ஆயுதப்போரின் ஆரம்பநாட்களும், போராட்ட முன்னோடிகளும் – பகுதி 2


பொலிஸ் உளவாளியாகவும் அன்று சிங்கள அரசின் அடிவருடியாகவும் காணப்பட்ட நல்லூர் பாரளுமன்ற உறுப்பினரான அருளம்பலத்தின் ஏவலனாகவும் செயற்பட்ட தாடித்தங்கராசாவின் மீது மேற் கொள்ளப்பட்ட இத்தாக்குதல் தமிழின விடுதலைப் போராட்ட வரலாற்றில் இனத்துரோகிகள் மற்றும் காட்டிக்கோடுப்போர் மீதான முதலாவது நேரடித்தாக்குதலாக வரலாற்றில் தன்னைப்பதிவு செய்துகொண்டது. அத்துடன் எமதுசமூகத்தில் கட்டற்று உலவிய தாடித்தங்கராசா போன்ற ஏனைய சமூகவிரோதிகளை இத்தாக்குதல் உயிர்ப்பயத்தில் ஆழ்ந்திவிடவே வீறுகொண்ட போராளிகள் தமது அடுத்தகட்ட முயற்சியை ஆரம்பித்தனர்.

*1971இல் கோண்டாவிலுக்கு சென்று தாடித்தங்கராசாவை தாக்குவது கடினமென கருதப்பட்டபோதும் காலமாற்றத்தின் விரைவான வளர்சியினால் இறுதியாக 04.01.1978 கோண்டாவிலில் தாடித்தங்கராசா அவரது சொந்தவீட்டில் வைத்தே நடேசுதாசன் குட்டிமணி தங்கத்துரை என்போரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அல்பிரட் துரையப்பா தாடித்தங்கராசா எனத்தொடர்ந்த போராளிகளின் தாக்குதல்கள் சிங்கள அரசபடைகளிற்கு எதிரான தாக்குதல்களாக மாற்றக்கூடிய உத்வேகத்தை கொடுக்கும் நிகழ்வுகள் தென்னிலங்கையிலும் 1971 மார்ச் ஏப்ரல் மாதங்களில்  உருவாகியிருந்தன. 1971 மார்ச் 8 ந்திகதி கொழும்பில் இருந்த அமெரிக்க தூதரகத்தை ஜேவிபியினர் குண்டு வீசித்தாக்கினர். இதனால் ஆத்திரம்கொண்ட சிறிமாவோஅரசு ஜேவிபி யினரை தடைசெய்ததுடன் நாட்டில் அவசரகால நிலையினையும் பிரகடனப்படுத்தினர். அத்துடன் ஜேவிபி உடன் தொடர்புடையவர்கள் என்ற பெயரில் சிங்கள இளைஞர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.

பல்கலைக்கழக மாணவர்களும் கைதுசெய்யப்பட்ட நிலையில் பேராதனைப் பல்கலைக் கழக வளாகத்தில் பாரியகுண்டொன்று வெடித்து பெரும் சேதமும் ஏற்பட்டது. இதன் தொடராக தீவுமுழுவதும் பெரும்குழப்பமும் பரபரப்பும் ஏற்பட்டன. இவ்விடைக்காலத்தில்தான் முன்கூறிய இரண்டு தாக்குதல் முயற்சிகளும் யாழ்ப்பாணத்தில் அரங்கேறின. முயற்சி என்னும்வகையில் இவைகள் வெற்றியான போதும் இரண்டு நிகழ்வுகளிலும் குறிப்பிட்ட இலக்குகளுக்கு ஆளானவர்கள் உயிருடன் தப்பியிருந்தனர். இந்நிலையில் எதையும் மிகநுணுக்கமாக சிந்திக்கும் தங்கத்துரை தமது அடுத்தகட்ட நகர்வினை காலத்துடன் இணைந்து செயற்படுத்த ஆரம்பித்தார்.

             
ஜேவிபியினரின் அமெரிக்கதூதரக தாக்குதல் முயற்சியின் சிலநாட்களின் பின் 1971 மார்ச் 12 ந்திகதி அம்பாறை மாவட்ட உகணை யில் அதன் தலைவர் ரோகணவிஜயவீரா கைதுசெய்யப்பட்டார். இச்சம்பவத் தினைத் தொடர்ந்து ஆத்திரம் கொண்ட ஜேவிபியினரால் தாக்குதல்கள் எக்கணமும் நிகழ்த்தப்படலாம் எனும் பரபரப்பான சூழ்நிலை எங்கும் காணப்பட்டது. இத்தகைய நேரத்திலேயே சிங்கள ஆயுதப்படைகளை தாக்குவது என்ற தனது நெடுநாளைய கனவை செயலாக்க தங்கத்துரை தீர்மானித்தார். எனினும் முழுமையான ஒருகாவல்நிலையத்தை உடனடியாக தாக்குவதற்கு வேண்டிய ஆட்பலமோ ஆயுதபலமோ அற்றநிலையில் வீதிரோந்து வரும் சிங்களப் படைகளை தாக்குவது என முடிவு செய்யப்பட்டது. ஆனாலும் எவ்வித நேரக்கட்டுப்பாடுமின்றி நினைத்தநேரத்தில் எல்லாம் திடீர்திடீர் என்று தமது காவல்நிலையங்களை விட்டு பொலிஸார் வெளியேறுவதால் திட்டமிட்டு நேரம்பார்த்து அவர்களைத் தாக்குவது கடினமானது எனப்புரிந்து கொண்டார். ஆனால் இராணுவமோ ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பலாலி இராணுமுகாமிற்கும் வல்வெட்டித்துறை இராணுவ முகாமிற்கும் சென்றுவருவது அன்றாட நிகழ்சியாதலால் அத்தகைய நேரம் ஒன்றில் அவர்களின் ஜீப்பினைத் தாக்குவது என முடிவெடுத்தார்.

1971 ஏப்ரல் மாதம் 05 ந்தாம் திகதி அதிகாலை 5மணிக்கு வெள்ளவாயா பொலிஸ்நிலையம் ஜேவிபியினரால் தாக்கப்பட்டதை தொடர்ந்து நாடுமுழுக்க பதட்டநிலைமை அதிகரித்தது. காவல்நிலையங்கள் யாவும் உசார்படுத்தப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டன. ஏனைய பொலிஸ் நிலையங்களும் எந்நேரத்திலும் தாக்கப்படலாம் என்னும் நிலையில் அன்று மாலை 6மணிக்கு நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு அமுலாக்கப்படும் என இலங்கை வானொலி மணிக்கொரு தடவை அறிவித்து மேலும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. இவ்வாறு கொந்தளிப்பான நிலமையில் அன்று நண்பகல் 12 மணிக்கே முழுமையான ஊரடங்கு உத்தரவு அமுலிற்கு வந்தது. எனினும் தென்னிலங்கை எங்கனும் பதட்டமும் பயப்பிராந்தியும் நிலவியநிலையில் மாலை 6 மணிக்கு பின்பு உசார்படுத்தப்பட்ட 94 பொலிஸ் நிலையங்கள் தொடற்சியாக தாக்கப்பட்டன. ஆனாலும் யாழ்ப்பாணத்தில் அன்று இரவு முற்றவெளி மைதானத்தில் பொலிசாரின் விசேடஅனுமதியுடன் திருமறைக் கலாமன்றத்தின் ‘திருப்பாடுகளின் காட்சி’ நாடக நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் வாணவேடிக்கைகளும் வெடிச்சத்தங்களும் கேட்டவண்ணமே யிருந்தன. யாழ்ப்பாணத்தில் இருந்த பொலிசார் அவ்வளவு நம்பிக்கை யோடிருந்தனர்.


ஜேவிபியினரின் இடதுசாரிக் கொள்கையானது சீனா மற்றும் வடகொரியா சார்பானதாக இருந்ததனால் அவர்கள் முதலாளித்துவ இந்தியாவை முழுமையான பகைநாடாகவே கருதினர். இதன்காரணமாக தமக்குமத்தியில் குறிப்பாக மலையகத்தில் வாழ்ந்த தோட்டத்தொழிலாளரான ‘இந்திய வம்சாவழித்தமிழரை அதே தேயிலைச்செடிகளிற்கு பசளையா க்குவோம்’ என இனவிரோத கருத்துக்களை ஆரம்பமுதலே கூறிவந்தனர். ரோகண விஜயவீரா உட்பட அன்றைய அதன்தலைவர்கள் பலரும் தமது கருத்தரங்குகளில் இதனைக்கூறி தமது புதியஉறுப்பினர்களான இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடமும் இந்தியவிரோதத்தை வளர்த்துவந்தனர். 

இதன் காரணமாக ஜேவிபியினர்க்கு தெரிந்ததெல்லாம் தமிழ்பேசுவோர் எல்லாம் இந்தியர் என்பதேயாகும். இதன்காரணமாக எந்தத்தமிழரையும் அவர்கள் அன்று தம்முடன் இணைத்துக் கொள்ளவில்லை. இந்நிலையிலேயே முற்றுமுழுத் தமிழ்ப்பிரதேசமான யாழ்ப்பாணத்தில் நடந்த சமயசம்பந்தமான விழாவிற்கு அனுமதி வழங்குகின்ற அளவிற்கு அன்றைய வடமாகாண பொலிஸ் அதிபரான திரு.இரா.சுந்தரலிங்கம் நம்பிக்கையுடன் இருந்தார்.

ஆனாலும் யாரும் எதிர்பாராதநிலையில் இரவு 11.30மணியளவில் யாழ்ப்பாணகோட்டை ஜேவிபியினரால் தாக்கப்பட்டது. நிமால்வசந் என்பவரின் தலைமையில் முன்வாசல் வழியாகவும் பேர்ட்டிரஞ்சித் என்பவரின் குழுவினர் பின்புறமாகவும் கோட்டையைத் தாக்கினர். அவர்கள் சிங்களத்தில் ‘விஜயவீரா நீ எங்கிருக்கின்றாய் நாங்கள் உன்னை மீட்க வந்திருக்கின் றோம்’எனச் சத்தமிட்டபடி கோட்டைக்கதவுகளிற்கு அண்மையில் தாக்கியபடி அக்கதவை உடைக்க முற்பட்டனர். ஆனாலும் வலிமைவாய்ந்த அக்கதவுகளை அவர்களால் ஏதும் செய்யமுடியவில்லை. 

இந்நிலையில் கோட்டையின் சிறைச்சாலை அதிகாரியாக கடமையாற்றிய தங்கராசா என்பவர் எக்காரணம் கொண்டும் சிறைச்சாலைக்கதவுகளை திறக்கக்கூ டாதென ஏனைய அதிகாரிகட்கும் ஊழியர்களிற்கும் உத்தரவிட்டதுடன் பொலிஸாருடன் தொடர்பு கொண்டு நிலமையை விளக்கி உதவியைக் கோரினார். உடனேயே இன்ஸ்பெக்டர் செல்வராசா என்பவரின் தலைமையில் வந்த பொலிசார் இடம்வலம் தெரியாமல் தடுமாறிநின்ற பல ஜேவிபி யினரை சுட்டுக்கொன்று 20பேர்வரை கைதுசெய்தனர். அதேநேரம் யாழ் பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலும் முறியடிக்கப்பட்டிருந்தது. தென்னிலங்கையில் ஏப்ரல் 5 — 23ந்திகதிவரை நீடித்த ஜேவிபியினரின் தாக்குதல்கள் வெறுமனே ஒரு மணிநேரத்திலேயே யாழ்ப்பாணத்தில் பொலிசாரினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. (1.ஈழத்தமிழர்எழுச்சி பக்கம் 100—108 எஸ்.எம்.கார்மேகம் 2..ரோகணவிஜய வீராவும் சிறை அதிகாரி தங்கராசாவும். கட்டுரை வீரகேசரி வாரவெளியீடு 09.04.2006)

              

1971 ஏப்ரல் 05ந்திகதி இரவு 11.30 க்கு கேட்க ஆரம்பித்த துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டுச்சத்தங்கள் அடுத்த ஒருமணி நேரத்தி லேயே அடக்கப்பட்டு விட்டன. எனினும் 06ந்திகதி காலையிலேயே யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் இச்செய்தி பரவி பெரும்பரபரப்பிற்குள்ளா கியது. ‘யாழ்ப்பாணத்தில் சேகுவரா’ என்னும் செய்தியுடன் உண்மையும் பொய்யுமாய் வதந்திகள் உலவியவேளையில் தங்கத்துரையும் குட்டிமணியும் அச்செய்திக்கு புதியவடிவம் கொடுத்து செயலாற்ற ஆரம்பித்தனர். குண்டுகள் செய்வதற்கான இரசாயனப்பொருட்களை  கொள்வனவு செய்யும் பெரியசோதி தியே அவைகளை பாதுகாத்தும் வைத்திருந்தார். இதன்காரணமாக 07ந் திகதி அதிகாலையிலேயே குட்டிமணி நெடியகாட்டில் இருந்த பெரிய சோதியிடம் சென்று அவைகளைப் பெற்றுக்கொண்டார்.

வயதின் அடிப்படையில் பெரியசோதி ஏனையோரை விட மூத்தவராக காணப்பட்டதினால் இவரே இக்குழுவின் தலைவராகவும் விளங்கினார். எனினும் அன்றைய அவரது சீரற்றஉடல்நிலையால் குட்டி மணியிடம் வெடிபொருட்களை கையளித்துவிட்டு அவர் வீட்டிலேயே இருக்கநேர்ந்தது. மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் என்னும் குறியீட்டுப்பெயர் மூலம் இவர்களால் அழைக்கப்பட்ட இந்த இரசாயனப்பொருட்களை நடேசுதாசன் சின்னச்சோதி என்போர் நெல்லியடியில் அமைந்திருந்த ‘மகாத்மா’ திரையரங்கிற்கு அண்மையில் வீட்டுடன்கூடிய கடையொன்றி லேயே வழமையாக கொள்வனவு செய்வர். ஆனால் பெரியசோதி இவைகளை யாழ் குருநகரில் இருந்த கடையொன்றிலேயே கொள்வனவு செய்பவர் என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

              
பெரியசோதியிடம் பெற்றுக்கொண்ட வெடிபெருட்களை தொண்டைமானாறு வீரமாகாளியம்மன் கோயிலிற்கு அண்மையில் இருந்த தங்கத்துரை வீட்டில் வைத்துவிட்டு குண்டு தயாரிப்பதற்கான ஏனையவேலைகளை கவனித்தனர். மீண்டும் ஊரடங்குசட்டம் ஆரம்பிக்கும் மாலை 06மணிக்கு முன்பாகவே தங்கத்துரை வீட்டில்கூடிய தங்கத்துரை குட்டிமணி சின்னச்சோதி ஞான லிங்கம் மற்றும் இவர்கள் எல்லோரிலும் இளையவரும் பிரபாகரனின் வகுப்புத் தோழனுமான சரத்சந்திரன் என்போரும் ஊரடங்குச்சட்டம் அமுலாகிய பின்னர் தமது அடுத்தகட்ட நகர்வை ஆரம்பித்தனர்.

இரவு 06 மணிக்குப்பின் ஏற்பட்ட ஆள்அரவமற்ற நேரத்தின் பின்பும் இருட்டும்வரை காத்திருந்து தங்கத்துரை வீட்டின் அருகாமையில் அமைந்திருந்த தோட்டவெளிகளினூடாக நடந்து தொண்டைமானாறு வீரகத்தி ப்பிள்ளை மகாவித்தியாலயத்தை அடைந்தனர். சித்திரைமாதம் நீண்ட பகற்பொழுதை கொண்டிருப்பதால் இரவு என்பது மாலை ஆறுமணிக்கல்ல இதற்கும் பின்பாக 7.30 –8.00 ஆரம்பமாகி விடிகாலை 5.00 மணிக்கே வெளிச்சம் பரவிவிடும் மாதமாகும்.

ஆள்நடமாற்றமற்று இருட்டான பொழுதிலும் ஏற்கெனவே அச்சூழுலுக்கு நன்கு பரிச்சயப்பட்ட இவர்கள் எவ்விதபதட்டமுமின்றி தாக்குதலுக்கான கைக்குண்டுகளை தயாரிக்க முற்பட்டனர். அதிபரின் அறைக்கு அருகாமையில் இருந்த சிறிய ஆய்வுகூடத்தினுள் குண்டு தயாரிக்கும் தமது முயற்சியினை ஆரம்பித்தனர்.

ஏற்கெனவே பலகுண்டுகளை தயாரித்து அனுபவப்பட்டவர்கள் என்பதனால் எந்தவித பதட்டமுமின்றி குண்டு தயாரிக்கும் வேலை ஆரம்பமானது. யார் எதைச்செய்வது என்ற கேள்விக்கு இடமின்றி தரையில் உட்கார்ந்து சின்னச்சோதி குண்டினை உருவாக்கினார்.ழூ1 ஏனையவர்கள் அவருக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியவாறு நின்றனர். சிறியஇரும்பு ஆணிகள் பீங்கான்ஓட்டுச் சிதறல்கள் மற்றும் வெடிக்கவைக்கும் இராசயனப்பொருட்கள் என்பவற்றை மிகநேர்த்தியாக ஒன்றுடன் ஒன்றிணை த்து அவர் குண்டினை தயாரித்த முடிக்கவும் அதுவரையில் அச்சிறிய அறையில் மிகநெருக்கமாக நின்ற தமது ஆசுவாசத்தை தீர்த்து நல்லகாற்று வாங்குவதற்காக ஒவ்வொருவராக வெளியே வரமுயன்றனர். தொடரும்….


Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment