தமிழ் மக்களுக்கு அரசியற் தீர்வொன்றை வழங்குவதில் சிங்கள தரப்பு தவறியுள்ளது - விக்கிரமபாகு


ஆறாவது திருத்தச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் சம்பந்தனுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதென்பது ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல. சிறிலங்கா அரசியலைப் பொறுத்தளவில் இவ்வாறான முட்டாள்தனமான செயற்பாடுகள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இவ்வாறு சிறிலங்காவின் முக்கிய இடதுசாரித் தலைவர்களில ஒருவரான விக்கிரமபாகு கருணாரத்ன 'லக்பிம' ஊடகத்தில் தொடர்ந்து எழுதிவரும் தனது பத்தியில் தெரிவித்துள்ளார். 

"தமிழ் மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பது தொடர்பாக எழுந்த இனப் போருக்கு அரசியற் தளத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வொன்று அவசியமானதாகும். ஐக்கிய சிறிலங்காவுக்குள் தமிழ் மக்கள் சுய மதிப்பு, சுய கௌரவம், சுய திருப்தியுடன் வாழ்வதற்கான அனைத்து அதிகாரங்களையும் சிறிலங்கா அரசாங்கம் வழங்க வேண்டிய தேவையுள்ளது" என சிங்களப் பேரினவாதத்துக்கு அடையாளமாக உள்ள சிங்கக்கொடியை யாழ்ப்பாணத்தில் ஏந்திய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் மட்டக்களப்பில் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களுக்கு அரசியற் தீர்வொன்றைப் பெற்றுத் தருவதில் சிங்கள தரப்பு தவறியுள்ளதால், த.தே.கூ தலைவர் சம்பந்தன் இது தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் நாடவேண்டியது தவிர்க்க முடியாததாகும். இது எதிர்பார்க்கப்படும் பெறுபேற்றை உருவாக்கியுள்ளது.

அனைத்துலக சமூகத்தின் உதவியுடன் தமிழர்களுக்கான தீர்வு கிட்டப்படும் போது, தமிழர்களின் ஒற்றுமை குலைக்கப்பட்டு, அவர்களது ஈழக் கனவு சிதைக்கப்பட்டுவிட்டது என கூறிக்கொள்ளும் சிங்கள பேரினவாதிகளால் தமது ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாமலிருக்கும். தமிழர்களின் பிரச்சினைகளை புரிந்துகொள்ள முடியும். தமிழர்கள் தமக்கான தனிநாட்டை உருவாக்கி விடுவார்களோ என்பது சிறிலங்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. 

அண்மையில் எழுதப்பட்ட 'ஐலண்ட்' பத்திரிகையின் ஆசிரியர் உரையில் "தமிழ் மக்களின் பிரச்சினைகள் சமநிலை வாதத்தின் மூலம் தீர்வுக்கு கொண்டு வரப்பட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளது. இதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சிறிலங்கா அரசாங்கமும் பல்வேறு நகர்வுகளையும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போதிலும், இவ்விரு சாராரும் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் 'நேர்மையான தீர்வை' எட்டவில்லை என பல ஆசிரியர் உரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது சிறிலங்கா என்கின்ற இத்தீவானது இங்கு வாழும் அனைத்து மக்களுக்கும் சொந்தமானதாகும். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லா சமூகத்தவர்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும். "நாங்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவேண்டும். இதைவிடுத்து அமெரிக்காவோ அல்லது இந்தியாவோ எமது நாட்டில் நிலவும் பிரச்சினையைத் தீர்க்கக் கூடாது" என்பது ஆசிரியர் கருத்தாகும். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராக குணதாசாவும் ஏனைய சிங்களப் பேரினவாதிகளும் குரல் கொடுத்த வேளையில், இவ்விரு தரப்புகளுக்கும் இடையில் சமநிலையைப் பேணும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் கூட்டமைப்பு தலைவர் 'தேசத் துரோகி' என்பதால் அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும், சிறிலங்கா நாடாளுமன்றை விட்டு வெளியேற்ற வேண்டும் எனவும் சிங்கள பேரினவாதிகள் மகிந்த அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். 

ஆறாவது திருத்தச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் சம்பந்தனுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதென்பது ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல. சிறிலங்கா அரசியலைப் பொறுத்தளவில் இவ்வாறான முட்டாள்தனமான செயற்பாடுகள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. 1976ல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியானது தனிநாடு உள்ளடங்களலாக சுயஉறுதிப்பாட்டைக் கோரி வட்டுக்கோட்டை தீர்மானத்தை பிரகடனப்படுத்திய போது சிறிலங்காவில் ஆறாவது திருத்தச் சட்டம் நடைமுறையிலிருக்கவில்லை. 

