‘ஆவணங்கள் மட்டுமே எங்களிடம்: காணிகள் அவர்களிடம்’ - குமுறும் திருமுறிகண்டி மக்கள்


தமிழர் நில ஆக்கிரமிப்பின் அரசியற் - சட்டவியல் குவி மையமாக தற்போது திடீர் முக்கியத்துவம் பெற்றுவிட்ட திருமுறிகண்டி விவகாரம் பற்றிய ஆழமான விபரங்களைத் திரட்டி இங்கே முன்வைக்கின்றனர் 'சமூகச் சிற்பிகள்.'வடக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் சிங்கள அரசினால் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டு வரும் நிலையானது 2009ம் ஆண்டின் இறுதிப்போரின் பின்னதாக மேலும் வலுப்பெற்றுள்ளது. இடம்பெயர்ந்த தமிழ் மக்களை அவர்தம் சொந்த இடங்களில் குடியேற்றியுள்ளதாக செய்தி வெளியிட்டு வரும் அரசாங்கம், இன்னொரு பக்கத்தில் தனக்குச் சார்பான அரசாங்க உயரதிகாரிகளின் பேராதரவுடன் பொதுமக்களின் நிலங்களை இராணுவப் பயன்பாட்டில் வைத்துக்கொண்டு அந்நிலங்களிற்குச் சொந்தமான பொதுமக்களை மீள்குடியேற்றம் செய்யாமல் தொடர்ந்தும் இடம்பெயர்ந்தவர்களாகவே குறிப்பிட்டு வருகின்றது. 

போர் முடிவுற்று மூன்றாண்டுகள் முழுமையாக பூர்த்தியாகி விட்டன. வெற்றி பெற்ற மூன்றாவதாண்டு விழாவினையும் அரசு வெகுவிமரிசையாக கொண்டாடி மகிழ்ந்துள்ளது. இருந்தும், போரின் போது குடும்ப உறவுகளைப் பறிகொடுத்து, தமது உடைமைகள் யாவற்றையும் இழந்தவர்களாக, சொந்த இடங்களிலிருந்து, சொந்த வீடுகளிலிருந்து விரட்டப்பட்ட தமிழ் குடும்பங்களில் ஒரு தொகுதியினர் அரசின் இத்தகைய சூழ்ச்சியின் காரணமாக, இன்னும் நலன்புரி நிலையங்களிலும், உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் அடிப்படை மற்றும் வாழ்வாதார வசதிகள் எதுவுமின்றி தொடர்ந்தும் வறுமை மற்றும் இன்னோரன்ன பல பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்தபடி தங்கியுள்ளனர். 

போக்குவரத்து வசதிகள், வீடுகள், கிணறுகள் மற்றும் நீண்ட கால பயன்தரு மரங்கள் உள்ள இவர்களின் காணிகள் அரசின் பேராதரவுடன் இராணுவத்தினரால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. “இராணுவ தேவைகளின் நிமித்தமாக நாம் அரச நிலங்களை ஒதுக்குகின்றோம்” என அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. இருந்தும், பொது மக்களின் காணிகளை அபகரித்து, குடியிருப்புகளிற்கு மத்தியில் இராணுவ முகாம்களை அமைத்து வரும் அரசாங்கம் பொதுமக்களைப் பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் தொடர்ந்தும் அவர்களை இன ஒடுக்குமுறைக்குள் வைத்துக் கொள்ள பெரும் பிரயத்தனப்படுகின்றது. 

இத்தகைய பின்னணியில் - தமிழர் நில ஆக்கிரமிப்பின் அரசியற் - சட்டவியல் குவி மையமாக தற்போது திடீர் முக்கியத்துவம் பெற்றுவிட்ட திருமுறிகண்டி விவகாரம் பற்றிய ஆழமான விபரங்களைத் திரட்டி இங்கே முன்வைக்கின்றனர் ‘சமூகச் சிற்பிகள்’ அமைப்பினர்.


 திருமுறிகண்டி கிராமத்தில் பொதுமக்களின் காணிகள் ஆக்கிரமிப்பு 

முல்லை மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள திருமுறிகண்டி-இந்துபுரம் கிராமத்தில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளிற்கு அரசினால் வழங்கப்பட்ட ஆவணங்கள் இருந்தும் இக்காணி ஆக்கிரமிப்பிற்கு எதிராக எந் நடவடிக்கையினையும் எடுக்க முடியாத இயலாமையுடன்; இக்கிராமத்தினைச் சேர்ந்த குடும்பங்கள் தொடர்ந்தும் துன்புற்று வருகின்றனர். 

குறிப்பாக திருமுறிகண்டி மக்களின் பொதுநோக்கு மண்டபம், முன்பள்ளி, பொதுக்கிணறு, மயானம், குளம், 50 ஏக்கர் வயல் நிலம் மற்றும் கிராமசேவையாளர் செயலக மண்டபம் பேன்ற இடங்கள் உட்பட 300 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பகுதி இன்னும் விடுவிக்கப்படாமல் இராணுவத்தினர் ஆக்கிரமிப்பிலேயே தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ளது. 

நீர்வளம் மற்றும் பயிர்ச்செய்கைக்கேற்ற நிலவளம் மிக்கதான இந்நிலப்பரப்பை இராணுவத்தினர் தமது தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். குறித்த நிலப்பரப்பில் இராணுவத்தினரின் 57வது பிரிவு படைத் தளம் மற்றும் படையினரின் 'பொது மக்கள் தொடர்பகம்' என்பன அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் சில காணிகளில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

திருமுறிகண்டி உருவான வரலாறு:- 

1969ம் ஆண்டிற்கு முன்னதாக இக்கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற முறிகண்டி பிள்ளையார் கோவிலை அண்டிய பகுதியில்; 35 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியேறி வசித்து வந்தனர். 1969ம் ஆண்டு காலப்பகுதியில் இப் பிரதேசத்தில் வசித்து வந்தவர்களிற்கு 'திருத்தப்பட்ட காணி அபிவிருத்தி திட்டம்' என்னும் திட்டத்தின் கீழ் அவர்கள் வசித்த காணிகளிற்கான ஆவணங்கள் அரசினால் வழங்கப்பட்டன. 

தொடர்ந்து, 1977ம் ஆண்டு ஆவணி மாதமளவில் இடம்பெற்ற இனக்கலவரத்தின் போது சிங்களக் காடையர்களால் பாதிக்கப்பட்ட தென்பகுதியிலிருந்த தமிழ் மக்கள் கிளிநொச்சியை அண்டிய பகுதிகளிற்கு இடம்பெயர்ந்து அங்கு தற்காலிகமாக குடியமர்ந்தனர். அக்காலப்பகுதியில் அரசியல்வாதியாக இருந்த சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் ஒத்துழைப்புடன் இவ்வாறு இடம்பெயர்ந்து, சொந்தக் காணி இல்லாமல் இருந்த 40 தமிழ் குடும்பங்கள் இப்பகுதியில் காணி வழங்கப்பட்டு குடியேற்றப்பட்டனர். 

அதன் பின் 1980ம் ஆண்டு காலப்பகுதியில் காணியின்றி;த் தங்கியிருந்த 150 வரையான தமிழ் குடும்பத்தினர், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2 ஏக்கர் வீதம் அரசினால் காணிகள்; வழங்கப்பட்டு இக்கிராமத்தில் குடியமர்த்தப்பட்டனர். 

2003ம் ஆண்டில் காணியின்றி இருந்த 32 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இக்கிராமத்தில் 1/2 ஏக்கர் வீதம் அரசாங்க அதிபரினால் நிலம் வழங்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர். 

2004ம் ஆண்டு காலப்பகுதியில் ஏ9 வீதியின் கிழக்கேயுள்ள இக்கிராமத்தின் ஒரு பகுதியில், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்களது ஐம்பது குடும்பங்களிற்கு ¾ ஏக்கர் காணி வீதமும், 140 குடும்பங்களிற்கு 1/2 ஏக்கர் காணி வீதமும் விடுதலைப் புலிகளினால் வழங்கப்பட்டன. 

காடாக இருந்த பகுதியே துப்பரவு செய்யப்பட்டு இவ்வாறு மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த மாவீரர்களது குடும்பங்களிற்கு பகிர்ந்தளிக்கப்பட்டு அவர்களிற்கான வீடு மற்றும் கிணற்று வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. அத்துடன், மாற்றுவலுவுள்ள போராளிகளது குடும்பங்களுக்கும் இங்கு காணிகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

யுத்தம் மக்களின் வாழ்நிலையில் ஏற்படுத்திய தாக்கம்: 

செழிப்பான நிலத்தில் பயன்தரு பயிர்கள், மரங்கள் என்பனவற்றை நாட்டி தமது வாழ்வாதாரத்தினை வளப்படுத்திக்கொண்டு, வீடுகள், மற்றும் கிணறுகள் என்பனவற்றை அமைத்து இக்கிராமத்தோடு தமது வாழ்வியலை ஒன்றிணைத்துக்கொண்ட சுமார் 225 வரையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், முதன்முதலில், 1996ம் ஆண்டு இலங்கை இராணுவத்தினால் முன்னெடுக்கப்பட்ட 'ஜெயசிக்குறு' நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து ஸ்கந்தபுரம், மல்லாவி மற்றும் பாதுகாப்பான பிற இடங்களை நாடிச்சென்று தற்காலிகமாக குடியமர்ந்திருந்தனர். பின்னர், 1998 – 1999 காலப் பகுதியில், விடுதலைப் புலிகளால் கிளிநொச்சி மாங்குளம் பிரதேசங்கள் கைப்பற்றப்பட்டதனையடுத்து, மீண்டும் தத்தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேறினர்.
இது இவ்வாறிருக்க, மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 2008ம் ஆண்டு ஒக்டோபர் மாதமளவில் இப்பகுதியிலிருந்த சுமார் 470 குடும்பங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 2360 பேர் வரையிலானோர் தமது உடைமைகள் அனைத்தையும் இழந்து தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து போரின் இறுதிக் காலத்தில் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குச் சென்று வவுனியா செட்டிகுளம், மெனிக்பாம் இடைத்தங்கல் நலன்புரி நிலையங்கள், மற்றும் பிற இடம்பெயர்ந்தோர் நலன்புரி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். 

2009ம் ஆண்டு டிசெம்பர் மாதமளவில் இக்கிராமத்தில் ஏ9 வீதியின் மேற்குப் பகுதியினைச் சேர்ந்த 65 குடும்பங்கள் இராணுவத்தினரால் முதலில் மீள்குடியேற்றப்பட்டனர். அதன் பின்னர்; 2010ம் ஆண்டு டிசெம்பர் மாதமளவில் திருமுறிகண்டி ஆரம்ப சுகாதார நிலைய வீதியிலிருந்து வடக்கு திசையில் காணிகளை கொண்டிருந்த 115 குடும்பத்தினர் மட்டுமே மீள்குடியேற்றப்பட்டனர் 

திருமுறிகண்டியில், ஏ9 வீதிக்கு கிழக்கு பகுதியினைச் சேர்ந்த, 115 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 550 பேர் வரையானோர் இன்னும் அவரவர் சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. இவர்களில் சுமார் 45 குடும்பங்களைச் சேர்ந்த 190 பேர் வரையானோர் உறவினர் மற்றும் நண்பர்களின் உதவியோடு நலன்புரி முகாம்களில் இருந்து வெளியேறி வசிப்பதற்கு வசதியற்றவர்களாக கடந்த மூன்று ஆண்டுகளாகக் கதிர்காமர் மற்றும் ஆனந்தகுமாரசுவாமி இடைத்தங்கல் நலன்புரி முகாம்களில் முட்கம்பிக்குள் முடக்கப்பட்டுள்ளனர். 

மேற்படி நலன்புரி முகாம்களில் தங்கியிருப்போருக்கு எவ்வித வாழ்வாதார வசதிகளும் இதுவரை அரசாங்கத்தினால் செய்து தரப்படவில்லை. உலருணவு நிவாரண விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டு வழங்கப்படுகின்றது. பிள்ளைகளிற்கான கல்வி வசதிகள் சீரான முறையில் இல்லை. சுகாதார மற்றும் இதர அடிப்படை வசதிகள் கூட ஏதோ கடமைக்காக முன்னெடுக்கப்படுகின்றன. இன்னும் இவர்கள் இராணுவக் காவலிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் தவிர்ந்த, சுமார் 70 குடும்பங்களைச் சேர்ந்த மேலும் 280 பேர் வரையானோர் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களின் பகுதிகளிலேயும், திருமுறிகண்டியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளிலும் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் காணிகளிலும் 

தற்காலிகமாக வசித்து வருகின்ற சிலரின் உள்ளக்கிடக்கை… 

“என் காணியில் உள்ள அகலக் கிணற்றில் நீர் நிறைந்திருக்க, நான் இங்கே ஒரு குடம் தண்ணீருக்காய் வரிசையில் தவமிருக்கிறேன்” என கதிர்காமர் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள திருமுறிகண்டியைச் சேர்ந்த குடும்பப்பெண் ஒருவர் அங்கலாய்க்கின்றார். தமது சொந்தக் காணிகளில் இன்னும் மீள்குடியேற்றப்படாத ஒவ்வொரு குடும்ப உறுப்பினர் உள்ளங்களிலும் இத்தகைய உணர்வே நிலைபெற்றுள்ளது. 

“நலன்புரி நிலையத்திற்கருகில் இருக்கிற பள்ளிக்கூடத்தில பாடங்கள் ஒழுங்காக நடக்கிறதில்ல, டீச்சராக்களும் ஒழுங்கா வாரதில்ல. பிள்ளைகளை தொடர்ந்து இங்க வச்சிருந்தா அவங்கட எதிர்காலம் வீணாகிடும் என்டு நினைச்சு, என்ர 2 பெண்பிள்ளைகளையும் திருமுறிகண்டில உள்ள எனது கணவரின்ர சகோதரி வீட்டில கொண்டு போய் விட்டன். ஒரு மாதம் கூட இல்லை. பாவங்கள் ‘மாமி தங்களை ரொம்ப வேதனைப்படுத்துரா’ எண்டு அங்க இருக்க மாட்டம் என்டுட்டாளவை. பிறகு என்ன செய்யிறது, அவங்கட எதிர்காலம் பாழாய்ப் போனாலும் பரவாயில்ல எண்டு இங்கயே கூட்டிக்கொண்டு வந்திட்டன். எங்கட காணியில போய் இருக்கிற வரைக்கும் இதே நிலைமை தான்…” என இன்னும் கதிர்காமர் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள திருமுறிகண்டி கிராமத்தைச் சேர்ந்த 14 மற்றும் 12 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயார் ஒருவர் தனது நிலையை பகிர்ந்து கொண்டார். 

“என்ர கணவர் கிளிநொச்சில தங்கி நின்டு மேசன் வேலை செய்யிறார். மாதத்துக்கு ஒருக்கா தான் காம்புக்கு வாறவர். அங்க அவருக்கும் இங்க எங்களுக்கும் சாப்பாட்டு பிரச்சினை. ஏங்கட காணியியில எண்டால் நானே மரக்கறி எல்லாம் பயிர் செய்வன். அந்தக் காணியில எதை நட்டாலும் செழிப்பா வரும். அங்க இருக்கிற காலத்தில ஒரு நாளும் நான் கடையில மரக்கறி வாங்கினதில்ல. இங்க பாருங்கோ, எல்லாத்துக்கும் காசு கொடுக்க வேணும். இப்ப பொருட்கள் விக்கிற விலைக்கு இவர் மட்டும் அங்க கஸ்டப்பட்டு உழைக்கிறது போதுமே?” - இவ்வாறாக, திருமுறிகண்டியில் உள்ள தங்கள் காணியில் ஒரு காலத்தில் தன்னாலான பயிர்களை செய்து கணவரோடு வாழ்வாதாரத்தில் பங்கெடுத்த இன்னொரு குடும்பப்பெண்ணின் வருத்தம் அவர் வார்த்தைகளில் வெளிப்பட்டது. 

“எனக்கு இப்ப வயசு அறுபத்தேழாகுது. என்ர அப்பு, ரெண்டு பிள்ளைகள் எல்லாரையும் முறிகண்டி மயானத்தில தான் அடக்கம் செய்திருக்கம். நானும் என்ர காணியில போய்த்தான் உயிர் விடனும். என்னையும் முறிகண்டி மயானத்தில தான் அடக்கம் செய்யனும்…” தனது இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு மூதாட்டியின் ஆவல். 

காணிகளைத் திரும்பக் கோரும் மக்களிற்குப் படையினர் வழங்கும் பதில் 

இராணுவத்தினால் ஆக்கிரமிப்பிற்குள்ளாக்கப்பட்டுள்ள காணிகளிற்குச் சொந்தக்காரர்களான குடும்பங்கள் அக்காணிகளை தம்மிடம் மீள ஒப்படைக்குமாறு திருமுறிகண்டி பகுதியில் நிலைகொண்டுள்ள 57வது டிவிசன் படைப்பிரிவின் பொறுப்பு அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தபோது, அவர் அளித்த பதில், “குறித்த 300 ஏக்கர் காணியும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு சொந்தமானது. ஆகையால் அவற்றைத் திரும்ப ஒப்படைக்க முடியாது. அத்துடன், குறித்த காணிகளுக்குப் பதிலாக மாற்றுக் காணிகள் வேறு இடங்களில் வழங்கப்படும். தொடர்ந்து இக்காணிகளை மீளப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்க வேண்டாம்” என்றவாறுள்ளது.'இறந்த உயிர்கள் தவிர ஏனைய எல்லாம் தருவேன்’
2010ம் ஆண்டு கிளிநொச்சி முற்றவெளியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அவர்களிடம் திருமுறிகண்டி பிரதேச மக்கள் தங்களது காணியை எப்போது ஒப்படைப்பீர்கள் என வினவியபோது அதிபர் அவர்கள், “இறந்த உயிர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து உடைமைகளும் விரைவில் உங்களிடம் ஒப்படைக்கப்படும்” என்று உறுதிமொழி வழங்கியுள்ளார். 

தொடர்ந்து, 2011ம் ஆண்டு கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுர திறப்பு விழா நிகழ்விற்குச் சென்றிருந்த அதிபர் மகிந்த ராஜபக்ச அவர்களிடம், திருமுறிகண்டி பிரதேசத்தில் மீள்குடியேற்றப்படாத பாதிக்கப்பட்ட மக்கள்; தமது காணிகள் தொடர்பாக திரும்பவும் வினவிய போது அதிபர் அவர்கள் கொச்சைத்தமிழில், “தறளாம் தறளாம்” என்று புன்னகை ததும்ப பதிலளித்துள்ளார். 

2010ம் ஆண்டில் தற்போதைய மீள்குடியேற்ற பிரதி அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தின் புதிய கட்டடத்தினை திறந்து வைப்பதற்காக வருகை தந்திருந்த வேளை, திருமுறிகண்டி மக்கள் தமது காணிகளை மீண்டும் தங்களிடம் பெற்றுத்தருமாறு அவரிடம் வேண்டுகோள் விடுத்த போது, “உங்களுடைய 300 ஏக்கர் காணியை மீண்டும் உங்களுக்கே வழங்குவது தொடர்பாக உயர்மட்ட குழுக்களுடன் கலந்துரையாடி தீர்க்கமான முடிவொன்றை பெற்றுத் தருவேன்” என்று உறுதி கூறியுள்ளார். 

2011ல், திருமுறிகண்டியில் வடமாகாண பாரவூர்தி உரிமையாளர் கூட்டுறவுச் சங்கத்தினால் அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடபாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோரிடமும் திருமுறிகண்டி மக்கள் தமது காணியை இராணுவத்திடமிருந்து மீட்டுத்தருமாறு கோரிக்கை கடிதம் ஒன்றினை வழங்கிய போது, “மேலிடத்தில் பேசி உங்களுடைய காணியை மீட்டு தருவதற்கு முயற்சி செய்கிறேன்” என்று இருவராலும் கூறப்பட்டது. 

2011.12.29 அன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு வருகை தந்திருந்த நாமல் ராஜபக்ச மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரியான வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோரிடம் இப்பிரதேச மக்கள் தமது சொந்த காணியில் மீள்குடியேற்றுவது தொடர்பாக வினவிய போது, “உங்களுடைய காணிகள் இராணுவத்தினர் தமது தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருவதனால், உங்கள் சொந்த காணிக்குப் பதிலாக மாற்று காணிகள் விரைவில் வழங்கப்படும்” என்று கூறியுள்ளனர். 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரிடமும் தமது சொந்த காணியில் தம்மை விரைவில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை கடிதங்களை மக்கள் வழங்கி வருகின்றனர். அவர்களும், தாங்களும் போராட்டங்களை நடத்தப்போவதாகவும், உரிய இடங்களில் பேசி ஆவன செய்வதாகவும் வாக்குறுதிகளை வழங்கியவண்ணம் உள்ளனர். 

2011ம் ஆண்டு திருமுறிகண்டிப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களது சொந்த காணிகளில் மீள்குடியேற்றுவது தொடர்பில் முல்லைத்தீவு அரச அதிபரிடம் வினவிய போது, அதற்குப் பதிலளித்த ஒட்டுசுட்டான பிரதேச செயலாளர்; திருமதி. சுபாசினி மதியழகன் அவர்கள், “உங்களுடைய 300 ஏக்கர் காணிகள் பாதுகாப்பு படையினரின் பயன்பாட்டில் உள்ளது. உங்களுடைய சொந்த காணிகளை அவர்கள் விடுவிக்கும் சாத்தியப்பாடுகள் இல்லை. அவற்றிற்குப் பதிலாக கொக்காவில் பகுதியில் கண்ணிவெடி அகற்றப்பட்டவுடன் உங்களுக்கு காணிகள் வழங்கப்படும்” என்று கூறியுள்ளார். 

2010ம் ஆண்டில் வவுனியா இந்து கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற காணி தொடர்பான ஒன்றுகூடலில் கலந்து கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவ் அவர்களிடம் இப்பிரதேச மக்கள் தங்களது காணியை இராணுவத்திடமிருந்து மீட்டுத்தரும்படி கோரிக்கை மனு ஒன்றினை வழங்கியிருந்தனர்.

அரசு மற்றும் இராணுவத்தினரை எதிரிகளாக்கி வழக்கு:
இந்நிலையில், தம்மை தமது சொந்த நிலத்தில் குடியமர்த்தக் கோரியும், தமது காணிகளை இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து மீளப்பெற்றுத்தரக் கோரியும் சில குடும்பத்தினர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இவ்வாறு வழக்குத் தொடர்ந்தவர்கள் இராணுவம் மற்றும் இராணுவப் புலனாய்வாளர்களால் தொடர் அச்சுறுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர் என்பதோடு, அரசு மற்றும் இராணுவத்தினரை எதிரிகளாகச் சுட்டிக்காட்டி தொடரப்பட்டுள்ள வழக்கினை மீளப்பெற்றுக்கொள்ளாத பட்சத்தில் அவர்கள் தமது உயிரிற்கு ஆபத்து விளைவிக்கப்படுமோ என அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளனர். 

எவ்வாறாயினும், தத்தமது சொந்த நிலங்கள் ஆயுதப்படையின் ஆக்கிரமிப்பில் இருக்க, நலன்புரி நிலையங்களிலும், பிறரது காணிகளிலும் தங்கியிருந்து தினம் தினம் வேதனையையும், துன்பங்களையும் அனுபவித்து, தமது சாதாரண வாழ்க்கை, உடல்நலம், சமூக - பண்பாட்டு - குடியியற் செயற்பாடுகளில் பங்குபற்றும் வாய்ப்புக்கள், கல்வி, குடும்ப ஒருங்கிணைப்பு என யாவற்றையும் தொலைத்து, நடைபிணங்களாக தங்கியுள்ள திருமுறிகண்டி கிழக்கைச் சேர்ந்த மக்களின் சொந்தக் காணிகளில் மீள்குடியேறும் கனவு, அவர்களிற்கு, இன்னும் வெறும் கனவாகவே உள்ளது. 

இந்த நிலையில் - திருமுறிகண்டி மக்கள் மீள்குடியேற்றப்படுவது தொடர்பான ஒன்று கூடல் நேற்று 14. 06. 2012ம் திகதி பிற்பகல் 2.30 தொடக்கம் 3.30 மணிவரை திருமுறுகண்டி இந்து வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் - முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் உதவி அரச அதிபர், காணி உத்தியோகத்தர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், UNHCR உத்தியோகத்தர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி போன்றோர் கலந்து கொண்டனர். அத்தோடு வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் திருமுறிகண்டி மக்களும் இராணுவத்தால் பேருந்தில் ஏற்றிவரப்பட்டனர். 

இவ் ஒன்று கூடலில், திருமுறிகண்டி மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது. எதிர்வரும் 23. 06. 2012 அன்று வவுனியா செட்டிக்குளம் இடைத்தங்கல் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் 46 குடும்பங்களை திருமுறிகண்டியில் இருந்து கிளிநொச்சி செல்லும் ஏ9 வீதிக்கு கிழக்கே ஒரு கிலோமீற்றர் நீளமும் 235மீற்றர் அகலமுமான நிலப்பரப்பில் குடியேற்றப் போவதாக ஒட்டுசுட்டான் உதவி அரச அதிபர் தினேஸ்குமார் அவர்கள் கூறியுள்ளார். 

அதனைத் தொடர்ந்து, குறித்த திருமுறிகண்டி மக்கள், தத்தம் காணிகளை தமக்கு வழங்கினால் மட்டுமே மீள்குடியேறுவோம் எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்த போதும், அதனையும் பொருட்படுத்தாமல் 23.06.2012 அன்று இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் 46 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர் எனத் தெரியவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

- சமூகச் சிற்பிகள்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment