சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று லண்டனில் கொமன்வெல்த் பொருளாதார மன்றத்தின் ஏற்பாட்டில் மன்சன் ஹவுசில் நிகழ்த்தவிருந்த உரை இறுதி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.சிறிலங்கா அதிபருக்கு எதிராக லண்டனில் தமிழர்கள் நடத்தும் போராட்டங்களின் எதிரொலியாக - அவரது உரை இடம்பெறவிருந்த இன்றைய காலை நிகழ்வே முற்றிலும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
கொமன்வெல்த் பொருளாதார மன்றத்தின் ஏற்பாட்டில் மன்சன் ஹவுசில்,உலகம் வளமாக மற்றும் நிலைத்திருக்க கூடிய வகையில் முதலாளித்துவத்தை வடிவமைப்பது என்பது தொடர்பான கருத்தரங்கு ஒன்று நடைபெறவிருந்தது.
இந்தக் கருத்தரங்கில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் உட்பட மூவர் உரையாற்றவிருந்தனர்.
அதன் பின்னர் இன்று காலை 10 மணியளவில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சிறப்புரையாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
எனினும், மிக கவனமாக பல விடயங்களை ஆராய்ந்த பின்னர் அந்த அமர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் காலை அமர்வு இடம்பெறாது என்றும் கொமன்வெல்த் பொருளாதார மன்றம் நேற்று மாலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்புப் போராட்டங்களினால் தான் சிறிலங்கா அதிபரின் உரை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு 795 ஸ்ரேலிங் பவுண்ட்களும், மதிப்புக்கூட்டு வரியும் சேர்த்து - முன்னரே அனுமதிச்சீட்டுகள் விற்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதிலும், இன்றைய மதிய அமர்வு திட்டமிட்டபடி இடம்பெறும்.
மதிய விருந்து முன்னர் திட்டமிட்டது போல பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாவதற்குப் பதிலாக பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் Pall Mallஇல் உள்ள Marlborough House இல் பிரித்தானிய மகாராணிக்கு கொமன்வெல்த் செயலர் ஒழுங்கு செய்துள்ள மதிய விருந்தில் அவர் பங்கேற்கவுள்ளார்.
அதேவேளை, இன்று மன்சன் ஹவுசில் உரையாற்றவிருந்த சிறிலங்கா அதிபருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க தாம் இணங்கியிருந்ததாகவும், ஆனால், கொமன்வெல்த் வர்த்தக மன்றம் நிகழ்வை நடத்த விரும்பவில்லை என்றும் ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
2010ம் ஆண்டு டிசெம்பரில் லண்டன் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஒக்போர்ட் யூனியனில் நிகழ்த்தவிருந்த உரையும் இதுபோலவே, கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, லண்டனில் தங்கியுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் சனல் 4 தொலைக்காட்சி செவ்வி ஒன்றைப் பெறுவதற்கு நேற்று முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
ஆனால் அதற்கு சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் அனுமதி மறுத்து விட்டார்.
0 கருத்துரைகள் :
Post a Comment