கிழக்கு மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்று முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளது. அவ்வாறு கூட்டு அரசு அமைந்தால் அது தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு பெரும் விமோசனத்தையும் நன்மையையும் ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
எனினும் கூட்டமைப்பின் இந்த அழைப்புக் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் இப்போது எந்த முடிவுக்கும் வரமுடியாது எனவும் தேர்தலுக்குப் பின்னர் அது குறித்துத் தீர்மானிக்கப்படும் எனவும் அதன் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இறுதிவரை அரசுடன் இணைந்து போட்டியிடுவது என்ற தீர்மானத்தில் இருந்து பின்னர் தனித்துப் போட்டியிடுவது என்ற தீர்மானத்தை மேற்கொண்ட கட்சி என்ற வகையில் இப்போது உடனடியாக கூட்டமைப்பின் இந்த அழைப்புப் பற்றி என்னால் எதுவும் கூறமுடியாது எனக் குறிப்பிட்ட அமைச்சர் ஹக்கீம், அவ்வாறான ஒரு தேவை ஏற்படும் இடத்து அது பற்றிச் சிந்தித்து நல்ல முடிவை மேற்கொள்வோம் எனவும் கூறினார்.
கிழக்கு மாகாணத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனித்து களமிறங்கியுள்ளது. இந்த நிலையிலேயே முஸ்லிம் காங்கிரஸுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டரசை அமைப்பதற்கான இந்த அழைப்பை விடுத்துள்ளது.
இது குறித்து சுரேஷ்பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தவை வருமாறு:
முஸ்லிம் காங்கிரஸ் கிழக்குத் தேர்தலில் மேற்கொண்ட இறுதித் தீர்மானம் மிக வரவேற்புக்குரியது. நாங்கள் மட்டுமல்ல முஸ்லிம் மக்களும் இதனை வரவேற்கிறார்கள். இந்த முடிவை அர்த்தமுள்ளதாக மாற்ற முஸ்லிம் காங்கிரஸ் முன்வரவேண்டும்.
மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றிபெற்றால் அது அரசுடன் மீண்டும் கூட்டுச்சேரக்கூடாது. அப்படிச் சேர்வதாயின் இவ்வாறானதொரு முடிவை எடுத்ததில் பயனில்லாது போய்விடும். கிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம் மக்களின் நலனையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அரசுடன் இணைந்து மாகாண ஆட்சியை மு.கா. அமைக்கக்கூடாது.
இந்த நேரத்தில் கூட்டமைப்பு மு.காவுக்கு பகிரங்க அழைப்பை விடுக்கிறது. தேர்தலில் இரு கட்சிகளும் வெற்றி பெறும் இடத்து கிழக்கில் கூட்டு ஆட்சி ஒன்றை அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கிறது. அவ்வாறான ஒரு ஆட்சி அமையும்போது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தொடர்பில் நாம் எமக்குள்ளே பேசி ஒரு உடன்பாட்டுக்கு வரமுடியும். அத்துடன் இந்த கூட்டு தமிழ் முஸ்லிம் சமூகத்துக்கும் பெரும் விமோசனத்தையும் நன்மையையும் உண்டு பண்ணும் என்றார்.
கூட்டமைப்பின் இந்த அழைப்புக் குறித்து அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டதாவது:
இந்தத் தேர்தலில் போட்டியிடும் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற முடியாது என்ற நிலை இப்போது இருக்கிறது. அதனால் நாம் கூட்டமைப்பின் இந்த அழைப்புக் குறித்து இப்போது எதையும் கூறமுடியாது. தேர்தலின் பின்னரே அது பற்றி நாம் யோசிப்போம். நாம் இப்போது மத்திய அரசில் அங்கம் வகிக்கிறோம். அதனால் உடனடியாக அரசை பகைத்துக்கொண்டு வெளியேற முடியாத நிலை உள்ளது. அதற்காக அரசு செய்வதற்கெல்லாம் தலையாட்டிக்கொண்டிருக்கவும் முடியாது. எனவே நாம் இது குறித்து சிந்தித்து ஒரு நல்ல முடிவை எடுப்போம் என்றார்.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த அழைப்புக் குறித்து கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா, கிழக்கில் கூட்டு ஆட்சியை அமைப்பது தொடர்பில் நாங்கள் முஸ்லிம் காங்கிரஸுடன் பேசவுள்ளோம். அது பற்றி கூட்டமைப்புக்குள் இணக்கம் ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னர் கூட்டாட்சி பற்றி முஸ்லிம் காங்கிரஸுடன் பேசப்படும். அவ்வாறான ஒரு கூட்டாட்சி ஏற்பட்டால் அது தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு பல நன்மைகளைக் கொண்டுவரும் என்றார்.
0 கருத்துரைகள் :
Post a Comment