முப்பது ஆண்டுகளின் பின்னர், ஆறாம் திருத்தச் சட்டம் மற்றும் நீண்ட கால குருதி சிந்தப்பட்ட யுத்தம் என்பன மீண்டும் தற்போது தலைதூக்கியுள்ளது. அதாவது இத்தீர்மானம் தொடர்பில் சம்பந்தன் உண்மையான விளக்கப்பாட்டை வழங்கியுள்ளதானது முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளது. ஐக்கிய சிறிலங்காவுக்குள் தமிழர்களின் அரசியல் அவாக்கள் தீர்க்கப்படவேண்டும் என்பது அடிப்படை இலக்காகும். ஆனால் சிங்களப் பேரினவாதம் சிறிலங்கா அரசியலுக்குள் முக்கிய இடத்தை வகிப்பதால் ஐக்கிய சிறிலங்காவுக்குள் தமிழ் மக்களின் அரசியல் அவாக்களை தீர்க்கமுடியும் என்பது அடையமுடியாத இலக்காக காணப்படுகின்றது என்பது உண்மையாகும். இந்த அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்த்து பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது. இப்பிரச்சினை தொடர்பில் சிறிலங்கா அதிபர் மகிந்த கொண்டுள்ள எதிர்மறை மனப்பாங்கானது இவரது ஆட்சியின் பிற்போக்குத்தனத்தை காண்பிக்கின்றது. 

அதாவது மகிந்த ராஜபக்ச "மக்கள் ஆணையைப் பெற்று ஆட்சி செய்யும் இராணுவத் தலைவர்" [Bonapartist] என்பதை இது காண்பிக்கவில்லை. உண்மையில் இவர் மக்கள் ஆணையைப் பெற்று ஆட்சி செய்யும் இராணுவத் தலைவராக இருந்தால் இவரால் தனது நாட்டில் உள்ள பல்வேறு வர்க்கத்தவர்களை கட்டுப்படுத்தி ஆட்சியை சமநிலைப்படுத்தி கொண்டு செல்ல முடிந்திருக்கும். மகிந்த ராஜபக்ச, பிற்போக்குத்தனமான அரசியல் மயப்படுத்தப்பட்ட மத்திய அதிகாரத்தால் இறுகப் பிணைக்கப்பட்டுள்ளார். இது அரச பயங்கரவாதத்தைக் கொண்ட முட்டாள்தனமான, ஊழல் மிக்க, இராணுவ அதிகாரத்தைக் கொண்ட ஆட்சியாகும். இவ்வாறான ஒரு ஆட்சியாளர் தனது ஆட்சிக் காலம் முழுவதிலும் நேர்மையாளனாக இருக்காவிட்டாலும், குறைந்தது அதற்கான நேரம் வரும்போதாவது புத்திசாலித்தனமாக செயற்படவேண்டும். 

சிறிலங்கா அரசாங்கத்தின் இவ்வாறான அரச பயங்கரவாத, இராணுவ அதிகார, ஊழல் ஆட்சியை தொழிலாளர்கள் எதிர்க்க முன்வருகின்றனர். சிங்களவர்களை அதிகம் கொண்ட, 15,000 வரையான மின்சாரசபை ஊழியர்கள் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். மின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால் நாடு முழுவதிலும் வாழும் மக்கள் பெரும் அவலத்தை எதிர்நோக்குவதாகவும், மின்சார சபை ஊழியர்களால் கோரப்பட்டவாறு 25 சதவீத சம்பள உயர்வு வழங்காதது சிறிலங்கா அரசாங்கத்தின் பிழை எனவும் ஐக்கிய தொழிலாளர் சங்கம் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளன.

மின்சார சபை மற்றும் நீர் விநியோக ஊழியர்களுக்கு 25 சதவீத சம்பள உயர்வை அரசாங்கம் வழங்கத் தவறினால், வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படும் மக்கள் சேவை அமைப்பு தெரிவித்துள்ளது. மின்சார சபை மற்றும் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான கூட்டு நடவடிக்கையை எடுப்பதற்காக ஏற்கனவே சிறிலங்கா மின்சார சபை மற்றும் தேசிய நீர்வழங்கல் சபை ஆகியவற்றுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் சேவை அமைப்பு தெரிவித்துள்ளது. சிறிலங்கா மின்சார சபையில் உள்ள நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்களுக்கு 36-48 சதவீத சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ள அதேவேளையில், மின்சார சபையின் கீழ்மட்ட தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளையில் சிறிலங்காவில் உள்ள 13 பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனுடன் இணைந்த கல்வி நிறுவகங்களைச் சேர்ந்த கல்வி சாரா 15,000 இற்கும் அதிகமான ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கடந்த வாரத்தில் இவை மூடப்பட்டன. உயர் கல்வி அமைச்சிலிருந்து சில வாக்குறுதிகளைப் பெற்ற பின்னர் இப்போராட்டத்தை கைவிடுவதென தொழிலாளர் அமைப்பின் கூட்டு ஆணைக்குழு முடிவெடுத்ததாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடு முழுவதிலும் கல்வி சாரா ஊழியர்கள் தொடர் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு 25 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்ட போதிலும், இத்தொகை தமக்கு கிடைக்காது என கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். சம்பள உயர்வு கோரி சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன. இந்நிலையில், இவ்வாறான போராட்டங்கள் அரசியல் தூண்டுதலின் பின்னணியிலேயே நடைபெறுவதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

மொழியாக்கம் -நித்தியபாரதி. 
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment