“இன்னும் 100 முள்ளிவாய்க்கால்களை சம்பந்தன் விரும்புகிறாரா?” என்று சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க எழுப்பிய கேள்விக்கு தமிழ்நாட்டு அரசியல்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
ஈழத்தமிழர்களுக்கு எதிராகப் பேசிய சிறிலங்கா அமைச்சரைக் கண்டித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரும் சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, சிறிலங்கா அமைச்சரின் இந்தக் கருத்துக்கும், தமிழ்நாட்டு அரசியல்கட்சிகளின் எதிர்ப்புக்கும், இந்தியாவின் முன்னணி ஆங்கில ஊடகங்கள் பலவும் முக்கியத்துவம் கொடுத்துள்ளன.
மட்டக்களப்பில் அண்மையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாட்டில், இரா.சம்பந்தன் நிகழ்த்திய உரை குறித்துக் கருத்து வெளியிட்ட சிறிலங்கா அமைச்சர் சம்பிக ரணவக்க,
"சம்பந்தனின் கருத்துகள் எம்மைச் சீண்டுவதாக உள்ளது. ஒரு முள்ளிவாய்க்கால் போதும் என்று கருதுகிறோம். இன்னும் 100 முள்ளிவாய்க்கால்கள் அவருக்குத் தேவையா? அத்தகைய நிலையை ஏற்படுத்த எவரும் முயற்சிக்கக் கூடாது' என்று கூறியிருந்தார்.
.
இது தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி தொலைநகல் மூலம் நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
"ஒரு முள்ளிவாய்க்கால் சம்பவம் போதும். 100 முள்ளிவாய்க்கால் சம்பவத்தை ஏற்படுத்தும் நிலைக்கு எங்களை யாரும் தள்ளக்கூடாது என்று இலங்கை அமைச்சர் சம்பிக ரணவக்க கூறியுள்ளார்.
ஆத்திரத்துடன் கூடிய இந்த பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
இந்த விவகாரத்தை இலங்கை அரசின் கவனத்துக்கு மத்திய அரசு கொண்டு செல்வதுடன், மனிதநேயத்தையும், பொறுமையையும் கடைப்பிடிக்க இலங்கைக்கு அறிவுரைக்க வேண்டும்.
ஐ.நா. சபையிலும் இந்த விவகாரம் தொடர்பாக தெரிவிக்க வேண்டும்“ என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
0 கருத்துரைகள் :
Post a Comment