எந்த ஒரு நாட்டின் பிரஜை ஒருவர் தனது நாட்டில் தான் விரும்பும் எந்தவொரு பிரதேசத்திலும் வாழ்வதற்கு உரிமையுண்டு. அதே போன்று அந்த நாட்டின் எந்த ஒரு பிரதேசத்திலும் தொழில் புரியவும் அவருக்கு உரிமை உள்ளது. இது, அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவால் பி.பி.சி செய்திச் சேவைக்கு வழங்கப்பட்ட கருத்து .
எந்த ஒரு நாட்டின் பிரஜை ஒருவர் தனது நாட்டில் தான் விரும்பும் எந்தவொரு பிரதேசத்திலும் வாழ்வதற்கு உரிமையுண்டு. அதே போன்று அந்த நாட்டின் எந்த ஒரு பிரதேசத்திலும் தொழில் புரியவும் அவருக்கு உரிமை உள்ளது. இது, அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவால் பி.பி.சி செய்திச் சேவைக்கு வழங்கப்பட்ட கருத்து .
சிங்கள உத்தியோகத்தர்களை வடக்குக் கிழக்கு பிரதேசங்களில் கடமையில் ஈடுபடுத்துவது மற்றும் அந்தப் பிரதேசங்களில் குடியமர்த்துவது சம்பந்தமாக ஆய்வாளர்கள் சிலரால் எழுப்பப்பட்ட வினாக்களுக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
இதை அரசின் கருத்தாகவே கொள்வதால் தவறேதுமில்லை. ஏனெனில் அரசின் இன்றைய நடைமுறைப் போக்குகள் அந்தக் கருத்துக்குப் பலம் சேர்ப்பதாகவே அமைகின்றன. இத்தகைய குடியமர்த்தல்கள் மூலம் சனப்பரம்பலை மாற்றிவிடும் திட்டம் தமக்கு இல்லை என்பதையும் பாதுகாப்புச் செயலாளர் தெளிவுபடுத்தியிருந்தார்.
ஆனால் அரசின் உள்ளார்ந்தம் அதுதான் என்பது தெளிவாகவே புலப்படுகிறது.
சிங்களப் பிரதேசங்களில் தமிழர்கள் தங்கி வாழ்வது மற்றும் அந்தப் பிரதேசங்களிலுள்ள நிறுவனங்களில் தொழில் புரிவதற்கு தடையேதும் இல்லை என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.
நாட்டின் அரசமைப்புச் சட்டங்களின்படி இது ஏற்புடையதே என்றாலும் அந்த நிலைப்பாடு முழுமையான உண்மையல்ல. தமிழன் தனது அந்தஸ்துக்கமைந்து தான் இந்த நாட்டில் வாழ வேண்டும்என்பதையே சிங்கள இனவாத நிலைப் பாடாக அமைகிறது. இந்தக் கருத்து முன்னரை விடவும் இன்று ஆழமாக வேரூன்றிப் போயுள்ளது.
அந்த வன்ம நிலைப்பாடு, நல்லெண்ண வெளிப்பாடு என்ற மேல்பூச்சுப் போர்வையின் உள்ளே வெளியில் தெரியாதவாறு மறைந்திருப்பதே இன்று நிலவும் ஒரு வேறுபாடாகும்.
இந்தச் சிங்கள எண்ணக்கரு ஆத்மார்த்தமான மாற்றமொன்றுக்கு உட்படாதிருப்பதே இந்த நிலைப்பாட்டுக்கு முக்கிய காரணியாகியுள்ளது. முன்னெப்போதும் இல்லாதவாறு நாட்டின் ஆட்சியாளர்களால் சிங்கள இனவாதம் தீவிரமாக கையாளப்பட்டு வருவதும், இந்த வன்ம உணர்வு மேலெழுந்து உச்சமடைவதற்கு மேலுமொரு காரணமாகியுள்ளது.
அந்தச் சிங்கள இனவாத எண்ணத்துக்கு எண்ணெய் ஊற்றி எரியவிட்டால் தான், தமக்குக் கிட்டும் சுகபோகங்கள், வரப்பிரசாதங்கள், வசதி வாய்ப்புக்களைத் தொடர்ந்துவரும் தமது சந்ததிகளும் அனுபவிக்க முடியும். இந்த வன்ம உணர்வை சிங்களச் சமூகத்துக்கு ஊட்டி அதை வளரச் செய்து பேணிக்கொள்வதன் மூலமே தமது அந்த தன்னலக் குறிக்கோளைப் பேணிப்பாதுகாக்க இயலும் என ஆட்சியாளர்கள் எண்ணுவதும் அதற்குக் காரணமாயிருக்கக் கூடும்.
இந்த நாட்டில், அரச நிறுவனங்களில் போன்றே அரச சார்பற்ற நிறுவனங்களிலும் தமிழர்கள் உயர்பதவிகளிலும் சாதாரண பதவிகளிலும் இருக்கின்றனர். ஆனாலும் அவர்கள் உத்தியோகபூர்வ மட்டத்திலும் சரி, தனிப்பட்ட விடயத்திலும் சரி தானொரு தமிழன் என்ற நிலைப்பாட்டில் நின்றே முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய பரிதாபத்துக்குரிய நிலைக்கே அவர்கள் உந்தித்தள்ளப்படுகின்றனர்.
குறிப்பாக, தமிழ் உயரதிகாரி யொருவரால் பெரும்பான்மையின ஊழியர்களின் நடத்தை சம்பந்தப்படும் ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போது தனது இனம் பற்றித் தான் ஒரு தமிழ் அதிகாரி என்பதை நினைவில் நிறுத்திக் கொண்டே குறிப்பிட்ட அந்தத் தமிழர் செயற்பட வேண்டியுள்ளது. நியாயமான சட்டப்படி அமையும் தீர்வொன்றையென்றாலும் கூட தகாத வார்த்தைப் பிரயோகங்களுடன் "அந்தத்.. தமிழன் இப்படிச் செய்து விட்டான்'' என்ற வன்மத்தை வளர்த்துவிடும் வசை மொழிகளையும் பெரும்பான்மையின ஊழியர் ஒருவரிடமிருந்து தமிழ் உயரதிகாரிகள் எதிர்கொள்ள வேண்டி நேர்வது சாதாரணமான ஒன்றாகியுள்ளது.
புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றை எட்டும் அசமந்தப் போக்கும், இழுத்தடிப்பும் எந்தவொரு நகர்வுமின்றி அது கருகிப் போயிருப்பதும் தான் தமிழ் மக்கள் என்றால் இளப்பமாக கருதப்பட்டு சிறுபான்மைப்படும் இந்தப் போக்கு தீவிரமடைந்து வருவதற்கு காரணமாகியுள்ளது. கொழும்பிலும் மற்றும் ஏனைய பிரதேசங்களிலும் தமிழ் இனத்தவர்களான அரச அதிகாரிகள் மூலம் கொடுத்து வரும் பிரச்சினைகள், அவல நிலைகளில் மிகமிகச் சிறிய உதாரணமொன்றே மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
சுருக்கமாக கூறுவதானால் இலங்கையச் சமுதாயத்தில் ஓர் அங்கமான தமிழ் மக்கள் நாட்டில் அன்றாடம் இடம்பெறும் அனைத்துக் கருமங்களின் போதும் தாம் தமிழராகப் பிறந்து விட்டதன் நட்டத்தை அடைந்தே வருகின்றனர் என்பது கண்கூடாகவே புலப்படுகிறது. இந்த நாட்டில் தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளே. தமக்கு வழங்கப்பட்டுள்ள அந்த அந்தஸ்தில் நின்று வாழும் வரையிலும் அவர்களுக்குத் தொந்தரவுகள் இருக்கமாட்டாது என்பதே இதன் மூலம் சூசகமாகக் காட்டப்பட்டுவரும் சமிக்ஞையாகும்.
அதை மீறி தாமும் இந்த நாட்டின் பிரஜைகளே என்ற அடிப்படையில் சிங்களவர்களுக்குச் சமமான உரிமைகள் தமக்குமுண்டு என்ற நிலைப்பாட்டில் செயற்பட முனைந்தால், சிறுமைகள், கொடுமைகள், அவலங்கள் ஏராளமாகும் என்பதும் இன்று யதார்த்த பூர்வமாக அரங்கேறி வருகின்றன. இந்தச் சிங்கள மேலாதிக்க எண்ணக் கருவையொட்டிய செயற்பாடுகளாக வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகின்றன என்பது தமிழ் மக்களால் முன்வைக்கப்படும் கடும் குற்றச்சாட்டொன்றாகியுள்ளது.
இதன் நேரடிப் பங்காளிகளாக பாதுகாப்புப் படையினரே செயற்படுகின்றனர் என்பதும் இத்தகைய இராணுவத் தலையீட்டை இலக்கு வைத்துத்தான் பிரித்தானியத் தூதுவரின் அண்மைக்கால கருத்து வெளிப்பாடு அமைந்திருக்கலாம் எனவும் கருத முடிகிறது.
வடக்கிலிருந்து இராணுவமுகாம்கள் அகற்றப்பட வேண்டுமென்ற அவரது அந்தக் கருத்து வெளிப்பாடு, கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. நாட்டில் மேலோங்கி நிற்கும் சிங்கள இனவாதச் சிந்தனைக்கு அமைய மேற்கு நாட்டவரொருவரான பிரித்தானியத் தூதுவரின் அந்தக் கூற்று வரவேற்கத் தக்கதாக இருக்கவில்லை என்பதே உண்மை. அரசின் பாதுகாப்புத் திட்ட வரைபுகளுக்கு அமைவான அட்டவணைகளின் படியல்லாது இராணுவத்தை அங்கிருந்து உடனடியாக அகற்றுவது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்பதே யதார்த்தமாகும்.
பிரச்சினைக்குரியது வடக்கில் அமைந்துள்ள இராணுவமுகாம்கள் அல்ல. அந்த முகாம்களிலுள்ள இராணுவச் சிப்பாய்களினால் அங்குள்ள பொதுமக்களின் நாளாந்த வாழ்க்கையில் செலுத்தப்படும் தலையீடுகள், அழுத்தங்கள் எந்தளவு தூரத்துக்கு அவர்களது பொது வாழ்க்கையில் ஊடுருவல் செய்துள்ளன என்பதேயாகும். பெண்கள் மீதான வன்புணர்வு சம்பவங்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் போன்ற குற்றச்சாட்டுக்கள் மட்டுமல்லாது, அரச பணி என்ற போர்வையில் வடக்கு மக்களின் வாழ்க்கையை ஆக்கிரமித்துவரும் இராணுவத்தினரின் கடும் போக்கு அங்கு அரங்கேற்றப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டுக்கள் பல்வேறு தரப்புக்களிடமிருந்தும் எழுந்துள்ளன.
புலம்பெயர் தமிழர் தரப்புக்கள்,ஒரு காலகட்டத்தில் அரசுடன் ஒத்து நின்றிருந்த ஆனந்தசங்கரி உட்பட ஏனைய பல தரப்புக்களிடமிருந்தும் இது சம்பந்தமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. வடக்கில் ஆறு பொதுமக்களுக்கு ஒருவர் என்ற ரீதியில் அங்கு இராணுவப் பிரசன்னம் அமைந்திருப்பதாக அண்மையில் ஆர்.சம்பந்தன் தெளிவுபடுத்தியிருந்தமையும் இது விடயத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்தப் பிரதேசங்களில் இடம்பெறும் சமய நிகழ்வுகள், விளையாட்டு நிகழ்வுகள் உட்பட்ட பொதுமக்களின் இல்லங்களில் இடம்பெறும் அவர்களது தனிப்பட்ட கொண்டாட்டங்கள் சம்பிரதாயச் சடங்குகள் என்ற அனைத்து விடயங்களிலும் அங்கு கட்டாய இராணுவத் தலையீட்டைக் காண முடிவது உண்மையே. இதை விட பொதுமக்களுக்கு சுமுகமான சிவில் நிர்வாக அணுகுமுறையொன்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்குப் பதிலாக போரினால் பாதிப்புக்கு உள்ளான அந்த மக்கள் வாழும் பிரதேசங்களில் ஓய்வு பெற்ற அல்லது பதவி நிலைகளிலுள்ள இராணுவ அதிகாரிகளே சிவில் நிர்வாக அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.
இவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்க்கையில், அங்கு இராணுவமயப் படுத்தலும், சிங்கள மயப்படுத்தலும் சமாந்தரமாக நிறைவேற்றப்படுவதை ஏற்க வேண்டியுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.
தமக்கு அறிமுகமில்லாத புதியவர்கள் தமது கருமங்கள் அனைத்தையும் கழுகுக்கண்களால் உற்று நோக்கிக் கண்காணித்து வருவது, அங்குள்ள மக்களுக்கு கடும் உளத்தாக்கங்களை ஏற்படுத்தி வருவதை நாம் உணர வேண்டியது அவசியம். மறுபுறத்தில் இந்தப் பிரதேசங்களில் இராணுவக் கடமையில் இருக்கும் சிப்பாய்களில் பெரும் பகுதியினர் சிங்களச் சமூகத்தின் துடிப்பான இளைஞர்களே என்பதும், அவர்கள் போதிய கல்வியறிவைப் பெற்றிராத பின்தங்கிய கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதும் இயல்பாகவே இவ்விரு இனத்தரப்புக்கள் மத்தியில் மோதல்கள் ஏற்பட வாய்ப்புக்களை வழங்குகின்றன.
இத்தகைய முரண்பாடு உருவாக ஏதுவான காரணங்களும் இங்குள்ளன. அதாவது இந்தப் பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களில் பெரும் பங்கினர் ஏதோ ஒரு விதத்தில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் உறவுகளாகவோ, அவர்களுக்கு அறிமுக மானவர்களாகவோ, அன்றேல் நெருக் கமாகப் பழகியவர்களாகவோ காணப் படுகின்றனர்.
இராணுவத் தரப்பினருடன் நேரடிக் குரோதம் எதுவும் இல்லாத நிலையில் இராணுவத்தினருடன் திருப்தியான ஒரு நல்லெண்ணத்தைக் கொண்டிருப்பவர்கள் அல்லர். அதேவேளை, பெரும்பன்மையான இராணுவத்தினரும் கூட ஏதோ மக்களுடன் சம்பந்தப் பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களால் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பவர்.
இந்த இரு தரப்பினரிடையே குரோதத்தையும், வன்மத்தையும் மேலும் வளர்த்து தீவிரப்படுத்தும் நிர்வாகச் செயற்பாடுகள்தான் தொடர்ந்து அவசியப்படுகிறதா? அல்லது அந்த நிலைப்பாட்டை சுமுகமானதாக முன்னெடுக்கும் நிர்வாகச் செயற்பாடுகள் தான் அவசியமாகிறதா? என்பது ஆழமான சிந்தனைக்கு உரிய ஒன்றே.
உதயன்
0 கருத்துரைகள் :
Post a Comment