சம்பூரில் மீள்குடியேறுவதற்கான அனுமதி மறுப்பு - உயர் நீதிமன்றில் வழக்கு தொடுப்பு


மே 17 2012ல் வெளியிடப்பட்ட 1758/26 என்கின்ற இலக்கத்தைக் கொண்ட சுற்றறிக்கையின்படி, பாரிய கைத்தொழிற்பேட்டைகளை நிறுவுவதற்கான 'சிறப்பு வலயம்' ஒன்றுக்கான எல்லைகளை வரையறுத்ததைக் கண்டித்து திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் வாழ் மக்கள் யூன் 15 அன்று சிறிலங்கா உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனுவொன்றைக் கையளித்துள்ளனர். 

சிறிலங்கா முதலீட்டு சபை தொடர்பாக 1978ல் வரையப்பட்ட நான்காம் இலக்கச் சட்டத்தின் பிரிவு 22A யில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளின் படி, பாரிய கைத்தொழிற் பேட்டைகளுக்கான 'சிறப்பு வலயம்' ஒன்றை உருவாக்கிக் கொள்வதற்கான முயற்சியானது இச்சுற்றிக்கையின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது சிறப்பு கைத்தொழிற்பேட்டை வலயமாக பிரகடனப்படுத்தப்படும் குறிப்பிட்ட பிரதேசமானது அடிப்படை மனித உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்த சம்பூரைச் சேர்ந்த ஏழு பேருக்கும் மற்றும் ஏனைய அக்கிராம வாழ் மக்களுக்கும் சொந்தமானதாகும். 

இப்பிரதேசத்தில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக தாம் தமது சொந்த நிலங்களை விட்டு இடம்பெயர்ந்ததாகவும், ஆனால் இவ்வாறான இடப்பெயர்வுகளின் பின்னர் தாம் தமது காணிகளை உறுதிப்படுத்தி, அங்கு மீண்டும் தமது வாழ்வைத் தொடர்ந்ததாகவும், தமது நிலங்களில் பயிர்ச்செய்கையை மேற்கொண்டதாகவும் அந்த மக்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர். 

2006ல் இம்மனுவைத் தாக்கல் செய்த ஏழு பேரும், மற்றும் ஏனைய நில உரிமையாளர்களும் சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாங்களில் தங்கியிருந்தனர். 2007ல் இவர்களது சொந்த இடமான சம்பூரில் தொடரப்பட்ட யுத்தமானது நிறைவுக்கு வந்ததாகவும், ஆனால் தொடர்ந்தும் ஐந்து ஆண்டுகளாக அதே நலன்புரி முகாங்களிலேயே தாம் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர். சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளும் சிறிலங்கா இராணுவத்தினரும் இவர்களை இவர்களது சொந்த நிலங்களுக்கு செல்ல விடாது தடுத்ததாகவும், இதில் சிறிலங்கா கடற்படை மற்றும் இராணுவத்தினரும் உள்ளடங்குவதாக இம்மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்தப் பிரதேசமானது 2007ல் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து SC FR 218/2007 மற்றும் SC FR 219/2007 ஆகிய இலக்கங்களின் கீழ் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இப்பிரதேச வாழ் மக்களின் மனுவை வாசித்த சிறிலங்கா உயர் நீதிமன்றானது, "திருகோணமலை துறைமுகத்துக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளதாகவும், ஆனால் சம்பூர் பிரதேச வாழ் மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதை அல்லது தொழில் செய்வதை தடுத்து நிறுத்துவதை இது நோக்காகக் கொண்டிருக்கவில்லை" எனவும் அறிவித்தது. 

"இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை அனைத்துலகத்தின் அழுத்தத்தின் பேரில் உடனடியாக மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக உதவி வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்" என சிறிலங்கா உயர் நீதிமன்று குறிப்பிட்டிருந்தது. 

இருந்தும் இப்பிரதேசமானது உயர் பாதுகாப்பு வலயமாகவே இருப்பதாகவும், தமது சொந்த நிலங்களில் குடியேறுவதற்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளும் இராணுவத்தினரும் மறுத்து வருவதாகவும் மனுதாரர்கள் தெரிவித்தனர். 

சம்பூரில் அனல்மின் நிலையமொன்றை நிர்மாணிப்பது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டதாகவும், ஆனால் மனுதாரர்களது நிலங்கள் இதற்குள் உள்ளடக்கப்படவில்லை என தாம் அறிந்ததாகவும் அவர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர். 

"அனல் மின்நிலையம் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படாத நிலங்கள் அவர்களது உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும். கடந்த தடவை கூட இந்த நிலங்களில் பயிரிடுவதற்கான அனுமதியை நாம் விவசாயிகளுக்கு வழங்கியிருந்தோம். இந்தத் தடவையும் சம்பூரில் நெல் பயிரிடுவதற்கான அனுமதியை வழங்குவதென நாம் தீர்மானித்துள்ளோம். அத்துடன் இங்குள்ள ஆலயத்துக்குச் செல்வதற்கும் மதச் செயற்பாடுகளைச் செய்வதற்கான அனுமதியையும் நாம் வழங்குகிறோம். இந்நிலையில் தேவையில்லாதவர்களின் நிலங்களை நாம் ஒருபோதும் கையகப்படுத்தமாட்டோம். இதற்கு நாம் உத்தரவாதம் அளிக்கிறோம்" என ஒக்ரோபர் 21, 2011 அன்று அமைச்சர் பசில் ராஜபக்ச, சிறிலங்கா நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். 

இவ்வாறான உத்தரவாதங்கள் வழங்கப்பட்ட போதிலும், மனுதாரர்கள் தமது சொந்த இடமான சம்பூரில் மீள்குடியேறுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவர்கள் தமது நிலங்களை பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே சம்பூரைச் சேர்ந்த ஏழு மனுதாரர்கள் மீண்டும் தற்போது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக கோரி சிறிலங்கா உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

செய்தி வழிமூலம் : Ceylon Today 
மொழியாக்கம் : நித்தியபாரதி
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment