சில புத்த பிக்குகளால் தலைமை தாங்கப்பட்ட 200 வரையான ஆர்ப்பாட்டக்காரர்கள், தெகிவளையில் அமைந்துள்ள சிறிய பள்ளிவாசல் வளாகத்துள் அத்துமீறி நுழைந்ததுடன் பள்ளிவாசல் நுழைவாயிலை நோக்கி கற்களையும் அழுகிய இறைச்சித் துண்டுகளையும் வீசத் தொடங்கினர். இவ்வாறு The Diplomat. இணையத்தில் Joseph Hammond எழுதியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் நிறைவானது, நாடு ஒன்றுபடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், தற்போது சிறிலங்காத் தீவில் பௌத்த பேரினவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளால் இத்தீவின் உள்ளக அமைதியானது பாதிக்கப்பட்டு, நாடு புதியதோர் சவாலை எதிர்நோக்க வேண்டியேற்படும் எனக் கருதப்படுகிறது.
கொழும்பின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள தெகிவளை என்கின்ற இடமானது இதுநாள் வரை கொழும்பு மிருகக்காட்சிசாலை அமைந்துள்ள இடம் என நன்கு அறியப்பட்டிருந்தது. அங்கே அமைந்துள்ள சிறிய பள்ளிவாசல் மீது கடந்த மாதம் பௌத்த காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவம் சிறிலங்காவில் வாழும் முஸ்லீம் தலைவர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
மே 30 காலை வேளையில், காவற்துறை அதிகாரிகளால் தெகிவளை முஸ்லீம் சங்கத்தின் தலைவருக்கு அங்கே அமைந்துள்ளதும் இச்சங்கத்தால் பராமரிக்கப்பட்டு வரும் சிறிய பள்ளிவாசல் மீது வன்முறைச் சம்பவம் மேற்கொள்ளப்படத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கே மேற்கொள்ளப்படும் இஸ்லாமிய கற்கை வகுப்புக்களை நிறுத்துமாறு தெகிவளை முஸ்லீம் சங்கத்தின் தலைவர் செய்க் றம்சிக்கு சிறிலங்கா காவற்துறையினரால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அன்று நள்ளிரவு, சில புத்த பிக்குகளால் தலைமை தாங்கப்பட்ட 200 வரையான ஆர்ப்பாட்டக்காரர்கள், தெகிவளையில் அமைந்துள்ள சிறிய பள்ளிவாசல் வளாகத்துள் அத்துமீறி நுழைந்ததுடன் பள்ளிவாசல் நுழைவாயிலை நோக்கி கற்களையும் அழுகிய இறைச்சித் துண்டுகளையும் வீசத் தொடங்கினர். அத்துடன் இப்பள்ளிவாசலை மூடுமாறும், இங்கே ஒவ்வொரு நாளும் மிருகப்பலி மேற்கொள்ளப்படுவதாகவும் உரத்து கத்தினர். ஆனால் இக்குற்றச்சாட்டுக்களை பள்ளிவாசல் நிர்வாகம் மறுத்துள்ளது.
"உண்மையில் இக்குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் இதிலிருந்து இவ் ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்லாம் மதம் தொடர்பாக எவ்வளவு தெரிந்துவைத்திருக்கின்றனர் என்பதை அறியமுடிகிறது. நாங்கள் மிருகப்பலிகளை ‘Eid ul-Adha’ என்கின்ற இஸ்லாம் மதத்தின் முக்கிய விழாக் காலத்தில் மட்டும் தான் மேற்கொள்கின்றோம். பின்னர் இந்த இறைச்சிகளை ஏழைகளுக்கு வழங்குகிறோம்" என செய்க் றஸ்மி எடுத்துக் கூறினார்.
சிறிலங்காவில் வாழும் முஸ்லீம் இனத்தவர்கள் மீது பௌத்த பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட பல தொடர்ச்சியான சம்பவங்களில் தெகிவளை பள்ளிவாசல் மீதான வன்முறைச் சம்பவம் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒன்றாக காணப்படுகின்றது.
எடுத்துக்காட்டாக, ஏப்ரல் மாதத்தில் தம்புள்ள பள்ளிவாசலில் பிரார்த்தனை நிகழ்வில் கலந்துகொண்டிருந்த முஸ்லீம்களுக்கு இடையூறு விளைவிப்பதை நோக்காகக் கொண்டு குறிப்பிட்ட சில புத்த பிக்குகளின் தலைமையில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இப்பள்ளிவாசல் 1962ல் கட்டப்பட்டதாகவும், இது சட்ட ரீதியற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர். சில வாரங்களின் பின்னர், குருநாகல நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் மேற்கொள்ளப்படும் மத வழிபாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என புத்த பிக்குகளால் எச்சரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.
"முஸ்லீம் சமூகத்தவர்களாகிய நாங்கள் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் குழப்பமடைந்துள்ளோம். கடந்த சில மாதங்களாக நாட்டில் புதிய முறையில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. ஏன் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்பது தொடர்பில் நாங்கள் நிச்சயமற்றுள்ளோம். முஸ்லீம், கிறீஸ்தவர்கள், பௌத்தர்கள், இந்துக்கள் என எவ்வித பாகுபாடுமின்றி நாம் இந்த நாட்டில் ஒன்றாக நீண்ட காலமாக வாழ விரும்புகிறோம்" என கொழும்பிலுள்ள Darul Iman Islamic Book House இன் எழுதுவினைஞரான றெசா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முப்பது ஆண்டுகளாக சிறிலங்காத் தீவில் சிறிலங்கா அரசாங்கத்துக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரப்பட்ட யுத்தத்தில் முஸ்லீம் மக்கள் தமிழ் பேசுகின்ற இனத்தவர்களாக இருந்த போதிலும் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டிருந்தனர்.
இதன் விளைவாக, 1990களின் ஆரம்பத்தில் பல ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். யுத்தகாலப்பகுதியில், சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களின் ஆதரவாளர்களாக முஸ்லீம்கள் மாறினர். அத்துடன் சிறிலங்கா அரசாங்கத்திலும், நிர்வாகத் துறைகளிலும் முஸ்லீம் மக்கள் முக்கிய பதவிகளை வகித்தனர். சிறிலங்கா இராணுவத்தில் இணைந்தும் முஸ்லீம்கள் பணியாற்றியுள்ளனர்.
மொழியாக்கம்: நித்தியபாரதி
0 கருத்துரைகள் :
Post a Comment