யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட உத்தியோகபூர்வ பதிவுகளின் படி, இங்கு வாழும் 600,000 மக்களில் 2000-3000 வரையானோர் உடல் உறுப்புக்களை இழந்து வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் வடக்கில் வாழும் மக்களில் 10-15 சதவீதமானவர்கள் உடல் உறுப்புக்களை இழந்தோர்களாகக் காணப்படுவதாகவும், நோய், விபத்து, பிறவிக் குறைபாடு மற்றும் யுத்தம் போன்றன காரணமாக உள்ளதாகவும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது கால்களை இழந்து வாழும் மக்களுக்கு செயற்கைக் கால்களைப் பொருத்தும் நடவடிக்கையில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமானது மாற்றுவலுவுடையோர் புனர்வாழ்வுக்கான யாழ்ப்பாண ஜெய்ப்பூர் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
கிளிநொச்சியைச் சேர்ந்த 12 வயதான கமலநாதன் நவநீதன் என்கின்ற சிறுவன், சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதியுத்தத்தின் போது வீசப்பட்ட எறிகணை ஒன்றில் தனது காலை இழந்திருந்தார். இச்சம்பவத்தில் இச்சிறுவனின் சகோதரியும் காயமடைந்திருந்தார். யுத்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கிய போது நவநீதனின் குடும்பத்தவர்களும் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோர் முகாமில் தஞ்சம் புகுந்துகொண்டனர்.
தனது கால்களில் ஒன்றை இழந்த நவநீதன் என்கின்ற இந்தச் சிறுவன் தற்போது நம்பிக்கையுடன் வாழத்தொடங்கியுள்ளான். யாழ்ப்பாணத்திலுள்ள ஜெய்ப்பூர் செயற்கைக் கால் பொருத்தும் நிறுவனம் இந்தச் சிறுவனுக்கு செயற்கைக் காலைப் பொருத்தியுள்ளதால் அதன் உதவியுடன் இவன் மீண்டும் நடக்கத் தொடங்கியுள்ளான்.
"என்னால் மீண்டும் நடக்க முடிந்ததை நினைத்து நான் மகிழ்வடைகிறேன். நான் பாடசாலைக்கு செல்ல முடியும். உண்மையில் நான் வாழ்வில் நம்பிக்கை கொள்கிறேன்" என நவநீதன் தெரிவித்துள்ளான்.
யாழ்ப்பாண ஜெய்ப்பூர் நிறுவனமானது செயற்கைக் கால்களை வழங்கிவருவதுடன், மற்றும் இதனுடன் தொடர்புபட்ட எலும்பியல் சம்பந்தமான பல்வேறு சேவைகளையும் வழங்கிவருகின்றது. இவ்வாண்டு யூலை மாதத்தில் இந்நிறுவனமானது 25 ஆண்டுகால சேவையை நிறைவுசெய்கின்றது.
யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது, சிறிலங்காத் தீவு முழுவதிலும் தமது கால்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு செயற்கைக் கால்களை வழங்கி அவர்கள் நம்பிக்கையுடன் வாழ்வதற்கும், சமூகத்தில் அவர்களுக்கான கௌரவம், உரிமைகள், அங்கீகாரம் போன்றவற்றை மீளப் பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து புனர்வாழ்வுப் பயிற்சிகளையும் வழங்குவதை ஜெய்ப்பூர் செயற்கைக் கால் நிறுவனம் தனது நோக்காகக் கொண்டுள்ளது.
"1994லிருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமானது யாழ்ப்பாணத்தில் உள்ள ஜெய்ப்பூர் நிறுவனத்துக்கு தொழினுட்ப உதவிகளை வழங்கிவருகின்றது. செயற்கைக் கால்களைப் பெறும் பயனாளிகள் இதற்காக எந்தக் கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை. இவை இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த மக்கள் மீண்டும் தம்மால் எதையும் செய்ய முடியும் என்ற மனவலிமையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே எமது விருப்பாகும்" என சிறிலங்காவுக்கான அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடக அதிகாரி சரசி விஜயரட்ன தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் வாழும் கால்களை இழந்த மக்களுக்கு 5000ற்கும் மேற்பட்ட குறைந்த நிறையைக் கொண்ட செயற்கைக் கால்களை வழங்கியுள்ளது. இவ்வாறான செயற்கைக் கால்களை உற்பத்தி செய்வதற்கு மிகக் குறைந்த செலவு ஏற்படுவதாகவும், இவற்றை குறைந்த சில நாட்களில் உற்பத்தி செய்ய முடிவதுடன், இதற்கான பராமரிப்பும் இலகுவானது எனவும், இதற்கான தொழினுட்பத்தை இந்தியாவிலுள்ள ஜெய்ப்பூர் நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்வதாகவும் இந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"எமது நிறுவனத்துக்கு வருகின்ற பெரும்பாலானவர்கள் யுத்தத்தின் போது தமது கால்களை இழந்தவர்களாவர். அத்துடன் நீரிழிவு நோய்த் தாக்கத்துக்கு உட்பட்டு கால்களை இழந்தவர்களும் உள்ளனர்" என யாழ்ப்பாண ஜெய்ப்பூர் நிறுவனத்தின் உடற்பயிற்சி சிகிச்சைக்கான உதவியாளர் தமயந்தி தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் யுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதியான 1998ல் நிலக்கண்ணிவெடி வெடித்ததில் 35 வயதான பிறேமதீசன் தனது காலை இழந்திருந்தார்.
"நான் விறகு தேடிச் சென்றபோது அங்கு புதைத்து வைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடியில் எனது காலை இழந்திருந்தேன். ஜெய்ப்பூர் நிறுவனத்தின் மூலம் நான் செயற்கைக் கால் ஒன்றைப் பெற்றுக் கொள்ள முடிந்தததன் பிறகு தற்போது என்னால் நடக்க முடிகிறது. எனது பழைய செயற்கைக் கால் பழுதடைந்து விட்டதால் தற்போது வேறொரு புதிய செயற்கைக் காலைப் பெற்றுக் கொள்வதற்காக இங்கு வந்துள்ளேன்" என பிறேமதீசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண ஜெய்ப்பூர் நிறுவனத்தில் பணியாற்றும் அலுவலர்கள் சிலர் பிறேமதீசனுக்கு செயற்கைக் காலைப் பொருத்துவதற்காக அளவெடுத்தலில் ஈடுபட்டனர். ஒரு சில நாட்கள் கழித்து பிறேமதீசன் தனக்கான புதிய செயற்கைக் காலைப் பெற்றுக் கொள்ள முடியும் என எம்மிடம் தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று 30 வயதான பிறேமநந்தன் என்பவர் சிறிலங்காவின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வீசுப்பட்ட எறிகணையில் தனது கால்களில் ஒன்றை இழந்திருந்தார். மீனவரான இவரது மற்றைய காலில் தற்போதும் எறிகணைச் சிதறல் காணப்படுகின்றது. தனது காலில் உள்ள எறிகணைச் சிதறலால் தான் பெரிதும் துன்பப்படுவதாகவும், ஆனால் இழந்த தனது காலுக்குப் பதிலாக புதிய செயற்கைக் கால் பொருத்தப்பட்டதால் தன்னால் தற்போது தொழிலில் ஈடுபட்டு குடும்பத்தவர்களுக்கு வருவாயை ஈட்டிக் கொடுக்க முடிவதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகம் பூராவும் செயற்கைக் கால்களை உற்பத்தி செய்வதில் பல்வேறு வேறுபட்ட தொழினுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்ற போதிலும், ஜெய்ப்பூர் தொழினுட்பமானது தனித்துவம் மிக்கதாகக் காணப்படுவதாகவும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் யாழ்ப்பாண ஜெய்ப்பூர் செயற்கைக் கால் பொருத்தும் நிறுவனமும் தெரிவித்துள்ளன.
செய்தி வழிமூலம் - Colombo Gazette: [Report and pics By Easwaran Rutnam in Jaffna]
நன்றி -புதினப்பலகை
0 கருத்துரைகள் :
Post a Comment