யுத்தத்துக்கு முடிவு கட்டியதன் மூலம் வன்முறைக் கலாசாரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டதாகவும் இனிமேல் எல்லாமே பிரகாசம் தான் என்றும் மக்களின் கருத்து வெளிப்பாட்டு, நடமாட்ட சுதந்திரம் உட்பட அடிப்படை உரிமைகளை அனுபவிக்க தடைகள் எதுவும் இல்லையென அரசாங்கம் வெற்றி முழக்கமிட்டு ஆண்டுகள் மூன்று உருண்டோடிவிட்ட நிலையில் நாட்டில் சட்ட ஆட்சி முழுமையாக சீர்குலைந்து பலவீனமடைந்திருப்பதற்கு எதிராக எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மாத்திரமன்றி சிவில் அமைப்புகளும் கடும் கண்டனத்தையும் விசனத்தையும் வெளிப்படுத்தியுள்ளன.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்திருந்த யுத்தமே சகல பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணமென்றும் அதற்கு முடிவு கட்டியதன் மூலம் சுபீட்சமான எதிர்காலத்தை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக அரச தரப்பினர் சுயபாராட்டுகளை கனமழையாக பொழிந்து கொண்டிருப்பது ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்கையில் மறுபுறத்திலோ, வன்முறை அரசியல் கலாசாரம் நாட்டில் தலைவிரித்தாடுவதையும் மத, சமூக, கலாசாரப் பெறுமானங்கள் ஓரம் கட்டப்படுவதையும் “பிரைடே போரம்’ போன்ற சிவில் அமைப்புகள் விசனத்துடனும் கவலையுடனும் சுட்டிக்காட்டியிருப்பதை அவதானிக்க முடிகிறது.
பொதுமக்களின் உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் மதிப்பளிப்பதானது சட்ட ஆட்சியென்ற கோட்பாட்டிற்கு மிக மிக அத்தியாவசியமான விடயம் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்ததுடன் ஆட்களின் ஆட்சியிலும் பார்க்க சட்டத்தின் ஆட்சியின் கீழ் நீதியான முறைமையில் நிர்வாகம் இருப்பதை ஜனநாயக நாடானது உறுதிப்படுத்துவது அவசியமென்று அந்த ஆணைக்குழு இடித்துரைத்திருந்தது. பல்லின சமூகங்கள் வாழும் இந்த நாட்டில் சமூகத்தின் பன்முகத்தன்மையை முற்றிலும் நிலை குலையச் செய்வதற்கான செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதையும் “பெரும்பான்மை வாத’ சக்திகள் அதற்கு தீனிபோட்டு வலுப்படுத்துவதையும் சகல சமூகங்களையும் சேர்ந்த நியாயமான முறையில் சிந்திப்போர் கவலையுடன் அவதானித்துக் கொண்டிருக்கின்றனர்.
இனங்களுக்கிடையில், மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை வலுவாக கட்டியெழுப்புவதற்குப் பதிலாக அரசாங்கமும் தென்னிலங்கை அரசியல் தலைவர்களும் சொற்ப அளவில் இருந்துவரும் நல்லிணக்கத்தைத் தகர்த்துவிடும் கைங்கரியத்துடனான நிகழ்ச்சி நிரலையே மறைமுகமாக முன்னெடுக்கின்றனர் என்பது தெளிவாகத் தென்படுகிறது. தம்புள்ள பள்ளிவாசல் தகர்ப்பு உள்ளடங்கலாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தொன்று தொட்டு இருந்து வரும் இந்து மதஸ்தலங்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் விதத்தில் நில ஆக்கிரமிப்புகள், சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
தற்போது நாட்டில் சட்டம், ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்திருப்பது தொடர்ந்தும் கவலையளிக்கும் விடயமாகக் காணப்படுவதாக இந்த விடயத்தில் அரசாங்கம் மௌனம் காத்து வருகின்றது அல்லது குழப்பகரமான செய்திகளை விடுத்து வருகின்றது என்று “பிரைடே போரம்’ குறிப்பிட்டிருக்கிறது. நீதியான சட்டத்திலிருந்தே பொதுமக்களுக்குரிய அடிப்படைச் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும். இந்த சட்ட ஆட்சியை சுயாதீனமான அரச அதிகாரிகளே உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். இலங்கையின் பொதுச் சேவையானது 1972 அரசியலமைப்பு மூலம் ஓரம் கட்டப்பட்டது. அந்த அரசியலமைப்பானது சிவில் சேவை ஆணைக்குழுவை இல்லாதொழித்து விட்டிருந்ததுடன் நிரந்தர செயலாளர்கள் என்ற நிறுவனமயப்பட்ட அமைப்பின் முதுகெலும்பையும் முறித்து விட்டிருந்தது. எஞ்சியிருந்த வலுவான கட்டமைப்புகளும் 1978 அரசியலமைப்பினால் வலுவிழந்துவிட்டன. 1983 இல் தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கலவரம் கட்டவிழ்த்துவிடப்பட்ட போது அதிகார மட்டம் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் பார்த்துக்கொண்டிருந்ததும் அதன் பின்னரான மூன்று தசாப்த காலத்தில் எதிர்கொண்ட இழப்புகளும் அழிவுகளும் கணிப்பிட முடியாத அளவு பரிமாணங்களைக் கொண்டவையாகும்.
அரசியல் தாபரிப்பை கொண்டிருக்கும் அதிக எண்ணிக்கையான நபர்கள் குற்றச் செயல்களை இழைத்திருந்ததாக நல்லிணக்க ஆணைக்குழுவானது தனது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்ததும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விடயமாகும். சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட அரசியல் ரீதியான அழுத்தத்தால் குற்றச் செயல்களில் ஈடுபட்டோர் இலகுவாக தப்பிவரும் நிலைமை தொடர்கிறது. சேவைகள், பொது வசதிகளை பெற்றுக்கொள்வதில் அரசியல்வாதிகளையே நம்பியிருக்கும் விதத்தில் இந்நாட்டின் அரசியல் கலாசாரம் உருவாகியிருப்பதால் பொதுமக்கள் எந்தவொரு அதிகாரமும் இல்லாமல் நிராதரவான நிலைமையிலே உண்மையில் உள்ளனர். பொதுமக்களின் உரிமைகளை புறந்தள்ளிவிடும் அதிகளவிலான ஊழல் மோசடிகள் இறுதியில் சிறுபான்மை சமூகங்களுக்கே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் இறுதியில் நல்லிணக்கம் என்பதும் வெறும் கானல் நீராகவே காணப்படும் நிலைமை உருவாகியுள்ளது.
நாட்டில் சட்ட ஆட்சியை வலுப்படுத்த சுயாதீன பொலிஸ் குழுவின் அவசியம் பற்றி நல்லிணக்க ஆணைக்குழு வலியுறுத்தியிருந்தது. பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்ப நிரந்தரமான சுயாதீன ஆணைக்குழுவின் அவசியம் பற்றியும் நல்லிணக்க ஆணைக்குழு வலியுறுத்தியிருந்தது. நல்லாட்சி, சட்ட ஆட்சிக்கு மதிப்பளித்தல், ஜனநாயகத்துடன் கூடிய சமாதானம், பன்முகத் தன்மையை பேணுதல் என்பனவே முன்னுரிமை கொடுத்து மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள். ஆனால், இந்த விடயங்களில் முன்னேற்றத்தைக் காண்பதற்கு மிக அவசரமாகத் தேவைப்படும் பொறுப்புணர்வை அரசாங்கம் இதய சுத்தியுடன் கொண்டிருக்கிறதா என்பது இங்கு சிந்திக்க வேண்டிய விடயம்.
நன்றி - தினக்குரல்
0 கருத்துரைகள் :
Post a Comment