ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் இனவாதிகளென்று கூறிவிட முடியாது. கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன போன்ற சிங்கள தேசம் தந்த மகான்கள் தமிழர்கள் பலியெடுக்கப்பட்ட காலங்களிலும் சரி பின்னரும் கூட தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்காக குரல் கொடுத்தே வந்தார்கள். மனிதாபிமானம் என்பது அனைத்து இன மக்களுக்குள்ளும் இருக்கிறது என்பதனையே இது எடுத்துக்காட்டுகிறது. கருணாரட்னாவின் சமீபத்தில் வெளிவந்த கருத்துக்களை விரிவுபடுத்தி எழுதுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
தற்கால வடக்கு மாகாணத்தில் நிலவும் சிறிலங்கா அரசின் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு வேலைகளை வன்மையாக கண்டித்து நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும், தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான விக்கிரமபாகு கருணாரட்ன நீண்டதொரு பட்டியலை வெளியிட்டார். தமிழர் தாயக பூமியான வடக்குப் பிரதேசத்தை அடிமைகள் வாழும் பிரதேசமாக மாற்றியமைப்பதற்கே இந்தக் கொடுங்கோல் அரசு இராணுவத்தை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கின்றது எனக் கூறிய கருணாரட்ன தமிழர்களின் பொறுமையை இந்தப் பேரினவாத அரசு சோதிக்குமானால் விளைவுகள் விபரீதமாகும் என்றும் எச்சரித்தார்.
தொழில்நுட்பத் துறையில் பாண்டித்துவம் பெற்று, அரசியலில் ஆர்வம் கொண்டு அரசியலுக்குள் நுழைந்து பல்வேறு அரசியல் வேலைகளை செய்யும் கருணாரட்ன தொடர்ந்தும் தமிழ் மக்களின் பிரச்சினைக்காக குரல் கொடுத்து வருகிறார். இவர் பல வெளிநாடுகளுக்குச் சென்று தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பேசுவதுடன், புலம்பெயர் தமிழ் மக்கள் ஒழுங்கமைக்கும் கூட்டங்களிலிலும் பங்குபற்றி வருகிறார். அடக்குமுறை ஆட்சியாளர்களின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் குரல் கொடுக்கும் சிங்களம் பெற்றுத்தந்த புலியாகவே இவரை வர்ணிக்க வேண்டும்.
மயான பூமியைக்கூட விட்டுவைக்காத சிங்களம்
மயான பூமியையும் ஆக்கிரமித்து, அங்கு பௌத்த கொடியை நிலைநாட்டி சிங்கள தேசம் என்ற இனவாத மந்திரத்தை ஓதி நாட்டை சிங்களமயமாக்குவதற்கு மகிந்தாவின் அரசு முயற்சிக்கின்றது என்று கூறும் கருணாரட்ன தமிழ் மக்கள் தங்களின் உரிமைகளைக் கோரிப் பேராடிய போது அவர்களைக் கொன்று குவித்த இந்த இனவெறி அரசு, தமிழினத்தின் தனித்துவ சின்னங்களையும் இன்று அழித்து வருகின்றது எனவும் கூறினார். கருணாரட்னாவின் கருத்துக்கள் நூற்றுக்கு நூறு வீதம் உண்மையே. மரணித்த மாவீரர்களை விதைத்த மயானங்களை இடித்து அதற்குள் முகாம்களை அமைக்கும் காட்டுமிராண்டித்தனமான வேலைகளை செய்கிறது சிங்களம்.
ஒரு வீரர் மரணித்தால் உடலை தக்க மரியாதையுடன் எதிர்த்தரப்பினருடன் கொடுப்பதையே உலகச் சட்டமாக வைத்திருக்கும் இந்நிலையில் சிங்கள இனவெறி அரசின் படையினர் கொலை செய்யப்பட்ட வீராங்கனைகளின் ஆடைகள் அற்ற உடல்களை வீதி வீதியாக இழுத்துச் சென்ற காட்சிகள் இன்றும் தமிழ் மக்கள் மனங்களில் மறையாத வடுக்களாக இருக்கின்றன. வெள்ளைக் கொடிகளுடன் சரணைடைந்த விடுதலைப்புலிகளின் அரசியல் பிரமுகர்களை கட்டிவைத்து சித்திரவதை செய்து கொலைசெய்த காட்சிகள் உலக போர் விதிமுறைகளுக்கு ஒவ்வாதது. சிங்களப் படையினரின் இது போன்ற கோளைச் சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
தமது உரிமைகளையும், ஜனநாயக விழுமியங்களுக்கமையப் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு தேச மக்கள் அதனை இன்னுமொரு தேசம் வழங்க மறுக்கும் சந்தர்ப்பத்தில் வன்முறைகளில் ஈடுபட்டே உரிமைகளைப் பெறவேண்டும் என்ற நிலைமை தோன்றுகின்றது. அதுதான் பிற்காலத்தில் தீவிரவாதமாக உருவெடுக்கும். தமிழர்கள் தங்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு சாத்வீக வழியில் போராடினர்;இ காந்திய வழியைப் பின்பற்றினர். ஆனால், சிங்களப் பேரினவாத அரசுகள் தமிழர்களை அடக்குவதற்கு முயற்சித்ததே தவிர, உரிமைகளை வழங்குவதற்கு முன்வரவில்லையென மிக ஆணித்திரமாக கூறினார் கருணாரட்ன.
தமிழ் மக்கள் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சாத்வீக வழியில் போராடி பார்த்தார்கள். மகாத்மா காந்தி வெள்ளைக்காரர்களை எதிர்த்துப் போராடியபோது, பேச்சுக்கு அழைத்த பின்னர் சப்பாத்துக் காலால் காந்தியின் பற்களை உடைத்தார்கள் பிரித்தானிய ஏகாதிபத்தியர். விடாமல் போராடி நாட்டின் விடுதலையைப் பெற்றார் காந்தி அடிகள் என்கிறது வரலாறு. அதைப்போலவேதான் ஈழத் தமிழ்த் தலைவர்களையும் சித்திரைவதைப்படுத்தியது சிங்கள ஏகாதிபத்தியம். வெள்ளைக்காரனோ தாம் செய்த மகா தவறுகளை உணர்ந்து நாட்டைவிட்டு வெளியேறினார்கள். சிங்களவனோ விடாப்பிடியாக பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்த பின்னரும் கூட கொலைவெறி அடங்கவில்லை. மாண்டவர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட மயானங்களைக் கூட சிங்களவன் விட்டுவைக்க தயாராகவில்லை. இதுவே சிங்களவனுக்கும், வெள்ளையனுக்கும் உள்ள வித்தியாசம்.
பிணம் தின்னும் மிருகங்களான சிங்களம்
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்டனர். இரத்த வெள்ளத்தில் சடலங்கள் மிதந்தன. பிணம் தின்னும் மிருகங்களாக அப்போது அரசு செயற்பட்டது. அரசியல் நலன்களுக்காக விலைமதிக்க முடியாத உயிர்களைக் கூட சர்வதேச சமூகம் கருத்திற்கொள்ளவில்லை. இவ்வாறு பல இன்னல்களைச் சந்தித்த பின்னரும் கூட தமிழர்களின் துயரங்கள் அவல நிலைமைகள் தீரவில்லை. மாறாக, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையிலேயே அரசு ஈடுபட்டுள்ளது. அனைத்தையும் இழந்து நடைப்பிணங்களாய் வாழும் வடக்கு மக்களுக்கு தற்போது இருக்கும் ஒரே சொத்து அவர்களது காணிகளாகும். அதைக்கூட இராணுவம் பறிப்பதற்கு முயற்சிக்கின்றது என்று கூறினார் கருணாரட்ன.
மகிந்தாவின் சிந்தனை என்பது வெறும் கடதாசியில் இருக்கவில்லை. அவருடைய சிந்தனையின் வடிவமே அவர் ஏவிய ஈழத் தமிழருக்கு எதிரான போர். மகிந்தாவுக்கு முன்னர் இருந்த அனைத்து சிங்கள அரசுகளும் இதனையே செய்தன. மகிந்தாவின் வன்முறைக் குணம் கொண்ட போக்கே அவருக்கு அழுத்தமான எதிர்ப்பலைகளை கொடுத்தது. ஜே.ஆர் போன்ற நரித்தந்திர அரசியல்வாதிகள் இதனையே செய்தன. ரணில் போன்ற புன்னகையுடன் கூடிய அரசியல் கற்றுக்குட்டிகளும் இப்படியான வேலைகளையே செய்தன. ஆகவே தமிழர்கள் எவரையேனும் குறைத்து எடை போட்டுவிடல் கூடாது. தாய்மையான சந்திரிகா என்ன செய்தார் என்பதனை அவருடைய கடந்த கால தமிழின அழிப்பு செயற்பாடுகள் வரலாறாகி இன்றும் தமிழ் மக்கள் மத்தியில் நீண்ட ஆறா வடுக்களாக இருக்கின்றன. சிங்கள அரசியல் தலைமைகள் அனைத்துமே காட்டுமிராண்டித்தனங்களாகவே இருக்கின்றன. இவர்களுக்குள் கருணாரட்ன போன்ற சில மனிதாபிமானிகளின் செயற்பாடுகள் சற்று மன ஆறுதலாக இருக்கிறது.
தமிழீழம் என்றொரு நாட்டைக் கைப்பற்றிவிட்டோம் என்ற ஆணவப் போக்கிலேயே அரசு செயற்படுகின்றது. ஒரு நாட்டை இன்னுமொரு நாட்டின் இராணுவம் கைப்பற்றிய பின்னர் அந்த நாட்டின் நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்துக்கொள்ளும். அதைத்தான் தற்போது சிறிலங்கா இராணுவம் வடக்கில் செய்கின்றது இனியும் செய்யப்போகின்றது. தமிழர்கள் இனியும் இல்லையென்ற அளவு பொறுமை காத்து வருகின்றனர். ஆனால், இந்தப் பேரினவாத அரசு அவர்களை சீண்டிவிட்டுப் போராட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றது. வடக்கு மண்ணை தெற்கின் அடிமைப் பிரதேசமாக மாற்றியமப்பதே மகிந்தாவின் சிந்தனையாகும் எனக்கிறார் கருணாரட்ன.
ஒரு நாட்டை சண்டையிட்டு கைப்பற்றுவது என்பது பலத்தின் வலிமையைக் காட்டுகிறது. அமெரிக்க மற்றும் அதனுடைய நேச நாடுகள் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் மீது அத்துமீறிப் படையெடுத்து இல்லாத பல பிரச்சினைகளை தோற்றுவித்து இன்று இந்நாடுகள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள். இச்சம்பவங்களுக்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி உட்பட பல பிரச்சினைகளை அமெரிக்கா போன்ற நாடுகள் இன்றும் சந்தித்து வருகின்றன. லிபியா மற்றும் சிரியா போன்ற நாடுகள் மீது படையெடுத்து மூச்சு உடைபடாமல் இருக்கவே உள்நாட்டுக்குள் கிளர்ச்சியை உண்டுபண்ணி இந்நாடுகளில் அரசியல் இஸ்திரத்தன்மையை இல்லாமல் ஒழிக்க வழி அமைத்துக் கொடுத்தன அமெரிக்கா போன்ற நாடுகள்.
ஒருவர் செய்த தவறிலிருந்து மற்றவர் திருந்துவதே புத்திசாலித்தனம். மீண்டும் மீண்டும் அதே தவறை இளைப்பதென்பது குனியக் குனிய குட்டுறவனும் மடையன் குனியிறவனும் மடையன் என்பதற்கிணங்க, சிங்களவன் தொடர்ந்தும் குட்டிக்கொண்டே இருப்பான் ஏனென்றால் அவன் மடையன். ஆனால், தமிழர்கள் குனியாமல் இருப்பது சிங்கள அரச படைகள் மீது கொண்ட பீதியல்ல. முட்டாள்களாகிவிடாமல் தமது இலக்கை நோக்கிப் பயணிக்கவே என்பதனை நிரூபிக்கும் வகையிலேயே கருணாரட்னாவின் கருத்துக்கள் அமைந்துள்ளன. இவர் போன்ற மனிதாபிமானமான மக்களை தமிழர்கள் போற்றுவதில் தயங்கக்கூடாது என்பதே இக்கட்டுரையின் சாராம்ப்சம்.
அனலை நிதிஸ் ச. குமாரன்
0 கருத்துரைகள் :
Post a Comment