அன்றைய தினம் காலையில் உரிமைகளுக்காக உரத்து ஒலித்த குரல் மௌனித்தது’ என்ற செய்தி எம்மை உலுக்கியது. பலரது அன்பையும் ஆதரவையும் பெற்ற ஒருவரது உடல் குறைந்த வயதான 44 வயதில் மண்ணோடு மண்ணானது வேதனைக்குரியது. உடல் மறைந்ததே ஒழிய உள்ளத்திலிருந்து எழுந்த மக்கள் மீதான உணர்வுகளின் பிரதிபலிப்பு இன்னும் மறையவில்லை. அவ்வாறான ஒரு உயிர் 1962 ஜூன் 25 ஆம் திகதி ஆசிரியர்களான வேலுப்பிள்ளை நடராசா, திசைநாயகம் மங்களேஸ்வரி தம்பதியினருக்கு இரண்டாவது பிள்ளையாக தென்மராட்சி மைந்தனாக “ரவிராஜ்’ என்ற பெயரில் உதித்தது.
கல்வி, தொழில், குடும்பம்
தனது பாலர் வகுப்பை சாவகச்சேரி பெண்கள் கல்லூரியிலும் ஆரம்பக் கல்வியை சாவகச்சேரி டிறிபெக் கல்லூரியிலும் உயர் கல்வியை யாழ்ப்பாண பரியோவான் கல்லூரியிலும் படித்து 19841986 சட்டக் கல்லூரியில் படித்து 1987 இல் உயர் நீதிமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்து சட்டத்தரணியாக தலைநிமிர்ந்தார்.
1990 இல் சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டத்தரணியாக சேர்ந்து இரு ஆண்டுகள் பணியாற்றி, பின்பு கொழும்பு மனித உரிமைகள் இல்லத்தின் பணிப்பாளர் பிரான்சிஸ் சேவியரின் அழைப்பின் பேரில் அவருடன் இணைந்து மனித உரிமைப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு, அங்கு பல ஆண்டுகள் பணியாற்றிய பின் சுயமாக, கொழும்பில் தனக்கென ஒரு அலுவலகத்தை அமைத்து தொழில் ஆரம்பித்து தனது தொழிலில் கணிசமான வெற்றியும் கண்டார். பிரபல மூத்த சட்டத்தரணியும் பரிஸ்டருமான ஆர்.ஈ. தம்பிரத்தினத்தின் கனிஷ்ட சட்டத்தரணியாக தொழில்புரிந்து பிரபலமான எயார் லங்கா குண்டு வெடிப்பு வழக்கில் அவருடன் எதிரிகளுக்காக வாதாடியதோடு தனித்து பல முக்கியமான வழக்குகளை பொறுப்பெடுத்து வெற்றியும் கண்டார்.
தனது பெற்றோர்களின் விருப்பத்திற்கிணங்க அவரும் 1990 பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி வைகுந்தன் காமாட்சி என்பவர்களின் புதல்வியான யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பட்டதாரியான சசிகலாவை காதலித்துக் கரம் பற்றி இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையானார்.
மக்களுக்காக அரசியலுக்குள் பிரவேசம்
தனது இளமைப் பருவம் தொடக்கம் அரசியலில் ஆர்வம் காட்டிய ரவிராஜ் தந்தை செல்வாவின் அரசியல் கொள்கைகளினாலும் செயற்பாடுகளினாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டு அக்காலத்து தமிழ்த் தலைவர்களுடன் தன்னை ஈடுபடுத்தி அவர்களின் நன்மதிப்பினைப் பெற்று அரசியலினுள் பிரவேசித்தார். எல்லா அரசியல் தலைவர்களைப் போலவே உள்ளூராட்சி மன்றங்களினூடாக அரசியல் பாதையில் தனது தடத்தினைப் பதித்தார். பின்வருமாறு அவருடைய அரசியல் பயணம் அவரது மரணம் வரை தொடர்ந்தது.
சட்டத்தரணி பொன்.சிவபாலன் யாழ்ப்பாண மேயராக பதவியேற்ற போது துணை மேயராக பதவியேற்றார்.
2001 ஆம் ஆண்டு யாழ்.நகர முதல்வரான சட்டத்தரணி பொன்.சிவபாலன் மறைவிற்குப் பின் ரவிராஜ் முதல்வரானார்.
2001 டிசம்பர் 5 பாராளுமன்ற அரசியலுக்குள் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.
2004 சித்திரை 2 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.
பாராளுமன்ற அரசியலில் கூடுதலான ஈடுபாடு காட்டிய போதிலும் அதற்கு வெளியே தமிழ் இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டத்திற்கு பெரும் மதிப்பும் ஆதரவும் கொடுத்து வந்தார். தமிழ் அரசியல் தலைமைகளின் பாராளுமன்ற அரசியல் எந்த விதத்திலும் ஆயுதப் போராட்டத்திற்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.
மரணத்தால் மட்டுமே மறைந்தவர்
தனது வாழ்நாட் காலத்தில் சட்டத்தரணியாகவும் அரசியல்வாதியாகவும் தனது சமூகத்தின் மீது பற்றுள்ளவராகவும் வாழ்ந்த ஒரு மனிதனை மரணம் மறக்கடிக்க முடியாது என்பதை இவரின் சேவைகள் என்றுமே நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். அதனால்தான் இன்னும் மக்கள் மத்தியில் மரணியாதவராக வாழ்ந்து கொண்டிருக்கின்றார். தான் சட்டத்தரணியாக பதவியேற்றதில் இருந்து தனது சேவையை மக்களுக்காகவே அர்ப்பணித்துள்ளார். குறிப்பாக 1990 களில் மனித உரிமை இல்லத்தில் அவர் பணிபுரிந்த காலத்தில் மனித உரிமை ஆர்வலர்களுக்கு பெரும் அச்சுறுத்தல்களையும் உயிராபத்துகளையும் ஏற்படுத்திய காலமாகும். அப்பாவித் தமிழ் மக்கள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது இவர் சென்று பார்வையிடாத சிறைக் கூடங்கள் இல்லை என்றே கூறலாம்.
அப்பாவித் தமிழ் மக்களின் தடுத்து வைப்புக்கான விடுதலை கோரி இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் உள்ள நீதிமன்றங்களுக்குச் சென்று வாதாடினார். அத்தோடு சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அந்தத் தொடர்புகளை இன விடுதலைக்காக பயன்படுத்தினார். அதிலும் யுத்த காலத்தில் அப்பட்டமாக மனித உரிமை மீறல்கள் அரங்கேறிக் கொண்டிருந்த வேளையில் தான் இறப்பதற்கு முன்பதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன் தனது எதிர்ப்பினை ஆர்ப்பாட்டத்தின் மூலமாக தெரியப்படுத்தி உலக நாடுகளின் கவனத்தையும் இலங்கை இனப்பிரச்சினையின் பால் ஈர்த்தெடுத்தார்.
தனது மனித உரிமைகள் செயற்பாட்டை தனியே குறுகிய நோக்கத்திற்காக மட்டுமன்றி ஆட்கடத்தல்கள், போரினால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை போன்ற உரிமை மீறல்களை துணிச்சலோடு தனியொருவனாகவும் அமைப்பு ரீதியிலும் முன்னெடுத்த ஒரு மாமனிதன் இவரே. சாதாரண ஊழல் கூடிய பொய்ப் பிரசாரங்களுக்கான அரசியலை முற்றிலும் வெறுத்தவர். பொது மக்களுக்கான அரசியல் என்ற கொள்கையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். தனது அரசியலில் தான் வகித்த எந்தவொரு பதவியையும் தனது சுயநலத்திற்காக பயன்படுத்தியவரல்லர்.
அரசியல் மேடைகளென்றாலும் பாராளுமன்றமென்றாலும் சர்வதேச மட்டத்திலும் சரி தமிழர் பிரச்சினைகளை இவர் அளவிற்கு வேறொருவரும் இவர் வாழ்ந்த காலத்தில் பேசியிருக்க முடியாது. பெரும்பான்மை இனக் கட்சிகளுடன் சேர்ந்து அரசியல் நடத்தும் தமிழர்களைக் காட்டிலும் வெறும் அமைச்சுப் பதவிக்காக மக்களின் நலன்களை புறந்தள்ளிவிட்டு சுகபோகங்களுக்கும் பின்செல்லும் அரசியல்வாதியாக இவர் வாழ மறுத்த இவரின் தனித்துவமே இன்றும் இவரை மக்கள் மனதுகளில் நினைவுபடுத்திக் கொண்டு இருக்கின்றது.
அலுவலகங்களுக்குள்ளும், ஊடகங்களுக்கு முன்னும் மட்டும் இருந்து மக்கள் பிரச்சினைகளை பேசுவதை விடுத்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், எதிர்க் கருத்துகள் என்பவற்றின் மூலமாகப் பேசத்துணிந்தவர். தான் இறப்பதற்கு முந்தைய நாளிலும் கொழும்பு கோட்டை புகையிரதநிலையத்திற்கு முன் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அரசாங்கத்தினைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயத்திற்கு முன்பாக இவர் தலைமை தாங்கி நடத்திய ஆர்ப்பாட்டம் சர்வதேசத்தின் கண்களைத் திறந்ததுடன், இவர் கண்களை மூடுவதற்குக் காரணமாகவும் அமைந்தது என்று கூறலாம்.
மும்மொழிப் புலமை பெற்ற இவர் இனங்களுக்கிடையே புரிந்துணர்வு வளருவதற்கும் சிங்கள தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் உரிமை மீறல்களையும் தட்டிக் கேட்டமையால் பெரும்பான்மையின மக்களிடத்திலும் இவருக்கென தனி மரியாதை உண்டு என்பதை இவரின் இறுதி அஞ்சலியில் ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் வருகை தந்து இறுதி மரியாதை செலுத்தியமை சான்று பகரும். இனப்பிரச்சினையை இவர் பார்த்த விதத்தை இவரின் கூற்றுகளிலிருந்தே அறியலாம்.
“சிங்களவர்களும் தமிழர்களும் இராணுவப் போராட்டம், இரத்தக் களரியை இந்த நாட்டில் பார்க்க விரும்பவில்லை. அமைதியாகவே வாழ விரும்புகின்றனர். ஆழிப்பேரலையின் போது முல்லைத்தீவில் தமிழர்களுக்கு சிங்களவர் உதவினர். அவர்கள் யுத்தத்தினை விரும்பவில்லை. நான் பேச்சுகளை ஆதரிக்கின்றேன். இதை நான் மட்டும் சொல்லவில்லை. கலிங்கப் போருக்குப் பின் அசோகச் சக்கரவர்த்தி கூறியது தான் இதற்கு முதல் உதாரணம்’
இயல்பிலேயே போராட்ட குணம் உடையவராக ஆனபோதிலும் நடைமுறை யதார்த்தத்தை பேசுபவராகக் காணப்பட்டதோடு, இன்று முடிந்திருக்கின்ற போருக்குப் பின்னரான சூழ்நிலையை அன்றே அவர் ஆரூடம் கூறியிருக்கின்றார். இந்தியாவில் முன்னாள் முதலமைச்சரான எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களில் இடம்பெற்ற புரட்சிப் பாடல்களை அதிகளவில் விரும்பிக்கேட்கும் அதேநேரம் அதில் வரும் வசனங்களை வாயில் முணுமுணுக்கும் பழக்கத்தையும் ரவிராஜ் கொண்டிருந்தார்.
மக்கள் சேவையாளனுக்கு காலமளித்த பரிசு
பலமுறை உயிராபத்துகளில் இருந்து தெய்வாதீனமாகத் தப்பிய ரவிராஜுக்கு 11.10.2006 அன்றுதான் தான் இந்த உலகத்தை காண்கின்ற கடைசி நாள் என்ற உண்மை புரியாது போனது எம் எல்லோரையும் எப்போதும் வேதனைக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும். தனது சொந்த மண்ணிலேயே தன்னை சங்கமமாக்க எண்ணிய இவர் போன்ற மக்கள் தலைவர்கள் எம் மத்தியில் அரிதாகவே உள்ளனர். பசியும் பட்டினியும் கொலையும் ஆட்கடத்தல்களும் சர்வ சாதாரணமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த ஒரு சூழலில் தன் போராட்ட வாழ்வை எதிரிகள் வழமை போலவே தமக்கே உரிய மிருகக் குணத்தில் இத் தலைவனின் உயிரைப் பறித்தது இன்று வரையிலும் தமிழ் மக்களின் வரலாற்றிலிருந்து களையப்பட முடியாத வேதனையாகவே உள்ளது. இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் பொன் விழா காணும் நாயகனாக நம்முடன் வாழ்ந்திருப்பார்.
இன்று வரையிலும் தீர்வு எதுவுமின்றி அல்லல்படும் மக்கள் அனைவரினதும் நெஞ்சங்களில் எழும் ஏக்கம் ரவிராஜைப் போல ஒரு தலைவன் இல்லையே என்பதாகும். காலத்தால் வெல்லப்பட்ட இவரது மரணம் மக்கள் மனதுகளில் இவரை ஒரு மாமனிதனாகவே இன்றுவரையிலும் நிலைநிறுத்தியுள்ளது. “மனிதர்களுக்கு மட்டுமே மரணம் அவர்களின் சிந்தனைக்கு மரணமேயில்லை’
ச.ஆனல்ட் பிரியந்தன்
சட்டத்தரணி
நன்றி - தினக்குரல்
0 கருத்துரைகள் :
Post a Comment