத்துகின்றார்கள். வெப்பமான காலங்களில் தகரக் கொட்டில்களின் கீழ் தொடர்ந்தும் இருக்க முடியாது.குடியிருப்பாளர்களுக்கு நிரந்தர வேலைகள் கிடையாது. அவர்கள் உயிர்வாழ்வதற்காக தினக் கூலி வேலைகளையே நம்பியிருக்கின்றனர்.

ஒரு சில வீடுகள் அரசாங்க உதவியுடன் கட்டப்பட்டுள்ள போதிலும், கூடுதலான மக்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை. ஒரு புதிய வீடு கட்டுவதற்கு 600,000 செலவாகின்ற போதிலும், அரசாங்கம் 325,000 ரூபா (2.470 அமெரிக்க டொலர்) மட்டுமே வழங்கியுள்ளது. குடியிருப்பாளர்கள், வீட்டின் எஞ்சிய பகுதியை கட்டுவதற்காக கடன் வாங்க முயற்சிக்கின்றனர். ஒரு பெண் விளக்கியது போல், அரசாங்கம் (ஒரு வீட்டுக்கு) 325,000 ரூபா தருவதாக உறுதியளித்திருந்தது. ஆனால் நாங்கள் 225,000 ரூபா மட்டுமே பெற்றுள்ளோம். நாங்கள் மீதியை வழங்குமாறு அதிகாரிகளிடம் வேண்டிக் கொண்டோம். ஆனால் வீட்டினைக் கட்டி முடித்த பின்பு தான் மீதிப் பணம் எங்களுக்கு தரப்படும் என்று அவர்கள் கூறியுள்ளார்கள். ஒரு வேளை கஞ்சிக்கே நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம். இந்த நிலையில் எவ்வாறு மீதிப் பணத்தினை தேடுவது?அவருடைய கணவர் பேசும் போது, நான் தினமும் சந்திக்குப் போய் ஏதாவது வேலைக்காக காத்திருப்பேன். யாராவது எனக்கு வேலை கொடுத்தால், அதன் மூலம் பெறும் பணத்தினைக் கொண்டு எனது குடும்பத்திற்கு உணவளிப்போன். வேலை கிடைக்காவிட்டல், நாங்கள் பட்டினி கிடப்போம் அல்லது கடையில் கடன் வாங்குவோம். நாங்கள் ஒரு நாளைக்கு ஒரு வேலைதான் சாப்பிடுகின்றோம். சில வேளைகளில் அதுவும் இல்லாமல் இருப்போம் என்றார்.

13 வருடங்களுக்கு முன்னர் கணவனை இழந்த மூன்று பெண் பிள்ளைகளின் தாயார் கூறியதாவது; நான் ஒரு வீட்டுக்கான உதவியை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொள்ளவில்லை. நான் அதிகாரிகளிடம் கேட்ட போது, வீட்டுத் திட்டம் வந்தால் தருவதாக கூறுகிறார்கள். அநேகமானவர்கள் அந்தளவுக்குக் கூட முயற்சிக்கவில்லை.எனக்கு நிரந்தரமான வேலை கிடையாது. நான் எனது தந்தையின் உதவியுடன் விவசாயம் செய்து வந்தேன். ஆனால் நில உரிமையாளர்கள் தங்களின் நிலத்துக்கு கூடுதலான குத்தகைப் பணம் கேட்பதால் தொடர்ந்து விவசாயம் செய்வது சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. இந்த குத்தகை கொடுப்பதற்காக ஒத்துக் கொண்டிருந்தால், மீண்டும் மீண்டும்  கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். ஆனால் எல்லாம் முடிந்த பின்னர் கையில் ஒன்றும் இருக்காது என அவர் கூறினார்.

இந்தப் பெண்ணைப் போல் பல குடியிருப்பாளர்களுக்கு, குடியமர்ந்தவர்களுக்கான சர்வதேச நிறுவனம் (ஐ.ஓ.எம்.) ஒருவருக்கு 50,000 ரூபா கோழிப் பண்ணை அமைப்பதற்காக வழங்கியிருந்தது. இதில் 20,000 ரூபா மானியமாகவும், 30,000 ரூபா 10 மாதங்களில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய கடனாகவும் வழங்கப்பட்டது. எவ்வாறாயினும் நோய் தொற்றியதால் எல்லாக் கோழிகளும் இறந்தன. இந்தப் பிரதேசத்தில் கால்நடை வைத்தியர் யாரும் கிடையாது.அவர்கள் ஐ.ஓ.எம். நிறுவனத்திடம் கடனைத் தள்ளுபடி செய்யுமாறு வேண்டிக் ச்கொண்ட போதிலும், அந்த உதவி நிறுவனத்தின் அதிகாரிகள் பணத்தினை மீளச் செலுத்துமாறு வற்புறுத்தினார்கள். நாங்கள் உயர்ந்த வட்டிக்கு கடன்பட்டே கடனை திருப்பிச் செலுத்தினோம். நாங்கள் எங்களுக்கு தேவையானதை பெற்றுக்கொள்ள முனைந்து முடிவில் நாங்களே கடன்காரர் ஆகிவிட்டோம். நாம் சம்பாதித்தது அது மட்டுமே என அந்தப் பெண் கூறினார்.

கிராமவாசிகள் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கும் முகம் கொடுத்துள்ளார்கள். அங்கே சில கிணறுகள் இருந்த போதிலும், குழாய் நீர் விநியோகம் கிடையாது. அவர்களுக்கு ஒரு கிணறு தோண்டுவதற்கு குறைந்தது 200,000 ரூபா தேவை. பல குடும்பங்கள் குளிப்பதற்கும் உடைகள் கழுவுவதற்கும் ஒரு சிறிய குளத்தினை பயன்படுத்தத் தள்ளப்பட்டுள்ளன. அதே குளத்தில் மிருகங்களும் குளிப்பதனால் தண்ணீரால் பரவும் தொற்று நோய்களுக்கு உள்ளூர் வாசிகள் அகப்படுகிறார்கள். இக்கிராமத்தில் மலசல கூட வசதிகளும் மற்றும் மின்சார வசதிகளும் கிடையாது. சிறுவர்கள் பாதுகாப்பற்ற குப்பி விளக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் மங்கலான வெளிச்சத்தில் தான் இரவில் படிக்கின்றார்கள்.ஒரு வன்னி குடியிருப்பாளர் அவரின் குடிசைக்கு வெளியே  இக் கிராமத்தில்  உள்ள பாடசாலையில் க.பொ.த. உயர்தர வகுப்புக்கள் இருக்கின்ற போதிலும், அதற்கான ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. குறிப்பாக விஞ்ஞானம் மற்றும் கணிதப் பிரிவுகளுக்கே இப்பற்றாக்குறை நிலவுகின்றது.  இதனால் அவர்களுக்கு தனியார் வகுப்புக்கள் தேவைப்படுகின்றன. பல்கலைக்கழக நுழைவுக்காக கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்கள் கற்க வேண்டுமானால், அவர்கள் யாழ்ப்பாணம் அல்லது கிளிநொச்சிக்கு செல்ல வேண்டும். 

தர்மபுரத்தில் உள்ள சிறிய அரசாங்க வைத்தியசாலை அடிப்படை உபகரணங்கள் மற்றும் ஊழியர் பற்றாக்குறையுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த வைத்தியசாலை கல்மடு, வட்டக்கச்சி, உடையார்கட்டு, விஸ்வமடு போன்ற கிராமங்களுக்கும் சேவையாற்றுகின்றது.வைத்தியசாலை ஊழியர்கள் வசதி பற்றாக்குறை பற்றி ஊடகங்களுடன் பேசுவதை அரசாங்கம் தடை செய்திருந்த போதிலும், ஒரு ஆஸ்பத்திரி ஊழியர் பின்வருமாறு தெளிவுபடுத்தினார்;இந்த ஆஸ்பத்திரிக்கு ஆறு வைத்தியர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் ஒரு வைத்தியர் மட்டுமே இங்கு சேவையாற்றுகின்றார். கட்டில்கள் பற்றாக்குறை நிலவுகின்றது. மருத்துவ பரிசோதனைக்கான ஆய்வு கூடங்கள் கிடையாது. குறைந்தது, மலேரியாவைப் பரிசோதிப்பதற்கான வசதிகள் கூட இங்கு கிடையாது.

யுத்தத்தின் போது இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் இரண்டு தடவைகள் காயப்பட்ட ஒரு 22 வயது தாய் கூறியதாவது; எனது உடம்பு முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளது. எனது முகவாய்கட்டையில் ஒரு துப்பாக்கிச் சன்னம் உள்ளது. நான் அதை வெளியே எடுப்பதற்காக கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிகளுக்கு போனேன். ஆனால் அவர்கள் என்னை கொழும்பு ஆஸ்பத்திரிக்கு போகுமாறு கூறிவிட்டார்கள். ஆனால், அந்த சிகிச்சைக்கு எனக்கு 200,000 தேவைப்படுகிறது. செல் தாக்குதலால் எனது கணவன் இடது கையை இழந்துள்ளார். அவரின் வலது கண்ணும் மோசமாக காயமடைந்துள்ளது. அவரால் கடுமையான வேலைகளைச் செய்ய முடியாது. எங்களுக்கு சிகிச்சை தேவை. ஆனால், சிகிச்சைக்கான காசு இல்லை.

யுத்தத்தின் போது தங்களின் குடும்ப பராமரிப்பாளர்களை இழந்துள்ளார்கள். வயோதிப குடியிருப்பாளர்கள் தினமும் உணவுக்காக நம்பிக்கையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். எண்பது வயதான பிலிப்பையா இராஜநாயகம், 2009 இல் இடம்பெற்ற செல் தாக்குதலால் தனது 30 வயது மகனை இழந்துள்ளார். பிலிப்பையாவும் அவரது மனைவியும் கிளிநொச்சியில் உள்ள பன்னங்கண்டி கிராமத்தில் வாழ்கின்றனர். அவர் உணவுக்காக அயலவர்களிடம் கெஞ்சும் நிலையில் உள்ளார். ஆனாலும்  அயலவர்களும் வறுமைக்குள் தான் வாழ்கின்றனர். நாங்கள் சந்தித்த அனைவரும் தமது துன்பமான நிலைமைகள் பற்றிய கசப்பையும் அரசியல் கட்சிகள் பற்றிய தங்களின் வெறுப்பையும் வெளிப்படுத்தினார்கள். 

கட்சிகள் வாக்குகளுக்காக மட்டுமே எங்களிடம் வருகின்றன என்பது பொதுவான கருத்தாக இருந்தது .கீதாஞ்சலி (ஆளும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு அமைப்பாளர்) இங்கு வருவார். அவர் எந்நேரமும் தங்களின் கூட்டங்களுக்கு ஆட்களைத் திரட்டும் நோக்கத்துடன் பெண்களுக்கு ஒரு நல்வாழ்வு பற்றியே பேசுவார். ஆனால் அவர் எங்களுக்குப் பிரயோசனமாக எதுவும் செய்வதில்லை என ஒரு பெண் கூறினார்.இன்னொரு கிராமவாசி இலங்கையின் பிரதான தமிழ் முதலாளித்துவக் கட்சியான, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பற்றி கூறும் போது, அவர்கள் எங்களிடம் வாக்குகளுக்கு மட்டும் வருவார்கள். ஆனால், அவர்களால் எங்களுக்கு எதுவித பிரயோசனமும் கிடையாது. இறுதித் தேர்தல்களின் போது, நாங்கள் அவர்களுக்கு வாக்களித்தோம். அதற்குப் பின்னர் அவர்கள் எங்களிடம் வருவதேயில்லை என்றார்.உலக சோசலிச இணையத்தளத்திலிருந்து

தினக்குரல்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment