யார் இந்த சமந்தா பவர்?


அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு உலக நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வரும் பெண்மணியே இந்த சமந்தா பவர். இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தையும் வெள்ளை மாளிகையையும் உஷார்படுத்தி வருபவர் இந்தச் சமந்தா பவரே என்று இலங்கை அரசு நம்புவதாகத் தோன்றுகிறது. 

வன்னிப் போரின் இறுதி நாள்களிலும், போர் முடிவுக்கு வந்த நாள்களிலும் அலரிமாளிகையில் ஜனாதிபதிக்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையேயான வட்டமேசை ஆலோசனைகளில் அடிக்கடி உச்சரிக்கப்பட்டதொரு பெயர் சமந்தா பவர். 

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சமந்தா பவர் இலங்கைக்கு முதல் முதலாக விஜயம் செய்திருந்தார். அவரது அந்த விஜயத்தின் பின்னரே ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீமூன் இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து ஆராய நிபுணர்கள் குழுவொன்றைத் தாம் நியமிக்கவுள்ளதாக உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.

பராக் ஒபாமா அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் சமந்தா பவர், ஒபாமாவுக்கு அறிமுகமானார். அந்தவேளையில் உலக நாடுகளில் இடம்பெறும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து "Problem From Hell' என்ற தலைப்பில் நூலொன்றை எழுதி வெளியிட்டிருந்தார் சமந்தா பவர். உலக நாடுகளில் போர்க்குற்றங்கள் இடம்பெறாது தவிர்க்கும் திறன் அமெரிக்காவுக்கு உள்ளதாகவும், அமெரிக்கா அதனை மேற்கொள்ளாது தவிர்ப்பது தவறெனவும் சம்பந்தா பவர் தமது அந்தநூலில் விமர்சித்திருந்தார். அத்துடன் போர்க் குற்றங்களை மேற்கொள்ளும் நாடுகள் மீது அது குறித்துக் குற்றம் சுமத்தப்படும் போது, தமக்கு அது குறித்து எதுவும் தெரியாதெனவோ அல்லது அத்தகைய குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லையெனவோ சம்பந்தப்பட்ட நாடுகள் சாதிப்பதாகவும் அவர் தமது அந்தநூலில் தர்க்கித்திருந்தார். அந்த வகையில் தமது கட்டளைக்கமைய போர்க்குற்றங்களை மேற்கொள்ளும் படையினரைக் குற்றச்சாட்டுகளிலிருந்து சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுகள் காப்பாற்றி விடுகின்றன என்பது சமந்தா பவரின் குற்றச்சாட்டு. 


குறிப்பிட்ட அந்த நூலை வாசித்த பராக் ஒபாமா, தம்மை வந்து சந்திக்குமாறு சமந்தா பவருக்கு அழைப்பு விடுத்தார். சமந்தா பவருடனான சந்திப்பின் முடிவில் தம்முடன் இணைந்து செயற்படுமாறு அவர், சமந்தா பவரைக் கேட்டுக் கொண்டார். அந்தவேளையில் அமெரிக்க பல்கலைக் கழகமொன்றில் பேராசிரியையாகக் கடமையாற்றி வந்த சமந்தா பவர், தமது அந்தப் பதவியை விட்டுவிலகி பராக் ஒபாமாவின் கீழ் கடமையாற்ற முன்வந்தார். பராக் ஒபாமாவின் நெருங்கிய நண்பரான சமந்தா பவரின் கணவரும் சமந்தா பவரும் இணைந்து ஒபாமாவின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேளை ஒபாமாவின் வெற்றிக்காக களத்தில் இறங்கிச் செயற்பட்டனர். உலக நாடுகளில் இடம்பெறும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்க அரசு தலையிட்டு செயற்பட வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டை ஏற்கனவே பராக் ஒபாமாவின் மனதில் நிலைபெற வைத்திருந்த சமந்தா பவர், பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதையடுத்து, மனித உரிமைகள் தொடர்பான அவரது ஆலோசகராகவும் செயலாளராகவும் பதவியேற்றுக் கொண்டார்.



தமக்கான பொறுப்புக்கமைய கடமையை மேற்கொள்ள, மோதல்கள் இடம்பெறும் நாடுகளை உலக வரைபடத்தில் தேடிக் கண்டறியும் சமந்தா பவரின் முயற்சியில் இலங்கையும் சிக்கிக் கொண்டதொன்றும் ஆச்சரியமான தொன்றல்லவே. 2008 ஆம் ஆண்டில் பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற வேளையில் இலங்கையின் உள்நாட்டுப் போர் தீவிர நிலை கண்டிருந்தது. 


இலங்கையில் இடம்பெறும் மோதல்களில் குடிசார் பொதுமக்கள் பெருமளவில் உயிரிழக்கும் அபாயமுள்ளதென ஐ.நா.சபையின் மனித உரிமைகள் சபையின் தலைவி லூயிஸ் கருத்து வெளியிட்டிருந்தார். சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் கூட அத்தகைய அபாய அறிவிப்பை வெளியிட்டு வந்தன. இவை யாவும் சமந்தா பவரின் கவனத்துக்கு உள்ளாகின. விடுதலைப் புலிகளுடனான போரில் இலங்கை அரச படைகள் கிளிநொச்சியைக் கைப்பற்றி பொதுமக்களை போர் தவிர்ப்பு வலயத்துள் முடங்க வைத்த வேளையில், அந்த விடயத்தில் மத்தியஸ்தம் வகித்து அமெரிக்க அரசு பொதுமக்களை விடுவிக்க வேண்டுமென சமந்தா பவர் அமெரிக்க அரசிடம் கோரிக்கை முன்வைத்தார். 

பொதுமக்களை விடுவிக்க கடற்படையை அனுப்பி மனிதாபிமான நடவடிக்கையொன்றை மேற்கொள்ளத் தாம் தயாராவதாக அமெரிக்கா, இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்துவதற்கு முன்னர் அதுகுறித்து முதலில் இந்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தது. ஆயினும் அமெரிக்காவின் அந்த முடிவுக்கு இந்தியா தனது எதிர்ப்பை வெளியிட்டது. அந்த வேளை இந்திய வெளியுறவுச் செயலர் மேனன், அவசர அவசரமாக அமெரிக்காவுக்கு ஓடிச் சென்று போர் தவிர்ப்பு வலயத்துள் சிக்கிக் கொண்டுள்ள பொதுமக்களைப் பாதுகாக்க இந்திய அரசு கடும் முயற்சியை மேற்கொள்வதாகவும், அந்த விடயத்தில் அமெரிக்காவின் தலையீடு அவசியமில்லை எனவும் விளக்கமளித்தார்.


போர் முடிவுக்கு வந்த பின்னர் புலம் பெயர் தமிழர் தரப்புக்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், மற்றும் சர்வதேச ஊடகங்கள் என்பவை இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் பெரும் மனிதப்படுகொலைகள் இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டிய வேளை, சமந்தா பவர் உஷாரானார். ஜனாதிபதி ஒபாமா, உலக நாடுகளில் இடம்பெறும் மனிதப்படுகொலைகளைத் தடுத்துநிறுத்த முன்வராததன் மூலம், ஏற்கனவே ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் நிர்வாகத்தால் அனைத்துலக ரீதியில் நலிவு நிலை கண்டிருந்த அமெரிக்காவின் மதிப்பை மீண்டும் தூசு தட்டி தலைதூக்க வைக்கக் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டு விட்டதாக குற்றம் சாட்டினர். 


மனித உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் தனக்கும் அது வெட்கக்கேடு என சமந்தா பவர் எண்ணியிருக்கக் கூடும். இலங்கையில் மனிதப் படுகொலையைத் தடுத்து நிறுத்த இயலாது போய்விட்ட தோல்வியை, வெற்றியாக மாற்றிக் கொள்ளும் நோக்கில் இன்றும் சமந்தா பவர், வெள்ளை மாளிகையையும், அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தையும் மஹிந்தவின் அரசுக்குப் பின்னால் விரட்டோ விரட்டென்று விரட்டிக் கொண்டிருக்கிறார்.

லிபிய விடயத்தில் மட்டுமன்றி, அரேபிய நாடுகளின் மக்கள் எழுச்சிகளின் பின்னணியிலும் சமந்தா பவர் முக்கிய பாத்திரமேற்றுச் செயற்பட்டிருந்ததால் சமந்தா பவர் குறிப்பிட்டது போன்று இலங்கையில் இடம்பெற்ற போரின் கடைசி நாள்களில் தலையீடு மேற்கொள்ளத் தனக்கு வாய்ப்பிருந்தது என அமெரிக்கா எண்ணுகிறது. அமெரிக்கா தலையிட நினைத்திராத நாடுகள் பற்றிக் கூட தேடித்துருவிக் கண்டறிந்து சமந்தா பவர் ஆட்டிப் படைத்துக் காட்டியுள்ளார். 


அரபு மக்களைத் தூண்டி விட்டமை போன்று, இலங்கையிலும் ராஜபக்ஷக்களின் ஆட்சிக்கு எதிராகவும் அரசியல் சுனாமியொன்றை சமந்தா பவர் உருவாக்கக் கூடுமென இலங்கை அரசு அஞ்சுகிறது. மஹிந்தவின் சக்தியை ஒடுக்க சமந்தா பவர் என்ற இந்தப் பெண்மணி தனது சக்தியைப் பயன்படுத்த முயல்கிறாரா என்று ராஜபக்ஷமார் தற்போது தேடித்துருவி ஆராய்ந்து வருகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு உலக நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வரும் பெண்மணியே இந்த சமந்தா பவர். இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தையும் வெள்ளை மாளிகையையும் உஷார்படுத்தி வருபவர் இந்தச் சமந்தா பவரே என்று இலங்கை அரசு நம்புவதாகத் தோன்றுகிறது.



 இன்போ தமிழ் குழுமம் -
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment